அல் அகீததுல் வாஸிதிய்யா விளக்கவுரை – 20

بسم الله الرحمن الرحيم

قوله : (هل ينظرون إلا أن يأتيهم الله في ظلل من الغمام والملائكة وقضي الأمر) البقرة : 210 وقوله : (هل ينظرون إلا أن تأتيهم الملائكة أو يأتي ربك أو يأتي بعض آيات ربك يوم يأتي بعض آيات ربك) الأنعام : 158 وقوله : (كلا إذا دكت الأرض دكا دكا وجاء ربك والملك صفا صفا) الفجر : 21،22  وقوله تعالى : (ويوم تشقق السماء بالغمام ونزل الملائكة تنزيلا) الفرقان : 25

விளக்கம்:

அல்லாஹ் தன்னுடைய அந்தஸ்திற்குத் தக்கவாறு தனது அடியார்களுக்கு மத்தியில் விசாரணை செய்து தீர்ப்பு வழங்க வருவான் என்பதை உறுதி செய்யும் ஆதாரங்கள்.

அல்லாஹ் கூறுகின்றான்: அல்லாஹ்வும் வானவர்களும் மேகத்தின் நிழல்களில் அவர்களிடம் வந்து அவர்களின் காரியம் முடிக்கப்படுவதையா அவர்கள் எதிர்பார்க்கின்றனர்?

-           அல்பகரா: 210

மேலும் கூறுகின்றான்: அவர்கள் தம்மிடம் வானவர்கள் வருவதையா? அல்லது உமது இரட்சகன் வருவதையா அல்லது உமது இரட்சகனின் சில அத்தாட்சிகள் வருவதையா எதிர் பார்க்கின்றனர்? உமது இரட்சகனின் அத்தாட்சிகளில் சில வரும் நாளில் ...

-           அல்அன்ஆம்: 158

இன்னும் கூறுகின்றான்: அவ்வாறன்று பூமி துகள் துகளாக தகர்க்கப்படும் போது வானவர்கள் அணி அணியாக நிற்க உமது இரட்சகன் வருவான்.

-           அல்பஜ்ர்: 21, 22

அடுத்து கூறுகின்றான்: வானம் மேகத்தால் பிளந்து மலக்குகள் தொடராக இறக்கப்படும் நாளை நபியே! நீர் எண்ணிப்பார்ப்பீராக.

-           அல்புர்கான்: 25

மேற்குறிப்பிடப்பட்ட வசனங்கள் அல்லாஹ்வின் வருகையை உறுதி செய்யக்கூடியனவாக உள்ளன. அவ்வருகையானது மறுமைநாளில் இடம்பெறும். அல்லாஹுத்தஆலா மறுமை நாளில் அடியார்களுக்கு மத்தியில் விசாரணை செய்து தீர்ப்பு வழங்குவதற்காகவே அவ்வாறு சமுகம் தருகின்றான். அத்தகைய வருகையானது அவனது அந்தஸ்திற்குத் தக்கவிதத்தில் அமைந்திருக்கும் என்று நாம் விசுவாசம் கொள்ள வேண்டும்.

இப்படி அல்லாஹுத்தஆலா வருகை தருவது அவனது செயல் சார்ந்த பண்புகளில் ஒன்றாகக் கருதப்படும். எனவே, இத்தகைய பண்பை அதனுடைய எதார்த்த கருத்தைக் கொண்டு உறுதிப்படுத்த வேண்டும். மாற்றமாக அல்லாஹ்வின் பண்புகளை நிராகரிக்கக்கூடியவர்கள் மாற்று வியாக்கியானம் செய்வதைப் போன்று நாமும் இப்பண்பு விடயத்தில் மாற்று வியாக்கியானம் செய்யக்கூடிடாது.

அல்லாஹ்வின் பண்புகள் விடயத்தில் மாற்று வியாக்கியானம் செய்யக் கூடியவர்கள் இப்பண்பு குறித்துக் கூறும் போது மறுமைநாளில் அல்லாஹ்வின் வருகை என்பது இடம்பெறாது மாற்றமாக அவனது கட்டளையே வருகை தரும் என்று கூறுகின்றார்கள். இத்தகைய விளக்கம் முற்றிலும் தவறான விளக்கமாகும். பொதுவாக அல்லாஹ்வின் வருதல் செயற்பாடு தொடர்பாக இப்னுல் கையிம் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறும் போது: அல்லாஹ்வுடன் இணைக்கப்பட்ட வருதல் என்ற பண்பானது இருவகையான கருத்துக்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

1.         பொதுப்படையான கருத்து

2.         வரையறுக்கப்பட்ட கருத்து

பொதுப்படையான கருத்தின் அடிப்படையில் இப்பண்பானது அல்லாஹ்வின் எதார்த்தமான வருதல் செயற்பாட்டைத்தவிர வேறு எக்கருத்தையும் உணர்த்தி நிற்காது. இதனையே மேற்குறித்த அல்பகரா அத்தியாயத்தின் 210 ஆவது வசனமும் அல்பஜ்ர் அத்தியாயத்தின் 21, 22 ஆகிய வசனங்களும் பிரஸ்தாபிக்கின்றன. மேலும், வரையறுக்கப்பட்ட கருத்தின் அடிப்படையில் அவனது வருதல் செயற்பாடு அருட்கொடை அல்லது வேதனை போன்றவற்றைக் கொண்டு வரையறுக்கப்பட்டு வரும்போது குறித்த சொல்லுடைய கருத்தும் வரையறுக்கப்பட்ட கருத்தாக வரும். அந்தவித்தில் அவனது அருள் வருதல் அல்லது அவனது வேதனை வருதல் என்று அமையும். இவ்வகையைப் பிரதிபலிக்கும் விதமாகவே பின்வரும் ஆதாரங்கள் இடம்பெற்றுள்ளன என்கிறார்கள்.

அல்லாஹ் கூறுகின்றான்: ஒரு வேதத்தை நிச்சயமாக நாம் அவர்களிடம் கொண்டு வந்து அதனை அறிவு பூர்வமாக நாம் தெளிவுபடுத்தியுள்ளோம்.

-              அல்அஃராப்: 52

நபியவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் அருள் மற்றும் நலவைக் கொண்டு வரும்வரை .....

எனவே, மேற்குறிப்பிடப்பட்ட அடிப்படையைக் கருத்திற் கொண்டு அவனது பண்புகள் விடயத்தில் சரியான நிலைப்பாட்டைக் கடைபிடிப்போமாக!

இன்ஷா அல்லாஹ் தொடரும்.

-  அபூஹுனைப் முஹம்மத் ஹிஷாம் இப்னு முஹம்மத் தௌபீக்