அழிவை ஏற்படுத்தும் பொறாமை – 02

بسم الله الرحمن الرحيم

ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு ஸுஜூத் செய்யும்படி இறைவன் கூறியது ஷைதானுக்கு மிகவும் கடுமையான பொறாமையை ஏற்படுத்தியது. மேலும், அவர்களை சுவனத்தில் தங்க வைத்ததும் அவனுக்கு பெரும் பொறாமையாக மாறிவிட்டது. எனவே, பல்வகையான சூழ்ச்சிகளையும் சதிகளையும் செய்ய ஆரம்பித்தான். அவ்வாறான ஊசலாட்;டங்கள் சூழ்ச்சிகள் என்று நாம் பார்க்கும் போது பின்வரக்கூடிய அம்சங்களை நோக்கலாம்.

அவ்விருவரின் மறைக்கப்பட்ட வெட்கத்தலங்களை அவ்விருவருக்கும் வெளிப்படுத்துவதற்காக ஷைதான் அவ்விருவருக்கும் ஊசலாட்டத்தை உண்டுபண்ணி, நீங்கள் இரு மலக்குகளாக அல்லது மரணிக்காமல் நிரந்தரமாக ஆகிவிடுவீர்கள் என்பதற்காகவேயன்றி இம்மரத்தை விட்டும் உங்கள் இரட்சகன் உங்கள் இருவரையும் தடுக்கவில்லை என்று கூறினான். நிச்சயமாக நான் உங்கள் இருவருக்கும் உபதேசம் செய்வோரில் உள்ளவன் என்று அவ்விருவரிடமும் சத்தியம் செய்தான்.

-     அல்அஃராப் : 20, 21

இவர்களை ஏமாற்றுவதற்கு ஷைத்தான் கையாண்ட வழிமுறை தான் நிச்சயமாக நான் உங்கள் இருவருக்கும் உபதேசம் செய்வோரில் உள்ளவன் என்றும் நீங்கள் இரு மலக்குகளாக அல்லது மரணிக்காமல் நிரந்தரமாக ஆகிவிடுவீர்கள் என்றும் அவர்களுக்கு கூறினான்.

இதனூடாக ஆதம் நபி அவர்களுக்கு வழங்கப்பட்ட நிஃமத்தை தண்டனையாக மாற்ற முயற்சித்தான். அவன் அதில் வெற்றியும் அடைந்தான். அல்லாஹ் அதனை தன் மறையில் கூறும் போது பின்வருமாறு கூறிக்காட்டுகின்றான்.

பின்னர் அவ்விருவரையும் ஏமாற்றிக் கீழ் நிலைக்குத் தள்ளினான். அவ்விருவரும் அம்மரத்தைச் சுவைத்த போது, அவ்விருவரினதும் வெட்கத்தலங்கள் அவ்விருவருக்கும் வெளிப்பட்டன. அவர்கள் இருவரும் சுவர்க்கத்தின் இலைகளால் தம்மை மறைத்துக்கொள்ள முயன்றனர். அவ்விருவரின் இரட்சகன் அவர்களை அழைத்து, உங்கள் இருவரையும் இம்மரத்தை விட்டும் தடுக்கவில்லையா? இன்னும் நிச்சயமாக ஷைதான் உங்கள் இருவருக்கும் பகிரங்க விரோதியாவான் என்றும் உங்களிடம் நான் கூறவிலையா? - என்று கேட்டான் -

-     அல்அஃராப்: 22

ஷைத்தான் இவ்வாறாக பகைமை கொள்வதற்குரிய காரணங்களாவன:

•    அல்லாஹ் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களைச் சிறப்பித்து நல்ல இடத்தில் வைத்தான்.

•    ஷைதானின் அந்தஸ்தைவிட ஆதம் நபியின் அந்தஸ்தை உயர்த்தி வைத்தான்.

•    ஷைத்தான் தன்னை சிறந்தவனாக நம்பிக்கொண்டிருந்தான்.

இவ்வாறான காரியங்களால் ஷைத்தான் கியாமத் நாள் வரை அனைவரின் சாபத்திற்குரியவனாக மாறிவிட்டான். இந்த சாபம் ஏற்பட்டதற்கு காரணம் பொறாமையாகும்.

பொறாமையின் இரண்டாம் கட்டம்

ஹாபில், காபில் என்ற ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பிள்ளைகளுக்கு மத்தியில் ஏற்பட்ட பொறாமையாகும். அல்லாஹ் இதனை பின்வரும் வசனங்களில் தெளிவுபடுத்துகின்றான்.

-     நபியே! - ஆதமின் இரு புதல்வர்களின் செய்தியை உண்மையாக அவர்களுக்கு எடுத்துரைப்பீராக! அவ்விருவரும் காணிக்கை நிறைவேற்றிய போது அவ்விருவரில் ஒருவரிடமிருந்து அது ஏற்;றுக்கொள்ளப்பட்டது. மற்றவரிடமிருந்து அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை. நிச்சயமாக நான் உன்னைக் கொலை செய்வேன் என - காணிக்கை ஏற்றுக்கொள்ளப்படாதவன் - கூறினார். அதற்கு மற்றவர், பயக்தியாளர்களிடமிருந்துதான் அல்லாஹ் ஏற்றுக் கொள்வான் எனக் கூறினார். என்னைக் கொலை செய்வதற்காக நீ உன் கையை என் பக்கம் நீட்டினாலும் உன்னைக் கொலை செய்வதற்காக எனது கையை உன்பக்கம் நான் நீட்டுபவன் அல்ல. நிச்சயமாக நான் அகிலத்தாரின் இரட்சகனாகிய அல்லாஹ்வை அஞ்சுகின்றேன். என் பாவத்தையும் உன் பாவத்தையும் நீ சுமந்து அதனால் நரகவாசிகளில் ஒருவனாக நீ ஆகிவிடுவதையே நிச்சயமாக நான் விரும்புகின்றேன். இதுதான் அநியாயக்காரர்களுக்குரிய கூலியாகும் - என்றும் கூறினார் - பின்னரும் தன் சகோதரனைக் கொலை செய்ய அவனது உள்ளம் அவனைத் தூண்டவே, அவன் அவனைக் கொலை செய்துவிட்டான். இதனால் அவன் நஷ்டவாளிகளில் உள்ளவனாக ஆகிவிட்டான்.

-     அல்மாயிதா: 27-30

இச்சம்பவத்தில் குர்பானுடன் சம்பந்தப்பட்ட ஒரு நிகழ்வு நடைபெற்றுள்ளது. ஆரம்ப காலத்தில் ஒருவர் குர்பான் கொடுத்து அது இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட்டது என்பதற்குரிய அடையாளமாக வானத்தில் இருந்து ஒருவகை நெருப்பு வந்து அக்குர்பானை எரித்துவிடும். அப்படி எரிக்கப்பட்ட குர்பான் இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகக் கருதப்படும். இவ்வடிப்படையில் தான் ஹாபிலுடைய குர்பான் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அறியப்பட்டது. காபிலுடைய குர்பான் இம்முறையில் நிராகரிக்கப்பட்ட காரணத்தால் தான் அவர் ஹாபிலைக் கொலை செய்ய முனைந்தார். இக்கொலை கூட பொறாமை என்ற ஒரு பாவத்தால் நிகழ்ந்ததாகும்.

பொறாமையின் மூன்றாம் கட்டம்

யூஸுப் நபியின் சகோதரர்கள் கொண்ட பொறாமையைக் குறிப்பிடலாம்.

நாம் ஒரு கூட்டமாக இருந்தும், யூஸுபும் அவரது சகோதரரும் எம்மை விட எமது தந்தைக்கு மிக நேசத்திற்குரியவர்களாக இருக்கின்றனர். நிச்சயமாக எமது தந்தை தெளிவான வழிகேட்டிலே இருக்கின்றார் என - யூஸூஃபின் சகோதரர்கள் - கூறியதை - எண்ணிப்பார்ப்பீராக! - யூஸுபை கொலை செய்துவிடுங்கள், அல்லது அவரைப் பூமியில் எங்காவது எறிந்துவிடுங்கள். உங்கள் தந்தையின் முகம் முற்றிலும் உங்கள் பக்கமே திரும்பும். அதற்குப்பின் நீங்கள் நல்ல கூட்டமாக ஆகிவிடுங்கள்.

-     யூஸுப்: 8,9

பொறாமை என்பது எவரையும் விட்டுவைக்கவில்லை என்று இச்செய்தியில் இருந்து நாம் புரிந்துகொள்ள முடியும். பொறாமை என்பது சகோதரன் என்;று கூட பார்க்காது அது கொலை என்ற அளவுக்கு கொண்டுபோய்விடும்.

பொறாமையின் நான்காவது கட்டம்

யஹூதிகள் நபியவர்கள் மீது கொண்ட பொறாமையை இப்பகுதியில் நாம் நோக்கலாம்.

ஏனெனில், யஹூதிகள் கடைசிக்காலத்தில் தங்களுக்கே நபி வருவார் என்று கூறிக் கொண்டு அறபிகளை எச்சரித்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் கூறிக் கொண்டிருந்தவாறின்றி அறபிகளுக்கு மத்தியில் நபி அனுப்பப்பட்டதும் யஹூதிகளின் பொறாமை அதிகரித்தது. இதனால் அவர்கள் பற்பல சூழ்ச்சிகளையும் பொறாமையான காரியங்களையும் செய்தார்கள். இவர்களின் நிலை பற்றி இறைவன் தன் மறையில் கூறும் போது பின்வருமாறு  கூறுகின்றான்.

வேதத்தையுடையோரில் அதிகமானோர் சத்தியம் தங்களுக்குத் தெளிவான பின்னரும் தங்கள் மனதில் உள்ள பொறாமை காரணமாக, நீங்கள் நம்பிக்கை கொண்ட பின்னரும் உங்களை நிராகரிப்பாளர்களாக மாற்ற வேண்டும் என்று ஆசைப்படுகின்றனர். எனினும், அல்லாஹ் தனது கட்டளையைக் கொண்டுவரும் வரை - அவர்களது இச்செயலை - மன்னித்துவிடுங்கள். பொருட்படுத்தாதீர்கள்;;. நிச்சயமாக அல்லாஹ் யாவற்றின் மீதும் பேராற்றலுடையவனாவான்.

-     அல்பகரா: 109

இவர்கள் தங்களுக்கு சத்தியம் வெளிப்பட்ட பின்னரும் பொறாமை கொண்டனர் என்று இறைவன் மேற்சொன்ன வசனத்தில் தெளிவுபடுத்திக் கூறுகின்றான். மேலும், நபியவர்களின் சமுதாயத்திற்கு எவ்விதமான நலவுகளும் நடக்கக் கூடாது என்பது தான் யஹூதிகள் விரும்பியதும், அவர்களின் சூழ்ச்சிகளும் திட்டங்களுமாகும். இதனை அல்லாஹ் பின்வருமாறு தெளிவு படுத்துகின்றான்.

உங்கள் இரட்சகனிடமிருந்து எந்த நன்மையும் உங்கள் மீது இறக்கப்படுவதை வேதங்கொடுக்கப்பட்டோரில் உள்ள நிராகரிப்பாளர்களும், இணைவைப்போரும் விரும்பப்போவதில்லை. அல்லாஹ் தான் நாடுவோரைத் தனது அருளுக்கு உரித்தாக்குகின்றான். அல்லாஹ் மகத்தான அருளுக்குரியவன்.

-     அல்பகரா: 105

தங்களுக்கு மத்தியில் நபி வரவில்லை என்ற பொறாமை ஏற்பட்டதால் அவர்கள் நபியவர்கள் மீது பல்வகையான சூழ்ச்சிகளைச் செய்தனர். நபியவர்களைக் கொலை செய்யவும் நாடினர். நபியவர்கள் மீது அவதூறுகளைக் கூறினர். நபியவர்களுக்கு எதிராக மக்களைத் தூண்டியதோடு மக்கள் மனதில் தவறான எண்ணங்களைத் தோற்றுவித்தனர்.

இதே பொறாமை தான் குரைஷிகளுக்கும் ஏற்பட்டது. அவர்களுக்கு ஆட்சி அதிகாரம், பட்டம் பதவி போன்ற இவ்வாறான அம்சங்கள் தான் நபியவர்கள் மீது பொறாமை கொள்ளவைத்தது. தமது முன்னோர்களின் வழிமுறைகளில் இருந்து மக்கள் விலகிச் செல்கின்றார்கள், எமக்கு எதிராக அவர்கள் அதிகரிக்கின்றார்கள், அவர்கள் அதிகரித்துவிட்டால் எங்களை மிகைத்து விடுவார்கள் பின்னர் நாங்கள் அவர்களுக்கு அடிமைகளாக அல்லது அவர்களின் தலைமைத்துவத்தின் கீழ் இருந்து அவர்கள் கூறுகின்ற படி நடக்க வேண்டும் என்ற எண்ணங்கள் பொறாமையாக வெளிப்பட்டதன் விளைவாக அவர்கள் கூட நபியவர்களைக் கொன்றுவிட வேண்டும் என்ற முடிவுக்கு வந்தனர்.

எனவே, பொறாமை என்பது இனம், மதம், மொழி, உறவு, பாசம், நட்பு, சகோதரத்துவம் என்று எதனையும் பார்க்காது. இவைகள் அனைத்தையும் மீறி இதில் சம்பந்தப்பட்ட அனைவரையும் அழித்துவிடும்.

சில எடுத்துக்காட்டுகள்

கற்றவர்களுக்கு மத்தியிலும் இப்பொறாமை இருக்கத்தான் செய்கின்றது. நல்ல முறையில் கற்ற ஒரு ஆலிம் தனது பணியைச் சரியாக இறைவனுக்குப் பயந்து செய்கின்றார். இவரை மக்கள் விரும்புகின்றனர். அவர்களுக்கு இவ்வாலிம் தான் கற்றவற்றை மிகவும் தெளிவாகவும் மிகவும் அறிவு பூர்வமாகவும் விளக்கிக் கூறுகின்றார்  என்றால், இவருடன் இருக்கும் ஏனைய ஆலிம்களுக்கு இவர் மீது மக்கள் வைத்துள்ள மரியாதை, விருப்பம், கௌரவம் போன்ற அம்சங்களில் பொறாமை கொண்டு அவ்வறிஞரைப் பற்றி தரக்குறைவாக விமர்சிக்கவோ அல்லது அவரது கௌரவம் பாதிக்கப்படும் விதத்தில் அவரை இழிவுபடுத்தவோ முயற்சிப்பதைப் பார்க்கலாம். இவ்வனைத்து அம்சங்களும் அவரில் ஏற்பட்ட பொறாமை தான் காரணமாக இருக்கின்றது.

கற்கும் மாணவர்களுக்கு மத்தியிலும் இக்கொடிய பாவம் பரந்து காணப்படக்கூடிய காட்சியைக் காண முடியும். பாடசாலையில் அல்லது ஒரு கல்லூரியில் வகுப்பில் கற்கும் ஒரு மாணவன் மிகவும் தேர்ச்சியாக ஆசிரியர்களுக்கு மத்தியில் மிகவும் விரும்பப்படக் கூடியவனாக இருக்கின்றான் என்றால், ஏனைய மாணவர்களுக்கு இது பாரிய சிக்கலை ஏற்படுத்துவதோடு, இதன் மூலம் அவர்களின் உள்ளங்களில் பொறாமை என்ற நோயும் ஆரம்பிப்பதை நாம் நோக்கலாம்.

சிறு பிள்ளைகளுக்கு மத்தியில் கூட இவை தவிர்க்க முடியாத அளவுக்கு பரவி காணப்படுவதனை நாம் நோக்கலாம். இவ்வாறான விடயங்களுக்கு முக்கிய காரண கர்த்தாக்களாக பெற்றோர்கள் இருப்பதனை நாம் நோக்கலாம். ஒன்றுக்கு மேற்பட்ட பிள்ளைகள் இருக்கும் சந்தர்ப்பத்தில் அவர்களுக்கு மத்தியில் ஏற்றத்தாழ்வுடன் நடந்து கொள்கின்ற போது அவர்களுக்கு மத்தியில் இக்குணம் வெளிப்படுகின்றது. ஒரு பிள்ளையின் விடயத்தில் பாசத்தை வெளிப்படுத்துவதும் மற்ற பிள்ளைகள் விடயத்தில் பாசத்தை மறைப்பதும் இதற்கு மிக முக்கியமான காரணமாக இருந்து கொண்டிருக்கின்றது. யூஸுப் நபியவர்களின் சகோதரர்கள் விடயத்தில் நாம் இதனைப் புரிந்து கொள்ள முடியும்.

வியாபாரிகளுக்கு மத்தியில் அதிகம் இக்குணம் காணப்படுவதனை அவதானிக்க முடியும். சாதாரணமாக வியாபாரம் செய்து கொண்டு வந்த ஒருவர் அல்லாஹ்வின் அருளாலும் பின்னர் தனது முயற்சியினால் முன்னேறிவிடுகின்றார் என்றால், அவருடன் இருந்த ஏனைய வியாபாரிகளுக்கு அது பாரியதொரு பிரச்சினையாக இருப்பதைக் காணலாம். இச்சந்தர்ப்பத்தில் அவர்கள் இவருடைய வியாபாரம், பொருளாதாரம், முன்னேற்றம் போன்ற அம்சங்களில் கூடிய கவனம் செலுத்துவதனைப் பார்க்கலாம். பல்வகையான சூழ்ச்சிகள், திட்டங்கள் மக்களுக்கு மத்தியில் பல சிந்தனை ஊடுருவல்கள் என்று எத்தனையோ வகையான பொறாமையின் வெளிப்பாடுகளைக் காண முடியும்.

இதே போன்று நல்ல குடும்பங்களைக் கண்டு சகிக்க முடியாதவர்கள் இருக்கின்றார்கள். நல்ல நண்பர்களைக் கண்டு சகிக்க முடியாதவர்கள் இருக்கின்றார்கள். நல்ல மக்களை, நல்ல இனத்தை, நல்ல சிந்தனையுடையோர்களைக் கண்டும் சகிக்க முடியாதவர்கள் இருக்கின்றார்கள்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்.

-     அபூமுஆத் ஜமாலுத்தீன் கபூரி