ஒரு பொருளை விற்பனை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டவரிடம் அப்பொருளை பணம் கொடுத்து வாங்க முடியுமா?

بسم الله الرحمن الرحيم

கேள்வி: ஒரு பொருளை விற்பனை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டவரிடம் அப்பொருளை பணம் கொடுத்து வாங்க முடியுமா?

பதில்: "விற்பனை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டவர்களின் வியாபாரத்தை நபியவர்கள் தடைசெய்தார்கள்" என்று ஒரு ஹதீஸ் இடம்பெற்றுள்ளது. அந்த ஹதீஸானது இமாம்களான அஹ்மத், அபூதாவுத், பைஹகி போன்றோர்களால் அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் பதிவாகியுள்ளது. ஆயினும், அதன் அறிவிப்பாளர் வரிசையில் ஸாலிஹ் இப்னு ருஷ்தும் அல்ஹஸ்ஸாஸ் எ;ன்பவர் இடம்பெறுகிறார். அவர் பலவீனமானவர். மேலும், யார் என்று தெளிவில்லாத ஒரு நபரும் இவ்வறிவிப்பாளர் வரிசையில் இடம் பெற்றுள்ளார்.

மேலும், இந்த ஹதீஸுக்கு சாட்சியாக ஒரு செய்தி பைஹகி என்ற கிரந்தத்தில் அப்துல்லாஹ் இப்னு அம்ர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்களைத் தொட்டும் பதிவாகியுள்ளது. என்றாலும், பலப்படுத்தலுக்கு இந்த ஹதீஸ் பொருத்தமற்றதாகக் காணப்படுகின்றது. ஏனெனில், இதன் அறிவிப்பாளர் வரிசையில் முஸ்லிம் இப்னு பஷீர் என்பவர் இடம்பெறுகிறார். இவர் யாரென அறிமுகமற்றவர். அத்தோடு, இச்செய்தி குறித்த ஸகாபியின் கூற்றாகவே கருதப்படுகின்றது. அல்லாஹ் மிக அறிந்தவன்!

பொதுவாக, நிர்ப்பந்த நிலைக்குத் தள்ளப்பட்டவரின் வியாபாரத்தை இரு வகைகளாகப் பிரிக்கலாம். இதனை இமாம் அல்ஹத்தாபி மஆலிமுஸ் ஸுனன் என்ற நூலில் தெளிவுபடுத்தியுள்ளார்.

  1. பிறரால் நிர்ப்பந்திக்கப்பட்டு வியாபார உடன்படிக்கைக்கு கைச்சாத்திடக்கூடிய நிலைக்குத் தள்ளப்பட்டவர். இப்படியான நபரின் உடன்படிக்கை செல்லுபடியற்றதாகக் கருதப்படும்.
  2. அளவுக்கதிகமான கடன், அளவு கடந்த செலவு போன்ற காரணங்களினால் ஒருவர் தனது பொருளை விற்பனை செய்வதற்கு நிர்ப்பந்திக்கப்படுதல். இத்தகைய நிலையில் உள்ளவர் தனது தேவை கருதி நஷ்டத்துடன் தனது பொருளை விற்க வேண்டிய நிலைக்குள்ளாகின்றார்.

இவ்வகையைச் சேர்ந்தோரைப் பொருத்தளவில் மார்க்கம் மற்றும், மனிதாபிமானம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்நிலையில் உள்ளவர்களிடத்தில் பொருட்களை வாங்க முற்படக்கூடாது. மாறாக, அவருக்கு உதவி புரிவதற்கும், கடனுதவி வழங்குவதற்கும் முன்வர வேண்டும். மேலும், அவருக்கு ஏற்பட்டிருக்கும் நிர்க்கதியான நிலை நீங்கும் வரை கடனாகக் கொடுத்ததை திருப்பிப் பெற்றுக் கொள்வதற்கு காலதாமதம் வழங்க வேண்டும்.

அப்படியும் அவருடன் வியாபார நடவடிக்கையை மேற்கொண்டால், அவ்வியாபாரம் செல்லுபடியானதாகவே கருதப்படும். ஏனெனில், அது குறித்த ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசையில் யார் என்று தெரியாத ஒரு மனிதர் இடம்பெற்றிருக்கிறார். ஆயினும், பெருவாரியான அறிஞர்கள் இப்படியான வியாபாரத்தை வெறுத்துள்ளார்கள்.

ஷைஹுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் அல்இன்ஸாப் என்ற நூலில் இடம்பெறக்கூடிய பிரகாரம் இத்தகைய வியாபாரத்தை எவ்வித வெறுப்புமின்றி சரிகண்டுள்ளார்கள். இதுவே, சரியான கருத்தாகவும் உள்ளது. அல்லாஹ் மிக அறிந்தவன்!

பார்க்க: அல்இன்ஸாப், அஷ்ஷர்ஹுல் மும்திஃ, அல்முஹல்லா, ஹாஷியது இப்னில் ஆபிதீன், அர்ரவ்லுல் முர்பிஃ