கோபத்தை அடக்கி நற்பாக்கியங்களைப் பெற்றிடுவோம்! – 02

بسم الله الرحمن الرحيم

  1. மௌனமாக இருத்தல்.

கோபம் ஏற்பட்டவரைப் பொறுத்தளவில் அவர் தனக்கேற்பட்ட கோபத்தின் காரணமாக நடுநிலைமையை இழந்துவிடுவார். மேலும், தனக்கு இருக்கின்ற மதிப்பு, மரியாதை, கல்வித் தரம் போன்றவற்றை மறந்து செயற்படக்கூடியவராகக் காணப்படுவார். அதனால், சில சமயங்களில் தனது நாவில் இருந்து தகாத வார்த்தைகளைக் கூட மொழிந்துவிடுவார். அவரை அறியாமலேயே இறை நிராகரிப்புக்குரிய வார்த்தைகள், அசிங்கமான வார்த்தைகள் மற்றும் சாபமிடுதல் போன்ற காரியங்களில் ஈடுபடுவார். எனவே, இத்தகைய நிலையைத் தவிர்க்க கோபம் ஏற்படும் போது மௌனத்தைக் கடைபிடிக்க வேண்டும்.

நபியவர்கள் கூறினார்கள்: "உங்களில் ஒருவருக்கு கோபம் ஏற்பட்டால் அவர் மௌனமாக இருந்து கொள்ளட்டும்!" (அஹ்மத்)

  1. அமைதியைக் கடைபிடித்தல்

கோபம் ஏற்படும் போது அமைதியைக் கடைபிடித்தல் என்பது பல நலவுகளைத் தேடித்தரக்கூடியதாக இருக்கின்றது. அதனால் தான் நபியவர்கள் கோபம் ஏற்படும் போது தனது நிலையை மாற்றிக் கொள்ளுமாறு கட்டளை பிறப்பித்துள்ளார்கள்.

"உங்களில் ஒருவருக்கு நின்ற நிலையில் கோபம் ஏற்பட்டால், அவர் உட்கார்ந்து கொள்ளட்டும்! அப்படியும் அவருடைய கோபம் தனியாமல் இருந்தால் அவர் சாய்ந்து கொள்ளட்டும்!" (அபூதாவுத்)

இன்ஷா அல்லாஹ் தொடரும்.