நபியவர்கள் சூனியம் செய்யப்பட்டார்கள் என்பது உறுதியான தகவலா?

بسم الله الرحمن الرحيم

ஆம். புகாரி, முஸ்லிம் உள்ளிட்ட ஏனைய கிரந்தங்களில் நிச்சயமாக நபியவர்கள் சூனியம் செய்யப்பட்டார்கள் என்று இடம்பெற்றுள்ளது. ஆயினும், குறித்த சூனியமானது மார்க்க சட்டவாக்கம் அல்லது வஹியுடைய விடயங்கள் போன்றவற்றில் எவ்விதத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. மாற்றமாக, அதனுடைய உயரிய தாக்கத்தின் விளைவாக நபியவர்களுக்கு அவர்கள் புரியாத காரியங்களில் புரிந்ததைப் போன்ற உணர்வு காணப்பட்டது. குறித்த சூனியத்தை ளபீத் இப்னுல் அஃஸம் என்ற யூதன் நபியவர்களுக்கு எதிராகச் செய்து வைத்தான். என்றாலும், அல்லாஹுத்தஆலா நபியவர்களை அதில் இருந்தும் காப்பாற்றி அது தொடர்பாக இறைச் செய்தியையும் இறக்கிவைத்தான். மேலும், இரு பாதுகாவல் அத்தியாயங்களைக் கொண்டு பாதுகாத்தான். நபித்துவத்தின் இடத்தில் அச்சூனியம் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. ஏனெனில், அது நபியவர்களுக்கு இறக்கியருளப்பட்ட வஹி மற்றும் அவர்களுடைய வணக்கவழிபாடுகள் போன்றவற்றோடு தொடர்புடைய செயற்பாடுகளில் எவ்விதத்தாக்கத்தையும் தோற்றுவிக்கவில்லை.

மேலும், சிலர் நபியவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதாக நம்புவது அநியாயக்காரர்களின் வார்த்தைகளில் நின்றும் உள்ளதான: நீங்கள் சூனியம் செய்யப்பட்ட ஒரு மனிதரையா பின்பற்றுகின்றீர்கள். – அல்புர்கான்: 8 – என்ற வார்த்தையை உண்மைப்படுத்தியதாக அமையும் என்பதனால் நாங்கள் நபியவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதை நம்பமாட்டோம் என்கிறார்கள். ஆயினும், இந்நிலைப்பாடு அவ்வனியாயக்காரர்கள் நபியவர்களை வர்ணித்தவற்றை உண்மைப்படுத்துவதை வேண்டி நிற்காது. ஏனெனில், நிச்சயமாக அவர்கள் நபியவர்கள் வஹியில் நின்றும் பேசக்கூடிய அனைத்தையும் சூனியம் செய்யப்பட்டவராகப் போசியதாகவும் அவர்கள் கொண்டு வந்தவற்றை சூனியம் செய்யப்பட்டவரிடத்தில் காணப்படும் புத்திசுயாதீனமற்ற நிலையைப் போன்ற ஒன்றின் வெளிப்பாடே என்றும் கருதிவந்தார்கள். மாற்றமாக, நபியவர்களுக்கு நிகழ்ந்த சூனியமானது வஹியுடைய மற்றும் வணக்கவழிபாடுகளுடைய எந்த அம்சங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. புத்தியைக் கொண்டு விளங்கிய விளக்கம் ஒன்றை மாத்திரம் அடிப்படையாக வைத்துக் கொண்டு சரியான செய்திகளைப் பொய்ப்பிப்பது எங்களுக்கு உகந்ததல்ல.

அறபியில்: இப்னு உஸைமீன் ரஹிமஹுல்லாஹ்

நூல்: மஜ்மூஉல் பதாவா வினா இல: 257

தமிழில்: அபூஹுனைப்