ரியாளுஸ்ஸாலிஹீன் விளக்கவுரை – 11

بسم الله الرحمن الرحيم

இரண்டாவது ஹதீஸ்

ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவித்தார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ஒரு படையினர் கஃபாவின் மீது படையெடுப்பார்கள். வெட்ட வெளியான ஒரு பூமியில் அவர்கள் இருக்கும்போது அவர்களில் முதலாமவர் முதல் கடைசி நபர்வரை உயிருடன் பூமிக்குள் புதையுண்டு போவார்கள். ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறினார்கள்: 'இறைத்தூதர் அவர்களே! அவர்களில் முதலாமவர் முதல் கடைசி நபர்வரை எவ்வாறு புதையுண்டு போவார்கள்? அங்கே அவர்களைச் சேராதவர்களும் இருப்பார்கள். கடைவீதிகளும் இருக்குமே!” அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: அவர்களில் முதலாமவர் முதல் கடைசி நபர் வரை புதையுண்டு போகத்தான் செய்வார்கள். எனினும் (அதற்குப்) பின்னர் அவரவரின் எண்ணத்திற்கேற்ப எழுப்பப்படுவார்கள். (புஹாரீ: 2118, முஸ்லிம்: 2884)

 

ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் பற்றிய வாழ்க்கைக் குறிப்பு

  • பெயர்: ஆஇஷா பின்த் அபீபக்ர்
  • தாயார்: உம்மு ரூமான் பின்த் ஆமிர்
  • இடுகுறிப்பெயர்: உம்மு அப்தில்லாஹ்
  • புனைப்பெயர்: சித்தீக்கா, உம்முல் முஃமினீன் (விசுவாசிகளின் தாயார்)
  • பிறப்பு: நபித்துவத்திற்கு சுமார் நான்கு வருடங்களுக்கு முன்பாக பிறந்தார்கள்.
  • அறிவித்த ஹதீஸ்கள்: இவர்கள் பெண்களில் அதிகூடிய ஹதீஸ்களை அறிவித்த ஸஹாபியாவார். 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். புஹாரீ மற்றும் முஸ்லிம் ஆகிய கிரந்தங்களில் இவர்களது 316 ஹதீஸ்கள் பதிவாகியுள்ளன.
  • நபிகளாருடன் திருமணம்: ஹதீஜா, ஸவ்தா ஆகிய மனைவிமார்களுக்குப் பின்பு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்களைத் திருமணத் செய்தார்கள். இத்திருமணம் ஹிஜ்ரத்திற்கு இரண்டு வருடங்களுக்கு முன்பாக நடைபெற்றது.

 

சிறப்புக்கள்

ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் பல சிறப்புக்களைக் கொண்ட ஒரு ஸஹாபிப் பெண்மணியாகத் திகழ்ந்தார்கள்.  அவர்களின் சிறப்புக்கள் தொடர்பாக அறிவிக்கப்பட்ட சில ஹதீஸ்களை இங்கு குறிப்பிடுகின்றோம்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் 'மக்களில் உங்களுக்கு மிகப் பிரியமானவர் யார்?' என வினவப்பட்டது. அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 'ஆஇஷா' என்று பதிலளித்தார்கள். பின்பு 'ஆண்களில் மிகப் பிரியமானவர் யார்?” என வினவப்பட்டது. அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 'அவளின் தந்தை (அபூபக்ர்)” என்று பதிலளித்தார்கள். (புஹாரீ: 3662, முஸ்லிம்: 6328)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் திருமணம் செய்த ஒரேயொரு கண்ணிப் பெண் ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்களே ஆவார்.

நயவஞ்சகர்கள் கூறிய அவதூறிலிருந்து அவர்களை அல்லாஹ் பரிசுத்தப்படுத்தி அல்குர்ஆனில் சில வசனங்களை இறக்கியருளினான்.

ஸஹாபாக்கள் அவர்களுக்கு மார்க்க விடயங்களில் சந்தேகங்கள் தோன்றும்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மரணத்தின் பின்பு, ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்களிடம் சென்று தெளிவு பெற்றுக்கொள்வார்கள்.

ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் உலகத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மனைவியாக இருந்தது போன்று மறுமையிலும் அவர்களுக்கு மனைவியாக இருப்பார்கள்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்களிடம் 'இவ்வுலகத்திலும் மறுமையிலும் எனது மனைவியாக நீங்கள் இருப்பதை நீங்கள் பொருந்திக்கொள்ளவில்லையா?” எனக் கேட்டார்கள். ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் 'நான் பொருந்திக்கொள்கிறேன்' என்று பதிலளித்தார்கள். பின்பு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 'உலகத்திலும் மறுமையிலும் நீங்கள் என்னுடைய மனைவிதான்” என்று கூறினார்கள். (ஹாகிம்: 4/10)

இறப்பு: ரமழான் மாதம் 17ம் நாள் செவ்வாய்க்கிழமை அவர்கள் இறந்தார்கள். இறந்த ஆண்டு ஹிஜ்ரி 57 அல்லது 58 அல்லது 59 ஆகும். அவர்களுக்கு அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஜனாஸா தொழுவித்தார்கள். இறக்கும்போது அவர்களது வயது 67 ஆக இருந்தது.

 

ஹதீஸ் விளக்கம்

ஹதீஸில் கூறப்பட்ட படையினர் யாவர் என்பது அல்லாஹ்வே மிக அறிந்தவன். எனினும், மஹ்தி அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கஃபாவுக்கு பாதுகாப்புத் தேடி வருகின்ற சந்தர்ப்பத்தில் அவரைக் கொலை செய்வதற்காக அனுப்பப்பட்ட ஒரு படையாக இவர்கள் இருக்கக்கூடும் என்பது இது தொடர்பான ஹதீஸ்களின் வெளிப்படையான கருத்தாக இருக்கின்றது. மேலும், இவர்கள் இந்த உம்மத்தைச் சார்ந்தவர்களாக இருப்பார்கள். இது முஸ்லிம் என்ற கிரந்தத்தில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. மேலும், இவர்கள் (இறுதி காலத்தில்) கஃபாவை இடித்து உடைக்கும் ஹபஷியர்களுமல்ல. (பஹ்ஜதுந் நாளிரீன் - அஷ்ஷெய்ஹ் ஸலீம் ஹிலாலீ)

இப்படையினர் பூமியில் புதையுண்டு போவார்கள். அவர்களும் அவர்களுடைய சந்தைத் தெருக்களும் அவர்களுடனிருப்பவர்களும் பூமியினுள் மூழ்கடிக்கப்படுவார்கள். இவர்கள் ஒரு மகத்தான படையினராக இருப்பார்கள் என்பதை இது சுட்டிக்காட்டுகின்றது. ஏனெனில் இப்படையில் சந்தைகள் இருப்பதாகவும் கூறப்பட்டிருக்கின்றது.

அவர்களில் முதல் மனிதரிலிருந்து இறுதி நபர் வரைக்கும் பூமிக்குள் புதையுண்டு போவார்கள். இதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய நேரத்தில், ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் 'இறைத்தூதர் அவர்களே! அவர்களில் முதலாமவர் முதல் கடைசி நபர் வரை எவ்வாறு புதையுண்டு போவார்கள்? அங்கே அவர்களைச் சேராதவர்களும் இருப்பார்கள். கடைவீதிகளும் இருக்குமே!' என்று கேட்டார்கள். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 'அவர்களில் முதலாமவர் முதல் கடைசி நபர்வரை புதையுண்டு போகத்தான் செய்வார்கள். எனினும் (அதற்குப்) பின்னர் அவரவரின் எண்ணத்திற்கேற்ப எழுப்பப்படுவார்கள்” என்று பதிலளித்தார்கள்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய இந்த ஹதீஸில் ஒரு படிப்பினை இருக்கின்றது. எவர் அசத்தியவாதிகளுடனும் பாவிகளுடனும் கலந்து இருப்பார்களோ, அப்பாவிகளுக்கு இறங்கும் தண்டனைகள் அவர்களுடன் கலந்திருப்பவர்களுக்கும் இறங்கும் என்பதை இங்கு நாம் புரிந்து கொள்ளலாம். எனவே, அல்லாஹ்வின் தண்டனை விசுவாசி, காபிர் மற்றும் நல்லவர், தீயவர் என்ற வேறுபாடின்றி எல்லோரையும் அடைந்துகொள்ளும். ஆனால், மறுமை நாளில் அவர்கள் எழுப்பப்படும்போது அவரவர்களுடைய நிய்யத்திற்கேற்ப எழுப்பப்படுவார்கள். அல்லாஹுதஆலா கூறுகின்றான்: (உங்களில் அநியாயக்காரர்களுக்கு மாத்திரமின்றி அனைவரையும் வந்தடையக்கூடிய சோதனையை நீங்கள் பயந்துகொள்ளுங்கள். மேலும், அல்லாஹ் கடுமையாக தண்டிக்கக்கூடியவன் என்பதையும் அறிந்துகொள்ளுங்கள்.) (அல்அன்பால்: 25)

"ஒவ்வொருவரும் அவரவர்களுடைய நிய்யத்திற்கேற்ப எழுப்பப்படுவார்கள்” என்ற நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கூற்று 'செயல்கள் யாவும் எண்ணங்களைப் பொறுத்தே அமையும்” என்ற அவர்களுடைய கூற்றுக்கு ஒப்பாகின்றது"

- இன்ஷா அல்லாஹ் தொடரும்.