ஸூரதுன் நூர் விளக்கவுரை – 9

بسم الله الرحمن الرحيم

ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் மீது கூறப்பட்ட அவதூறு!

إن الذين جاءوا بالإفك عصبة منكم لاتحسبوه شرا لكم بل هو خيرلكم لكل إمرئ منهم ما إكتسب من الإثم والذي تولى كبره منهم له عذاب عظيم - 11

பொருள்:

நிச்சயமாக - ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் பற்றி பொய்யாக - அவதூறைக் கொண்டு வந்தார்களே அத்தகையவர்கள் உங்களில் உள்ள ஒரு கூட்டத்தினரே. அதை உங்களுக்குத் தீமையாக நீங்கள் எண்ண வேண்டாம். மாறாக,அது உங்களுக்கு நன்மையாகும். அவர்களில் ஒவ்வொரு மனிதருக்கும் பாவத்தால் எதை அவர் சம்பாதித்தாரோ அதுஅவருக்கு உண்டு. இன்னும், இந்த அவதூறை உருவாக்கிய விடயத்தில் அவர்களில் பெரும் பங்கெடுத்துக் கொண்டானே அத்தகையவன் - அவனுக்கு மகத்தான வேதனையுண்டு -

ஆயிஷா (ரழி) அவர்கள் மீது அவதூறு கூறப்பட்ட சம்பவம்

ஹிஜ்ரி 5ம் ஆண்டு நடைபெற்ற பனூமுஸ்தலக் போரின் போதுதான் இச்சம்பவம் நடைபெற்றது. அதன் சுருக்கமாவது...

நபியவர்கள் பயணத்தில் மனைவிமார்களில் யாரை உடன் அழைத்துச் செல்வது என சீட்டுக் குலுக்கிப்போடுவது வழக்கம். அவ்வாறே இப்பயணத்தில் ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்களின் பெயர் வரவே, அவரைத் தன்னுடன் அழைத்துச் சென்றார்கள். போர் முடிந்து திரும்பிக் கொண்டிருந்த போது படைகளுடன் ஓர் இடத்தில் தங்கினார்கள். அங்கு ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா தங்களது சுய தேவைக்காக வெளியே சென்றுவிட்டுத் திரும்பி வந்தார்கள். அவர்கள் பயணத்தில் வரும் போது தனது சகோதரி ஒருவரிடமிருந்து மாலை ஒன்றை இரவல் வாங்கி வந்திருந்தார். அவர்கள் சென்ற இடத்தில் அந்த மாலை விழுந்துவிட்டது. அது அவர்களுக்குத் தெரியவில்லை. அவர்கள் தங்களின் கூடாரத்திற்கு வந்த பிறகு அது தவறியது தெரியவரவே, அதைத் தேடிச் சென்றார்கள். அவர்கள் சென்றதை யாரும் பார்க்கவில்லை. நிலைமை இவ்வாறு இருக்க, நபியவர்கள் தங்கள் தோழர்களுக்குப் பயணத்தைத் தொடர கட்டளையிட்டார்கள்.

ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் அமர்ந்துவந்த தொட்டியை ஒட்டகத்தின் மீது ஏற்றுவதற்காக வந்தவர்கள். ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அதில் இருக்கிறார் என்றெண்ணி அதை ஒட்டகத்தின் மீது ஏற்றிவிட்டார்கள். ஏற்றி வைத்தவர்கள் இரண்டுக்கும் மேற்பட்டவர்களாக இருந்ததால் தொட்டி எடை குறைந்திருந்ததை அறிந்து கொள்ள முடியவில்லை. மேலும், ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா வாலிபப் பெண்ணாக இருந்ததால் உடல் பருமன் இல்லாமல் மெலிந்தவராக இருந்தார். ஒருவர் அல்லது இருவர் தொட்டியைத் தூக்கியிருந்தால் ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அதில் இல்லாததை உணர்ந்திருக்க முடியும்.

இதற்குப் பின் அனைவருமே அங்கிருந்து பயணித்துவிட்டார்கள். மாலையைத் தேடிச் சென்ற ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அதைக் கண்டுபிடித்து எடுத்துக் கொண்டு தனது இருப்பிடம் திரும்பியபோது அங்கு ஒருவரும் இருக்கவில்லை. தன்னைக் காணவில்லை என்று தெரிந்தவுடன் தேடிவருவார்கள் என்று எண்ணி ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அங்கேயே தங்கிவிட்டார்கள். சிறிது நேரத்தில் ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா கண்ணயர்ந்து தூங்கிவிட்டார்கள். அப்போது அங்கு வந்த ஸப்வான் இப்னு முஅத்தல் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள், இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் அல்லாஹ்வின் தூதரின் மனைவியாயிற்றே! என்று உரக்கக்கூறினார். இதைக் கேட்ட ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா விழித்தெழுந்தார்கள். ஸப்வான் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் படையின் பிற்பகுதியில் தங்கியிருந்தார். அவர் அதிகம் தூங்குபவராக இருந்தார்.

ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்களை ஹிஜாபுடைய சட்டம் வருவதற்கு முன் பார்த்திருந்ததால் அப்போது பார்த்தவுடன் அறிந்து கொண்டார். தனது ஒட்டகத்தை இழுத்துவந்து அவர்களுக்கருகில் உட்காரவைத்தவுடன் அதன் மீது ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா ஏறிக் கொண்டார்கள். அன்னை ஆயிஷாவிடம் வேறு எவ்விதப் பேச்சும் ஸப்வான் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் பேசவில்லை. ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் என்பதைத் தவிர ஸப்வானிடமிருந்து வேறு எந்தச் சொல்லையும் கேட்கவில்லை.

ஸப்வான் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஒட்டகத்தை இழுத்தவராக நபியவர்களின் சமூகம் வந்துசேர்ந்தார். அப்போது முஸ்லீம்களின் படை மதிய நேரத்தில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது. இக்காட்சியைப் பார்த்த மக்கள் ஒவ்வொருவரும் தங்களின் பாணியில் தங்களின் பண்பிற்கேற்ப பேசினார்கள். அப்போதுதான் அல்லாஹ்வின் எதிரியான இப்னு உபை தனது குரோதத்தையும் நயவஞ்சகத்தையும் வெளிப்படுத்தினான். ஓர் அவதூறான கதையைப் புனைந்து அதை மக்களுக்கு மத்தியில் இரகசியமாகவும் பரகசியமாகவும் பரப்பினான். அவனது நண்பர்களும் அவனுடன் இக்காரியத்தில் ஈடுபட்டனர்.

முஸ்லீம்கள் மதீனா திரும்பியதற்குப் பின் கதையைப் புனைவதில் பாவிகள் மிகத் தீவிரமாக ஈடுபட்டனர். நபியவர்களோ எந்த பதிலும் கூறாமல் அமைதியாக இருந்தார்கள். பின்பு அல்லாஹ்விடமிருந்து அறிவிப்பு வருவது தாமதமாகிவிடவே ஆயிஷாவைப் பிரிந்துவிடும் விடயத்தில் தங்களின் தோழர்களிடம் ஆலோசனை செய்தார்கள். ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்களை பிரிந்துவிட்டு வேறொருவரை மணந்து கொள்ள அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் மறைமுகமாக ஆலோசனை வழங்கினார்கள். உஸாமா இப்னு ஸைத் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்களும் மற்ற தோழர்களும் எதிரிகளின் பேச்சைப் பொருட்படுத்த வேண்டாம் ஆயிஷாவைப் பிரிந்துவிடாதீர்கள் என்று ஆலோசனை கூறினார்கள்.

நபியவர்கள் மிம்பரின் மீது ஏறி, அப்துல்லாஹ் இப்னு உபை குறித்த தங்களது மனவர்த்தத்தைத் தெரிவித்தார்கள். இது அவ்ஸ் கிளையினரின் தலைவர் உஸைத் இப்னு ஹூளைருக்குக் கோபத்தை மூட்டியது. அவர் அப்துல்லாஹ் இப்னு உபையைக் கொல்ல வேண்டும் என்ற தனது கருத்தைத் தெரிவித்தார். ஆனால், இப்னு உபையின் கிளையைச் சேர்ந்த கஸ்ரஜியினரின் தலைவர் ஸஃத் இப்னு உபாதாவிற்கு தனது இனத்தவரை இவ்வாறு கூறியது வெறுப்பை மூட்டியது. இதனால், இரு கிளையினருக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது நபியவர்கள் அவ்விரு கிளையினரையும் சமாதானப்படுத்தினார்கள்.

போரிலிருந்து திரும்பியவுடன் ஒரு மாதமாக ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா உடல் நலம் குன்றியிருந்தார். தன்னைப் பற்றி பேசப்பட்டு வந்த பொய்யான கதையை ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அறிந்திருக்கவில்லை. உடல் நலக் குறைவு ஏற்பட்டால் எந்தளவு நபியவர்கள் பரிவு காட்டுவார்களோ அந்தப் பரிவை நபியவர்களிடம் இப்போது அன்னை ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா பார்க்கவில்லை.

சற்று உடல் நலம் தேறியது, ஓர் இரவு உம்மு மிஸ்தஹ் என்ற தோழியுடன் சுயதேவையை நிறைவேற்றுவதற்காக இரவில் வெளியில் சென்றார்கள். அன்னை ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்களைப் பற்றி மதீனாவில் உலாவரும் வதந்திகளில் உம்மு மிஸ்தஹூடைய மகனும் பங்கு பெற்றுள்ளார். இந்தக் கவலையும் சிந்தனையும் உம்மு மிஸ்தஹை அதிகம் பாதிப்படைய வைத்தது. ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்களுடன் சென்று கொண்டிருக்கும் போது தனது மகனுக்கு அவதூறு விடயத்தில் தொடர்புள்ளது என்று எவ்வாறு அவர்களிடம் கூறுவது? இதே குழப்பத்தில் மனம் உழன்று கொண்டிருக்கும் போது, உம்மு மிஸ்தஹ் ரழியல்லாஹு அன்ஹா தன்னுடைய ஆடையால் தடுக்கிக் கீழே விழுந்தார். அப்போது தன்னை அறியாமலேயே அவர்கள் தனது மகனைத் திட்டினார்கள். நீ கீழே விழுந்ததற்கு உன் மகனை ஏன் திட்டுகிறாய்? என்று ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா வினவியபோது, உம்மு மிஸ்தஹ் ரழியல்லாஹு அன்ஹா ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்களைப் பற்றி மக்களிடையே பரப்பப்பட்ட அவதூறுகளைக் கூறினார்.

உம்மு மிஸ்தஹ் ரழியல்லாஹு அன்ஹா செய்தியைக் கூறிய உடனேயே ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் வீட்டிற்குத் திரும்பினார்கள். தனது பெற்றோர்களிடம் சென்று செய்தியை உறுதியாக தெரிந்துவர நபியவர்களிடம் அனுமதி கேட்டார்கள். நபியவர்களிடம் அனுமதி பெற்று பெற்றோர்களைச் சந்தித்து உண்மை நிலவரத்தைத் தெரிந்து கொண்டவுடன் ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா வேதனை பொறுக்க முடியாமல் அழுதார்கள். இரண்டு இரவும் ஒரு பகலும் தூங்காமல் அழுது கொண்டேயிருந்தார்கள். அவர்களது இந்த அழுகை அன்னாரின் ஈரலைப் பிளந்துவிடுமளவுக்கு இருந்தது.

அப்போது தான் நபியவர்கள் அங்கு வந்து இறைவனைப் புகழ்ந்து துதித்துவிட்டு, ஆயிஷாவே உன்னைப் பற்றி எனக்கு இவ்வாறெல்லாம் செய்தி கிடைத்தது. நீ குற்றமற்றவளாக இருந்தால் அல்லாஹ் உன்னை அப்பழியிலிருந்து நிரபராதியாக ஆக்குவான். உண்மையிலே நீ பாவம் செய்திருந்தால் அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேள். அவனிடம் பாவமீட்சி பெற்றுக்கொள். ஏனெனில், நிச்சயமாக அடியான் தனது பாவத்தை ஒப்புக் கொண்டு அல்லாஹ்விடம் பாவமீட்சி கோரினால், நிச்சயமாக அல்லாஹ் அவனது பாவங்களை மன்னித்துவிடுவான் என்று கூறினார்கள்.

நபியவர்களின் இந்த வார்த்தையைக் கேட்ட ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் தனது அழுகையை நிறுத்தி, பெற்றோர் ஒவ்வொருவரிடமும்  நபியவர்களுக்குப் பதில் அளிக்குமாறு கூறினார்கள். ஆனால் அவர்களுக்கு என்ன பதிலளிப்பது என்று தெரியவில்லை. அப்போது ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா: நான் நிலைமை என்னவென்று நன்கு தெரிந்து கொண்டேன். இந்தச் செய்தியை நீங்கள் பலமுறை கேள்விப்பட்டதால் அது உங்களின் உள்ளங்களில் ஆழப்பதிந்துவிட்டது. அது உண்மை என்று நீங்கள் நம்பியும் விட்டீர்கள். அல்லாஹ்வுக்குத் தெரியும் நான் குற்றமற்றவள் என்று, நான்   உங்களுக்கு என்னைப் பற்றி குற்றமற்றவள் என்று கூறினால் நீங்கள் அது விடயத்தில் என்னை நம்பமாட்டீர்கள். நான் குற்றமற்றவள் என்பதை அல்லாஹ் நன்கறிவான். ஆனால், நான் இவ்விடயத்தை ஒப்புக் கொண்டால் மட்டும் நீங்கள் என்னை நம்பிவிடுவீர்கள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக எனக்கும் உங்களுக்கும் யூஸூப் நபியின் தந்தை யஃகூப் அலைஹிஸ்ஸலாம் கூறிய, ஆகவே அத்துக்கத்தைச் சகித்துக் கொள்வதுதான் நன்று. நீங்கள் கூறியவற்றில் அல்லாஹ்விடம் உதவி தேடுகிறேன் - 12:18 - என்ற வார்த்தையைத் தவிர வேறு வார்த்தையைக் கூற எனக்குத் தெரியவில்லை என்றார்கள்.

பின்பு தன் முகத்தைத் திருப்பி சாய்ந்து படுத்துக் கொண்டார்கள். அதே நேரத்தில், நபியவர்களுக்கு இறை செய்தி அருளப்பட்டது. அது முடிந்தவுடன் நபியவர்கள் சிரித்தவர்களாக ஆயிஷாவே அல்லாஹ் உன்னை நிரபராதி ஆக்கிவிட்டான் என்று கூறினார்கள். அப்போது ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்களின் தாயார் ஆயிஷாவே நபியிடம் எழுந்து செல் என்று கூறினார்கள். அதற்கு, அல்லாஹ்வின் மீது சத்தியமாக, நான் அவர்களிடம் எழுந்து செல்லமாட்டேன். மேலும், நான் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையும் புகழவுமாட்டேன் என்று கூறினார்கள்.

ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா தான் நிரபராதி என்பதாலும் தன்னை நபியவர்கள் நேசிக்கிறார்கள் என்பது உறுதியாகத் தெரிந்திருந்ததாலுமே இவ்வாறு கூறினார்கள்.

இப்பொய்யான சம்பவம் தொடர்பாக அல்லாஹ் அல்குர்ஆனின் 24 ஆம் அத்தியாயத்தில் 11 முதல் 20 வரை உள்ள வசனங்களை இறக்கினான்.

இந்த சம்பவத்தை இட்டுக்கட்டியவர்களில் மிஸ்தஹ், ஹஸ்ஸான், ஹம்னா பின்து ஜஹ்ஷ் ரழியல்லாஹு அன்ஹும் ஆகியோருக்கு 80 கசையடிகள் கொடுக்கப்பட்டன. ஆனால், இவர்களுக்கெல்லாம் தலைவனாக இருந்த அப்துல்லாஹ் இப்னு உபையை அடிக்கவில்லை. இவன்தான் இதற்கு மூல காரணமாவான். இவனைத் தண்டிக்காமல் விட்டதற்குக் காரணம் என்னவெனில், உலகத்தில் யார் மீது தண்டனைகள் நிறைவேற்றப்பட்டுவிடுகிறதோ அவர்கள் மறுமையில் தண்டிக்கப்படமாட்டார்கள். ஆனால், மறுமையில் மகத்தான தண்டனை இவனுக்கு உண்டென அல்லாஹ் குர்ஆனில் இவனைப் பற்றி எச்சரிக்கை செய்துவிட்டான். எனவே, இவ்வுலகில் இவனுக்குத் தண்டனை நிறைவேற்றப்படவில்லை. அல்லது, எந்த நலனைக் கருதி நபியவர்கள் இவனை முன்பு கொலை செய்யாமல் விட்டுவிட்டார்களோ அதே நலனைக் கருதி இந்த தண்டனையையும் நிறைவேற்றாமல் விட்டிருக்கலாம்.

-           புகாரி: 1 ∕ 364, 2 ∕ 696,697,698  ஸாதுல் மஆத்: 2 ∕ 113,114,115  இப்னு ஹிஷாம்: 2 ∕ 297-307

ஒரு மாதத்திற்குப் பின் இந்தப் பிரச்சினையால் உண்டான சந்தேகம் மற்றும் குழப்பங்கள் மதீனாவைவிட்டும் முற்றிலுமாக அகன்றன. நயவஞ்சகர்களின் தலைவன் இப்னு உபை பெரும் கேவலமடைந்தான். இந்த இழிவுக்குப் பின் சமூகத்தில் அவன் தலையை நிமிர்த்த முடியவில்லை.

இப்னு இஸ்ஹாக் ரஹிமஹுல்லாஹ் கூறுகிறார்: இச்சம்பவத்திற்குப் பின் இப்னு உபை ஏதாவது பேசினால், அவனது கூட்டத்தினரே அவனைக் கண்டித்து அடக்கிவிடுவார்கள். இதைப் பார்த்த நபியவர்கள் உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடம் உமரே நீர் என்ன கருதுகிறீர்? நீர் என்னிடம் அவனைக் கொலை செய்ய வேண்டும் என்று கூறிய அன்றே நான் இவனைக் கொலை செய்திருந்தால், அவனது கூட்டத்தினர் என் மீது மிகுந்த கோபம் அடைந்திருப்பார்கள். ஆனால், இன்று அவனது கூட்டத்தினரிடம் அவனைக் கொலை செய்துவிடுங்கள் என்று நான் கூறினால் அவர்கள் அவனைக் கொலை செய்துவிடுவார்கள் என்று கூறினார்கள். நபியவர்களின் இவ்வார்த்தையைக் கேட்ட உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அல்லாஹ்வின் மீது சத்தியமாக, அல்லாஹ்வின் தூதருடைய செயல் எனது செயலைவிட நேர்த்திமிக்கது என்பதை இப்போது நான் உறுதியாக தெரிந்து கொண்டேன் என்றார்கள்.

-           இப்னு ஹிஷாம்: 2 ∕ 293

இன்ஷா அல்லாஹ் தொடரும்.

-           அபூஹுனைப் முஹம்மத் ஹிஷாம் இப்னு முஹம்மத் தௌபீக்