அழிவை ஏற்படுத்தும் பொறாமை – 01

بسم الله الرحمن الرحيم

மனித குலம் சந்திக்கும் பாரிய ஒரு மனநோய், இவ்வுலகத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய ஆபத்தான வைரஸ் போன்ற ஒரு பெரிய பாவம் இந்த பொறாமையாகும். மேலும், இதிலிருந்து எவரும் தப்பிவிட முடியாத அளவுக்கு மனநோயாகவும் இது இருக்கின்றது என்று கூறலாம். இதிலிருந்து படித்தவர்கள், படிப்பவர்கள், தலைவர்கள், தலைவர்களுக்கு கீழ்படிந்து நடப்பவர்கள்,  ஆண்கள், பெண்கள், சிறியவர்கள், பெரியவர்கள் என்று யாருமே தப்பமுடிய வில்லை அவ்வாறான ஒரு பாவமாக இருந்து கொண்டிருக்கின்றது. மனிதர்களை அழித்துவிடக்கூடிய அளவுக்கு சக்தி வாய்ந்ததாகவும் இது இருந்து கொண்டிருக்கின்றது.

இத்துர்குணம் ஆலிம்களுக்கு மத்தியிலும் காணப்படுகின்றது. இக்குணம் காரணமாக ஒருவரையொருவர் சாடுவதும், விமர்சிப்பதும், தூசிப்பதும், தங்களுக்கு சார்பாக சிலரை இதற்காக ஒன்று சேர்ப்பதும் இவ்வழியின் காரணமாகத்தான். மற்றும், மாணவர்களுக்கு மத்தியிலும் இதே போன்ற நிலை காணப்படுவதை நாம் அவதானிக்கலாம். அவர்களுக்கு மத்தியில் ஏற்படுகின்ற இந்த துர்குணத்தால் ஒருவரையொருவர் சாடுவதும், ஆசிரியர்களிடத்தில் முறைப்பாடு செய்வதும், அவர்களுக்கெதிராக சில சூழ்ச்சிகளைச் செய்வதும், கடைசியில் அவர்களின் கல்வி இடைநடுவே நிறுத்தப்படுவதும் அல்லது தடைப்படுவதும் இத்துர்க்குணம் காரணமாகத்தான் நடக்கின்றது.

தலைவர்கள், அந்தஸ்தில் இருப்பவர்கள், அவர்களுக்கு கீழ் பணி செய்பவர்கள், கட்டுப்பட்டிருப்பவர்கள் என்று நாம் பார்க்கும் போது அவர்கள் அத்தலைமைக்காக மற்றும் பதவிகளுக்காக ஒருவரையொருவர் விரும்புவதற்காக தங்களுக்கு மத்தியில் பல்வகையான நடவடிக்கைகளில் ஈடுபடுவதனைக் காணலாம். இவ்வாறான மிக மோசமான நடவடிக்கைகள், செயற்பாடுகள் அனைத்திற்கும் இப்பொறாமையே காரணமாகும்.

ஆண்கள், பெண்கள் என்று எடுத்துக் கொண்டால் கூட அவர்களுக்கு மத்தியிலும் பாசத்தால், அழகால், சிறப்பால், நல்ல நிலைமைகளால், சிறப்பான வாழ்க்கையால் என்று பலதரப்பட்டவிதத்தில் இந்த பொறாமைக் குணம் ஏற்படுகின்றது.

இதேபோன்று இக்கொடுமை சிறியவர்களையும் விட்டுவைக்காது. ஒரு குடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பிள்ளைகள் இருப்பார்களாயின் அவர்களுக்கு மத்தியில் இக்குணம் அவசரமாகவே ஏற்பட்டுவிடும். பொருட்கள் பரிமாற்றம், பாசப்பரிமாற்றம், அரவணைப்பு என்ற இன்னும் பல அம்சங்களால் இக்குணம் ஏற்படுகின்றது. அண்ணன் தம்பியை அல்லது தங்கையை கொலை செய்துவிட்ட வரலாறுகள், தீங்கிழைத்த காட்சிகள் என்று நாம் ஏராளமாகக் காணலாம். எனவே, இக்குணம் யாரையும் விட்டுவைக்க வில்லை என்பது துள்ளியமாக அறிவித்துக் கொண்டிருக்கின்றது.

அன்பின் இஸ்லாமியச் சகோதரர்களே! இந்தப் பாவம் தான் உலகில் ஏற்பட்ட முதல் பாவமாகும். பொறாமை என்பது மற்றவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அருட்கொடைகள் இல்லாமல் செல்ல வேண்டும் என்று விரும்புவது, அது இவ்வுலக இன்பங்களாக இருக்கலாம் அல்லது மார்க்க ரீதியான அருட்கொடையாக இருக்கலாம் இவைகள் நீங்க வேண்டும் என்று விரும்புவதாகும்.

உலமாக்களால் பொறாமையின் கட்டங்கள் நான்காக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

1.    பொறாமைக்காரனுக்கு கிடைக்காவிட்டாலும் பொறாமை கொள்ளப்பட்டவனின் அருட்கொடைகள் அழிய வேண்டும் என்று விரும்புதல்.

2.    பொறாமை கொள்ளப்பட்டவனின் அருட்கொடை நீங்கி தனக்கு வர வேண்டும் என்று ஆசைப்படல்.

3.    பொறாமை கொள்ளப்பட்டவனின் அருட்கொடைகள் போன்று தனக்கும் இருக்க வேண்டும். ஆனால், அவன் தரத்தால் உயர்ந்துவிடக்கூடாது என்று பொறாமைக்காரன் விரும்புதல்.

4.    பொறாமை கொள்ளப்படக்கூடியவனின் அருட்கொடைகள் நீங்கிவிட வேண்டும் என்ற எண்ணம் இன்றி அவனைப் போன்றது தனக்கும் இருக்க வேண்டும் என்று ஆசைப்படல். இது ஆகுமானதாகும். இதற்கு அறபியில் حسدالغبطة என்று சொல்லப்படும்.

மொத்தத்தில் இப்பொறாமையை இரண்டு வகையாக வகுக்கலாம்

1.    ஆகுமானது

இரண்டு விடயங்களில் தவிர பொறாமை கிடையாது - அவையாவன - ஒரு மனிதனுக்கு அல்லாஹ் அல்குர்ஆனைக் கற்றுக் கொடுத்துள்ளான். அவன் அவ்வேதத்தை இரவும் பகலும் ஓதிவருகிறான் இதனை அண்டை வீட்டுக்காரன் கேட்டுவிடுகிறான். அப்போது அம்மனிதன் எனக்கும் இவ்வாறு வழங்கப்பட்டிருக்க வேண்டுமே - அவ்வாறு வழங்கப்பட்டால் - நானும் இம்மனிதனைப் போன்று அமல் செய்திருப்பேன் என்று ஆசைப்படுவதாகும். இன்னும் ஒரு மனிதனுக்கு அல்லாஹ் செல்வத்தை வழங்கியுள்ளான். அவன் சத்தியத்திற்காக - தாராளமாக - செலவு செய்கின்றான். அப்பொழுது ஒரு மனிதன் கூறுகின்றான் எனக்கும் இவ்வாறு வழங்கப்பட்டிருக்க வேண்டுமே  - அவ்வாறு வழங்கப்பட்டால் - நானும் இம்மனிதனைப் போன்று அமல் செய்திருப்பேன் என்று ஆசைப்படுவதாகும் என ரஸூல் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹூரைரா ரழியல்லாஹூ அன்ஹூ

நூல் : புகாரி

2.    இழிவானது தடுக்கப்பட்டது

அல்லாஹ் கூறுகின்றான்: உமக்கு ஏதேனும் நன்மை ஏற்பட்டால் அது அவர்களுக்கு வருத்தத்தைக் கொடுக்கின்றது. உமக்கு ஏதேனும் துன்பம் ஏற்பட்டால், நிச்சயமாக நாம் இதற்கு முன்னரே எமது விடயத்தில் எச்சரிக்கையாக இருந்து கொண்டோம் என்று கூறி மகிழ்ச்சியடைந்தவர்களாக திரும்பிச் செல்கின்றனர். அல்லாஹ் எமக்கு விதித்ததைத் தவிர வேறு எதுவும் எம்மைப் பீடிக்காது. அவனே எங்கள் பாதுகாவலன். அல்லாஹ்வின் மீதே நம்பிக்கையாளர்கள் முழுமையாகப் பொறுப்புச் சாட்டட்டும் என நபியே நீர் கூறுவீராக!

-     அத்தவ்பா: 50, 51

மேலும் கூறுகின்றான்: அல்லது அல்லாஹ் தனது அருளிலிருந்து அவர்களுக்கு வழங்கியதற்காக இம்மனிதர்கள் மீது அவர்கள் பொறாமை கொள்கின்றார்களா?

-     அந்நிஸா: 54

பொறாமையின் முதல் கட்டம்

இவ்வுலகில் நடந்த முதல் பாவம் பொறாமையாகும். அதிலும் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சுவனம் நுழைந்தமை ஷைதானால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. மண்ணால் படைக்கப்பட்ட ஆதமுக்கு ஸுஜூத் செய்யும் படி அல்லாஹ் கூறுகின்றான் எனக்கு இச்சிறப்பில்லையே என்ற பொறாமை முதலில் ஆரம்பிக்கின்றது.

அல்லாஹ் இதனைத் தனது இறை வேதத்தில் குறிப்பிடும் போது பின்வருமாறு கூறிக்காட்டுகின்றான்.

பின்னர் நாம் வானவர்களிடம், ஆதமுக்கு ஸுஜூத் செய்யுங்கள் என்று கூறிய போது, இப்லீஸைத் தவிர அவர்கள் அனைவரும் ஸுஜூத் செய்தனர். அவன் மறுத்தான், பெருமையும் கொண்டான். அவன் நிராகரிப்பாளர்களில் ஆகிவிட்டான்.

-     அல்பகரா: 34

இதே விடயத்தை அல்லாஹ் தன் திருமறையில் நான்கு இடங்களில் குறிப்பிட்டுக் காட்டுகின்றான்.

நிச்சயமாக நாங்கள் உங்களைப் படைத்து, பின்னர் உங்களை உருவமைத்து, பின்னர் ஆதமுக்கு சிரம்பணிந்து ஸுஜூத் செய்யுங்கள் என வானவர்களிடம் கூறினோம். அப்போது இப்லீஸைத் தவிர அனைவரும் ஸுஜூத் செய்தனர். அவன் ஸூஜூத் செய்தோரில் இருக்கவில்லை.

-     அல்அஃராப்: 11

நாம் வானவர்களிடம் ஆதமுக்கு சிரம் பணிந்து ஸுஜூத் செய்யுங்கள் என்று கூறிய போது, இப்லீஸைத்தவிர அனைவரும் ஸுஜூத் செய்தனர். அவன், நீ களிமண்ணால் படைத்தவனுக்கு நான் ஸுஜூத் செய்வதா? எனக் கேட்டான்.

-     அல்இஸ்ரா: 61

நாம் வானவர்களிடம் ஆதமுக்கு சிரம் பணிந்து ஸுஜூத் செய்யுங்கள் என்று கூறிய போது, இப்லீஸைத் தவிர மற்ற அனைவரும் ஸுஜூத் செய்தனர். அவன் ஜின்களைச் சேர்ந்தவனாக இருந்தான். அதனால் தனது இரட்சகனின் கட்டளைக்கு மாறு செய்தான். என்னை விட்டு விட்டு அவனையும் அவனது சந்ததியினரையும் நீங்கள் உதவியாளர்களாக எடுத்துக் கொள்கிறீர்களா? அவர்களோ உங்களுக்கு எதிரிகளாவர். இவ்வநியாயக்காரர்களின் மாற்றீடு மிகக் கெட்டதாகும்.

-     அல்கஹ்ப்: 50

வானவர்களிடம் ஆதமுக்கு சிரம் பணிந்து ஸுஜூத் செய்யுங்கள் என்று நாம் கூறய போது, இப்லீஸைத் தவிர அவர்கள் அனைவரும் ஸுஜூத் செய்தனர். அவன் மறுத்துவிட்டான்.

-     தாஹா: 116

இன்ஷா அல்லாஹ் தொடரும்.

-     அபூமுஆத் ஜமாலுத்தீன் கபூரி