பெண்களும் மார்க்கக் கல்வியும்

بسم الله الرحمن الرحيم

அல்லாஹ்வை வணங்குவது அனைத்து முஸ்லிமான ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஏவப்பட்ட விடயமாக இருக்கின்றது. அல்லாஹ்வை சரியான முறையில் வணங்கி அவன் கூறிய பிரகாரம் வாழ்க்கையை அமைத்துக் கொள்வதற்கு எங்களுக்கு பூரண மார்க்க அறிவு தேவைப்படுகின்றது. எனவே, மார்க்க அறிவைத் தேடுவது ஆண், பெண் வேறுபாடின்றி அனைத்து முஸ்லிம்களுக்கும் கடமையாகும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: அறிவைத் தேடுவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும்.

- ஸஹீஹுன் நஸாஈ

இன்று வாழ்ந்து கொண்டிருக்கின்ற அதிகமான முஸ்லிம் பெண்கள் மார்க்க அறிவை புறக்கணித்து வாழ்வதை நாம் பார்க்கலாம். அதன் காரணமாகவே அவர்கள் மார்க்கத்திற்கு முரணான பல அம்சங்களை செய்தவாறு வாழ்க்கையை நடாத்துகின்றார்கள்.

அல்லாஹுத்தஆலா அல்குர்ஆனில் கூறுகின்றான்: விசுவாசம் கொண்டவர்களே! நீங்கள் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரக நெருப்பிலிருந்து பாதுகாத்துக்கொள்ளுங்கள்.

-     அத்தஹ்ரீம்: 6

இவ்வசனம் ஒவ்வொரு குடும்பத் தலைவர்களையும் விழித்துப் பேசுகின்றது. ஒவ்வொரு தாயும் தந்தையும் தங்களையும் தனது குடும்பத்தினரையும் நரக நெருப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்வதின் அவசியம் குறித்து இவ்வசனம் பேசுகின்றது. ஆகவே, மார்க்க அறிவினாலே ஒரு மனிதனுக்கு தனது குடும்பத்தை நரகத்திலிருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும். மார்க்கத்தில் தடுக்கப்பட்டவைகள் எவை? ஏவப்பட்டவைகள் எவை? ஆகியவற்றைத் தெரிந்து கொள்வதின் மூலம் ஒரு மனிதன் தன் குடும்பத்தை நரகத்திலிருந்து பாதுகாத்துக்கொள்ள முடிகின்றது. ஆகவே, பெண்களுக்கும் மார்க்க அறிவைக் கற்பது கடமை என்பதை நாம் புரிந்துகொள்ளலாம்.

அல்லாஹ்வின் உதவியைக்கொண்டு இன்று பள்ளிவாசல்களில் பெண்களுக்கான விஷேட பயான் நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன. அவைகளில் கலந்து கொள்ளும் பெண்கள் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றனர். ஆனால், பிள்ளைகளின் விளையாட்டுப் போட்டிகள், கண்காட்சி நிகழ்ச்சிகள், விழாக்கள் ஆகியவற்றில் தாய்மார்கள் அதிகமாக கலந்துகொள்வதை நாம் பார்த்துக்கொண்டிருக்கின்றோம்.

ஆகவே, இவ்வாறான பயான் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தங்களிடம் இருக்கின்ற மடமைகளை நீக்கி தன் குடும்பத்தினரை நரகத்திலிருந்தும் பாதுகாத்துக்கொள்ள ஒவ்வொரு முஸ்லிம் பெண்ணும் முயற்சியுடையவர்களாக இருக்க வேண்டும்.

குழந்தைகளை சரியான முறையில் வளர்த்தெடுப்பது ஒரு தாயின் கடமையாகும். எனவே, மார்க்க அறிவின்றி சரியான முறையில் குழந்தையை வளர்க்க முடியாது என்பது யாவரும் அறிந்த உண்மையாகும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: நீங்கள் அனைவரும் பொறுப்புதாரிகள். நீங்கள் அனைவரும் தமது பொறுப்பைப்பற்றி விசாரிக்கப்பட இருக்கின்றீர்கள்.

-     புஹாரீ

எனவே, ஒரு தாய் தனது இப்பணியைப் பூரணமாக நிறைவேற்ற மார்க்க அறிவின்பால் தேவையுடையவளாக காணப்படுகின்றாள்.

பெண்கள் மார்க்க அறிவைத் தேடுவதற்கு வெட்கம் தடையாக இருந்துவிடக்கூடாது. ஏனென்றால், ஸஹாபிப் பெண்மணிகள் மார்க்கத்தைக் கற்றுக்கொள்ள வெட்கப்படமாட்டார்கள்.

அபூஸஈத் அல்குத்ரீ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் பெண்கள் அறிவைக் கற்பதற்கு ஆண்கள் எங்களைவிட உங்களிடம் மிகைத்துவிட்டார்கள். எனவே, உங்களிலிருந்தே ஒரு நாளை எங்களுக்கு ஏற்படுத்துங்கள் எனக்கூறினார்கள். அவர்கள் ஒரு நாளை அவர்களுக்கு வாக்களித்தார்கள். அந்நாளில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அப்பெண்களைச் சந்தித்து உபதேசம் செய்து பல விடயங்களை ஏவினார்கள்.

-     புஹாரீ

ஸஹாபிப் பெண்மணிகள் மார்க்கத்தைக் கற்றுக்கொள்வதற்காக எந்தளவு ஆர்வத்தை வெளிப்படுத்தியிருக்கின்றார்கள் என்பதை இந்த ஹதீஸ் உணர்த்துகின்றது.

பித்னாவை அஞ்சாவிட்டால் ஒரு ஆணிடம் ஒரு பெண்ணுக்கு தனிமையின்றி மார்க்கத்தைக் கற்றுக்கொள்ளலாம். அஷ்ஷெய்ஹ் முக்பில் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் அஸ்ஸஹீஹுல் முஸ்னத் என்ற தன்னுடைய நூலில் பித்னாவை அஞ்சாவிட்டால் தனிமையின்றி ஒரு பெண் ஆணிடம் தனக்கு கற்றுத்தருமாறு வேண்டுவது பற்றிய பாடம் என்று தலைப்பிட்டிருக்கின்றார்கள்.

ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறினார்கள்: பெண்களில் சிறந்தவர்கள் அன்ஸாரிப் பெண்கள். ஏனென்றால், வெட்கம் அவர்கள் மார்க்கத்தில் விளக்கத்தைப் பெற்றுக்கொள்வதை அவர்களுக்குத் தடைசெய்யவில்லை.

முஜாஹித் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்: மார்க்க அறிவை வெட்கப்படக்கூடியவனும் பெருமையடிக்கக்கூடியவனும் கற்றுக்கொள்ளமாட்டார்கள்.

ஆகவே, வெட்கம் மார்க்கத்தைக் கற்றுக்கொள்வதற்கு தடையாக அமையக்கூடாது என்பதை இச்செய்திகள் எங்களுக்கு உணர்த்திக்காட்டுகின்றன. எனவே, பெண்கள் மார்க்கத்தைக் கற்பதற்கு முன்வர வேண்டும். மார்க்கத்தைக் கற்று சிறந்த ஒரு பெண் உருவாகினால் நிச்சயமாக அவளுக்கு தன்னையும் தனது குடும்பத்தினரையும் நரக நெருப்பிலிருந்து பாதுகாத்துக்கொள்ளலாம் என்பதில் சந்தேகம் இல்லை.

-     அஸ்கி இப்னு ஷம்சிலாப்தீன்