அதானும் அதன் சட்டங்களும் தொடர் – 01

நாம் இவ்வுலகில் அல்லாஹ்வை வணங்கி அவனுக்கு முற்றிலும் கட்டுப்பட்டு அவனுடைய தூதருடைய கட்டளைகளை ஏற்று அவைகளை அமுல்படுத்தி அவர் தடுத்தவைகளை தடுத்தும் வாழவேண்டும் என்ற நோக்கத்திற்காகப் படைக்கப்பட்டுள்ளோம் என்பதை அனைவரும் தெரிந்து வைத்திருக்கின்றோம்.

அதனடிப்படையில் அல்லாஹ்வை வணங்கி, நல்லமல்கள் புரிந்து அதிகமான நன்மைகளை சம்பாதித்துக்கொள்ள அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் பல வணக்க வழிபாடுகளை எமக்கு அறிவித்துத்தந்துள்ளார்கள். அவற்றில் ஒன்றே அதானாகும். அதான் கூறுவது மிகச்சிறந்த ஒரு வணக்கம் என்பதையும் அதைக்கூறுபவருக்கு பலவிதமான நன்மைகள் மறுமையில் கிடைக்கும் என்பதையும் ஆதாரங்கள் மூலம் நாம் புரிந்துகொள்ளலாம்.

ஆகவே, இச்சந்தர்ப்பத்தில் உங்களுடன் அதானுடைய சிறப்புக்கள், அதனுடைய சட்டங்கள் ஆகியவற்றை பகிர்ந்துகொள்ளலாம் என விரும்புகின்றேன். இன்று எமது நாட்டில் அதிகமான பள்ளிவாசல்கள் உள்ளன. அவைகளில் அதான்கள் ஒலிக்கப்படுகின்றன. ஆனால், கவலைக்குரிய விடயம் என்னவென்றால் சொல்லப்படக்கூடிய அதான்களில் அநேகமானவை சுன்னாவுடைய அதானுக்கு முரணாக இருக்கின்றன. ஆகவே, பின்வரும் சட்டதிட்டங்கள் அடிப்படையில் நாம் எமது அதான்களை அமைத்துக்கொள்ள வேண்டும்.

அதான் என்றால் என்ன?

அதான் என்ற சொல்லுக்கு அரபுமொழியில் ஒரு விடயத்தை அறிவித்தல் என்று பொருள்படும். அல்லாஹுத்தஆலா அல்குர்ஆனிலே கூறுகின்றான்: நிச்சயமாக அல்லாஹ்வும், அவனது தூதரும் இணைவைப்பாளர்களை விட்டும் விலகிக் கொண்டனர் என இம்மாபெரும் ஹஜ்ஜுடைய நாளில் மனிதர்களுக்கு அல்லாஹ்விடமிருந்தும் அவனது தூதரிடமிருந்துமுள்ள அறிவிப்பாகும். (சூரதுத்தவ்பா: 3)

அறிவிப்பு என்ற வார்த்தைக்கு அல்லாஹுத்தஆலா இந்த வசனத்தில் அதான் என்ற சொல்லை பயன்படுத்தியுள்ளான். இதன் மூலம் அரபுமொழியில் அதான் என்றால் அறிவித்தல் என்பது பொருளாகும் என்பதை விளங்கிக்கொள்ளலாம்.

மார்க்க அடிப்படையில் அதான் என்றால் அறியப்பட்ட, குறிப்பாக்கப்பட்ட, மார்க்கத்தில் ஆதாரமுள்ள சில வார்த்தைகளின் மூலம் தொழுகையின் நேரத்தை அறிவிப்பதாகும். (அல்முங்னீ)

அதான் கூறுவதின் சட்டம்

பெண்களுக்கல்லாமல் ஆண்களுக்கு அதான் கூறுவது பர்ளுகிபாயாவாகும். அதாவது, அதனை ஒருவர் மேற்கொண்டால் போதுமானதாகும். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: தொழுகையின் நேரம் வந்துவிட்டால் உங்களில் ஒருவர் உங்களுக்கு அதான் கூறட்டும். உங்களில் பெரியவர் உங்களுக்கு தொழுகை நடாத்தட்டும். (புஹாரீ, முஸ்லிம்)

ஆண்களில் தனிநபர், அடிமைகள், சுதந்திரமானவர்கள், பிரயாணிகள் ஆகிய அனைவருக்கும் அதானுடைய சட்டம் பர்ள் ஆகும் என்ற கருத்தை அஷ்ஷெய்ஹ் பின் பாஸ் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் சரிகண்டுள்ளார்.

அதானின் சிறப்பு

1.   அதான் கூறுபவர் மிகச்சிறந்த வார்த்தையை மொழியக்கூடியவராவார்.

ஆதாரம்: அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: யார் அல்லாஹ்வின் பால் அழைத்து, தானும் நல்லமல் புரிந்து, நிச்சயமாக நான் முஸ்லிம்களில் உள்ளவனே என்றும் கூறுகின்றானோ அவனைவிட அழகான வார்த்தையை உடையவர் யார்? (சூராபுஸ்ஸிலத்: 33)

2.   அதான் கூறுபவர் மறுமை நாளில் கழுத்து நீண்டவராக இருப்பர்.

ஆதாரம்: நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: மறுமை நாளில் அதான் கூறக்கூடியவர்கள் மனிதர்களிலே கழுத்து நீண்டவர்களாக இருப்பார்கள். (முஸ்லிம்)

3.   அதானுடைய சத்தம் கேட்கும் அளவிற்கு அவருடைய பாவங்கள் மன்னிக்கப்படும்.

ஆதாரம்: நபி (ஸல்லல்;லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: நிச்சயமாக வானவர்கள் தொழுகையின் முதல் வரிசைக்கு ஸலவாத் கூறுகிறார்கள். மேலும், அதான் கூறுபவருக்கு அவருடைய சத்தம் கேட்கும் அளவிற்கு பாவங்கள் மன்னிக்கப்படும். (அந்நஸாஈ, அஹ்மத்)

ஸஹீஹுத்தர்கீப் வத்தர்ஹீப் என்ற நூலில் இந்த ஹதீஸை அஷ்ஷெய்ஹ் அல்பானீ (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் ஸஹீஹ் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

4.   நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அதான் கூறுபவர்களுக்கு பாவமன்னிப்புத் தேடினார்கள்.

ஆதாரம்: நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: இமாம் பொறுப்புதாரியாவார், அதான் கூறுபவர் நம்பிக்கைக்குரியவராவார். அல்லாஹ்வே இமாம்களை நேர்வழிப்படுத்துவாயாக. மேலும், அதான் கூறுபவர்களை மன்னிப்பாயாக. (அபூதாவூத், திர்மிதீ, இப்னுகுஸைமா)

இந்த ஹதீஸை அஷ்ஷெய்ஹ் அல்பானீ (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் ஸஹீஹுத்தர்கீப் வத்தர்ஹீப் என்ற நூலில் ஸஹீஹ் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

5.   அதான் கூறுபவர் சுவனம் நுழைவிக்கப்படுவார்.

ஆதாரம்: நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: மலைக்குன்றொன்றின் உச்சியில் தொழுகைக்கு அதான் கூறி தொழக்கூடிய ஆட்டிடயனைப் பார்த்து உங்கள் இறைவன் ஆச்சரியப்படுகின்றான். இந்த என்னுடைய அடியாரைப் பாருங்கள், அவன் என்னைப் பயந்தவனாக அதான் கூறி இகாமத் கூறுகின்றான். என்னுடைய அடியானை நான் மன்னித்துவிட்டேன், மேலும், அவனை நான் சுவனத்தில் நுழைத்துவிட்டேன் என அவன் கூறுவான். (அபூதாவூத், அந்நஸாஈ)

இந்த ஹதீஸை அஷ்ஷெய்ஹ் அல்பானீ (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் அஸ்ஸில்ஸிலதுல் அஹாதீஸிஸ் அஸ்ஸஹீஹா என்ற நூலில் ஸஹீஹ் எனக்குறிப்பிட்டுள்ளார்கள்.

அதானுடைய வார்த்தைகள்

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுடைய காலத்தில் கூறப்பட்ட பிலால் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களுடைய அதானின் வார்த்தைகள் பின்வரக்கூடிய வார்த்தைகளேயாகும்.

அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர், அஷ்ஹது அல்லாஇலாஹ இல்லல்லாஹ், அஷ்ஹது அல்லாஇலாஹ இல்லல்லாஹ், அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரஸூலுல்லாஹ், அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரஸூலுல்லாஹ், ஹய்ய அலஸ்ஸலா, ஹய்ய அலஸ்ஸலா, ஹய்ய அலல்பலாஹ், ஹய்ய அலல்பலாஹ், அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர், லாஇலாஹ இல்லல்லாஹ்.

அதானுடைய வார்த்தைகள் இடம்பெறக்கூடிய ஹதீஸை நாம் அபூதாவூத், அஹ்மத், திர்மிதீ, இப்னுமாஜா, இப்னுகுஸைமா ஆகிய நூட்களில் பார்க்கலாம்.

இந்த இடத்தில் முக்கியமான ஒரு விடயத்தை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். எமது நாட்டில் சில அதான் கூறும் சகோதரர்கள் அதானுக்கு முன்னால் ஸலவாத் கூறுவதை நீங்கள் கேட்டிருப்பீர்கள். இந்த ஸலவாத்துக்கு எந்த ஆதாரத்தையும் நாம் காண முடியாது. ஆனால், கவலைக்குரிய விடயம் என்னவென்றால் இந்த ஸலவாத்துக்கு  ஆதாரம் இல்லை எனத்தெரிந்தும் பல முஅத்தின்கள் இவ்வாறு கூறிக்கொண்டிருப்பதாகும். இவ்வாறான பித்அத்களை ஒழிப்பதற்காக முஸ்லிம்களின் விடயங்களுக்கு பொறுப்புதாரிகள் என தங்களை இந்நாட்டில் அடையாளம் காட்டிக்கொள்ளும் உறுப்பினர்களும் முன்வரவில்லை என்பது மேலும் கவலையளிக்கின்றது. இவ்வாறான பித்அத்களை விட்டும் எச்சரிப்பது அறிஞர்களுடைய கடமையாகும். சொந்த நாட்டு, பிற நாட்டு அரசியல்களைப் பேசும் இஸ்;;;லாமிய சஞ்சிகைகள் மற்றும் பத்திரிகைகள் பித்அத்களைப் பேசாமல் இருக்கின்றனர். இவ்வாறான நிலை நீடிக்குமாயின் எமது முஸ்லிம்களிடத்தில் மடமை அதிகரிக்குமே தவிர அறிவு வளராது.

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அழகாக அதானுடைய வார்த்தைகளை கற்றுத்தந்துள்ளார்கள். அல்லாஹு அக்பர் முதல் லாஇலாஹ இல்லல்லாஹ் வரையே அதான் கூறப்பட வேண்டும். அதைக் குறைப்பதோ அல்லது அதில் இடம்பெறாத வார்த்தைகளைக் கூறுவதோ பகிரங்க பித்அத்தாகும்.

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அதானுக்குப் பின் என் மீது ஸலவாத் கூறுங்கள் எனக்கூறினார்கள். ஆனால் இவர்கள் அதை மாற்றி அதானுக்கு முன்னால் ஸலவாத் கூறுவது சுன்னாவுக்கு நேர்முரணானது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

அதான் கூறுபவர் கடைபிடிக்க வேண்டிய முக்கியமான ஒழுங்கு முறைகள்

1. சுத்தமான நிலையில் அதான் கூறுவது விரும்பத்தக்கது.

2. ஒவ்வொரு அதானுடைய வாக்கியங்களையும் துண்டித்தவாறு சுகூனின் மீது நிறுத்த வேண்டும். இகாமத் கூறுவதைப்போல் அவசரப்படக்கூடாது.

3. நின்ற வண்ணம் கிப்லாவை முன்நோக்கியவராக இரு காதுகளிலும் விரலை வைத்த வண்ணம் அதான் கூறவேண்டும். உயரமான இடத்தில் அதான் கூறுவது விரும்பத்தக்கது. ஏனென்றால் பிலால் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் பனூ நஜ்ஜார் கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணின் வீட்டு மேல் பகுதியில் அதான் கூறக்கூடியவர்களாக இருந்தார்கள். (அபூதாவூத்)

இர்வாஉல்கலீல் என்ற நூலில் அஷ்ஷெய்ஹ் அல்பானீ (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் இந்த ஹதீஸை ஹஸன் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

4. ஹய்ய அலஸ்ஸலா கூறும்போது வலதுபுறமும் ஹய்ய அலல்பலாஹ் கூறும்போது இடதுபுறமும் கழுத்தைத் திருப்ப வேண்டும்.

பிலால் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அதான் கூறும்போது ஹய்ய அலஸ்ஸலா மற்றும் ஹய்ய அலல்பலாஹ்வை அடையும்போது அவருடைய கழுத்து வலதிற்கும் இடதிற்கும் திரும்பியது. அவர் திரும்பவில்லை. (புஹாரீ, முஸ்லிம்)

5.   ஆரம்ப நேரத்திலேயே அதான் கூறப்பட வேண்டும்.

பிலால் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அதானை நேரத்தை விட்டும் பிற்படுத்தாதவராக இருந்தார்கள் என ஜாபிர் இப்னு ஸமுரா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறினார்கள். (இப்னுமாஜா, அஹ்மத்)

இர்வாஉல்கலீல் என்ற நூலில் இந்த ஹதீஸை அஷ்ஷெய்ஹ் அல்பானீ (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் ஹஸன் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

6.   அதான் கூறுபவருடைய சத்தம் உயர்ந்த சத்தமாக இருக்க வேண்டும்.

உயர்ந்த சத்தத்தில் கூறப்படும் அதான்களை வெறுக்கக்கூடியவர்களாகவும் தாழ்ந்த சத்தத்தில் கூறப்படும் அதான்களை விரும்பக்கூடியவர்களாவே எம்மில் பலர் இருக்கின்றனர்.

அப்துல்லாஹ் இப்னு ஸைத் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் தன் கனவிலே கண்ட அதான் கூறும் முறையை நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் எத்திவைத்தபோது அவர்கள் நீங்கள் எழும்பி பிலாலிடம் சென்று நீங்கள் கண்ட கனவை அவரிடம் கூறுங்கள். அவர் அவ்வார்த்தைகளைக் கொண்டு அதான் கூறட்டும். ஏனெனில், அவர் உங்களைவிட சத்தத்தால் மிக உயர்ந்தவராக இருக்கின்றார் எனக் கூறினார்கள். (அபூதாவூத், இப்னுமாஜா)

இந்த ஹதீஸை அஷ்ஷெய்ஹ் அல்பானீ (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் இர்வாஉல்கலீல் என்ற நூலில் ஹஸன் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

இந்த ஹதீஸின் மூலம் உயர்ந்த சத்தம் உடையவர் அதான் கூறுவது சுன்னாவாகும் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

7.   அதான் கூறுபவர் அழகான குரலுடையவராக இருப்பது விரும்பத்தக்கது.

அபூமஹ்தூரா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களுடைய குரல் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஆகவே அவருக்கு அவர்கள் அதானைக் கற்றுக்கொடுத்தார்கள். (இப்னுகுஸைமா)

8.   அதானுடைய நேரங்களை அறிந்து வைத்தவராக இருக்க வேண்டும்.

 

இன்ஷா அல்லாஹ் தொடரும் ...

By Asky Ibnu Shamsil Abdeen