لا حول ولا قوة إلا بالله என்ற வார்த்தையைப் பற்றித் தெரிந்து கொள்வோம்! – 01

بسم الله الرحمن الرحيم

நிச்சயமாக அல்லாஹ் தன்னுடைய அடியார்களுக்கு காட்டிய கருணையின் வெளிப்பாடுகளில் ஒன்றே, தன்னை ஞாபகப்படுத்துவதற்குத் தேவையான வழிகாட்டல்களை அவர்களுக்கு வழங்கியமையாகும். அதிலும் குறிப்பாக அவன் விரும்பக்கூடிய மிகச் சிறந்த வகையைச் சேர்ந்த திக்ருகளை காட்டிக் கொடுத்தமையாகும்.

அத்தகைய மகத்துவமிக்க வார்த்தைகளில் ஒன்றுதான், لا حول ولا قوة إلا بالله  ஆகும். இதனுடைய கருத்து: படைப்பிற்கு ஒரு நிலையில் இருந்து மற்றொரு நிலைக்குத் திரும்புவதற்கோ, அதனுடைய விடயங்களை இலகுவான அமைப்பில் செய்வதற்கோ, தன்னுடைய காரியங்களில் இருந்தும் எந்த ஒரு காரியத்தை மேற்கொள்வதற்குத் தேவையான பலத்தைப் பெற்றுக்கொள்வதற்கோ அல்லாஹ்வைக் கொண்டும் அவனுடைய உதவியைக் கொண்டும் மேலும், அவனுடைய பொருத்தத்தைக் கொண்டுமன்றி முடியாது என்பதுவாகும்.

படைப்புகள் அல்லாஹ்விடத்தில் தேவையுடையனவாக உள்ளன. இன்னும், அவற்றுக்கு ஒருபோதும் அவனை விட்டும் ஒதுங்கி வாழ முடியாது. அல்லாஹ்வுடைய உதவியைக் கொண்டேயன்றி அவற்றுக்கு எந்த சக்தியும் கிடையாது. அதேபோன்று, அல்லாஹ்வுக்கு மாறு செய்கின்ற விடயத்தை விட்டும் விலகி நடப்பதாக இருந்தாலும் அவனுடைய உதவியைக் கொண்டேயன்றி விலகி நடக்க முடியாது.

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: "நிச்சயமாக அல்லாஹ் மனிதனுக்கும் அவனுடைய இதயத்திற்கும் மத்தியில் சூழ்ந்து (செயலாற்றிக் கொண்டு) இருக்கிறான். (ஆகவே, மனிதன் எதையும் அல்லாஹ்வின் அருளின்றி செய்யும் ஆற்றல் பெறமாட்டான்) என்பதையும், நிச்சயமாக அவனின் பாலே நீங்கள் ஒன்று திரட்டப்படுவீர்கள் என்பதையும் நீங்கள் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்!" (அல் அன்ஃபால்: 24)

பொதுவாக, அரபு மொழி வழக்கில் لا حول ولا قوة إلا بالله  என்ற வார்த்தைக்கு ஹவ்கலா என்று சொல்லப்படும். இந்த ஹவ்கலாவானது எமது வாழ்வின் எல்லா கட்டங்களிலும் கூறப்பட வேண்டி ஒன்றாக இருக்கின்றது.

ஷெய்ஹுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்: "அவனுடைய வழமை لا حول ولا قوة إلا بالله என்று கூறக்கூடியதாக இருக்கட்டும்! அதன் மூலம் சுமைகள் சுமக்கப்படுகின்றன. அகோரமான நிலைமைகள் தளர்த்தப்படுகின்றன. இன்னும், நீங்கள் விட்டுவிட முடியாத துஆவாக அது இருக்கின்றது".

அதனால் தான், இந்த ஹவ்கலாவானது எமது வாழ்வில் பின்னிப்பிணைந்த அமைப்பில் காணப்படும் முகமாக சில சந்தர்ப்பங்களில் கூறுமாறு இஸ்லாம் வழிகாட்டியுள்ளது. அந்தவிதத்தில், முஅத்தின் حي على الصلاة ، حي على الفلاح என்று கூறும் போதும், தூங்கச் செல்லும் போதும், தூக்கமின்மையால் படுக்கையில் பிரலும் போதும், வீட்டைவிட்டு வெளியேறும் போதும், ஒவ்வொரு தொழுகையின் போதும், சகுனத்திற்கு பரிகாரம் தேடும் போதும் மற்றும், உணவு உட்கொண்ட பிறகும் என இவ்வார்த்தையைக் கூறுமாறு மார்க்கம் உபதேசிக்கின்றது.

இன்ஷா அல்லாஹ் தொடரும்.