நோன்பாளிகளினால் நிகழக்கூடிய தவறான காரியங்கள்

நோன்பாளிகளினால் நிகழக்கூடிய தவறான காரியங்கள்

பொதுவாகத் தீய காரியங்கள் விடயத்தில் நாம் எப்போதும் எச்சரிக்கையாக இருந்து கொள்ள வேண்டும். அப்போது தான் அத்தீய காரியங்கள் எம்வாழ்வில் நிகழாமல் எம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம். இக்குறிக்கோளை மையமாக வைத்து ஹுதைபா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறும் போது: மனிதர்கள் அல்லாஹ்வின் தூதரிடத்தில் நல்லவை பற்றி வினவக்கூடியவர்களாக இருந்தார்கள். நானோ தீயவை பற்றி அவை என்னை அடையாமல் இருப்பதற்காக வினவக்கூடியவனாக இருந்தேன் என்கிறார்கள். (புகாரி முஸ்லிம்)

உண்மையில் ரமழான் காலங்களில் நோன்பாளிகளினால் சில தவறுகள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன. அவற்றை இக்கட்டுரை மூலம் இனங்காட்டலாம் என அவா கொள்கின்றேன்.

1. ஸகர் செய்வதை முற்படுத்துதல்

ஸகர் செய்வதை இயலுமான வரை பிற்படுத்துவது நபிவழியாகும். ஆயினும், எம்மில் பலர் இவ்வழிமுறையை உதாசீனம் செய்யக்கூடியவர்களாக இருக்கின்றார்கள். ஸகரை நேரகாலத்துடன் நிறைவேற்றிவிட்டுப் பலர் தூங்கச் செல்கின்றனர். இதன் காரணமாக பலருக்கும் சுபஹ் தொழுகை தவறிவிடக்கூடிய சந்தர்ப்பங்களும் ஏற்பட்டுள்ளன. இது தவறான நடைமுறையாகும். நபியவர்களின் ஸகர் வேளையைப் பற்றி ஸைத் இப்னு ஸாபித் ரழியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கும் புகாரி முஸ்லிமில் இடம்பெறும் இந்நபிமொழியை சற்று சீர்தூக்கிப்பாருங்கள்.

நாங்கள் நபியவர்களுடன் ஸகர் செய்வோம். பிறகு அவர்கள் தொழுகைக்காக எழுந்து நிற்பார்கள். அப்போது நான் அதானுக்கும் ஸகருக்கும் மத்தியில் எவ்வளவு நேரமாக இருந்தது எனக்கேட்டேன். அதற்கு, (அல்குர்ஆனில் இருந்து) 50 வசனங்கள் (ஓதும்) அளவுக்கு இருந்தது என பதிலளித்தார்கள்.

2. ரமழானில் பகல் காலங்களில் அதிகமாகத் தூங்குவது

உண்மையில் ரமழானின் பகல்காலங்களைத் தூக்கத்தில் கழிப்பது முறையற்ற செயலாகும். எம்மில் பலர் இந்நடைமுறைக்கு விதிவிலக்கல்ல. பொதுவாகப் பகல் வேளைகளில் ஓய்வு எடுப்பதற்கொன்று ஒரு நேரம் உள்ளது அது தவிர்ந்த ஏனைய நேரங்களைத் தூங்குவதற்காகத் தேர்ந்தேடுப்பதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

இமாம் புகாரி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் அல்அதபுல் முப்ரத் எனும் நூலில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவான இச்செய்தியை சற்று கூர்ந்து கவனியுங்கள்.

பகலின் ஆரம்பப் பகுதியில் தூங்குவது அறியாமையாகும் மேலும், அதன் நடுப்பகுதியில் துங்குவது நலவாகும் மற்றும், அதன் இறுதிப்பகுதியில் தூங்குவது மடமையாகும்.

பொதுவாக பகலின் ஆரம்பப்பகுதியில் மனிதர்கள் தொழில்களில் ஈடுபடுவார்கள். அவ்வேளையை தூக்கத்தில் கழிப்பது நிச்சயமாக நஷ்டத்தை விளைவிக்கும் அறிவீனச் செயலாகக் கருதப்படுகின்றது. ஆனால், பகலின் நடுப்பகுதியைப் பொருத்தளவில் மனிதர்கள் தமது வேலையில் இருந்து ஓய்வு பெறக்கூடிய நேரமாக இருப்பதால் அவ்வேளையில் ஓய்வெடுப்பது பொருத்தமானதாகும். மற்றும், பகலின் இறுதிப்பகுதியில் தூங்குவது எந்தவித்திலும் பொருத்தமான செயலன்று அது மாத்திரமின்றி புத்தி மழுங்கடிக்கப்படுவதற்கும் காரணமாக அமைந்துவிடுகின்றது. அதனால்தான், எம்முன்னோர்களில் உள்ள சில அறிஞர்கள் கூறும் போது: யார் அஸருக்குப் பிறகு தூங்குகிறாரோ அவர் தனது புத்தியை இழந்துவிட்டார் எனவே, அவர் தன்னைத்தானன்றி வேறு எவரையும் திட்டிவிட வேண்டியதில்லை என்கிறார்கள்.

3. நோன்பு திறத்தலைப் பிற்படுத்துதல்

எம்மில் பலர் நோன்பு திறக்கும் நேரம் அன்மிக்கும் போது சில வேலைகளில் ஈடுபட்டக்கொண்டிருப்பர். அத்தகையவர்கள் சூரியன் மறைகின்ற வேளையில் நோன்பு திறப்பதை முற்படுத்தாமல் தமது காரியங்கள் அனைத்தும் செவ்வனே நிறைவேற்றும் வரை காத்திருந்து நோன்பைத் திறக்கின்றார்கள். நிச்சயமாக இந்நடவடிக்கை ஸுன்னாவுக்கு மாற்றமான நடவடிக்கையாகும். நபியவர்கள் கூறியதாக ஸஹ்ல் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள். மனிதர்கள் நோன்பு திறப்பதை துரிதப்படுத்தும் காலமெல்லாம் அவர்கள் நலவில் இருந்து கொண்டே இருக்கின்றார்கள். (புகாரி முஸ்லிம்)

நோன்பு திறத்தலின் வேளையானது சூரியன் மறைவதைக் கண்களால் பார்ப்பதைக் கருத்தில் கெண்டே உள்ளது. இந்தப் புறத்தால் இரவு முன்னோக்கி வர அந்தப் புறத்தால் பகல் பின்நோக்கிச் செல்ல சூரியனும் மறையும் என்றால் நோன்பாளி நோன்பைத்திறந்துவிட்டார் என்று நபியவர்கள் கூறியதாக உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள். (புகாரி முஸ்லிம்)

4. நோன்பிருக்கும் வேளையில் துஆச் செய்யும் விடயத்தில் பொடுபோக்காக இருந்தல்.

நோன்பாளிக்குக் கிடைத்திருக்கும் மிகச் சிறந்த பாக்கியம் அவர் நோன்பு நோற்றிருக்கும் போது செய்யும் துஆக்கள் அங்கீகரிக்கப்படுவதாகும். எனவே, அச்சந்தர்ப்பத்தை நாம் சரிவரப் பயன்படுத்துவதக்குத் தவறிவிடக்கூடாது.

(ஒருபோதும்) புறக்கணிக்கப்படாத மூன்று பிரார்த்தனைகள் உள்ளன. அவை தந்தை தன்மகனுக்காகச் செய்யும் பிரார்த்தனையும் நோன்பாளியின் பிரார்த்தனையும் பிரயாணியின் பிரார்த்தனையுமாகும் என நபியவர்கள் கூறியதாக அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள். (அல்ஜாமிஉஸ் ஸஹீஹ்)

5. நோன்பாளியின் நாவில் இருந்து வெளியாகும் வாடை அல்லாஹ்வுக்கு மிக உவப்பானதாக இருக்கும் என்பதைக் காரணம் காட்டி அஸருக்குப் பிறகு பல்துலக்குவதைத் தவிர்த்தல்.

இப்படியான கணிப்பீடு திருத்தப்பட வேண்டிய தவறான நிலைப்பாடாகும். மாற்றமாக, ஒவ்வொரு தொழுகையின் போதும் பல்துலக்குவது நபியவர்களின் வழிமுறையாகும்.

நான் என்னுடைய சமுதாயத்தினருக்குச் சிரமத்தைக் கொடுத்தேன் என்ற குற்றத்திற்கு ஆளாகிவிடுவேன் என்று அச்சப்படாவிடின் ஒவ்வொரு தொழுகையின் போதும் பல்துலக்குவதைச் கொண்டு கட்டளை பிறப்பித்திருப்போன் என நபியவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள். (புகாரி முஸ்லிம்)

இப்னுல் அறபி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்: நோன்பாளி பல்துலக்குவதைத் தடுக்கக்கூடிய மற்றும் ஏவக்கூடிய எச்செய்தியும் சரியான அறிவிப்புக்கள் எதிலும் இடம் பெற்றில்லை . ஆயினும், நபியவர்கள் அதனை ஒவ்வொரு வுழூவின் போதும் மற்றும், தொழுகையின் போதும் நோன்பிருப்பவர், நோன்பில்லாதவர் என்ற வேறுபாடின்றி குறிப்பாக்கியுள்ளார்கள்.

எனவே, அன்பார்ந்த வாசகர் நெஞ்சங்களே! புனித ரமழானில் அதிக நன்மைகளை அறுவடை செய்யக் களமிறங்கியிருக்கும் நாம் எமது எதிர் பார்ப்புக்குத்தக்கவிதத்தில் ஆவன செய்யவேண்டும் என்ற அடிப்படையில் மேற்குறிப்பிடப்பட்ட விடயங்களைக் கவனத்திற் கொண்டு செயற்படுவோமாக!

தொகுப்பு: அபூஹுனைப்

by: ABU HUNAIF MUHAMMAD HISHAM IBNU MUHAMMAD TOUFEEK