இஃதிகாப் இருக்கும் மிகக் குறைவான காலம்

இஃதிகாப் இருப்பதற்கு அனுமதிக்கப்பட்ட மிகக் குறைவான காலம் எது? என்பது தொடர்பான விடயத்தில் அறிஞர்களுக்கு மத்தியில் கருத்துவேறுபாடுகள் காணப்படுகின்றன.

பெரும்பான்மையான அறிஞர்கள் இஃதிகாப் இருப்பதற்கு கூடிய காலம் குறைந்த காலம் என்ற வரையறை கிடையாது என்ற கருத்தைக் கொண்டிருக்கிறார்கள். இதனடிப்படையில் ஒருவர் ஒரு வினாடியை இஃதிகாபுடைய நிய்யத்துடன் கழித்தாலும் அவருக்கு இஃதிகாபுடைய கூலி கிடைக்கும் என்று கூறுகின்றார்கள். இக்கருத்தை ஆதரிக்கும் அறிஞர்களின் பட்டியலில் இமாம்களான அபூஹனீபா (ஓர் அறிவிப்பில்), அஷ்ஷாபிஇ, அஹ்மத் (ஓர் அறிவிப்பில்), தாவுத், இப்னு உளையா, இப்னுல் முன்திர், இப்னுல் அறபி மற்றும் இப்னு பாஸ் ரஹிமஹுமுல்லாஹ் போன்றோரைக் குறிப்பிடலாம். (பார்க்க: தப்ஸீர் அல்குர்துபி: 2/33, அத்துர்ருல் முஹ்தார்: 1/445, அல்மஜ்மூஉ: 6/489, அல்இன்ஸாப்: 7/566)

இமாம் நவவி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் அல்மஜ்மூஉ (6/514) எனும் தனது நூலில் கூறும் போது: இஃதிகாபுடைய மிகக் குறைந்த காலமாகின்றது பெரும்பான்மையான அறிஞர்கள் உறுதியாகக் கூறிய, இஃதிகாப் இருப்பவர் பள்ளிவாசலில் தங்குவதுதான் நிபந்தனை என்ற அடிப்படையில் அமையக்கூடிய கருத்தான, (ஒருவர்) கூடிய காலம் (அல்லது) குறித்த நேரம் அல்லது ஒரு வினாடியாக அமையக்கூடிய குறைவான காலம் இஃதிகாப் இருக்கலாம் என்பதுவே சரியான கருத்தாகவுள்ளது என்கிறார்கள். (சுருக்கம்)

இக்கருத்திற்குச் சான்றாக பின்வரும் ஆதாரங்களை முன்வைத்துள்ளார்கள்.

1. இஃதிகாப் என்ற அறபு வாசகத்திற்கு மொழிரீதியாக தரித்திருத்தல் என்று பொருள் கொள்ளப்படுகின்றது. உண்மையில் தரித்தருத்தல் என்ற சொல்லின் உள்ளடக்கம் கூடிய காலத்தையும் குறைந்த காலத்தையும் கொண்டிருக்கின்றது. மார்க்கத்தைப் பொருத்தளவில் இது விடயத்தில் காலவரையறை குறிப்பிடாத நிலையைக் கையாண்டுள்ளது என்கிறார்கள்.

இப்னு ஹஸ்ம் என்ற அறிஞர் அல்முஹல்லா (5/179) என்ற தன்னுடைய நூலில் இஃதிகாப் என்ற வார்த்தைக்கு தரித்திருத்தல் என்ற கருத்தைக் கொடுப்பதாகக் கூறி, அல்லாஹ்வின் நெருக்கத்தைப் பெற வேண்டும் என்ற நோக்கில் அவனுக்காக வேண்டி பள்ளிவாசலில் தங்கியிருத்தலையே இவ்வார்த்தை குறிக்கும் என்கிறார். மேலும் அவர் தொடந்து கூறுகையில், அவ்வாறு தரித்திருக்கும் இஃதிகாப் எனும் கிரியைக்கு குறைந்த அல்லது கூடிய காலவரையறை கிடையாது என்றும் அது குறித்த தகவல்கள் ஏதும் அல்குர்ஆன் மற்றும் அஸ்ஸுன்னா ஆதாரங்களில் குறிப்பாகப் பதிவு செய்யப்படவில்லை என்றும் கூறுகின்றார்.

2. யஃலா இப்னு உமையா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாக இப்னு அபீஷைபா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நிச்சயமாக நான் பள்ளிவாசலில் சிறிது தரித்திருப்பேன். அவ்வாறு நான் தரித்திருப்பதெல்லாம் இஃதிகாபுக்காக அன்றி வேறில்லை என்கிறார்கள்.

இச்செய்தியை ஆதாரமாகக் கொண்டே இப்னு ஹஸ்ம் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் அல்முஹல்லா என்ற தனது நூலில் தன் கருத்தை ஒப்புவைக்கின்றார்கள். மேலும், அல்ஹாபிழ் இப்னு ஹஜர் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் பத்ஹுல் பாரி என்ற தனது நூலில் இச்சம்பவம் குறித்து அறிவித்துவிட்டு எதுவும் கூறாமல் மௌனித்துள்ளார்கள்.

மாற்றமாக, இமாம் அபூ ஹனீபா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தனது பிரசித்தி பெற்ற ஒரு கூற்றிலும் இமாம் மாலிக் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தனது கருத்திலும் இஃதிகாப் இருப்பதற்கு மிகக் குறைந்த கால எல்லையாக ஒரு நாள் இரவு பகலைக் குறிப்பிட்டுள்ளார்கள். மேலும், இக்கூற்றுக்குச் சான்றாக இமாம்களான புகாரி முஸ்லிம் ஆகியோரின் அறிவிப்பின்படி உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஜாஹிலிய்யாக் காலத்தில் ஓர் இரவு அல்மஸ்ஜிதுல் ஹராமில் இஃதிகாப் இருப்பதற்கும், இமாம் முஸ்லிமின் குறிப்பின்படி ஒரு நாள் குறித்த பள்ளிவாசலில் இஃதிகாப் இருப்பதிற்கும் நேர்ச்சை வைத்திருந்ததாக நபியவர்களிடத்தில் முறையிட்ட சந்தர்ப்பத்தில் நபியவர்கள் அந்நேர்ச்சையை நிறைவேற்றுமாறு அனுமதியளித்தார்கள் என்ற செய்தியை முன்வைக்கின்றார்கள். ஆயினும், இச்செய்திகளை மையமாக வைத்து ஒரு நாள் இரவு பகல் என்று காலவரையறை செய்ய முடியாது என்று பெரும்பான்மை அறிஞர்கள் மறுப்புத் தெரிவித்துள்ளார்கள்.

அஷ்ஷெய்க் இப்னு பாஸ் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தன்னுடைய மஜ்மூஉல் பதாவா (15/441) என்ற மார்க்கத் தீர்ப்புத் தொகுப்பில் கூறும் போது: இஃதிகாப் என்பது அல்லாஹுத்தஆலாவை வழிப்படுவதிற்காகப் பள்ளிவாசலில் தங்குவதைக் குறிக்கும், அவ்வாறு தங்கும் காலம் கூடுதலாகவோ அல்லது குறைவானதாகவோ இருக்கலாம், ஏனெனில் நான் அறிந்த வகையில் ஓரிருநாள் மற்றும் அதற்குக் கூடுதலான நாட்களைக் கொண்டு இது விடயத்தில் கால வரையறையைக் குறிப்பிடக்கூடிய எச்செய்தியும் இடம்பெறவில்லை என்கிறார்கள்.

எனவே, கண்ணியத்திற்குரிய வாசகர் நெஞ்சங்களே! ரமழானின் இறுதிப்பத்தில் காலடி வைத்திருக்கும் நாம் எம்மால் இயலுமான வகையில் கால எல்லைகளை ஒழுங்கு செய்து இக்கிரியையில் ஈடுபடுவதற்கு எல்லாம் வல்ல நாயன் எனக்கும் உங்களுக்கும் நற்பாக்கியம் அளிப்பானாக!

தொகுப்பும் தமிழாக்கமும்: அபூஹுனைப்