தவ்பாச் செய்வோம்

بسم الله الرحمن الرحيم

அல்லாஹ்வினால் படைக்கப்பட்ட அனைத்து மனிதர்களுமே பாவமான காரியங்களில் ஈடுபடக்கூயவர்கள். அப்பாவத்திலிருந்து அவர்கள் அனைவரும் தவ்பாச் செய்கின்ற போது அதனை அல்லாஹ் மன்னிக்கின்றான். அல்லாஹ்விடம் தவ்பாச் செய்வதாயின் சில சட்டதிட்டங்கள் அதற்கு காணப்படுகின்றன. அவற்றை ஒவ்வொரு முஸ்லிமும் அறிந்து கொள்வது கடமையாகும்.

ஆகவே, தவ்பாவைப் பற்றி ஒரு சில தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என விரும்புகிறேன்.

தவ்பா என்றால் என்ன?

தவ்பா என்ற சொல்லுக்கான அரபு மொழிக்கருத்து இப்னு மன்ழூர் கூறுவதைப் போன்று பாவத்தை விட்டும் திரும்பிவிடுவதாகும். மார்க்க அடிப்படையில் தவ்பா என்றால் அல்லாஹ்வுக்கு பாவம் செய்வதை விட்டும் அவனை வழிப்படுவதின்பால் திரும்புவதாகும். அஷ்ஷெய்ஹ் இப்னு உஸைமீன் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இந்த வரைவிலக்கணத்தை கூறியிருக்கின்றார்கள்.

தவ்பாச் செய்வதின் சட்டம்

தவ்பாச் செய்யுமாறு ஏவியவாறு அல்குர்ஆனிலும் அஸ்ஸுன்னாவிலும் பல ஆதாரங்கள் காணப்படுகின்றன. அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: விசுவாசம் கொண்டவர்களே! நீங்கள் வெற்றிபெறும் பொருட்டு நீங்கள் அனைவரும் அல்லாஹ்விடம் தவ்பாச் செய்யுங்கள்.

-     அந்நூர்: 31

இமாம் ஸஃதீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இந்த வசனத்திற்கு விளக்கமளிக்கும்போது பின்வருமாறு குறிப்பிடுகின்றார்: அல்லாஹ் தவ்பாச் செய்யுமாறு ஏவியுள்ளான். பின்பு வெற்றியை அதற்கு காரணமாக அவன் ஆக்கியுள்ளான். எனவே, தவ்பாவைக்கொண்டே தவிர வெற்றிக்கு வேறு வழியில்லை. தவ்பா என்றால் வெளிரங்கமாகவும் உள்ரங்கமாகவும் அல்லாஹ் வெறுக்கக்கூடியதைவிட்டும் வெளிரங்கமாகவும் உள்ரங்கமாகவும் அல்லாஹ் விரும்பக்கூடியதன்பால் திரும்புவதாகும். ஒவ்வொரு விசுவாசியும் தவ்பாவின்பால் தேவையுடையவன் என்பதை இது அறிவித்துவிட்டது. ஏனென்றால், இவ்வசனத்தில் அல்லாஹ் அனைத்து விசுவாசிகளையும் நோக்கிப் பேசியுள்ளான். மேலும், இவ்வசனம் தவ்பாச் செய்யும்போது உளத்தூய்மையுடன் இருப்பதை தூண்டுகிறது.

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: நீங்கள் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடுங்கள். பின்பு அவனிடம் தவ்பாச் செய்யுங்கள்.

-     ஹூத்: 90

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: விசுவாசம் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்விடம் கலப்பற்ற முறையில் தவ்பாச் செய்யுங்கள்.

-     அத்தஹ்ரீம்: 8

இவ்விரு வசனங்களும் கூட தவ்பாச் செய்யுமாறு ஏவுகின்றன.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: மனிதர்களே! அல்லாஹ்விடம் நீங்கள் தவ்பாச் செய்யுங்கள். ஏனென்றால், நிச்சயமாக ஒரு நாளில் நான் நூறு முறை தவ்பாச் செய்கின்றேன்.

-     புஹாரீ, முஸ்லிம்

எனவே, இவ்வாதாரங்கள் அனைத்தும் தவ்பாச் செய்யுமாறு ஏவுகின்றன. எனவே, தவ்பாச் செய்வது அனைவரின் மீதும் கடமையாகும்.

குர்துபீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்: தவ்பாச் செய்வது விசுவாசிகளின் மீது பர்ள் ஆகும் என்பதில் இந்த உம்மத் ஒன்றுபட்ட கருத்தைக் கொண்டிருக்கிறது.

இப்னு தைமியா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்: ஒவ்வொரு அடியானுக்கும் தவ்பாச் செய்வது கடமையாகும். அது ஆரம்பமானவர்கள், இறுதியானவர்கள் அனைவருக்கும் கடமையாகும்.

தவ்பாவின் நிபந்தனைகள்

1. உளத்தூய்மை

அனைத்து வணக்க வழிபாடுகளுக்கும் உளத்தூய்மை அவசியாகும். உளத்தூய்மையின்றி எந்தவொரு வணக்க வழிபாடுகளும் அல்லாஹ்விடம் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. அவ்வாறான இபாதத்களில் ஒன்றே தவ்பாவாகும். அல்லாஹுத்தஆலா அல்குர்ஆனில் கூறுகின்றான்: மார்க்கத்தை அவனுக்கே தூய்மையாக்கியவர்களாகவே தவிர அல்லாஹ்வை அவர்கள் வணங்குவதற்கு ஏவப்படவில்லை.

- அல்பய்யினா: 5

2. செய்த பாவங்களுக்காக கைசேதப்படுதல்.

3. எந்தப் பாவத்திற்காக தவ்பாச் செய்கிறோமோ அந்தப் பாவத்திலிருந்து முழுமையாக விலகியிருத்தல்.

உதாரணமாக ஒருவர் தொழாமலிருந்து பின்பு தவ்பாச் செய்தால் அதன் பின்பு அவர் தொழக்கூடியவராக இருக்க வேண்டும்.

4. மீண்டும் அந்தப்பாவத்திற்கு திரும்பாமலிருத்தல்.

ஒருவர் தவ்பாச் செய்கிறார். ஆனால், அவருடைய உள்ளத்தில் மீண்டும் சந்தர்ப்பம் கிடைக்கும்போது நான் அப்பாவத்தை செய்ய வேண்டும் என்று உறுதிகொள்கிறார். இவருடைய தவ்பா சரியான ஒரு தவ்பாவாக கருதப்படமாட்டாது.

5. குறித்த நேரத்திற்குள் தவ்பாச் செய்ய வேண்டும்.

ஒரு மனிதனுடைய தவ்பா அவனுடைய உயிர் அவனுடைய தொண்டையை அடைய முன் அமைந்திருக்க வேண்டும். உயிர் தொண்டையை அடைந்ததன் பின்பு எவராவது தவ்பாச் செய்தால் அவருடைய அத்தவ்பா ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

அல்லாஹுத்தஆலா அல்குர்ஆனிலே கூறுகின்றான்: பாவங்களைச் செய்து அவர்களில் ஒருவருக்கு மரணம் ஏற்படும் வேளையில் நான் தவ்பாச் செய்துவிட்டேன் எனக்கூறுகின்றவர்களுக்கு தவ்பா இல்லை. இன்னும், காபிராக உள்ள நிலையில் மரணித்தவர்களுக்கும் தவ்பா இல்லை. நாம் அவர்களுக்கு நோவினை தரும் வேதனையை தயார்படுத்தியுள்ளோம்.

-     சூரதுந்நிஸா: 18

மேலும், சூரியன் மேற்கிலிருந்து உதிக்கும் வரை அல்லாஹ் தவ்பாவை ஏற்றுக்கொள்வான். சூரியன் மேற்கிலிருந்து உதித்துவிட்டால் எவருடைய தவ்பாவும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: தவ்பா துண்டிக்கப்படும் வரை ஹிஜ்ரத் துண்டிக்கப்படமாட்டாது. சூரியன் அதனுடைய மேற்கிலிருந்து உதிக்கும்வரை தவ்பா துண்டிக்கப்படமாட்டாது.

-     ஸஹீஹ் அபீதாவூத்

தவ்பாவுடைய சிறப்புக்கள்

தவ்பாச் செய்பவருக்கு பல சிறப்புக்கள் இருப்பதாக அல்லாஹ்வும் அவனது தூதரும் கூறியிருக்கின்றார்கள். அவைகளில் சிலவற்றை இங்கு நாம் பார்ப்போம்.

1. தவ்பாச் செய்வது அல்லாஹ்வின் விருப்பத்தைப் பெற்றுத்தரும். அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: நிச்சயமாக அல்லாஹ் தவ்பாச் செய்பவர்களையும் சுத்தமானவர்களையும் விரும்புகின்றான்.

- அல்பகறா: 222

2. தவ்பாச் செய்வது வெற்றிக்கு காரணமாக அமையும். அல்லாஹுத்தஆலா கூறுகிறான்: விசுவாசிகளே! நீங்கள் அனைவருமாக அல்லாஹ்விடம் தவ்பாச் செய்யுங்கள். நீங்கள் இதன் பொருட்டு வெற்றிபெறலாம்.

- அந்நூர்: 31

3. தவ்பாச் செய்வது அமல்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கும் பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கும் காரணமாக அமையும். அல்லாஹுத்தஆலா அல்குர்ஆனில் கூறுகிறான்: அவனே தனது அடியார்களிடமிருந்து தவ்பாவை ஏற்றுக்கொள்கின்றான். இன்னும் பாவங்களை மன்னிக்கின்றான்.

- அஷ்ஷூரா: 25

4. தவ்பாச் செய்வது சுவனம் நுழைவதற்கும் நரகத்திலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்கும் காரணமாக அமைகின்றது. அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: அவர்களுக்குப் பின்னால் ஒரு வழித்தோன்றல் உருவாகினர். அவர்கள் தொழுகையை வீணடித்தார்கள். மனோ இச்சையை பின்பற்றினார்கள். அவர்கள் இழிவை சந்திப்பார்கள். தவ்பாச் செய்து, ஈமான் கொண்டு, நல்லமல் செய்கின்றவர்களைத் தவிர. அவர்கள் சுவர்க்கம் நுழைவார்கள். ஒன்றிலும் அநியாயம் செய்யப்படமாட்டார்கள்.

- மர்யம்: 59

5. தவ்பாச் செய்வது பாவங்களை நன்மைகளாக மாற்றிவிடுகின்றது. அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: யார் அதைச் செய்கிறாரோ அவர் பாவத்தை சந்திப்பார். மறுமை நாளில் அவருக்கு வேதனை இரட்டிப்பாக்கப்படும். இழிவாக்கப்பட்டவராக அவர் அதிலே நிரந்தராமாக இருப்பார். தவ்பாச் செய்து, ஈமான் கொண்டு, நல்லமல் செய்கின்றவர்களைத்தவிர. அல்லாஹ் அவர்களுடைய பாவங்களை நன்மைகளாக மாற்றிவிடுவான். அல்லாஹ் மன்னிக்கக்கூடியவனாகவும், இரக்கமுடையவனாக இருக்கின்றான்.

- அல்புர்கான்: 68

6. அனைத்து நலவுகளுக்கும் தவ்பா காரணமாக அமைகின்றது. அல்லாஹுதத்ஆலா கூறுகின்றான்: நீங்கள் தவ்பாச் செய்தால் அது உங்களுக்கு நலவாக இருக்கும்.

- அத்தவ்பா: 3

7. ஈமான் உறுதியாகுவதற்கும், கூலி கிடைப்பதற்கும் தவ்பாச் செய்வது காரணமாக அமையும். அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: நிச்சயமாக யாரெல்லாம் தவ்பாச் செய்து, சீர்திருத்தம் செய்து, அல்லாஹ்வைப் பற்றிப்பிடித்து, அல்லாஹ்வுக்காக அவர்களுடைய மார்க்கத்தை தூய்மைப்படுத்தினார்களோ அவர்களைத்தவிர. அவர்கள் விசுவாசிகளைச் சார்ந்தவர்கள். அல்லாஹ் விசுவாசிகளுக்கு மகத்தான கூலியை வழங்குவான்.

- அந்நிஸா: 146

8. அல்லாஹ்வுடைய பரகத் இறங்குவற்கும் பலம் அதிகரிப்பதற்கும் காரணமாக தவ்பா அமைகின்றது. அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: எனது கூட்டத்தினரே! நீங்கள் உங்கள் இறைவனிடம் பாவமன்னிப்புத் தேடுங்கள். பின்பு அவனிடம் தவ்பாச் செய்யுங்கள். அவன் தொடர்ச்சியாக உங்களுக்கு மழையை இறக்குவான். உங்கள் பலத்தைவிட மேலதிக பலத்தை அவன் உங்களுக்கு அதிகரிப்பான். நீங்கள் குற்றவாளிகளைப் புறக்கணிக்காதீர்கள்.

- ஹூத்: 52

9. தவ்பாச் செய்கின்றவர்களுக்கு மலாஇகாமார்களின் துஆ கிடைக்கும். அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: அர்ஷை சுமப்பவர்கள் மற்றும் அவனைச் சூழ இருப்பவர்கள் அவர்களுடைய இறைவனுடைய புகழைக்கொண்டு துதிக்கின்றனர். இன்னும், அவனை நம்பிக்கை கொள்கின்றனர். ஈமான் கொண்டவர்களுக்கு பாவமன்னிப்பும் தேடுகின்றனர். எங்கள் இறைவனே! அருளாலும் அறிவாலும் நீ அனைத்து விடயங்களிலும் விசாலமாகிவிட்டாய். தவ்பாச் செய்தவர்களுக்கும் உனது பாதையை பின்பற்றியவர்களுக்கும் நீ மன்னிப்பாயாக. நரக வேதனையை விட்டும் அவர்களைப் பாதுகாப்பாயாக.

- முஃமின் :7

10. நாம் தவ்பாச் செய்தால் தவ்பா அளிப்பதற்கு அல்லாஹ் விரும்புகின்றான். அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: அல்லாஹ் உங்களுக்கு தவ்பா அளிக்க நாடுகிறான்.

- அந்நிஸா: 27

- அஸ்கி இப்னு ஷம்சிலாப்தீன்