அல்உஸுலுஸ்ஸலாஸா தமிழாக்கம் – 01

بسم الله الرحمن الرحيم

மொழிபெயர்த்தோன் உரை

إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله.

يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون

يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساءا واتقوا الله الذي تسائلون به والأرحام إن الله كان عليكم رقيبا

يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما

أما بعد:

فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار.

இவ்வுலகைப் படைத்துப் பரிபாலிக்கக்கூடிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும் உரித்தாகும். அவனது மார்க்கத்தை இப்பூமியில் பரிபூரணமாக எத்திவைத்த அருமைத் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது அல்லாஹ்வின் கருணையும் சாந்தியும் உண்டாகட்டும்.

இவ்வுலகில் முஸ்லிமாக வாழக்கூடிய அனைவர் மீதும் அல்லாஹ்வை உரிய முறையில் வணங்குவது கடமையான ஒன்றாகும். அவனை உரிய முறையில் வணங்குவதாயின் ஒரு முஸ்லிம் மார்க்க அறிவின்றி அதனை மேற்கொள்ள முடியாது. மார்க்க அறிவை அவன் கற்றுக்கொள்ளும்போதே அவனுக்கு அல்லாஹ்வை வணங்கும் முறைபற்றி தெளிவு கிடைக்கின்றது. அதனடிப்படையில் மார்க்க அறிவைக்கற்றுக் கொள்வது அனைத்து முஸ்லிம்களின் மீதும் கடமையாக ஆகிவிடுகின்றது.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: அறிவைத் தேடுவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும்.

-     ஸஹீஹ் இப்னுமாஜா

மிகமுக்கியமாக அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய மூன்று அம்சங்கள் காணப்படுகின்றன. அம்மூன்று அம்சங்களையும் எவரும் தெரிந்து வைக்காமல் அல்;லாஹ்வை வணங்க முடியாது. யாரும் அந்த மூன்று விடயங்களைப் படிப்பதைவிட்டும் விதிவிலக்குப்பெற முடியாது. அவை: ஓர் அடியான் அல்லாஹ்வை, அவனது நபியை, அவனது மார்க்கத்தைத் தெரிந்து கொள்வதாகும். இம்மூன்று அம்சங்களும் மிகமுக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. அல்லாஹ்வை வணங்கும் அனைவர்களும் கற்க வேண்டிய விடயங்களாகவும் காணப்படுகின்றன.

இம்மூன்று அடிப்படைகளையும் அதிகமான அறிஞர்கள் உரையாற்றியிருக்கின்றார்கள். இன்னும் நூட்களாகவும் எழுதியுள்ளார்கள். அந்த நூட்களில் மிகப் பிரதானமான நூலாக இமாம் முஹம்மத் இப்னு அப்தில் வஹ்ஹாப் ரஹிமஹுல்லாஹ் அவர்களுடைய அல்உஸூலுஸ்ஸலாஸா என்ற நூல் காணப்படுகின்றது. இந்நூல் இந்த மூன்று அம்சங்களையும் ஆதாரங்களுடன் உள்ளடக்கியுள்ளது.

ஒரு மனிதன் இஸ்லாமிய அகீதாவைப் படிப்பதாயின் இந்நூலைக்கொண்டே அவன் தனது அகீதா அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும். அகீதா அறிவில் ஓர் ஆரம்ப அறிவாக இந்நூல் காணப்படுகின்றது. ஒரு விடயத்தை நாம் கற்றுக்கொள்ளும்போது அதனுடைய சிறிய விடயங்களில் இருந்தே ஆரம்பிக்க வேண்டும். இன்று உலகில் வாழ்கின்ற அஹ்லுஸ்ஸுன்னாத் வல்ஜமாஅத்தினர்களைச் சார்ந்த பல அறிஞர்களும் இந்நூலைக்கொண்டே அவர்களுடைய அகீதாப் பாடத்தை ஆரம்பித்திருக்கின்றார்கள்.

ஆகவே, இந்நூலைப் படித்து அதன் மூலம் சிறந்த பயனைப் பெறுவதற்கு நாம் அனைவரும் முயற்சிக்க வேண்டும். இதில் நாம் எதைக் கற்றுக்கொள்கின்றோமோ அவற்றை எமது வாழ்விலும் நாம் கடைபிடிக்க வேண்டும்.

அல்உஸூலுஸ்ஸலாஸா என்ற நூலை தமிழ்வடிவத்தில் இங்கு உங்களுக்கு நாம் தொகுத்துத்தர இருக்கின்றோம். மேலும், இந்நூலுக்கான விளக்கவுரையை இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் காலங்களில் ஒலிப்பதிவாகவும் உரைநடையாகவும் பதிவு செய்வோம்.

அல்உஸூலுஸ்ஸலாஸா என்ற நூல் பொதிந்துள்ள அம்சங்கள்

1. ஒரு முஸ்லிம் அவசியமாகத் தெரிந்து கொள்ள வேண்டிய நான்கு விடயங்கள்.

2. அறிவு என்றால் என்ன?

3. அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டிய மூன்று அம்சங்கள்

4. ஷிர்க் மற்றும் தவ்ஹீத் பற்றிய விளக்கம்

5. ஹனீபிய்யா மார்க்கம் குறித்த விளக்கம்

6. சில வணக்க வழிபாடுகளும் அவற்றின் ஆதாரங்களும்

7. இஸ்லாம், ஈமான், இஹ்ஸான் பற்றிய விளக்கங்கள்

8. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பற்றிய குறிப்பு

9. ஹிஜ்ரத் பற்றிய தெளிவு

10. நபிமார்களின் அழைப்புப் பணி பற்றிய விடயங்கள்

11. தாகூத் என்பதன் விளக்கம்

இன்ஷா அல்லாஹ் தொடரும்.

-     அஸ்கி இப்னு ஷம்சிலாப்தீன்