அதானும் அதன் சட்டங்களும் தொடர் – 02

بسم الله الرحمن الرحيم

அதான் மற்றும் அதான் கூறுபவர் தொடர்பான நிபந்தனைகள்

1.    அதான் ஒழுங்குமுறைப்படி இருக்க வேண்டும். அதானுடைய   வார்த்தைகளின் ஒழுங்குமுறை மாறினால் அதான் செல்லுபடியாகாது.

2.    அதானுடைய ஒவ்வொரு வாக்கியங்களுக்குமிடையில் நீண்ட இடைவெளி இருக்கக்கூடாது. அதான் கூறுபவருக்கு தும்மல் ஏற்பட்டால் அவர் தும்மலிட்டபோது கூறமுன்வந்த வார்த்தையை திருப்பிக்கூற வேண்டும்.

3.    அதானுடைய நேரம் நுழைந்ததன் பின்பே அதான் கூறப்பட வேண்டும். தொழுகையுடைய நேரம் வந்துவிட்டால் உங்களில் ஒருவர் உங்களுக்கு அதான் கூறட்டும் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறனார்கள். - புஹாரீ,முஸ்லிம்

4.    அதான் கூறும்போது கருத்து மாறக்கூடிய வகையில் அதனை மொழியக்கூடாது. உதாரணமாக அல்லாஹு அக்பர் என்பதை அல்லாஹு அக்பார் எனக்கூறினால் அல்லாஹ் மிகப்பெரியவன் என்ற கருத்து மாறிவிடும். அதிகமான முஅத்தின்கள் இதில் கவனம் செலுத்துவதில்லை என்பது அனைவரும் அறியக்கூடிய விடயமே! தன்னுடைய அதான் அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக பலர் கருத்துக்கள் மாறக்கூடிய வகையில் தங்களுடைய அதான்களை அமைத்துக் கொள்கின்றனர். அதானுடைய கருத்து மாறும் வகையில் அதான் கூறுவது ஹராமாகும்.

அதானை நீட்டலாமா?

பாடல்களைப்போல் அதானை நீட்டக்கூடிய அதிகமான முஅத்தின்களை எமது நாட்டில் நாம் பார்க்கலாம். ஏன் மக்கா, மதீனா பள்ளிவாசல்களில் கூட அதான் நீட்டப்படுகின்றது. மக்காவையும் மதீனாவையும் ஆதாரம் பிடிக்க முடியாது. குர்ஆனிலிருந்தும் சுன்னாவிலிருந்துமே ஆதாரங்களை எடுக்க வேண்டும்.

எமது முஅத்தின்கள் எவ்வாறு தங்களுடைய அதான்களை நீட்டுகின்றார்கள் என்பதை சற்று அலசிப்பார்ப்போம்.

1.    அல்லாஹு அக்பர்: இவ்வார்த்தையில் அதிகமான முஅத்தின்கள் அல்லாஹ் என்ற சொல்லில் உள்ள லா என்ற எழுத்தை எல்லை மீறி நீட்டுவதை நாம் பார்க்கலாம். இந்த இடத்தில் நீட்டுவதற்கு எந்த அடையாளத்தையும் நாம் காணமுடியாது. இன்னும் சிலர் அல்லாஹுவக்பர் என்று கூறுகின்றார்கள்.

2.    அஷ்ஹது அல்லாஇலாஹ இல்லல்லாஹ்: இந்த வார்த்தையின் கடைசியில் உள்ள அல்லாஹ் என்ற வார்த்தையை நீட்டலாம். ஏனென்றால் சுகூனின் மீது நாம் ஒரு சொல்லை நிறுத்த நாடினால் அதற்கு முன் மத்துடைய எழுத்துக்களான அலிப் அல்லது வாவ் அல்லது யா இருந்தால் ஆறு ஹரகத்தகள் நீட்ட முடியும். அவ்வாறான இடங்களில் ஒன்றே இல்லல்லாஹ் என்ற வார்த்தையாகும்.

இன்னும் சிலர் இந்த வார்த்தையில் உள்ள லாஇலாஹ என்ற சொல்லில் லாஈலாஹ இல்லல்லாஹ் என்று இ எழுத்தை நீட்டுவதை நாம் பார்க்கலாம். இதன் கருத்து மாறுவதை அவர்கள் விளங்கிக்கொள்வதில்லை. இன்னும் சிலர் அல்லாஇலாஹ என்ற சொல்லில் ஹ என்ற எழுத்தை சற்று நீட்டுகின்றார்கள். இதுவும் தவிர்க்கப்பட வேண்டும்.

3.    அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரஸூலுல்லாஹ்: இதில் அதிகமானவர்கள் பிழைவிடுகின்றனர். சிலர் அன்ன என்ற வார்த்தையில் ன என்ற எழுத்தை சற்று நீட்டுகின்றார்கள். இன்னும் சிலர் அஷ்ஹது அன்ன.... மூஹம்மத.... ர.... ஸூலுல்லாஹ் என்று கூறுகின்றார்கள். இவர்களுக்குத் திருத்திக்கொடுப்பதற்கும் எந்த ஆலிமும் முன்வருதில்லை.

4.    ஹய்யஅலஸ்ஸலாஹ், ஹய்யஅலல்பலாஹ்: சிலர் இதனைக் கூறும்போது ஹய்ய்ய்ய் என்று ய் என்ற எழுத்தை அதிகப்படுத்துவார்கள். இன்னும் சிலர் ஹய்யாலஸ்ஸலா ஹய்யாலல்பலாஹ் என்று கூறுகின்றார்கள். ஹய்யஅலஸ்ஸலாஹ் என்று முடிக்கும் போது ஆறு ஹரகத்கள் நீட்டலாம். ஏனென்றால் இதற்கும் நாம் முன்பு கவனித்த இல்லல்லாஹ்வுடைய சட்டமேயாகும்.

5.    லாஇலாஹ இல்லல்லாஹ்: சிலர் இதனைக் கூறும்போது லாஇலாஹ என்று சற்று நிறுத்திவிட்டு பின்பு இல்லல்லாஹ் என்று கூறுகின்றார்கள். இந்த முறையும் தவிர்க்கப்பட வேண்டும்.

எமது நாட்டின் அதான்களுடைய நீட்டல் வடிவங்களில் ஒரு சிலவற்றை நான் கூறியுள்ளேன். இன்னும் பல வடிவங்களை நீங்கள் ஒவ்வோர் ஊர்களிலும் கேட்கலாம்.

நாம் அதான் கூறும்போது இயன்றவரை நீட்ட வேண்டிய இடங்களில் மாத்திரம் நீட்டி அடுத்த இடங்களில் குறைத்தும் கூறவேண்டும்.

சஊதி பத்வாக் குழுவிடம் அதானில் நீட்டுவதின் சட்டம் என்ன? என வினவப்பட்டது. அதற்கு அவர்கள் அதானில் நீட்டுவதற்கு எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை. மாறாக நடுத்தரமாக அமையும் வகையில் அதான் கூறப்படுவதே சுன்னாவாகும் எனக் கூறினார்கள்.

மேலும், அதான் கூறும்போது தஜ்வீத் முறைப்படி அதனுடைய எழுத்துக்களை மொழியவும் உரிய இடத்தில் நிறுத்தவும் வேண்டும்.

இன்னும் சில முஅத்தின்கள் அரபு இலக்கண சட்ட விதிகளை தங்களுடைய அதான்களில் மீறுகின்றார்கள். இதற்கு காரணம் அரபு இலக்கணம் குறித்து போதிய அறிவு அவர்களிடம் இல்லையென்பதேயாகும்.

அதன் காரணமாக அல்லாஹு அக்பருல்லாஹு அக்பர் என்று கூறவேண்டிய வார்த்தையை அல்லாஹுஅக்பரல்லாஹுஅக்பர் என்று கூறுகின்றார்கள். இன்னும் சிலர் அஷ்ஹது அன்ன முஹம்மதர்ரஸூலுல்லாஹ் என்பதை அஷ்ஹது அன்ன முஹம்மதுன்ரஸூலுல்லாஹ் என்று கூறுகின்றார்கள். இவ்வாறான அதிகமான இடங்களில் அரபு இலக்கண விதிகளை அவர்கள் பேணுவதில்லை. ஆகவே அதான் கூற விரும்புபவர்கள் அதனை இலக்கண விதிமுறைகளுக்கேற்ப கூறுவதற்கு முன்வரவேண்டும்.

6.    சுன்னாவில் கூறப்பட்ட எண்ணிக்கைக்கு ஏற்பவே அதான் கூறவேண்டும். அதில் குறைக்கவும் கூடாது. அதிகரிக்கவும் கூடாது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: யார் எமது மார்க்கத்தில் இல்லாத ஓர் அமலை செய்கிறாரோ அது நிராகரிக்கப்பட்டதாகும். - புஹாரீ, முஸ்லிம்

7.    ஒரு பள்ளிவாசலில் ஒரு தொழுகைக்கு ஒருவரே அதான் கூறவேண்டும். ஒரு அதானை இருவர் பகிர்ந்து கூறக்கூடாது.

8.    அதான் கூறுபவர் முஸ்லிமாக இருக்க வேண்டும். காபிர்களுடைய அதான் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

9.    அதான் கூறுபவர் பிரித்தறியக்கூடிய பருவத்தை அடைந்திருக்க வேண்டும்.

10.   அதான் கூறுபவர் புத்தியுடையவராக இருக்க வேண்டும்.

அதானுக்கு பதிலளித்தல்

அதான் கூறப்படும்போது முஅத்தின் கூறுவதைப்போல் நாமும் கூறவேண்டும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: நீங்கள் அதானைக் கேட்டால் அதான் கூறுபவர் கூறுவதைப்போல் நீங்களும் கூறுங்கள். - புஹாரீ, முஸ்லிம்

ஆனால், அதான் கூறுபவர் ஹய்ய அலஸ்ஸலா மற்றும் ஹய்ய அலல்பலாஹ் என்று கூறும்போது நாம் லா ஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹி என்று கூற வேண்டும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: அதான் கூறுபவர் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் என்று கூறினால் உங்களில் ஒருவர் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் என்று கூறவேண்டும். அவர் அஷ்ஹது அல்லாஇலாஹ இல்லல்லாஹ் என்று கூறினால் அவரும் அஷ்ஹது அல்லாஇலாஹ இல்லல்லாஹ் என்று கூறவேண்டும். அவர் அஷ்ஹது அன்ன முஹம்மதர்ரஸூலுல்லாஹ் என்று கூறினால் அவரும் அஷ்ஹது அன்ன முஹம்மதர்ரஸூலுல்லாஹ் எனக்கூறவேண்டும். பின்பு அவர் ஹய்ய அலஸ்ஸலா எனக்கூறினால் அவர் லாஹவ்ல வலாகுவ்வத இல்லாபில்லாஹி எனக்கூற வேண்டும். பின்பு அவர் ஹய்ய அலல்பலாஹ் எனக்கூறினால் அவர் லாஹவ்ல வலாகுவ்வத இல்லாபில்லாஹி எனக்கூற வேண்டும். பின்பு அவர் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் எனக்கூறினால் அவரும் அல்லாஹு அக்பர் எனக்கூற வேண்டும். பின்பு அவர் லாஇலாஹ இல்லல்லாஹ் எனக்கூறினால் அவரும் தன்னுடைய உள்ளத்தால் லாஇலாஹ இல்லல்லாஹ் எனக்கூறினால் அவர் சுவர்க்கம் நுழைவார். - முஸ்லிம்

அதானுக்கு பதிலளித்ததன் பின் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத் கூறவேண்டும். நபியவர்கள் கூறினார்கள்: முஅத்தின் அதான் கூறுவதை நீங்கள் கேட்டால் அவர் கூறுவதைப்போல் நீங்களும் கூறுங்கள். பின்பு என் மீது ஸலவாத் கூறுங்கள். - முஸ்லிம்

ஸலவாத் கூறியதன் பின்பு அதானுடைய துஆவை ஓத வேண்டும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: அதானை செவிமடுத்ததன் பின் யார் அல்லாஹும்ம ரப்ப ஹாதிஹித்தஃவதித்தாம்மா வஸ்ஸலாதில் காஇமா ஆதி முஹம்மதனில் வஸீலத வல்பலீலத வப்அஸ்கு மகாமன் மஹ்மூதனில்லதீ வஅத்தகு எனக்கூறுகிறாரோ அவருக்கு எனது பரிந்துரை மறுமையில் கிடைக்கும்.

அதானுக்குப் பின்பு பள்ளிவாசலை விட்டு தேவையின்றி வெளியேற முடியாது.

அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அதானுக்குப் பின் பள்ளிவாசலை விட்டும் வெளியேறிய மனிதரைப் பார்த்து இவர் அபுல்காசிம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மாறுசெய்துவிட்டார் எனக்கூறினார். முஸ்லிம்

வுழூச்செய்தல் அல்லது அதுபோன்ற முக்கியத்தேவையின்றி எவருக்கும் அதானுக்குப் பின்னால் பள்ளிவாசலைவிட்டு வெளியேற முடியாது.

 

பெண்கள் அதான் கூறலாமா?

ஆண்கள் தொழுவதற்காக பெண்கள் அதான் கூறுலாம் என்று எந்த அறிஞரும் கூறவில்லை. மாறாக அவ்வாறு ஆண்களுக்கு பெண்கள் அதான் கூறுவது ஹராமாகும். ஏனென்றால் அந்நிய ஆண்களுக்கு முன்னால் பெண்கள் அவர்களுடைய சத்தங்களை உயர்த்த முடியாது.

ஆனால், பெண்களுக்கு பெண்கள் அதான் கூறலாமா? என்ற விடயத்தில் அறிஞர்கள் கருத்து வேறுபாடு கொண்டுள்ளார்கள். ஆயினும், பெண்களுக்கு பெண்கள் அதான் கூறுவது வாஜிப் என்று யாரும் கூறவில்லை. மாறாக பெண்களுக்கு அது விரும்பத்தக்கதா, இல்லையா? என்பதிலேயே அறிஞர்கள் கருத்து வேறுபாடு கொண்டுள்ளார்கள்.

இமாம் மாலிக், தாவூத், ஷாபி மத்ஹபைச் சார்ந்த அதிகமான அறிஞர்கள் பெண்களுக்கு அதான் கூறமுடியாது என்ற கருத்தை முன்வைக்கின்றார்கள். இமாம்களான அஹ்மத், ஷாபிஈ, இப்னுல்முன்திர், இப்னுஹஸ்ம் ஆகிய அறிஞர்கள் பெண்கள் அதான் கூறலாம் எனக் கூறியுள்ளார்கள்.

ஹதீஸ்களில் ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் அதான் கூறியதாக இடம்பெற்றுள்ளது. ஆனால் அந்த ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசையில் உள்ள லைஸ் இப்னு அபீஸுலைம் என்பவர் பலவீனமானவராவார்.

சுலைமான் அத்தைமீ என்பவர் கூறுகின்றார்: நாம் அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடம் பெண்களுக்கு அதான் கடமையா? எனக் கேட்கக்கூடியவர்களாக இருந்தோம். அதற்கு அவர்கள், இல்லை அவர்கள் அதான் கூறினால் அது திக்ராகும் எனக் கூறினார்கள். - இப்னு அபீஷைபா

இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்களிடம் பெண்களுக்கு  அதான் கடமையா? என வினவப்பட்டது. அதற்கு அவர்கள் கோபமடைந்து நான் அல்லாஹ்வுடைய திக்ரை தடுப்பேனா? எனக்கேட்டார்கள். - இப்னு அபீஷைபா

சரியான கருத்து பெண்கள் பெண்களுக்கு அதான் கூறலாம். ஆனால் பின்வரக்கூடிய நிபந்தனைகள் பேணப்பட வேண்டும்.

1.    அந்த அதான் பெண்கள் மாத்திரம் தொழக்கூடிய தொழுகைக்காக இருக்க வேண்டும்.

2.    அவர்களுடைய பகுதியில் கூறப்பட்ட அதானை அவர்கள் செவிமடுக்காவிட்டாலே அவர்களுக்கு அதான் விரும்பத்தக்கதாக அமையும்.

3.    அவர்களுடைய சத்தத்தை அந்நிய ஆண்கள் கேட்கக்கூடாது.

 

எனவே, அன்பார்ந்த வாசகர் நெஞ்சங்களே! நாம் மேலே குறிப்பிட்ட அதானுடைய சட்டதிட்டங்களை சிறந்த முறையில் புரிந்து கொண்டு காரியமாற்றுவோமாக!

By: Asky Ibnu Shamsil Abdeen