நகம் வெட்டுவதற்கு என்று ஒரு முறை உள்ளதா?

بسم الله الرحمن الرحيم

நகம் வெட்டுவதற்கு என்று சில முறைகள் இருப்பதாக அண்மையில் சமூக வலைதளங்களில் பல பதிவுகளை நாம் கண்டிருக்கலாம். ஆனால், அவ்வாறான முறைக்கு நபியவர்களின் ஹதீஸில் எவ்வித ஆதாரங்களும் இல்லை என்பது மிகத் தெளிவானது. நகம் வெட்டுவதை வலியுறுத்திய நபியவர்கள் அதை இவ்வாறு தான் வெட்ட வேண்டும் என்று ஒரு முறையை எமக்குச் சொல்லித் தரவில்லை. எனவே, குறிப்பிட்ட ஒரு முறையில் வெட்டுவது தான் சிறந்தது என்றோ, அவ்வாறு தான் வெட்ட வேண்டும் என்றோ நாம் கட்டாயப்படுத்தக்கூடாது. ஒவ்வொருவரும் விரும்பியவாறு அவற்றை வெட்டிக் கொள்ளலாம்.

இமாம் இராகீ (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்: நகம் வெட்டுகின்ற முறைபற்றி செயல்படுத்த முடியுமான எந்தவொரு உறுதியான ஹதீஸும் இடம்பெறவில்லை. (தர்ஹுத் தஸ்றீப்: 2/77)

இமாம் இப்னு ஹஜர் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்: நகம் வெட்டுகின்ற போது விரல்களை எந்த வரிசைப்படி அமைத்துக் கொள்ள வேண்டும் என்பது தொடர்பாக எந்தவொரு ஹதீஸும் உறுதி செய்யப்படவில்லை. (பத்ஹுல்பாரீ: 10/345)

அஷ்ஷெய்ஹ் ஸாலிஹ் அல்பவ்ஸான் (ஹபிளஹுல்லாஹ்) கூறுகின்றார்: நகம் வெட்டுவதற்கான குறிப்பிட்ட ஒரு முறை இல்லை. நீளமாக நகங்களை வளர்க்காமல் வெட்டுவதே இங்கு முக்கியமானது. அதற்கு என்று ஒரு குறிப்பிட்ட முறை உள்ளது என்பது சரியான ஒன்றல்ல. (ஷெய்ஹ் அவர்களின் இணையதளத்திலிருந்து)

எனவே, சகோதரர்களே! நகம் வெட்டுவதற்கு எந்த ஒரு முறையும் இல்லை என்பது மிகத் தெளிவானதே. நபியவர்கள் பொதுவாக நற்செயல்களில் ஈடுபடும்போது வலதை முற்படுத்தியிருக்கிறார்கள். இதை அடிப்படையாக வைத்து ஒருவர் வலது கையிலிருந்தும் வலது காலிலிருந்தும் நகம் வெட்ட ஆரம்பிப்பது குற்றம் இல்லை. இது தவிரந்த ஏனைய முறைகளுக்கு ஹதீஸ்களில் ஆதாரம் கிடையாது.

எந்தவொரு நற்செயலாக இருப்பினும் நபியவர்களின் வழிகாட்டலின் படி அவற்றைச் செய்து பூரண கூலியை அடைய முயற்சிப்போம். அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்!