நேரத்தின் பயன்பாடு

 بسم الله الرحمن الرحيم

நேரத்தைப் பயன்படுத்துகின்ற விடயத்தில் எம்சகோதரர்களில் பெரும்பாலானோரின் நிலைப்பாட்டை அவதானிக்கையில் அவர்கள் அது விடயத்தில் பராமுகமாகச் செயல்படுவதைக் காணலாம். வெட்டிச் பேச்சுக்களிலும் கேலிக்கைகளிலும் எவ்விதப்பயனும் அளிக்காத விடயங்களிலும் காலத்தைக் கழிப்பவர்களே பலர்!

ஆனால், இக்காலமானது சாதாரணமான ஒன்றல்ல! அல்லாஹுத்தஆலா சத்தியம் செய்வதற்காகத் தேர்ந்தெடுத்த விடயங்களில் ஒன்றாகும். அல்லாஹுத்தஆலா ஏதாவது ஒரு படைப்பைச் சத்தியம் செய்வதற்காகத் தேர்ந்தெடுத்தால் அது முக்கியமானது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

அல்லாஹுத்தஆலா காலத்தின் மீது சத்தியம் செய்த அமைப்புக்களை அவதானிக்கையில், சில இடங்களில் அதனுடைய பகுதிகளைக் குறிப்பிட்டு அவற்றின் மீது சத்தியம் செய்துள்ளான். உதாரணமாக: அதிகாலை, இரவு, பகல், முற்பகல் மற்றும் சில இடங்களில் முழுமையாகக் காலத்தின் மீதும் சத்தியம் செய்துள்ளான்.

காலம் என்பது மனிதன் மறுமைக்காகச் செயல்படும் சந்தர்ப்பமாக உள்ளது. அக்காலத்தின் எல்லாப் பகுதிகளையும் சரிவரப் பயன்படுத்துபவரே உண்மையான புத்திசாலியாவார். எம்முன்னோர்களான ஸலபுஸ் ஸாலிஹீன்கள் தமது ஓய்வு நேரங்களில் கூட நன்மை கிடைக்க வேண்டும் என்ற நற்பாசையில் காணப்பட்டிருக்கிறார்கள். அது அவர்கள் காலத்தின் பெறுமதியை நன்றாகப் புரிந்து வைத்திருந்தார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாகும்.

உண்மையில் காலமானது ஓர் உயரிய நோக்கத்தை நோக்கி எங்களைக் கொண்டு செல்லக்கூடியதாகும். எவர்கள் அவ்வுயரிய நோக்கத்தைப் புரிந்து செயல்படுகின்றார்களோ அவர்கள் அதன் பேற்றை அடைந்து கொள்வார்கள்.

மேலும், காலமானது அல்லாஹுத்தஆலாவினால் எமக்கு அருளப்பட்ட ஓர் அருட்கொடையாகும். அவ்வருட்கொடையை நாம் உதாசீனம் செய்தால் நிச்சயமாக அதற்கு நாங்கள் பதில் சொல்லியாக வேண்டும்.

நபியவர்கள் கூறினார்கள்: "இரு அருட்கொடைகள் உள்ளன. அதிகமான மனிதர்கள் அவை விடயத்தில் பராமுகமாக இருக்கின்றார்கள். அவை ஆரோக்கியமும் ஓய்வு நேரமுமாகும்". (புகாரி)

காலத்திற்கென்று தனியான ஒரு பண்புண்டு. அது கடந்து விட்டால் எம்மை மீண்டும் வந்தடையாது. இப்பண்பு எம்மைக் கடந்து செல்லும் ஒவ்வொரு வினாடியும் பெறுமதியானது என்பதை உணர்த்துகின்றது. எனவே, நாம் கழிக்கும் நேரத்தை எம் வாழ்வின் இறுதியான நேரமாகக் கருதி அதனை நல்லவிதத்தில் பயன்படுத்திக் கொள்ள முயற்சி செய்வோமாக!

இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் அறிவிக்கின்றார்கள்: "நீ மாலைப் பொழுதை அடைந்தால் காலைப் பொழுதை எதிர்பார்க்காதே! மேலும், நீ காலைப் பொழுதை அடைந்தால் மாலைப் பொழுதை எதிர்பார்க்காதே! நீ நோயுறுவதற்கு முன்னால் உன் ஆரோக்கியத்தைப் பயன்படுத்திக் கொள்! மேலும், நீ மரணத்தைத் தழுவுவதற்கு முன்னால் உன் வாழ்நாளைப் பயன்படுத்திக் கொள்! " (புகாரி)

இன்னும், எமது நேரங்கள் வீணாகக் கழியும் போது நாம் அதனை எண்ணி கவளை கொள்ள வேண்டும். நாம் உலகில் கைசேதப்பட்டு எம்மைத் திருத்திக் கொள்ளவில்லை என்றால் இப்படியான ஒரு சந்தர்ப்பம் மீண்டும் எமக்கு வரப்போவதில்லை.

பொதுவாக, மனிதர்கள் அனைவரும் கைசேதப்படக்கூடிய ஒரு தருணம்தான் மறுமை விசாரணையின் போதாகும். அப்போது எவ்வளவுதான் நாம் கைசேதப்பட்டாலும் எப்பிரயோசனமும் எமக்கு வரப்போவதில்லை. அடுத்து எம்மைத் திருத்திக் கொண்டு நன்மைகள் பல ஈட்டிக் கொள்ள அதன் பிறகு ஒரு சந்தர்ப்பமும் கிடைக்கப் போவதில்லை.

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: "அந்நாளில் நரகம் கொண்டு வரப்பட்டால், மனிதன் (தனது) பாவங்களை நினைவுகூறக்கூடிய நாளில் அவ்வாறு நினைவுகூறுவது அவனுக்கு எப்பிரயோசனத்தைத்தான் கொடுக்கும்? (அப்போது) அவன்: எனக்கு ஏற்பட்ட கைசேதமே! நான் மறுமை வாழ்க்கைக்காக முற்படுத்தியிருக்கக் கூடாதா எனக் கூறுவான்? . " (அல்பஜ்ர்: 23, 24)

நேரம் வீணடிக்கப்படுவதற்கான காரணங்கள்

நேரம் வீணடிக்கப்படுவதற்கான காரணங்கள் பல உள்ளன. அவற்றில் மிக முக்கியமானவையாக:

01. மனிதன், தான் படைக்கப்பட்ட நோக்கம் தெரியாமல் வாழ்வது.

மனிதன், தான் ஏன் படைக்கப்பட்டுள்ளான்? இவ்வுலக வாழக்கையில் அவன் எதனை இலக்காகக் கொண்டு செயற்பட வேண்டும்? போன்ற சிந்தனைப்போக்கு எதுவுமின்றி வாழ்வதாலேயே அவனுடைய காலங்கள் அனைத்தும் பிரயோசனமின்றிக் கழிகின்றன.

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: "உங்களுடைய இரட்சகனிடத்திலுள்ள மன்னிப்பின் பால் முந்திக் கொள்ளுங்கள்! மேலும், வானம் பூமி அளவுக்கு விசாலமான அளவையுடைய சுவனத்தின் பாலும் (முந்திக் கொள்ளுங்கள்)! " (அல் ஹதீத்: 21)

02. நேரத்தை வீணடிக்கக்கூடிய நபர்களோடு தோழமை கொள்ளுதல்.

நபியவர்கள் நவின்றார்கள்: "மனிதன் தன்னுடைய நண்பனின் மார்க்கத்தில் இருக்கின்றான். எனவே, உங்களில் ஒருவர் யாருடன் கூடிப்பழகுவது என்பதைத் தீர்மானித்துக் கொள்ளட்டும்! " (அஹ்மத்)

03. அதிகமான ஓய்வு நேரங்கள்.

ஓய்வு நேரங்கள் அதிகமாகக் காணப்படுவதும் எம் காலங்கள் வீணாகப் போவதற்குக் காரணமாக அமைகின்றது. அப்படி எமக்கு ஓய்வு நேரங்கள் கிடைக்கின்ற போது அதனை நன்மைகளைப் பெற்றுத்தரக்கூடிய காரியங்களுக்குப் பயன்படுத்த வேண்டும். அல்லாஹ்வுன் அருளால் இஸ்லாத்தில் அற்பமான காரியங்களை மேற்கொள்வதன் மூலம் அதிக நன்மைகளைப் பெற்றுத் தரக்கூடிய எத்தனையோ பல காரியங்கள் உள்ளன. அவற்றைக் கண்டறிந்து செயலாற்றப் பழகிக் கொள்ள வேண்டும்.

எம்முன்னோர்களைப் பாருங்கள்! அவர்கள் ஓய்வு நேரங்களில் கூட நன்மையின் பால் ஆர்வம் கொள்ளக்கூடியவர்களாக இருந்துள்ளார்கள். முஆத் ரழியல்லாஹு அவர்கள் கூறினார்கள்: "என்னைப் பொறுத்தளவில் நான் தூங்குகின்றேன், நின்று வணங்குகின்றேன், ஆயினும் என்னுடைய நின்று வணங்குதலில் நன்மையை எதிர்பார்ப்பதைப் போன்று என்னுடைய தூக்கத்திலும் நன்மையை எதிர்பார்க்கின்றேன்". (புகாரி)

ஒரு முஸ்லிம் தன்னுடைய நேரங்களைப் பிரயோசனமான முறையில் பயன்படுத்தக்கூடிய அமைப்புக்களில் மிகச் சிறந்த ஒன்றுதான், அவன் தனது நேரத்தை மார்க்கக் கல்வியைப் பெற்றுக் கொள்வதற்காகப் பயன்படுத்துவதாகும். எம்முன்னோர்களில் பலருடைய வாழ்க்கை வரலாற்றை வாசித்துப் பார்க்கையில் அவர்கள் எந்தளவு தங்களுடைய வாழ்நாளை இந்த மார்க்கக் கல்விக்காகச் செலவு செய்திருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளலாம். எடுத்துக்காட்டாக சிலவற்றைக் குறிப்பிடுகின்றேன்.

அப்துர் ரஹ்மான் இப்னு ஹாதிம் அர்ராஸி அவர்களுடைய வாழ்நாள் எப்படி அவருடைய தந்தையுடன் கழிந்தது என்பதைப் பற்றிப் படிக்கையில், அவர்கள் தனது தந்தை சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதும், நடந்து செல்லும் போதும், மலசல கூடத்தை நாடி சென்று கொண்டிருக்கும் போதும் மற்றும், ஏதாவது ஒன்றைத் தேடி வீட்டிற்குள் நுழையும் போதும் அவர் செவிமடுக்கும் விதத்தில் வாசித்துக் கொண்டே இருப்பார்கள். (ஸியர்)

அப்துர் ரஹ்மான் இப்னு அபீ ஹாதிம் அவர்களின் வரலாற்றை ஒரு கணம் வாசித்துப் பாருங்கள்! அவர்கள் கூறுகின்றார்கள்: "நாங்கள் எகிப்தில் ஏழு மாதங்கள் மார்க்க போதனையைப் பெற்றுக் கொள்வதற்காகத் தங்கியிருந்தோம். அக்கால எல்லையில் குளம்பு சேர்க்கப்பட்ட எந்த உணவையும் நாங்கள் பரிமாறவில்லை. எங்களது பகல் பொழுது பூராகவும் உலமாக்களுடைய போதனை வகுப்புக்களுக்காக பிரிக்கப்பட்டிருந்தன. இரவு நேரம் பூராகவும் எழுதுவதற்கும் கருத்துப்பரிமாற்றங்களை மேற்கொள்வதற்கும் என்று வகுக்கப்பட்டிருந்தன. ஒரு நாள் நானும் என்னுடைய நண்பனும் ஓர் அறிஞரை நாடிச் சென்று கொண்டிருக்கையில் ஆச்சரியமிக்க ஒரு மீனைப் பார்த்தோம். உடனே அதனைச் சமைத்துச் சாப்பிட வேண்டும் என்பதற்காக வாங்கினோம். அதனை எடுத்துக் கொண்டு வீடு சேர்ந்த போது பாடத்திற்குரிய நேரம் நெருங்கிவிட்டது. எங்களுக்கு அதனைச் சுத்தம் செய்ய நேரம் இருக்கவில்லை. உடனே வகுப்பிற்குச் சென்றோம். பிறகு மூன்று நாட்கள் கழித்து வீட்டிற்கு வந்தோம். அப்போது மீன் பழுதடைந்து காணப்பட்டது. என்றாலும், அந்நிலையிலேயே அதனைச் சமைத்துச் சாப்பிட்டோம். அந்த மீனை யாரிடமாவது கொடுத்து சமைத்துப் பெற்றுக் கொள்வதற்குக்கூட எமக்கு நேரம் இருக்கவில்லை". பிறகு இவ்வறிஞர் கூறுகிறார்: "உடல் ஓய்வுடன் அறிவைப் பெற்றுக் கொள்ள முடியாது".

மேலும், மார்க்க அறிவைத் தேடிப்பெற்றுக் கொள்வது மரணம் வரை தொடர வேண்டிய ஒன்றாகும்.

இமாம் அஹ்மத் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்: "மார்க்க அறிவென்பது மை போத்தலை பயன்படுத்த ஆரம்பித்த நாள் முதல் கப்ரறையைப் போய்ச் சேரும் வரை தொடரக்கூடிய ஒன்றாகும்".

இமாம் இப்னு முபாரக் ரஹிமஹுல்லாஹ் அவர்களிடத்தில் "எதுவரை அறிவைத் தேடப்போகிறீர்கள்?" என்று கேட்கப்பட்ட போது: "அல்லாஹ் நாடினால் மரணம் வரை" என்று பதிலளித்தார்கள்.

இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்: "மனிதன் அறிஞராகப் பிறப்பதில்லை. நிச்சயமாக அறிவு என்பது கற்றுக் கொள்வதின் மூலமே கிடைக்கின்றது".

எனவே, அன்பார்ந்த சகோதரர்களே! எமது காலநேரங்களை வீணாகக் கழிக்காமல் மறுமைக்குப் பிரயோசனம் தரக்கூடிய விதத்தில் கழித்து, அதிலும் குறிப்பாக எமது மார்க்கத்தைக் கற்றுக் கொள்வதற்காக அதிக நேரங்களை ஒதுக்கி சிறந்த விதத்தில் வாழ்நாளைப் பயன்படுத்திய கூட்டத்தில் எம்மனைவரையும் அல்லாஹ் ஆக்கியருள்வானாக!

-    அபூ ஹுனைப் (மதனி)