நபியவர்கள் காலத்தில் ஜனாஸாத் தொழுகைகள் எங்கு நடாத்தப்பட்டன?

بسم الله الرحمن الرحيم

الحمد لله، والصلاة والسلام على رسول الله، صلى الله عليه وعلى آله وصحبه وسلم، وبعد:

அறிஞர்கள் பெருமக்கள் ஜனாஸாத் தொழுகையானது முடியுமான அளவு மையவாடிக்கு அருகாமையில் ஏற்பாடு செய்யப்பட்ட விசேடமான ஓர் இடத்தில் அல்லது அதுவல்லாத வேறோர் இடத்தில் நிறைவேற்றப்படுவது விரும்பத்தக்கது என்ற கருத்தைக் கொண்டிருக்கிறார்கள். இக்கருத்தைத் தெளிவுபடுத்தும் விதமாகப் பின்வரும் ஹதீஸ்கள் அமையப்பெற்றுள்ளன.

    நஜ்ஜாஷி மன்னனுக்கு ஜனாஸாத் தொழுகை நடாத்தியது தொடர்பாக அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கும் செய்தியில்: நபியவர்கள் ஸஹாபக்களுடன் தொழும் திடலை நோக்கி வெளியேறினார்கள் என்று இடம்பெற்றுள்ளது.

-    புகாரி: 1245, முஸ்லிம்: 951

    புகாரி - 1329 - எனும் கிரந்தத்தில் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்களைத் தொட்டும் பதிவான செய்தியில்: நிச்சயமாக யூதர்கள் அவர்களில் உள்ள விபச்சாரம் செய்த ஓர் ஆணையும் பெண்ணையும் நபியவர்களிடத்தில் அழைத்து வந்தார்கள். அவர்கள் இருவரையும் கல் எறிந்து கொள்ளுமாறு பணித்தார்கள். அவர்கள் இருவருக்கும் பள்ளிவாசலுக்கு அருகாமையில் உள்ள ஜனாஸாக்களுக்குத் தொழுகை நடாத்தும் இடத்தில் கல் எறியப்பட்டது என்று பதிவாகியுள்ளது.

    முஸ்லிம் எனும் கிரந்தத்தில் ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்களைத் தொட்டும் பதிவான ஒரு செய்தியில்: ஸஃத் இப்னு அபீவக்காஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் ஜனாஸாவை மக்கள் கொண்டு செல்கையில் தொழுகை நடாத்துவதற்காகப் பள்ளிவாசலினுள்  நுழைவிக்குமாறு ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் பணித்தார்கள். ஆயினும், ஜனாஸாக்களை பள்ளிவாசலினுள் நுழைவிக்கக்கூடிய வழமை தமக்கு மத்தியில் இல்லை என்ற கருத்தை முன்வைத்து மக்கள் அவ்வேண்டுகோளைப் புறக்கணித்தார்கள். அப்போது ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள், மனிதர்கள் தமக்கு அறிவில்லாத ஒன்றை இவ்வளவு விரைவாகக் குறைத்து மதிப்பிடுகின்றார்களே! நபியவர்கள் சுஹைல் இப்னு பைழா உடைய ஜனாஸாத் தொழுகையை பள்ளிவாசலினுள் அன்றி தொழவில்லையே! எனக்கூறி வியந்தார்கள் என்று இடம்பெற்றுள்ளது.

இச்செய்தி கூட நபியவர்கள் காலத்தில் அதிகமான ஜனாஸாத் தொழுகைகள் பள்ளிவாசலுக்கு வெளியே நடைபெற்றுள்ளன என்பதற்குச் சான்று பகருகின்றது. அதனால்தான் ஸகாபாக்கள் தமக்கு மத்தியில் வழமையாகப் பேணப்பட்டு வந்த ஜனாஸா வழிமுறைக்கு மாற்றமான ஒன்றை ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா ஏவியபோது அவர்கள் அனைவரும் ஒரு முகமான மறுத்தார்கள். அவர்களுள் மூத்த ஸகாபாக்களும் உள்ளடங்குவார்கள். மேலதிக விளக்கங்களுக்கு பார்க்க: அஹ்காமுல் ஜனாஇஸ் - பக்கம்: 106

    ஜாபிர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்: எங்களில் ஒரு மனிதர் மரணித்தார். நாங்கள் அவரைக் குளிப்பாட்டினோம். ஜனாஸாக்கள் தொழுகைக்காக வைக்கப்படுகின்ற மகாமு ஜிப்றீல் என்ற இடத்தில் தொழுகை நடாத்துவதற்காக அவரை வைத்தோம். பின்பு நபியவர்களை தொழுகை நடாத்துவதற்காக அழைத்தோம். அவர்கள் எங்களுடன் சமுகம் தந்து அம்மனிதருக்குத் தொழுகை நடாத்தினார்கள்.

-    ஹாகிம்: 2/58

    முஹம்மத் இப்னு அப்தில்லாஹ் இப்னு ஜஹஷ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்: நாங்கள் ஜனாஸாக்களுக்கு தொழுகை நடாத்துவதற்காக வைக்கப்படுகின்ற பள்ளிவாசலின் முற்றவெளியில் உட்கார்ந்திருந்தோம். நபியாவர்களும் எங்களுடன் வீற்றிருந்தார்கள். அப்போது நபியவர்கள் தங்களது பார்வையை வானத்தின் பால் உயர்த்தினார்கள் - என்று தொடருகின்றது இச்செய்தி -

-    அஹ்மத்: 5/289, ஹாகிம்: 2/24

எனவே, அன்பார்ந்த சகோதரர்களே! நாம் ஏலவே குறிப்பிட்ட செய்திகளில் இருந்து நபியவர்களின் காலத்தில் ஜனாஸாத் தொழுகை நடாத்தப்படுவதற்கு பள்ளிவாசலுக்கு அருகாமையில் பிரத்தியோகமான ஓர் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது என்பதனையும் அவ்விடத்தில் தான் நபியவர்கள் குற்றங்களுக்கான தண்டனைகளை நிறைவேற்றுபவர்களாக இருந்தார்கள் என்பதனையும் சில சமயங்களில் அவ்விடத்தில் கதைத்துக் கொண்டுடிருப்பார்கள் என்பதனையும் நன்கு புரிந்து கொண்டிருப்பீர்கள். ஆதலால், ஸுன்னாவில் நின்றும் உள்ளது என்று ஒரு செய்தி ஊர்ஜீதப்படுத்தப்பட்டு வந்தால் நாம் அதற்கு சர்ச்சைப்பட்டுக் கொண்டு பிரித்திருப்பது எமக்கு உகந்ததல்ல. நாம் அனைவரும் நபியவர்களை நேசிக்கக்கூடியவர்கள். அவர்களின் ஸுன்னாதான் வழிகாட்டல்களில் மிகச் சிறந்த வழிகாட்டல் என்று வாய் திறந்து கதைக்கக்கூடியவர்கள். எனவே, சற்றும் தயங்காது இவ்வழிமுறையை ஏற்றுக் கொள்வோம். இதனை உயிர்ப்பிக்க நாடுகின்ற சகோதரர்களுக்கு உறுதுணையாக இருப்போம். வல்ல அல்லாஹ் எம்மை என்றும் ஸுன்னாவுக்கு துணை புரியும் மக்களாக ஆக்குவானாக!

-     அபூஹுனைப் முஹம்மத் ஹிஷாம் இப்னு முஹம்மத் தௌபீக்