விபச்சாரத்தை நெருங்காதீர்கள்! – 01

بسم الله الرحمن الرحيم

பொதுவாக, மார்க்கப் போதனைகளுக்கு மாற்றம் செய்யக்கூடிய காரியங்கள் இழிவு மற்றும் அழிவு போன்றவற்றைத் தேடித்தரக்கூடியனவாக இருக்கின்றன. அப்படியான பாவச் செயல்களில் ஒன்றாக விபச்சாரம் உள்ளது. இவ்விபச்சாரமானது பெரும்பாவங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது. மேலும், அது பரவலாகக் காணப்படுவது மறுமை நாளின் அடையாளங்களில் ஒன்றாகும்.

நபியவர்கள் கூறினார்கள்: "மறுமைநாளின் அடையாளங்களில் உள்ளனவாக அறியாமை வெளிப்படுவதும், மார்க்க அறிவு குன்றுவதும், விபச்சாரம் பரவலாகக் காணப்படுவதுமாகும்". (புகாரி)

உண்மையில் நாம் வாழும் சுற்றுச் சூழலை அவதானிக்கையில் விபச்சாரத்தினுடைய வெளிப்பாட்டைக் காண முடிகின்றது. பகிரங்கமாக அதனை நோக்கி அழைப்புக்கள் விடுக்கப்பட்ட வண்ணம் உள்ளது. அதனை நோக்கி இட்டுச் செல்லக்கூடிய வழிகள் இலகுபடுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன. அல்லாஹ் எம்மனைவரையும் இப்பாதகச் செயலில் விழுவதைவிட்டும் காப்பாற்றுவானாக!

அல்லாஹுத்தஆலா இப்பாதகச் செயலை உச்சகட்ட வசனப்போக்குகளைக் கொண்டு எச்சரித்துள்ளான். அந்தவிதத்தில் அவன் பிரஸ்தாபிக்கும் போது:

"மேலும், நீங்கள் விபச்சாரத்தை நெருங்க வேண்டாம்! நிச்சயமாக அது மானக்கேடான காரியமாகவும் கேடுகளின் பக்கம் இழுக்கும் தீய வழியாகவும் இருக்கின்றது". (அல்இஸ்ரா: 32)

இமாம் இப்னு ஸஃதி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இத்திருக்குர்ஆன் வசனத்திற்கு வியாக்கியானம் செய்யும் போது: "இவ்வசனப்போக்கு நீங்கள் விபச்சாரம் செய்ய வேண்டாம்! என்று கூறுவதை விட உச்சகட்ட வசனப்போக்காக இருக்கின்றது" என்கிறார்கள்.

இன்னும், அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: "மேலும், அத்தகையவர்கள் அல்லாஹ்வுடன் வேரொரு கடவுளை அழைக்கமாட்டார்கள்! இன்னும், அல்லாஹ் ஹராமாக்கிய எந்தவோர் ஆத்மாவையும் உரிமையின்றிக் கொலை செய்யமாட்டார்கள். விபச்சாரமும் செய்யமாட்டார்கள். எனவே, எவர் அதனைச் செய்கின்றாரோ அவர் தண்டனையை அடைய நேரிடும்!" (அல்புர்கான்: 68)

இமாம் அஹ்மத் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்: "கொலைக்கு அடுத்து விபச்சாரத்தைப் போன்ற மகத்தான ஒரு பாவச்செயலை நான் அறியமாட்டேன். ஏனெனில், இச்செயல் இணைவைப்பு மற்றும் கொலையுடன் இணைத்தே கூறப்பட்டுள்ளது".

மேலும், இவ்விபச்சாரம் குறித்து விசுவாசம் கொண்ட பெண்கள் உறுதிமொழி அளித்தால் அதனை ஏற்றுக் கொள்ளுமாறும் அல்லாஹ் தன் நபிக்குக் கட்டளைபிறப்பித்துள்ளான்.

"நபியே! அல்லாஹ்விற்கு எப்பொருளையும் அவர்கள் இணை வைப்பதில்லை என்றும், திருடுவதில்லை என்றும், விபச்சாரம் செய்வதில்லை என்றும், தங்கள் (பெண்) பிள்ளைகளைக் கொலை செய்வதில்லை என்றும், தங்களுடைய கைகளுக்கும், கால்களுக்குமிடையில் எதனை அவர்கள் கற்பனை செய்கிறார்களோ அவ்வாறான அவதூறை இட்டுக்கட்டுவதில்லை என்றும், நன்மையானவற்றில் உமக்கு மாறுசெய்வதுமில்லை என்றும் உம்மிடம் வாக்குறுதி செய்ய விசுவாசிகளான பெண்கள் வந்தால், அவர்களுடன் நீர் வாக்குறுதி செய்து கொள்வீராக!" (அல்மும்தஹினா: 12)

விபச்சாரத்தின் விபரீதங்கள்

  1.  விபச்சாரம் எனும் இப்பாவச்செயல் மிகக் கொடிய பாவங்களான இணை வைப்பு, கொலை செய்தல் ஆகியவற்றுடன் இணைத்துக் கூறப்பட்டுள்ளன.
  2. விபச்சாரம் செய்பவரிடமிருந்து ஈமானின் பூரணத்துவம் பிடுங்கி எடுக்கப்படும். நபியவர்கள் கூறினார்கள்: "விபச்சாரம் செய்பவர் விபச்சாரம் செய்யும் போது விசுவாசியாக இருக்கமாட்டார்". (புகாரி, முஸ்லிம்)
  3. விபச்சாரமானது மக்கள் வாழும் பிரதேசங்கள் மற்றும் பிரதேசவாசிகள் ஆகியோரைப் பாழ்படுத்தக்கூடியதாகும். ஸைனப் பின்த் ஜஹ்ஷ் ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கிறார்கள்: "ஒரு நாள் தினம் நபியவர்கள் தூக்கத்திலிருந்து திடீரென விழித்தெழுந்தார்கள். அவ்வாறு விழித்தெழும் போது: அன்மித்துவரும் ஒரு தீங்கிலிருந்தும் அரேபியர்களுக்கு கேடு உண்டாவதாக! எனக் கூறினார்கள். அப்போது ஸைனப் ரழியல்லாஹு அன்ஹா அவர்கள்: அல்லாஹ்வின் தூதரே! எங்களில் நல்ல மனிதர்கள் இருக்கும் நிலையிலுமா நாங்கள் அழிக்கப்படுவோம்? என்று கேட்டார்கள். அதற்கு நபியவர்கள்: ஆம். மோசமான காரியங்கள் அதிகரித்தால்...!" என பதிலளித்தார்கள். இங்கு நபியவர்கள் குறிப்பிட்ட மோசமான காரியங்கள் என்பன விபச்சாரம், தன்னினச் சேர்க்கை போன்றனவாகும்.
  4. விபச்சாரமானது அழிவிற்கும் காரணமாக அமைகின்றது. நபியவர்கள் கூறினார்கள்: "ஒரு கிராமத்தில் வட்டி, விபச்சாரம் ஆகியன வெளிப்பட்டுவிட்டால் அக்கிராமத்தில் உள்ளவர்கள் தங்களுக்குத் தாங்களே அல்லாஹ்வுடைய வேதனையை ஹலாலாக்கிக் கொண்டுவிட்டார்கள்". (தபராணி)
  5. விபச்சாரமானது மரணம் உண்டாவதற்கும் காரணமாகத் திகழுகின்றது. நபியவர்கள் கூறினார்கள்: "மானக்கேடான காரியங்கள் ஒரு கூட்டத்திற்கு மத்தியில் வெளிப்பட்டால் அல்லாஹ் அவர்களுக்கு மத்தியில் மரணத்தை நிகழவைப்பான்". (ஹாகிம்)
  6. மேலும் இவ்விபச்சாரமானது மிகக் கொடிய நோய்கள் உண்டாவதற்குக் காரணமாக அமைகின்றது. நபியவர்கள் கூறினார்கள்: "ஒரு கூட்டத்திற்கு மத்தியில் விபச்சாரம் வெளிப்பட்டுவிட்டால், அவர்களுக்கு மத்தியில் அவர்களுடைய முன்னோர்களிடத்தில் காணப்படாத கோள்ளை நோய் மற்றும் அழிவை உண்டாக்கும் நோய்கள் போன்றவை பரவிவிடும்”. (இப்னு மாஜா)
  7. விபச்சாரமானது மறுமை வேதனையைத் தேடித்தரும். இதற்குச் சான்றாக நபியர்கள் கண்ட ஒரு நீண்ட கனவைக் குறிப்பிடலாம். அதில் நபியவர்கள் போரணை போன்ற அமைப்பையுடைய ஓர் இடத்தைப் பார்த்தார்கள். அதன் ஆழப்பகுதி விசாலமானதாவும் மேல்பகுதி ஒடுங்கியதாகவும் காணப்பட்டது. அதனுள் ஆண்களும் பெண்களுமாக நிர்வாணிகளாகக் காணப்பட்டார்கள். தீ மூட்டப்படும் போது அவர்கள் அனைவரும் மேல் நோக்கித் தள்ளப்படுவதையும் தீயின் தன்மை குறியும் போது மீண்டும் கீழ்நோக்கி மீளுவதையும் அவதானித்தார்கள். அது குறித்து நபியவர்கள் வினவியபோது, அதில் இருப்பவர்கள் விபச்சாரம் செய்த ஆண்களும் பெண்களுமாவர் என்று சொல்லப்பட்டது. (புகாரி)
  8. இப்பாவமான காரியத்தில் ஈடுபடுபவர்கள் நல்ல பெயர்களுக்கு மாற்றமாக தீய பெயர்கள் கொண்டு அழைக்கப்படுவார்கள். அந்த அடிப்படையில் இத்தகையவர்களை முஃமின்கள், பத்தினித்தனமுடையவர்கள், மனிதாபிமானமுடையவர்கள் என்ற பெயர்களைக் கொண்டு அழைக்கப்படுவதற்கு மாற்றமாக விபச்சாரிகள், நடத்தை கொட்டவர்கள், பாவிகள் போன்ற பெயர்களால் விழிக்கப்படுவார்கள். மேலும், இத்தகையவர்களிடத்தில் நற்பண்புகள் விலாசமற்றுக் காணப்படும். அந்தவிதத்தில் வெட்கம், மனிதாபிமானம், மரியாதை செலுத்துதல் போன்ற பண்புகள் இத்தகையவர்களிடத்தில் காணப்படமாட்டாது.
  9. இப்பாதகச் செயலில் ஈடுபடுவோர் தன்னுடைய குடும்பத்தினரையும் இதற்கு இலக்காக்குவார்கள். ஒரு குடும்பத்தில் கணவன் விபச்சாரியாக இருக்கும் போது அதனைக் கண்ணுறும் அவனுடைய மனைவி, பிள்ளைகளும் அச்செயலைப் புரியும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள். இமாம் ஷாபியி ரஹிமஹுல்லாஹ் அவர்களைத் தொட்டும் கூறப்படுவதாவது: "நீங்கள் பேணுதாலாக இருந்து கொள்ளுங்கள்! உங்களுடைய பெண்களும் ஹராமான விடயங்களில் பேணுதலாக இருப்பார்கள். ஒரு முஸ்லிமிற்கு பொருத்தமில்லாததைத் தவிர்ந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக விபச்சாரம் என்பது கடனாகும். நீ அதனைக் கடனாகக் கொடுத்தால் அதனை நிறைவேற்றுவது உன்னுடைய வீட்டில் இருப்பவர்களுடன் என்பதை தெரிந்து கொள்!"
  10. விபச்சாரமானது அல்லாஹ்வுடைய கோபத்திற்குக் காரணமாகத் திகழுகின்றது. ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கின்றார்கள்: "சூரிய கிரகணம் ஏற்பட்ட போது நபியவர்கள் தன்னுடைய தோழர்களுக்கு நிகழ்த்திய உரையில்: முஹம்மதுடைய உம்மத்தினரே! அல்லாஹ் மீது ஆனையாக தன்னுடைய ஆணடிமை அல்லது பெண்ணடிமை விபச்சாரம் செய்யும் போது அல்லாஹ்வைவிட எவரும் ரோஷம் கொள்ள மாட்டார்! நிச்சயமாக அல்லாஹ் ரோஷம் கொள்கிறான். அவனுடைய ரோஷமானது அடியான் தன்மீது அல்லாஹ் ஹராமாக்கியதைச் செய்யும் போதாக இருக்கும்" எனக் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

- இன்ஷா அல்லாஹ் தொடரும்

- அபூ ஹுனைப் (மதனி)