பெண்கள் அலங்காரம் – 02

بسم الله الرحمن الرحيم

சிகை அலங்காரம்

அல்லாஹுத்தஆலா தனது அடியார்கள் மீது புரிந்த அருட்கொடைகளில் ஒன்றாக முடியைக் குறிப்பிடலாம். இம்முடி மனிதனின் அழகிற்குப் பெரும் ஆதாரமாக விளங்குகின்றது. மேலும், இது அற்றுப் போகின்ற சந்தர்ப்பத்தில் பெரும் குறையாகவும் அசிங்கமாகவும் காட்சியளிக்கின்றது. சான்றாக இமாம்களான புகாரி மற்றும் முஸ்லிம் ஆகியோர் அறிவிப்புச் செய்த பனூஇஸ்ரவேலர்களைச் சோர்ந்த குஷ்டரோகம், வழுக்கை, கண்பார்வையின்மை ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட 3 நபர்களினது வரலாற்றுச் சம்பவத்தைக் குறிப்பிடலாம்.

அல்லாஹ் அவர்களை சோதிக்க நாடி ஒருவர் பின்னர் ஒருவராக ஒரு மலக்கை அனுப்பிவைத்தான். அவர்களில் வழுக்கையை உடையவரை அம்மலக்கு நாடி, உனக்கு மிக விருப்பமானது எது? என வினவினார். அதற்கவர் அழகிய முடியாகும் என்று பதிலளித்துவிட்டு, அது என்னை விட்டும் சென்றுவிட்டது மனிதர்கள் என்னை அருவருப்பாகப் பார்க்கிறார்கள் என்று கூறி அங்கலாய்க்கலானார். அப்போது அம்மலக்கு அவரைத் தடவிவிட்டுச் சென்றார். அல்லாஹ் மீண்டு அவருக்கு அழகிய முடியைக் கொடுத்தான்.

நபியவர்கள் முடியை அழகுபடுத்துமாறும் அதனை நல்ல முறையில் வாரித் தூய்மையாக வைத்துக் கொள்ளுமாறும் கட்டளையிட்டுள்ளார்கள். இதனைப் பின்வரும் அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் ஹதீஸில் இருந்து புரிந்து கொள்ளலாம்.

நபியவர்கள் கூறினார்கள்: யாரிடத்தில் முடியிருக்கின்றதோ அவர் அதனை கண்ணியப்படுத்தட்டும்.

-    அபூதாவுத்

என்றாலும் இப்படியான கரிசனை ஒருவரிடத்தில் காணப்படும் மார்க்க விடயங்களுடனான ஈடுபாட்டை திசை திருப்பக் கூடியதாக இருக்கக் கூடாது.

நபியவர்கள் கூறினார்கள்: ஒருவர் தினமும் தலைவார வேண்டாம்.

-    அஹ்மத்

இமாம் இப்னுல் கையிம் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தஹ்தீபுஸ் ஸுனன் எனும் நூலில் கூறும் போது: நிச்சயமாக அடியான் தன்னுடைய முடியை கண்ணியப்படுத்துமாறு பணிக்கப்பட்டுள்ளான். அத்தோடு அவன் அது விடயத்தில் எல்லை மீறிச் செல்வதும் ஆடம்பரத்தை நாடுவதும் இன்பம் அனுபவிப்பதும் போன்ற சில அம்சங்களை விட்டும் தடுக்கப்பட்டவனாகவுள்ளான். மற்றமாக, அவன் தன்னுடைய முடியை கண்ணியப்படுத்தட்டும் அதனை ஆடம்பரமாகவும் இன்பம் அனுபவிக்கக் கூடிய ஒன்றாகவும் எடுக்கக்கூடிய வழமையைத் தவிர்த்து தலையை வாரிக் கொள்ளட்டும் என்கிறார்கள்.

இமாம் இப்னு பத்தால் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்: ஒவ்வொரு நாளும் முடிவாருவது தடைசெய்யப்பட்டுள்ளது தொடர்பாக இடம்பெற்றிருக்கும் ஹதீஸானது முடிவிடயத்தில் எல்லை மீறிச் சென்று அதன் அழகையே குறிக்கோளாகக் கொண்டு செயற்படுவதைக் குறிக்கின்றது. ஒரு விசுவாசியைப் பொருத்தளவில் அவனில் எப்போதும் ஈமானுடைய அடையாளம் வெளிப்படுவதை அல்லாஹ் விரும்புகின்றான். அளவுக்கதிகமான அலங்காரமின்மை மற்றும் அதனில் கூடிய காலத்தைக் கழிக்காமை போன்ற செயல்கள் என்றும் இதற்கு உறுதுணையாக இருக்கின்றன. அபூஸஃலபா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்: கூடிய அலங்காரமின்றி உலகில் பற்றற்ற தோற்றத்தில் ஒருவர் காட்சியளிப்பது ஈமானில் நின்றும் உள்ளதாகும்.

இத்தகைய தோற்றம் ஒருவர் உலகில் சுகபோகங்களில் மூழ்கி வாழ சக்தியிருந்தும் அவற்றைத் தவிர்த்து அலங்காரம் போன்றவற்றில் கூடிய கவனம் செலுத்தாமல் பணிவான முறையில் நடந்து கொள்வதைக் குறிக்கின்றது என்கிறார் இப்னு ஹஜர் ரஹிமஹுல்லாஹ்.

முடிவாரும் போது வலது கரத்தால் வலப்புறத்தைக் கொண்டு ஆரம்பிப்பதே ஸுன்னாவாகும்.

ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறுகின்றார்கள்: நிச்சயமாக நபியவர்கள் செருப்பணியும் போதும் தலைவாரும் போதும் சுத்தத்தின் போதும் மற்றும் அவர்களது அனைத்துக் காரியங்களின் போதும் வலதை முற்படுத்துவதை விரும்பக்கூடியவர்களாக இருந்தார்கள்.

-    புகாரி, முஸ்லிம்

இமாம் இப்னு ஹஜர் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறும்போது: தலைவாரும் போது வலதை முற்படுத்தலானது, வலதுபுறத்தைக் கொண்டு ஆரம்பிப்பதையும் அதனை வலக்கரத்தால் செய்வதையும் குறிக்கும் என்கிறார்கள்.

-    பத்ஹுல் பாரி

எனவே, சிகை அலங்காரத்தின் போது மேற்குறித்த அம்சங்களைப் பேணி நடப்போமாக!

இன்ஷா அல்லாஹ் தொடரும்.

-     அபூஹுனைப் முஹம்மத் ஹிஷாம் இப்னு முஹம்மத் தௌபீக்