உணவில் விஸ்தீரணம் ஏற்படுவதற்கான காரணங்கள் – 02

بسم الله الرحمن الرحيم

5.    வணக்கவழிபாடுகளில் ஈடுபடுவதற்கு நேரகாலத்தை ஒதுக்குதல்

அதாவது, வணக்கவழிபாடுகளில் ஈடுபடும் போது உள்ளத்தை தான் புரியும் வணக்கவழிபாட்டின் பால் ஒருமுகப்படுத்த வேண்டும். அவ்வாறு செய்வது உணவில் விஸ்தீரணம் எற்படுவதற்குக் காரணமாக அமைந்துவிடும். இதற்குச் சான்றாகப் பின்வரும் நபிமொழியைக் குறிப்பிடலாம்.

ஆதமுடைய மகனே! எனக்குரிய வணக்கவழிபாட்டில் முழுமையான கவனத்தைச் செலுத்து, நான் உன் உள்ளத்தை செல்வத்தைக் கொண்டு நிரப்பிவிடுவேன். மேலும், உன் ஏழ்மையைப் போக்கிவிடுவேன். அவ்வாறு நீ செய்யாதவிடத்து உன் உள்ளத்தை வேலையால் நிரப்பிவிடுவேன். மேலும், உன் ஏழ்மையை நீங்காததாக ஆக்கிவிடுவேன். இச்செய்தி அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் ஸஹீஹுத் தர்கீப் எனும் நூலில் பதிவாகியுள்ளது.

6.    ஹஜ் மற்றும் உம்ரா ஆகிய கடமைகளை தொடர்ந்தேர்ச்சியாக அமைத்துக் கொள்ளல்

ஹஜ், உம்ரா ஆகிய கடமைகளை ஒன்றன்பின் ஒன்றாக அமைத்துக் கொண்டு வருவதின் மூலம் உணவில் விஸ்தீரணம் ஏற்படுகின்றது. இதனைப் பின்வரும் ஹதீஸில் இருந்து புரிந்து கொள்ளலாம்.

ஹஜ், உம்ரா ஆகியவற்றிக்கிடையில் தொடர்ச்சியைப் பேணிவாருங்கள். நிச்சயமாக அவை இரண்டும் இரும்பு, தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றில் காணப்படும் துருவை நெருப்பு அகற்றுவது போன்று ஏழ்மை, பாவங்கள் ஆகியவற்றை அகற்றிவிடுகின்றன. இச்செய்தி இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் அஸ்ஸஹீஹுல் முஸ்னத் எனும் நூலில் பதிவாகியுள்ளது.

7.    உறவுமுறையைப் பேணிக் கொள்ளல்

உறவுமுறையைப் பேணிக் கொள்வதும் உணவில் விஸ்தீரணம் ஏற்படுவதற்குக் காரணமாக அமைக்கின்றது. நபியவர்கள் கூறினார்கள்: எவருக்கு தனது உணவில் விஸ்தீரணம் ஏற்படுவதும் தனது ஆயட்காலம் நீடிப்பதும் சந்தோசத்தை ஏற்படுத்தக்கூடியனவாக இருக்கின்றதோ அவர் தனது உறவினர்களைச் சேர்ந்து நடந்து கொள்ளட்டும். இச்செய்தி அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் புகாரி எனும் கிரந்தத்தில் பதிவாகியுள்ளது.

8.    அல்லாஹ்வுடைய பாதையில் செலவு செய்தல்

அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்வதும் உணவில் விஸ்தீரணம் ஏற்படுவதற்குக் காரணமாக உள்ளது. ஸபஉ எனும் அத்தியாயத்தில் 39ஆம் வசனத்தில் அல்லாஹ் கூறும்போது:

நீங்கள் நல்லறங்களில் எதைச் செலவிட்ட போதும் அவன் அதற்குப் பிரதியீட்டை வழங்குவான். அவன் உணவளிப்போரில் சிறந்தவன் என்றகிறான்.

மேலும், அல்லாஹுத்தஆலா ஹதீஸுல் குத்ஸியில் கூறும்போது: நீ செலவு செய்! நான் உனக்குச் செலவு செய்வேன்! என்கிறான். இச்செய்தியை அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள். புகாரி எனும் கிரந்தத்தில் இதனைக் காணலாம்.

இன்னும், அல்லாஹ்வுடைய பாதையில் செலவு செய்யும் மக்களுக்காக ஒவ்வொரு நாளும் ஒரு வானவர் இறைவா! செலவு செய்பவருக்கு பின்னால் ஒரு ஏற்பாட்டைச் செய்வாயாக! என்று பிரார்த்திப்பதாக நபியவர்கள் கூற அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள். புகாரி, முஸ்லிம் ஆகிய நூட்களில் இச்செய்தியைக் காணலாம்.

9.    அறிவைத் தேடும் மாணவர்களுக்காக வேண்டி செலவு செய்தல்

உண்மையில் அறிவைத் தேடும் பணியில் ஈடுபடும் மாணவர்களுக்காகச் செலவு செய்வதும் உணவில் விஸ்தீரணம் ஏற்படுவதற்குக் காரணமாக அமைந்துள்ளது. நபியவர்களின் காலத்தில் ஒரு சகோதரர் தனது மற்ற சசோதரரைக் குறித்து நபியவர்களிடத்தில் முறையிடும்போது: அல்லாஹ்வின் தூதரோ! எனது சகோதரன் தொழில் ஏதும் செய்யாமல் முழுமையாகத் தனது நேரத்தை அறிவைத் தேடுவதில் கழிக்கின்றான் எனக் கூறினார். அதற்கு நபியவர்கள் உன்னுடைய சகோதரனுக்கு அறிவைத் தேடுவதற்கு அவகாசம் கொடுப்பது உனக்கு உணவளிக்கப்படுவதற்குக் காரணமாக அமையலாம் எனக் கூறினார்கள். இச்செய்தி திர்மிதி எனும் கிரந்தத்தில் அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் பதிவாகியுள்ளது.

10.   ஹிஜ்ரத் செல்லல்

ஒருவர் தான் வாழும் பிரதேசத்தில் சரியான முறையில் மார்க்கத்தைப் பின்பற்ற முடியாத நெருக்கடியான நிலைக்குத் தள்ளப்படும்போது குறித்த பிரதேசத்தைவிட்டும் ஹிஜ்ரத் செல்வது உணவில் விஸ்தீரணம் ஏற்படுவதற்குக் காரணமாக அமைகின்றது.

அல்லாஹ் கூறுகின்றான்: எவர் அல்லாஹ்வின் பாததையில் ஹிஜ்ரத் செய்கிறாரோ அவர் பூமியில் அதிகமான புகலிடங்களையும் வசதிகளையும் பெற்றுக் கொள்வார்.

- அந்நிஸா: 100

எனவே, அன்பார்ந்த வாசகர் நெஞ்சங்களே! நாம் மேலே குறிப்பிட்ட காரணங்களைப் பேணி எம்முடைய உணவில் விஸ்தீரணத்தைத் தேடிக் கொள்ள முயற்சி எடுப்போமாக!

- அபூஹுனைப் முஹம்மத் ஹிஷாம் இப்னு முஹம்மத் தௌபீக்