அல்குர்ஆன், அஸ்ஸுன்னாவின் பார்வையில் மலாஇகாமார்கள் – 02

بسم الله الرحمن الرحيم

மலாஇகாமார்கள் மகத்தான படைப்பினம் என்பதைப் பின்வரும் ஹதீஸும் தெளிவுபடுத்துகின்றது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: அர்ஷை சுமக்கக்கூடிய அல்லாஹ்வுடைய மலாஇகாமார்களில் ஒரு மலக்கைப்பற்றிப் பேசுவதற்கு எனக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவருடைய காதுச்சோனைக்கும் தோள்பட்டைக்கும் இடையில் உள்ள தூரம் 700 ஆண்டுகள் பிரயாணம் மேற்கொள்ளும் தூரமாகும்.

-     ஸஹீஹ் அபீதாவூத்

அஷ்ஷெய்க் அல்பானீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்: இவர்கள் மகத்தான படைப்பினம். இரவிலும் பகலிலும் அல்லாஹ்வை வணங்குகின்றார்கள். இவர்களில் ஒருவருடைய காதுச்சோனைக்கும் தோள்பட்டைக்கும் மத்தியில் இப் பெரிய தூரம் உள்ளது. இவர்கள் ஒரு மகத்தான படைப்பினம். அல்லாஹ்வுக்கு ஸுஜூதும் ருகூஉம் செய்கின்றார்கள். ஆதமின் மகனே! நீயோ களிமண்ணால் படைக்கப்பட்டுள்ளாய். அல்லாஹ்வுக்கு ஸுஜூது செய்வதைவிட்டும் பெருமையடிக்கின்றாய். நீ வெட்கப்படமாட்டாயா?

-     அல்அகீதது அவ்வலன்

அல்லாஹுத்தஆலா மலாஇகாமார்களை கண்ணியமிக்க நல்லவர்கள் என்று வர்ணித்திருக்கின்றான். அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: அவ்வாறல்ல, நிச்சயமாக அது உபதேசமாகும். யார் நாடுகிறாரோ அவர் அதில் படிப்பினை பெறுவார். அது பரிசுத்தமாக்கப்பட்ட உயர்ந்த கண்ணியமிக்க ஏடுகளில் காணப்படுகின்றது. இவ்வேடுகள் கண்ணியமிக்க மிகுந்த நல்லோர்களான வானவர்கள் எனும் எழுதுவோரின் கைகளில் உள்ளதாகும்.

-     அபஸ: 11-16

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: யார் திறன்பட அல்குர்ஆனை ஓதுகின்றாரோ அவர் கண்ணியமிக்க நல்லோர்களாகிய எழுதுவோருடன் இருப்பார்கள்.

-     முஸ்லிம்

இவ்வீர் ஆதாரங்களும் மலாஇகாமார்கள் சங்கையானவர்கள் மற்றும் நல்லவர்கள் என்பதை தெளிவுபடுத்துகின்றன.

மலாஇகாமார்களுக்கு காணப்படும் ஒரு பண்பே வெட்கமாகும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு முறை தனது தொடையை வெளிக்காட்டியவர்களாக இருந்தார்கள். அப்போது அபூபக்ர் பின்பு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் அவர்களிடம் நுழைந்தார்கள். அப்போதும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அந்த அமைப்பிலேயே இருந்தார்கள். உஸ்மான் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் நுழைந்தபோது அவர்கள் தனது தொடையை மூடினார்கள். பின்பு நபியவர்கள் ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்களிடம் மலாஇகாமார்கள் வெட்கப்படுகின்ற ஒரு மனிதருடைய விடயத்தில் நான் வெட்கப்படக்கூடாதா? என வினவினார்கள்.

- ஸஹீஹு அதபில் முப்ரத்

உஸ்மான் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அதிக வெட்க சுபாவமுடையவர்களாக காணப்பட்டார்கள். அதனால் மலாஇகாமார்களும் அவர்கள் குறித்து வெட்கப்படுவதாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குறிப்பிட்டார்கள். எனவே, மலாஇகாமார்களுக்கு வெட்கம் எனும் பண்பு இருப்பதை நாம் தெளிவாக விளங்கிக்கொள்ளலாம்.

மலாஇகாமார்களில் ஆண்கள், பெண்கள் என்ற வேறுபாடு காணப்படமாட்டாது. ஜாஹிலிய்யா மக்கள் மலாஇகாமார்களை அல்லாஹ்வுடைய பெண்மக்கள் என்று வர்ணித்தார்கள். அதற்கு அல்லாஹ் அல்குர்ஆனில் பின்வருமாறு மறுப்பளித்தான்.

ரஹ்மானுடைய அடியார்களாகிய மலாஇகாமார்களை அவர்கள் பெண்களாக ஆக்கிவிட்டார்கள். அவர்கள் படைக்கப்பட்டதை அவர்கள் பார்த்துக்கொண்டுதான் இருந்தார்களா? அவர்களுடைய சாட்சிகள் எழுதப்படும். இன்னும் அவர்கள் கேட்கப்படுவார்கள்.

-     ஸுஹ்ரூப்: 19

மலாஇகாமார்கள் சாப்பிடவோ குடிக்கவோமாட்டார்கள். நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடத்தில் மலாஇகாமார்கள் மனித ரூபத்தில் சமூகமளித்தார்கள். அப்போது இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வந்திருந்தவர்களை விருந்தாளிகள் என்று நினைத்து அவர்களுக்கு உணவை முன்வைத்தார்கள். ஆனால் அவர்கள் அதனை சாப்பிடவில்லை.

இச்சம்பவத்தை அல்லாஹ் பின்வருமாறு அல்குர்ஆனில் கூறுகின்றான்:

இப்றாஹீமின் கண்ணியத்திற்குரிய விருந்தாளிகளின் செய்தி நபியே! உம்மிடம் வந்ததா? அவர்கள் அவரிடம் நுழைந்தபோது ஸலாம் சாந்தி உண்டாகட்டும் என்று கூறினர். அவரும் ஸலாம் எனக்கூறி அறிமுகமற்ற கூட்டத்தினர் என தனக்குள் எண்ணிக்கொண்டார். பின்னர் தனது குடும்பத்தாரிடம் விரைந்து சென்று கொழுத்த காளைக் கன்றை பொரித்து கொண்டுவந்தார். பின்னர் அதனை அவர்களுக்கு முன்னால் வைத்து நீங்கள் சாப்பிட மாட்டீர்களா? எனக்கேட்டார். அவர்கள் உண்ணாதிருக்கவே அவர்கள் குறித்து அச்சம் கொண்டார். நீர் பயப்பட வேண்டாம் என அவர்கள் கூறி, அறிவுள்ள ஒரு குழந்தையைக் கொண்டு அவருக்கு அவர்கள் நன்மாராயம் கூறினர்.

-     அத்தாரியாத்: 24-28

மனிதர்கள் எந்த விடயங்களில் நோவினை அடைகின்றார்களோ அந்த விடயங்களில் மலாஇகாமார்களும் நோவினை அடைகின்றார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: வெள்ளைப்பூடு, வெங்காயம், லீஸ் ஆகிய கீரை வகைகளிலிருந்து யார் சாப்பிட்டாரோ அவர் எங்களுடைய பள்ளிவாசல்களில் எங்களை நெருங்க வேண்டாம். ஏனென்றால், ஆதமுடைய மக்கள் எது குறித்து நோவினை அடைகின்றார்களோ அது குறித்து மலாஇகாமார்களும் நோவினை அடைகின்றார்கள்.

-     முஸ்லிம்

மலாஇகாமார்களின் தங்குமிடம் வானமாகும். அதனை பின்வரும் வசனம் தெளிவுபடுத்துகின்றது. அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: உமது இரட்சகனிடம் இருப்போர் இரவிலும் பகலிலும் அவனைத் துதிக்கின்றனர். மேலும், அவர்கள் சோர்வடையமாட்டார்கள்.

-     புஸ்ஸிலத்: 38

நிச்சயமாக அல்லாஹ் ஏழு வானங்களுக்கு மேலால் அர்ஷின் மீது இருக்கின்றான் என்பது நாமனைவரும் அறிந்த விடயமே. இவ்வசனத்தில் அல்லாஹ் மலாஇகாமார்களை தன்னோடு இருப்பவர்கள் என்று வர்ணித்துள்ளான். எனவே, மலாஇகாமார்கள் வானத்தில் இருக்கின்றார்கள் என்பதை இதன் மூலம் நாம் புரிந்து கொள்ளலாம்.

வானத்தில் இருக்கக்கூடிய மலாஇகாமார்கள் அல்லாஹ்வின் கட்டளைகளின் பிரகாரம் பூமிக்கு இறங்குவார்கள். அவர்கள் இறங்கக்கூடிய காலங்களில் ஒன்றே லைலதுல் கத்ருடைய இரவாகும். இதற்குப் பின்வரும் வசனம் ஆதாரமாகும். அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்:

நிச்சயமாக நாம் குர்ஆனாகிய இதனை மகத்துவமிக்க இரவாகிய லைலதுல் கத்ரில் இறக்கி வைத்தோம். லைலதுல் கத்ர் என்னவென்பதை நபியே! உமக்கு அறிவித்தது எது? லைலதுல் கத்ர் என்பது ஆயிரம் மாதங்களைவிடச் சிறந்ததாகும். வானவர்களும் ரூஹு எனும் ஜிப்ரீலும் சகல கட்டளைகளுடன் தமது இரட்சகனின் அனுமதிப் பிராகரம் அதில் இறங்குகின்றனர். அதிகாலை உதயமாகும் வரை அது அமைதி பொதிந்திருக்கும்.

-     அல்கத்ர்: 1-5

மேலும், மலாஇகாமார்கள் மார்க்க அறிவு போதிக்கப்படுகின்ற சபைகளுக்காக வேண்டி வானத்திலிருந்து இறங்குகின்றார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ஒரு கூட்டம் அல்லாஹ்வுடைய வீடுகளில் ஒரு வீட்டில் அல்லாஹ்வுடைய வேதத்தை ஓதி அதனை அவர்களுக்கு மத்தியில் கற்பவர்களாக இருந்தால் அவர்களுக்கு அமைதி இறங்கிவிடும். ரஹ்மத் அவர்களைச் சூழ்ந்து கொள்ளும். மலாஇகாமார்கள் அவர்களைச் சூழ்ந்துகொள்வார்கள். அவர்களைப்பற்றி அல்லாஹ் தன்னிடம் இருப்பவர்களிடத்தில் பேசுவான்.

-     ஸஹீஹு அபீதாவூத்

இந்த மகத்தான சிறப்பை எம்மில் பலர் இழந்துவிடுகின்றனர். பள்ளிவாசல்களில் இடம்பெறுகின்ற பயான் நிகழ்ச்சிகளில் கலந்து பயன்பெறக்கூடியவர்கள் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றனர். மேற்குறிப்பிடப்பட்ட ஹதீஸில் உள்ள சிறப்புக்களை அவர்கள் அறியாதவர்களாக இருக்கின்றார்கள். அல்லது அறிந்தும் அதிலே பொடுபோக்காகக் காணப்படுகின்றார்கள்.

பள்ளிவாசல்களில் நடைபெறும் பயான் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்கு அவர்களுக்கு தடையாக அமைவது தொலைக்காட்சித் தொடர் நாடகங்களாகும். அல்லாஹ்வுடைய ரஹ்மத் கிடைக்கும் இடங்களைப் புறக்கணித்து அல்லாஹ்வின் கோபம் இறங்கக்கூடிய இடங்களை நாடிச்செல்கின்றனர்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்...

- அஸ்கி இப்னு ஷம்சிலாப்தீன்