பெண்கள் அலங்காரம் – 01

بسم الله الرحمن الرحيم

பெண்கள் அலங்காரத்தை நேசிக்கக்கூடியவர்களே!

அல்லாஹ்வின் படைப்பில் பெண்களானவர்கள் அலங்காரத்தை பெரிதும் நேசிக்கும் மனோபாவத்தைக் கொண்டவர்களாகக் காணப்படுகின்றார்கள். இத்தகைய அடிப்படை சுபாவத்தை பிரஸ்தாபிக்கும் முகமாக அல்லாஹுத்தஆலா பின்வருமாறு கூறுகின்றான்.

ஆபரணத்தில் வளர்க்கப்பட்டு வாதத்தைத் தெளிவாக எடுத்துக் கூற முடியாதவர்களான பெண்களையா? அல்லாஹ்வுக்குச் சந்ததியாக ஆக்குகின்றனர்.

- அஸ்ஸுஹ்ருப்: 18

எனவே, பெண்களானவர்கள் ஆண்களில் இருந்தும் வேறுபட்டு அலங்காரத்தை நேசிக்கக்கூடியவர்களாகவும் அவற்றை உண்டுபன்னக்கூடிய சாதனங்களின் பால் கூடிய நாட்டம் கொண்டவர்களாகவும் இருக்கின்றார்கள் என்பதை மேற்குறித்த வசனத்திற்குப் பொழிப்பாகக் குறிப்பிடலாம். இவ்வெதார்த்த நிலையை இப்னு அப்தில்பர் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் பின்வருமாறு தெளிவுபடுத்துகின்றார்கள்.

பெண்ணின் புத்தி அவளுடைய அழகிலும் ஆணின் அழகு அவனுடைய புத்தியிலும் இருக்கும் என்பது மக்கள் மத்தியில் சொல்லப்பட்டுவரும் விடயமாக இருந்துவருகின்றது.

-     பஹ்ஜதுல் மஜாலிஸ்: 3/7

மேலும், இவ்வடிப்படையைப் பின்வரும் சம்பவத்திலிருந்தும் புரிந்து கொள்ளலாம். ஒரு முறை ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்களை நோக்கி: நிச்சயமாக நீர் நபியவர்களைத் தொட்டும் ஒரு செய்தியை அறிவிக்கின்றீர் ஆனால், நானோ அவர்களைத் தொட்டும் அதனைச் செவிமடுத்ததில்லை எனக் கூறினார்கள். அதற்கு அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள்: தாயே! நான் அவற்றைத் தேடிப்பெற்றுக் கொண்டிருந்த வேளையில் அவற்றை நீங்கள் பெறுவதைவிட்டும் கண்ணாடியும் சுர்மாவும் உங்களை  பராக்காக்கிவிட்டன ஆனால், அவையேனும் என்னைப் பராக்காக்கக்கூடியனவாக இருக்கவில்லை என பதிலளித்தார்கள்.

-     தபகாத் இப்னி ஸஃத்: 3/364

எனவே, அலங்காரத்துடன் நெருங்கிய தொடர்புடைய பெண்கள் சமுகத்திற்கு அவர்கள் மீது அல்லாஹுத்தஆலா ஹலாலாக்கிய அலங்காரம் தொடர்பான தெளிவான விளக்கத்தைக்கொடுப்பது எமது பாரிய பொறுப்பு என்ற அடிப்படையில் பெண்கள் அலங்காரம் என்ற மகுடத்தில் ஒரு தொடர் கட்டுரையை வரைய எத்தனித்துள்ளேன். அதிலும் குறிப்பாக இக்கால சூழ்நிலையில் இப்படியான ஒரு முயற்சி மிக அவசியமாக உள்ளது. இஸ்லாத்தின் எதிரிகளால் நவீன நாகரீகம் என்ற போர்வையில் பல அம்சங்கள் உலகலாவிய ரீதியில் முஸ்லிம் சமுகத்திற்கு மத்தியில் பரப்பிவிடப்பட்டுக் கொண்டிருக்கும் இவ்வேளையில் அவர்களின் சதிவலையில் எம் சமுதாயத்துப் பெண்கள் சிக்குண்டு பரிதவிக்காமல் இருப்பதற்காகவும் அல்லாஹ் அனுமதித்ததை மாத்திரம் அவர்கள் உள்வாங்கவும் இம்முயற்சி மேற்கொள்ளப்படுகின்றது. இதற்கு அல்லாஹ் எமக்குத் துணை நிற்பானாக!

இன்ஷா அல்லாஹ் தொடரும்.

- அபூஹுனைப் முஹம்மத் ஹிஷாம் இப்னு முஹம்மத் தௌபீக்