கோபத்தை அடக்கி நற்பாக்கியங்களைப் பெற்றிடுவோம்! – 05

بسم الله الرحمن الرحيم

கோபத்தை அடக்குவதில் முன்மாதிரியாகத் திகழ்ந்த எங்கள் நபி!

கோபம் ஏற்படும் போது அதனை அடக்கிக் கொள்வதில் முன்மாதிரிமிக்க மனிதராக நபியவர்கள் விளங்கினார்கள். அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்: "நான் நபியவர்களுடன் நடந்து சென்று கொண்டிருந்தேன். அப்போது, நபியவர்களின் கழுத்தில் கடினத்தன்மை வாய்ந்த நஜ்ரான் நாட்டுப் போர்வை ஒன்று இருந்தது. அவ்வேளையில் கிராமப்புற அரபியொருவர் நபியவர்களைக் குறுக்கிட்டு, நபியவர்களின் கழுத்தில் போடப்பட்டிருந்த துணியின் இரு ஓரப்பகுதிகளை இறுகப் பற்றிப்பிடித்து, முஹம்மதே! உன்னிடத்தில் காணப்படும் அல்லாஹ்வுடைய செல்வத்தில் இருந்து எனக்குக் கொடுக்குமாறு கட்டளையிடு! என்றார். அதற்கு நபியவர்கள் அந்நபரைத் திரும்பிப் பார்த்து புன்னகைத்துவிட்டு, அவருக்கு அவர் கேட்கும் செல்வத்தைக் கொடுக்குமாறு கட்டளையிட்டார்கள்". (முஸ்லிம்)

மேலும், நபியவர்கள் அல்லாஹ்வுக்காக வேண்டி மாத்திரம் கோபப்படக்கூடியவர்களாக இருந்தார்கள். அந்தவிதத்தில், நபியவர்களிடத்தில் மனிதர்கள் தொழுகையை விட்டும் விரண்டோடக்கூடிய அமைப்பில் நீளமாக அல்குர்ஆனை ஓதக்கூடிய ஓர் இமாமைப் பற்றி முறையிடப்பட்ட போது, உடனடியாகக் கோபம் கொண்டு அவ்விமாமைக் கண்டித்தார்கள். அதேபோன்று, ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்களுடைய வீட்டு திரைச்சீலையில் ஓர் உருவப்படம் இருப்பதைக் கண்டு கோபப்பட்டு அதனை அகற்றுமாறு கட்டளையிட்டார்கள். இன்னும், மஹ்ஸூமிய்யாக் கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு பெண் திருடிய போது, அவருக்குத் தண்டனை வழங்குகின்ற விடயத்தில் உஸாமா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் பரிந்துரை செய்ய நாடிய போது நபியவர்கள் கோபப்பட்டு அவரை கண்டித்த செய்தியையும் இதற்குச் சான்றாகக் கூற முடியும்.

எனவே, அன்பார்ந்த வாசகர் நெஞ்சங்களே! எம்முன்னிலையில் மார்க்கத்திற்குப் புறம்பான காரியங்கள் நடைபெறுகின்ற போது நாமும் கோபப்படக் கூடியவர்களாக இருக்க வேண்டும். அதைவிடுத்து அவற்றை கண்டும் காணாதவர்களைப் போன்று நடந்து கொள்ளக்கூடாது. எல்லாம் வல்ல அல்லாஹ் எதற்குக் கோபப்பட வேண்டுN;மா அதற்காகக் கோபப்படக்கூடிய மக்களில் என்னையும் உங்களையும் சேர்த்தருள்வானாக!