பொறாமை வேண்டாம் – 02

بسم الله الرحمن الرحيم

மேலும், இப்பொறாமையானது சகோதரத்துவத்தை இல்லாமல் செய்யக்கூடிய ஒன்றாகும். அதனால் தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்
சகோதரத்துவத்தைப் பேணி நடப்பது தொடர்பாகக் கூறக்கூடிய ஒரு ஹதீஸில்:
"நீங்கள் ஒருவருக்கொருவர் பொறாமை கொள்ள வேண்டாம்!" என்று கூறியிருக்கிறார்கள். (புகாரி, முஸ்லிம்)

இந்த ஹதீஸ் தொடர்பாக அல்பாஜி என்ற அறிஞர் கூறுகையில்: "ஒருவர் தன்னுடைய சகோதரரிடத்தில் காணப்படக்கூடிய ஒன்றைப் பார்த்து பொறாமை கொள்வது, அச்சகோதரனோடு பகைமை பாராட்டுவது, அவரோடு சண்டையிடுவது போன்றவற்றிக்கு வழிவகுக்கக் கூடியதாக இருக்கும்" என்கிறார்.

மார்க்கத்தில் இரண்டு விடயங்களில் மாத்திரமே பொறாமை கொள்ள அனுமதியுள்ளது. அது தொடர்பாக நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாவது: "பொறாமையானது இரு விடயத்தில் காணப்படும். அவற்றில் ஒன்று அல்லாஹ் ஒரு மனிதனுக்கு செல்வத்தைக் கொடுத்து, அம்மனிதன் அச்செல்வத்தை அல்லாஹ்வுடைய பாதையில் செலவு செய்கிறான், மற்றொன்று, இன்னொரு மனிதனுக்கு அல்லாஹுத்தஆலா அறிவை ஞானத்தைக் கொடுத்து அம்மனிதன் அவ்வறிவு விஞ்ஞானத்தைக் கொண்டு தீர்ப்பு வழங்குகிறான், மக்களுக்கு அதனை கற்றுக்கொடுக்கிறான் (இப்படியான இருவர் விடயத்தில் மாத்திரம் பொறாமை காணப்படும்)" என்றார்கள். (புகாரி, முஸ்லிம்)

இன்னும், பொறாமை கொள்வது புத்தி சுயாதீனமுள்ளவருக்கு உகந்த செயலாக இருக்க மாட்டாது.

இமாம் அபூ ஹாதிம் என்ற அறிஞர் கூறுகையில்: "புத்திசாலித்தனமாக இருக்கக்கூடிய ஒருவர் மீதுள்ள கடமையான அம்சம், அவர் எல்லா நிலைமைகளிலும் பொறாமையை தவிர்ந்து கொள்வதாகும். நிச்சயமாக இப்பொறாமையுடைய தாக்கத்தில் நின்றும் உள்ளதுவே, அல்லாஹுத்தஆலா ஏற்படுத்திய விதியை பொருந்திக் கொள்ளாமையும், அதே நேரத்தில், அல்லாஹூத்ஆலா தன்னுடைய அடியானுடைய விடயத்தில் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக செயற்பட முற்பட்டமையுமாகும்" என்கிறார்.

இன்னும், பொறாமையானது ஒருவரை பைத்தியகாரனாக ஆக்கக்கூடிய ஒரு செயலாகும்.

அல் ஹாத்தாப் இப்னு நுமைர் அஸ்ஸஃதி என்ற அறிஞர் கூறுகையில்: "பொறாமைக்காரன் பைத்தியகாரனாவான். ஏனெனில், நிச்சயமாக அவன் நல்லது கெட்டது ஆகிய விடயங்களில் பொறாமை கொள்ளக் கூடியவனாக இருக்கிறான்" என்கிறார்.

எனவே, மேற்கூறப்பட்ட தரவுகளின் இருந்து பொறாமையானது, அல்லாஹுத்தஆலாவுடைய விதியை பொருந்திக் கொள்ளாத ஒன்றாகவும்,
அல்லாஹ் தன் அடியான் விடயத்தில் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக செயற்படக்கூடிய ஒன்றாகவும், அதேநேரத்தில், இஸ்லாம் வலியுறுத்தக் கூடிய சகோதரத்துவம், நல்ல காரியங்களுக்கு உதவியாக இருத்தல் போன்றவற்றிற்கு தடைக் கல்லாகவும், இன்னும், கோள் மூட்டுதல், புறம் பேசுதல் ஆகியவற்றிற்கு இட்டுச் செல்லக் கூடிய ஒன்றாகவும், அநியாயம், விரோதம் ஆகியவற்றை மேற்கொள்வதற்கு உதவியாகவும், திருட்டு, கொலை போன்ற காரியங்களை செய்யத் தூண்டக் கூடியதாகவும் இப்பொறாமை காணப்படுகிறது என்பதை எங்களால் புரிந்து கொள்ளலாம்.

எனவே, இத்தகைய கொடிய பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய பொறாமையை விட்டும் நாங்கள் நீங்கி இருக்கக் கடமைப்பட்டிருக்கிறோம்.

எல்லாம் வல்ல அல்லாஹ் இத்தகைய தீங்குகளை ஏற்படுத்தக் கூடிய பொறாமையை விட்டும் என்னையும் உங்களையும் பாதுகாப்பானாக!

والحمد لله رب العالمين