உம்ரா செய்வது எப்படி?

  • மீக்காத்தை அடைதல்.
  • அங்கு குளித்தல். (ஆண், பெண் அனைவருக்கும் பொதுவானது)
  • மணம் பூசுதல்.
  • ஆண்கள் மாத்திரம் இஹ்ராம் ஆடை அணிதல்.

  • பின்பு சத்தமிட்டு பின்வருமாறு கூறல்

لَبَّيْكَ اللهُّمَّ عُمْرَةً

  • மக்காவை அடையும் வரை தல்பியா சொல்லிக் கொண்டிருத்தல்.

لَبَّيْكَ اللهُمَّ لَبَّيْكَ ، لَبَّيْكَ لا شَرِيْكَ لَكَ لَبَّيْكَ ، إنَّ الحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالمُلْك ، لا شَرِيْكَ لَكَ

  • இஹ்ராம் அணிந்த பிறகு முடியைக் கலைதல், நகம் வெட்டுதல், ஆண்கள் தலையை மறைத்தல், மணம் பூசுதல், ஆண்கள் தைத்த ஆடை அணிதல், திருமண உடன்படிக்கைகள் செய்தல், வேட்டையாடுதல் அல்லது அதற்கு உதவியாக இருத்தல், மனைவியுடன் உறவு மற்றும் அதற்கு முன்னாலான செயற்பாடுகளில் ஈடுபடல், ஹரம் எல்லைக்குள் இருக்கும் மரம் செடி கொடிகளைப் பிடுங்குதல் போன்றவற்றைத் தவிர்த்தல்.
  • மஸ்ஜிதுல் ஹராமில் வலது காலை முன்வைத்துப் பிரவேசித்தல்.
  • அவ்வாறு பிரவேசிக்கும் போது

بِسْمِ اللهِ وَالصّلاةُ وَالسَّلامُ عَلى رَسُوْلِ اللهِ ، اللهُمَّ اغْفِرْ لِيْ ذُنُوْبِيْ ، وَافْتَحْ لِيْ أبْوَابَ
رَحْمَتِكَ ، أعُوْذُ باللهِ العَظِيْم ، وَبِوَجْهِهِ الكرِيْم ، وَبِسُلْطَانِهِ القَدِيْم مِنَ الشَّيْطانِ الرَّجِيْم

          என்ற துஆவை ஓதிக் கொள்ளல்.

  • தவாபை ஆரம்பிக்கும் போது தல்பியாவை நிறுத்திக் கொள்ளல்.
  • ஆண்கள் தங்களது இஹ்ராம் ஆடையின் நடுப்பகுதியை வலது அக்குளுக்குக் கீழாலும், அதன் இரு ஓரப்பகுதிகளை இடது தோளுக்கு மேலாலும் இருக்குமாறு அமைத்துக் கொள்வர். அப்போது வலது தோள் திறந்த நிலையில் இருக்கும்.
  • ஹஜருல் அஸ்வத் கல்லைக் கொண்டு தவாபை ஆரம்பித்தல்.
  • அவ்வாறு ஆரம்பிக்கும் போது முடியுமென்றால் ஹஜருல் அஸ்வத் கல்லை முத்தமிடல், அதற்கு முடியாத போது கையினால் அதனைத் தொட்டு கையை முத்தமிடல், அதற்கும் முடியாத போது தடி போன்ற பொருட்களால் கல்லைத் தொட்டு அதனை முத்தமிடல், அதற்கும் முடியாதபோது அதனை நோக்கி வலது கையை உயர்த்தி 'اللهُ أكبَر' என்று கூறல். அதன்போது கையை முத்தமிடலாகாது.
  • பிறகு கஃபாவை இடப்பக்கமாக வைத்து 7 தவாப் செய்தல்.
  • ஒவ்வொரு தவாபும் ஹஜருல் அஸ்வத் கல்லைக் கொண்டு ஆரம்பித்து அதனைக் கொண்டு நிறைவுறும்.
  • முடியுமென்றால் தவாபின் போது கஃபாவின் ருக்னுல் யமானி எனும் மூலை மற்றும் ஹஜருல் அஸ்வத் கல் இருக்கும் மூலை ஆகிய இரு மூலைப் பகுதிகளை மாத்திரம் கைகளால் தொடுதல். (ருக்னுல் யமானியானது ஹஜருல் அஸ்வத் கல் உள்ள இடத்திற்கு முன்னால் உள்ள மூலைப் பகுதியாகும்)
  • ருக்னுல் யமானியை முத்தமிடுவதோ அல்லது அதனைத் தொட்டுவிட்டு பின் கையை முத்தமிடுவதோ அல்லது அதனைத் தொட முடியாத போது அதை நோக்கி கைகளை உயர்த்துவதோ தவிர்க்கப்பட வேண்டும்.
  • தவாபின் முதல் 3 சுற்றுக்களில் ஆண்கள் தங்களது பாதங்களை நெருக்கமாக வைத்து வேகமாக நடப்பது சுன்னத்தாகும்.
  • மீதி 4 சுற்றுக்களிலும் சாதாரணமாக நடந்து செல்லல்.
  • ஒவ்வொரு சுற்றுக்களிலும் ஹஜருல் அஸ்வத் கல்லுக்கு நேராக வரும் போது தக்பீர் சொல்லல்.
  • ருக்னுல் யமானிக்கும் ஹஜருல் அஸ்வத் கல்லுக்கும் இடையில் வரும் போது

رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَة وَفِي الآخِرَةِ حَسَنَة ، وَقِنَا عَذَابَ النَّار

          என்ற வசனத்தை ஓதிக் கொள்ளல்.

  • ஏனைய பகுதிகளில் துஆக்கள், திக்ருகள், அல்குர்ஆன் ஓதல் போன்றவற்றில் ஈடுபடலாம்.
    (தவாபுக்கென்று தனிப்பட்ட துஆக்கள் ஏதும் கிடையாது)
  • தவாபின் போது கஃபாவுக்கு அருகிலிருக்கும் அரைவட்ட வடிவத்தையுடைய மதிலுக்குள்ளால் தவாப் செய்யாதிருத்தல். (அதுவும் கஃபாவின் ஒரு பகுதியாகும்)
  • தவாபை அடுத்து இரு தோள்களையும் மறைத்துக் கொள்ளல்.
  • பிறகு முடியுமென்றால் மகாமு இப்றாஹீமுக்குப் பின்னால் இரண்டு ரக்அத்துக்கள் தொழுதல். முடியாவிட்டால் பள்ளிவாசலின் ஏதாவது ஒரு பகுதியில் தொழுதல்.
  • முதல் ரக்அத்தில் ஸூரதுல் பாதிஹாவுடன் ஸூரதுல் காபிரூனையும் இரண்டாவது ரக்அத்தில் ஸூரதுல் பாதிஹாவுடன் ஸுரதுல் இஹ்லாஸையும் ஓதல்.
  • பின்பு ஸபா மலையை நோக்கிச் செல்லல்.
  • அதனை நெருங்கியவுடன்

إِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِنْ شَعَائِرِ اللَّهِ فَمَنْ حَجَّ الْبَيْتَ أَوْ اعْتَمَرَ فَلَا جُنَاحَ عَلَيْهِ أَنْ يَطَّوَّفَ بِهِمَا وَمَنْ تَطَوَّعَ خَيْرًا فَإِنَّ اللَّهَ شَاكِرٌ عَلِيمٌ 

          என்ற வசனத்தை ஓதுதல்.

  • அவ்வசனத்தை திருப்பித்திருப்பி ஓதவேண்டிய அவசியம் கிடையாது.
  • பிறகு ஸபா மலைக்கு ஏறுதல்.
  • அங்கிருந்து கிப்லாவை முன்னோக்கி, இரு கைகளையும் உயர்த்தி, தக்பீர் கூறி அல்லாஹ்வைப் புகழ்ந்ததன் பின்

لا إلهَ إلا اللهُ وَحْدَهُ لا شَرِيْكَ لهُ ، لهُ المُلْكُ وَلَهُ الحَمْدُ ، وَهُوَ عَلى كُلِّ شَيْءٍ قَدِيْرٍ ، لا إلهَ إلا الله وَحْدَهُ ، أنْجَزَ وَعْدَهُ ، وَنَصَرَ عَبْدَهُ ، وَهَزَمَ الأحْزَابَ وَحْدَهُ

          என்று கூற வேண்டும். பிறகு நாம் விரும்பியதைக் கேட்டு பிரார்த்திக்கலாம்.

  • இவ்வாறு மூன்று முறை செய்தல்.
  • பிறகு இறங்கி மர்வாவை நோக்கிச் செல்லல்.
  • அவ்வாறு செல்கையில் பச்சை நிற அடையாளமிடப்பட்ட ஆரம்பப்பகுதி தென்படும். அந்த இடத்திலிருந்து இரண்டாவது பச்சை நிற அடையாளமிடப்பட்ட பகுதி வரை ஆண்கள் மாத்திரம் வேகமாக நடத்தல்.
  • இரண்டாவது அடையாளமிடப்பட்ட இடத்திலிருந்து மர்வா வரை சாதாரணமாக நடத்தல்.
  • மர்வாவை அடைந்ததும் அதன் மீது ஏறி ஸபாவில் ஈடுபட்டதைப் போன்று பிரார்த்தனைகளில் ஈடுபடல்.
  • பிறகு ஸபாவை நோக்கிச் செல்லல்.
  • இப்படி 7 விடுத்தங்கள் ஸஈ செய்தல். ஒரு முறை ஸபாவில் இருந்து மர்வா நோக்கிச் செல்வது ஒரு விடுத்தமாகக் கருதப்படும்.
  • ஸஈயானது ஸபாவில் ஆரம்பித்து இறுதியில் மர்வாவில் நிறைவுற வேண்டும்.
  • ஸபா, மர்வா ஆகிய மலைகளுக்கிடையில் ஸஈ செய்யும் போது நாம் விரும்பியவாறு திக்ருகள், துஆக்கள், அல்குர்ஆன் ஓதல் பேன்றவற்றில் ஈடுபடலாம்.
  • பிறகு ஆண்கள் மாத்திரம் மொட்டை அடித்தல் அல்லது முழுமையாக தலையின் தோல் பகுதி விளங்கும் அளவுக்குக் முடியைக் குறைத்துக் கொள்ளல். மொட்டை அடிப்பது மிகச் சிறந்தது.
  • பெண்கள் விரலின் நுனிப்பகுதி அளவுக்கு தங்களின் முடியின் ஓரப் பகுதியைக் கத்தரித்துக் கொள்ளல்.
  • பிறகு இஹ்ராமை கலைதல்.
  • இத்துடன் உம்ரா பூரணமாகிவிடும்.

by: ABU HUNAIF MUHAMMAD HISHAM IBNU MUHAMMAD TOUFEEK