பள்ளிவாசலில் சத்தங்களை உயர்த்தாதீர்கள்!

بسم الله الرحمن الرحيم

அல்லாஹ்வை ஐவேளை தொழுது அவனை திக்ர் செய்வதற்குரிய இடமாகவே பள்ளிவாசல் காணப்படுகின்றது. ஒரு முஸ்லிம் பள்ளிவாசலுக்குள் நுழைந்தால் அவன் என்னென்ன காரியங்களைச் செய்ய வேண்டும் என்பதை மார்க்கம் எங்களுக்கு கூறுகின்றது.  அதேபோன்று பள்ளிவாசலுக்குள் அவன் தவிர்ந்துகொள்ள வேண்டிய விடயங்களையும் வலியுறுத்திக் கூறியுள்ளது. பள்ளிவாசலுக்குள் தடைசெய்யப்பட்ட விடயங்களில் ஒன்றே சத்தங்களை உயர்த்திப் பேசுவதாகும்.

இன்று பலர் பள்ளிவாசல்களில் கூட்டமாகவும் வட்டமாகவும் அமர்ந்துகொண்டு சத்தங்களை உயர்த்தி தொழக்கூடியவர்களுக்கு தொந்தரவாக அமையும் வகையில் கதைத்துக்கொண்டிருக்கின்ற காட்சிகளை பள்ளிவாசல்களில் அதிகமாக நீங்கள் கண்டிருப்பீர்கள். குறிப்பாக ஜும்ஆ தினங்களில் இந்தக் காட்சியை நீங்கள் கண்டிருப்பீர்கள்.

பள்ளிவாசலில் சத்தங்களை உயர்த்துவது குறித்து மார்க்கத்தின் நிலைப்பாடு என்னவென்பதை நாம் ஆதாரங்களினூடாக ஆராய்கின்றபோது அது மிகப் பயங்கரமான குற்றம் என்பதை நாம் புரிந்துகொள்ள முடிகின்றது.

முதலாவதாக பள்ளிவாசல்கள் எந்த நோக்கத்தை அடிப்படையாகக்கொண்டு கட்டப்பட்டிருக்கின்றன என்பதை நாம் ஆதாரங்களினூடாக புரிந்துகொள்ளக் கடமைப்பட்டிருக்கின்றோம்.

ஒரு காட்டரபி பள்ளிவாசலுக்கு வந்து சிறுநீர் கழித்தபோது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவரைப் பார்த்து நிச்சயமாக இந்தப் பள்ளிவாசல்கள் சிறுநீர் மற்றும் அசுத்தமானவைகள் ஆகிய எந்த ஒன்றையும் செய்வதற்கு பொருத்தமானவைகளல்ல. பள்ளிவாசல்களெல்லாம் அல்லாஹ்வை திக்ர் செய்வதற்கும் தொழுவதற்கும் குர்ஆன் ஓதுவதற்குமேயாகும் என்று கூறினார்கள்.

-     முஸ்லிம்

பள்ளிவாசல்கள் கடற்கரையைப்போன்று அல்லது கடைத்தெருக்களைப்போன்று சத்தங்களை உயர்த்துவதற்குரிய இடமல்ல. மாறாக, அல்லாஹ்வை வணங்கி வழிபடக்கூடிய இடமே பள்ளிவாசல்களாகும் என்பதை இந்த ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது.

அல்லாஹுத்தஆலாவும் அல்குர்ஆனில் சத்தங்களைத் தாழ்த்துமாறு கட்டளையிட்டிருக்கின்றான். லுக்மான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தனது மகனைப் பார்த்து: உனது சத்தத்தை நீ தாழ்த்திக்கொள்! நிச்சயமாக சத்தங்களில் வெறுக்கத்தக்கது கழுதையுடைய சத்தமாகும் என்று வஸிய்யத்தாகக் கூறினார்கள்.

-     லுக்மான்:19

இந்த வசனத்திற்கு இமாம் இப்னு கஸீர் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் பின்வருமாறு விளக்கமளித்துள்ளார்கள்: அதாவது நீ பேச்சில் எல்லை மீறிச் சென்றுவிடாதே! பயனளிக்காத விடயங்களில் உன்னுடைய சத்தத்தை உயர்த்தாதே!

-     தப்ஸீர் இப்னு கஸீர்

முஜாஹித் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இந்த வசனத்திற்கு விளக்கமளிக்கையில் கூறுகின்றார்கள்: சத்தங்களில் மிக அசிங்கமானது கழுதையுடைய சத்தமாகும். அதாவது தனது சத்தத்தை உயர்த்துபவனுடைய முடிவு உயர்வான அந்த சத்தத்துடைய விடயத்தில் அவன் கழுதைக்கு ஒப்பாகின்றான். அத்துடன் அல்லாஹ்வுக்கு வெறுப்பானவனாக மாறுகின்றான். இந்த விடயத்தில் அவன் கழுதைக்கு ஒப்பாக்குவது சத்தங்களை உயர்த்துவது ஹராமாகும் மற்றும் அது மிக இழிவான செயல் என்பதையும் வேண்டி நிற்கின்றது.

-     தப்ஸீர் இப்னு கஸீர்

எனவே, இவ்வசனம் பள்ளிவாசல்களாக இருக்கலாம் அல்லது எந்த இடமாக இருந்தாலும் சத்தங்களை உயர்த்துவது ஹராமாகும் என்பதை எங்களுக்கு கற்றுத்தருகின்றது.

பள்ளிவாசலில் சத்தங்களை உயர்த்துவது அல்லாஹ்வுடைய அருள் எங்கள் மீது இறக்கப்படாமைக்கு காரணமாக அமைகின்றது. ஒரு முறை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மனிதர்களுக்கு லைலதுல் கத்ருடைய தினத்தை உறுதியான ஒரு அறிவோடு அறிவிப்பதற்காக வெளிக்கிளம்பினார்கள். அப்போது அவர்கள் பள்ளிவாசலிலே உயர்ந்த சத்தத்தைக் கேட்டபோது அல்லாஹ் லைலதுல் கத்ருடைய தினத்தைப்பற்றிய அறிவை உயர்த்திவிட்டான் என்று மக்களுக்கு அறிவித்தார்கள்.

-     முஸ்லிம்

இந்த ஹதீஸை ஆதாரமாக முன்வைத்து அதிகமான அறிஞர்கள் பள்ளிவாசலில் சத்தங்களை உயர்த்துவது அல்லாஹ்வுடைய அருள் இறங்காமலிருக்கக் காரணமாக அமைகின்றது என்று தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

ஸஹாபாக்கள்கூட பள்ளிவாசலில் சத்தங்களை உயர்த்துவதைப் பாரிய குற்றமாகக் கருதியிருக்கின்றார்கள். ஒரு முறை உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் பள்ளிவாசலுக்குள் நுழைந்தபோது  இரண்டு மனிதர்கள் சத்தங்களை உயர்த்திப் பேசிக்கொண்டிருப்பதைக் கண்டார்கள். அவர்கள் இருவருக்கும் கசையடி வழங்குவதற்கு முனைந்தார்கள். அவர்கள் இருவரும் மதீனாவாசிகள் அல்ல என்பதை அறிந்துகொண்ட அவர்கள் அவ்விருவரிடமும்: நீங்கள் எங்கிருந்து வருகின்றீர்கள்? என்று கேட்டார்கள். அதற்கு அவ்விருவரும்: நாங்கள் யமன் நாட்டைச் சார்ந்தவர்கள் என்று பதிலளித்தார்கள். பின்பு உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள்: நீங்கள் இருவரும் மதீனாவாசிகளாக இருந்திருந்தால் அடித்து உங்கள் இருவரையும் நோவினை செய்திருப்பேன் என்று கூறினார்கள்.

 - முஅத்தா

பள்ளிவாசலில் சத்தங்களை உயர்த்துவது உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் ஆட்சிக்காலத்தில் கடும் தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்பட்டது என்பதை இந்த ஹதீஸ் எமக்குத் தெரிவிக்கின்றது.

பள்ளிவாசலில் சத்தங்களை உயர்த்துவது மாத்திரமின்றி தொழுகையாளிகளுக்கு தொந்தரவு அளிக்கும் வகையில் குர்ஆன் ஓதுவதும் தடுக்கப்பட்டதாக இருக்கின்றது. அஷ்ஷெய்ஹ் இப்னு உஸைமீன் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தன்னைச் சுழ இருக்கின்ற ஓதக்கூடியவர்கள், தொழக்கூடியவர்களுக்கு தொந்தரவு இல்லாத வகையில் சத்தத்தை தாழ்த்தி ஓதவதே சுன்னாவாகும் என்று கூறிவிட்டு அதற்குப் பின்வரும் ஹதீஸை ஆதாரமாக முன்வைக்கின்றார்கள்.

ஒரு முறை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பள்ளிவாசலில் உள்ள மனிதர்களிடத்தில் வெளியேறிச் சென்றார்கள். அவர்கள் சத்தங்களை உயர்த்தி குர்ஆன் ஓதிக்கொண்டிருந்தார்கள். அப்போது அவர்கள் அம்மனிதர்களைப் பார்த்து: நிச்சயமாக தொழக்கூடியவர் தனது இறைவனிடம் இரகசியமாக உரையாடிக்கொண்டிருக்கிறார்.  எனவே, ஒவ்வொருவரும் தனது இறைவனுடன் எதை இரகசியமாக உரையாடுகின்றார் என்பதைப் பார்த்துக்கொள்ளட்டும். உங்களில் சிலர் சிலரைவிட சத்தமாகக் குர்ஆன் ஓத வேண்டாம் என்று கூறினார்கள்.

-     ஸஹீஹ் அபீதாவூத்

பள்ளிவாசலில் தொழக்கூடியவர்கள் இருக்கும்போது அவர்களுக்கு தொந்தரவாக அமையும் வகையில் சத்தங்களை உயர்த்தி குர்ஆனைக்கூட ஓதுவதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடை விதித்துள்ளார்கள் என்றால் எவ்வாறு நாம் தொழக்கூடியவர்களுக்கு சத்தங்களை உயர்த்தி தொந்தரவளிக்கலாம்? இது ஒரு மிகப்பெரிய குற்றம் என்பதை இந்த ஹதீஸ் எங்களுக்கு உணர்த்துகின்றது.

பள்ளிவாசல்களில் சத்தங்களை உயர்த்துவது தடை செய்யப்பட்டிருப்பினும் அவசியமான விடயங்கள் மற்றும் குத்பாப் பிரசங்கங்கள், அறிவுசார்ந்த விடயங்கள் போன்ற பிரயோசமான விடயங்களில் சத்தங்களை உயர்த்திப் பேசலாம் என்பதை அதிகமான அறிஞர்கள் கூறியிருக்கின்றார்கள். அவர்கள் பின்வரும் ஹதீஸை ஆதாரமாக முன்வைக்கின்றார்கள். ஒரு முறை கஃப் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் இப்னு அபீ ஹத்ரத் என்பவருடன் அவர் மீது தனக்கிருந்த கடன் விடயத்தில் பள்ளிவாசலில் தீர்ப்புக்கேட்டு பேசிக்கொண்டிருந்தார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தன்னுடைய வீட்டிலிருக்கும்போது அவர்களுக்குக் கேட்கும் அளவிற்கு இவர்கள் இருவருடைய சத்தமும் உயர்ந்து விடுகின்றது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது அறையின் திரையை நீக்கி அவர்கள் இருவரிடமும் வந்தார்கள். பின்பு கஃபே! என அழைத்தார்கள். அதற்கு கஃப் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள்: இதோ நான் ஆஜராகிவிட்டேன் என்று பதிலளித்தார்கள். பின்பு அவர்கள்: இதை உனது கடனாக நீ வைத்துவிடு என்று கூறினார்கள். கஃப் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள்: நான் நிச்சயமாக செய்துவிட்டேன் அல்லாஹ்வின் தூதரே! என்று கூறினார்கள். பின்பு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்: எழுந்து நீ அதை நிறைவேற்று என்று கூறினார்கள்.

-     புஹாரீ, முஸ்லிம்

இந்த ஹதீஸில் சத்தங்களை உயர்த்திப் பேசிய இருவரையும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கண்டிக்கவில்லை. இந்த ஹதீஸிற்கு இப்னு ஹஜர் ரஹிமஹுல்லாஹ் அவர்கள்: இந்த ஹதீஸில் பள்ளிவாசலில் சத்தங்களை உயர்த்துவது கூடுமாகும் என்பதற்கு ஆதாரம் இருக்கின்றது. ஆனால், அது மோசமான கெட்ட வார்த்தைகளாக இருக்கக்கூடாது என்று விளக்கமளிக்கின்றார்கள்.

இமாம் மாலிக் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் அறிவுடன் தொடர்பான விடயங்கள், நல்ல விடயங்கள், அவசியமான விடயங்கள் ஆகியவற்றில் சத்தங்களை பள்ளிவாசலில் உயர்த்தலாம். அதுவல்லாத வீணான விடயங்களில் சத்தங்களை உயர்த்துவது கூடாது என்று கூறியிருக்கின்றார்கள்.

எனவே, பிரயோசமான விடயங்கள், அவசியமான விடயங்கள், அறிவுசார்ந்த விடயங்கள் ஆகியவற்றில் மாத்திரமே எமது சத்தங்களை பள்ளிவாசலில் உயர்த்த அனுமதியிருக்கின்றது.

ஆகவே, தேவையற்ற விடயங்களில் மற்றும் வீணான விடயங்களில் பள்ளிவாசலில் சத்தங்களை உயர்த்துவதைவிட்டும் நாம் எங்களைப் பாதுகாத்து அல்லாஹ்வின் கோபப்பார்வையிலிருந்து எங்களை நாம் காப்பாற்ற முயற்சிக்க வேண்டும்.

-     அஸ்கி இப்னு ஷம்சிலாப்தீன்