பள்ளிவாசல்களின் கண்ணியத்தைப் பாதுகாப்போம்!

بسم الله الرحمن الرحيم

அல்லாஹுத்தஆலா மேலானவனாகவும் மகத்துவம் மிக்கவனாகவும் இருக்கின்றான். அவனது மேலான தன்மை மற்றும் மகத்துவம் ஆகியன அவனை மேன்மைப்படுத்துவதின் மூலமும் மகத்துவப்படுத்துவதின் மூலம் நிலைநாட்டப்படுகின்றன. அந்த அடிப்படையில் அவன் கண்ணியப்படுத்தியவற்றை நாமும் கண்ணியப்படுத்துவது அவனின் மேன்மையையும் மகத்துவத்தையும் நிலைநாட்டுவதற்கு உறுதுணையாக இருக்கின்றது.

அவ்வாறு அல்லாஹ் கண்ணியப்படுத்திய அம்சங்களில் ஒன்றுதான் பள்ளிவாசலாகும். அதனை நல்ல முறையில் கண்ணியப்படுத்துவது அல்லாஹ்வை கண்ணியப்படுத்தியதற்குச் சமனானதாகும். அந்தவிதத்தில் அல்லாஹ்வின் வீடான பள்ளிவாசலுக்கு இருக்கின்ற அந்தஸ்துக்கள் என்ன? என்பதை நாம் நன்கு தெரிந்திருக்க வேண்டும். மேலும், அதனை பரிபாலனம் செய்கின்ற விடயத்தில் முயற்சிகள் பலதை மேற்கொள்ள வேண்டும். அல்லாஹ்வுடை சட்டதிட்டங்களை நிலைநாட்டுவதற்குரிய களமாக அதனை நாம் ஆக்க வேண்டும். இன்னும், ஐவேளைத் தொழுகைகள் சுன்னா அடிப்படையில் அங்கு நிறைவேற்றப்பட வேண்டும். அத்தோடு ஷிர்க், பித்அத் போன்ற மார்க்கத்திற்குப் புறம்பான கிரியைகளை அதனை விட்டும் அகற்ற வேண்டும். இவை அனைத்தும் பள்ளிவாசல் விடயத்தில் ஒவ்வொரு முஸ்லிமின் மீதுமுள்ள பாரிய பொறுப்புக்களாகும்.

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: "அன்றியும் அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகளில் அவனுடைய (சங்கையான) பெயர் அவற்றில் கூறப்படுவதைத் தடுத்து அவைகளைப் பாழாக்க முயற்சிப்பவனைவிட மகா அநியாயக்காரன் யார்? இத்தகையோர் அச்சமுடையவர்களாகவேயன்றி அவைகளில் நுழைய அவர்களுக்குத் தகுதியில்லை. (அவைகளில் அல்லாஹ்வின் பெயர் கூறப்படுவதைத் தடுத்து அவற்றைப் பாழாக்க முற்படும்) அவர்களுக்கு இம்மையில் இழிவுண்டு. மறுமையிலோ அவர்களுக்கு மகத்தான வேதனையுண்டு." (அல்பகறா: 114)

பள்ளிவாசல்களைப் பொருத்தளவில் அவைகள் அல்லாஹுத்தஆலாவின் வீடுகளாகக் கருதப்படுகின்றன. இதனை உறுதி செய்யக்கூடிய பல வசனங்களை அல்குர்ஆனில் காண முடிகின்றன. அந்தவிதத்தில்:

"மேலும், நிச்சயமாக மஸ்ஜிதுகள் அல்லாஹ்வி(ன் வணக்கத்தி)ற்கே உரியன. ஆகவே, (அவைகளில்) அல்லாஹ்வுடன் மற்றொருவரையும் நீங்கள் (பிரார்த்தித்து) அழைக்க வேண்டாம்." (அல்ஜின்: 18)

"அல்லாஹ்வுடைய பள்ளிகளைப் பரிபாலனம் செய்கிறவரெல்லாம் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் விசுவாசித்து தொழுகையையும் நிறைவேற்றி ஜகாத்தும் கொடுத்து அல்லாஹ்வையன்றி மற்றெவருக்கும் பயப்படாமலும் இருக்கின்றவர்கள் தாம். எனவே, அத்தகையோர் நேர்வழி பெற்றவர்களில் அவர்கள் இருக்கப் போதுமானவர்கள்." (அத்தவ்பா: 18)

அதேபோன்று நாம் முன்பு குறிப்பிட்ட அல்பகறா அத்தியாயத்தின் 114ஆம் வசனத்தையும் அவதானிக்க!

மேலும், அல்லாஹுத்தஆலா ஏற்படுத்திய வெளிப்படையான அடையாளச் சின்னங்களை கண்ணியப்படுத்துவது எமது பெரும் பொறுப்பாகும். அவ்வாறு அவற்றை கண்ணியப்படுத்துவது இறையச்சத்தின் வெளிப்பாடாகும் என்று அல்குர்ஆன் எமக்கு உணர்த்துகின்றது.

"இன்னும் எவர் அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்களை கண்ணியப்படுத்துகின்றாரோ அப்போது நிச்சயமாக அது இதங்களிலுள்ள பயபக்தியில் (ஏற்பட்டது) ஆகும்." (அல்ஹஜ்: 32)

அந்த அடிப்படையில் பள்ளிவாசல்களை கண்ணியப்படுத்துவதில் உள்ளடங்கக் கூடியவையாக அவற்றின் கண்ணியத்தைப் புரிந்து, அவற்றுக்கு அபகீர்த்தி உண்டாகாத வித்தில் நடந்து கொள்வதைக் குறிப்பிடலாம். அதேபோன்று, பள்ளிவாசல்களுக்குள் சண்டை சச்சரவுகளை ஏற்படுத்தாது இருக்க வேண்டும். இது குறித்து இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கக்கூடிய ஒரு ஹதீஸை இங்கு பதிய வைக்கின்றேன்.

"எனக்குப் பிறகு தொழுகையுடைய விடயத்தில் உங்களில் இருந்து அறிவு படைத்தவர்கள் பொறுப்பேற்றுச் செயற்படுவார்கள். அவர்களுக்குப் பிறகு அவர்களைப் போன்ற ஒரு கூட்டம் பெறுப்பேற்றுச் செயல்படும். இப்படி மூன்று விடுத்தங்கள் நபியவர்கள் கூறிவிட்டு, சந்தைகள் காணப்படக்கூடிய மார்க்கத்திற்கு முரணான நிகழ்வுகளை பள்ளிவாசல்களில் மேற்கொள்வதை விட்டும் உங்களை நான் எச்சரிக்கின்றேன் என்றார்கள்." (முஸ்லிம்)

அவ்வாறு சந்தைகளில் நிகழும் மார்க்கத்திற்குப் புறம்பான விடயங்கள் என்ன என்பது தொடர்பாக இமாம் நவவி ரஹிமஹுல்லாஹ் முஸ்லிம் எனும் கிரந்தத்திற்கு வழங்;கிய விரிவுரையில் கூறும் போது: "ஆண் பெண் கலப்பு, சண்டை சச்சரவு, தர்க்கம் புரிதல், சத்தத்தை உயர்த்திப் பேசுதல், குழப்பங்கள்" போன்றவற்றை விளக்கமாகக் கூறியுள்ளார்கள்.

மேலும், பள்ளிவாசல்களின் கண்ணியத்தைப் பேணும் முகமாக அவற்றில் வீற்றிருக்கும் வணக்கதாரிகளுக்கு எவ்விதத்திலும் இடையூறு ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும். இதனால் தான் நபியவர்கள் வெங்காயம் போன்ற வாடையை ஏற்படுத்தக்கூடிய உணவுப் பொருட்களைப் பரிமாறிவிட்டுப் பள்ளிவாசலுக்கு வருகைதர வேண்டாம் என்று தடுத்துள்ளார்கள். அதேபோன்று, பள்ளிவாசலில் வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ளல், காணாமல் போன பொருட்களைத் தேடுதல் மற்றும், கவிதை பாடுதல் போன்ற பல விடயங்களை இதனைக் கருத்திற் கொண்டே நபியவர்கள் தடுத்துள்ளார்கள். மேலும், அவ்வாறு வியாபாரம் செய்பவர்கள், காணாமல் போன பொருட்களைத் தேடுபவர்கள் ஆகிய அனைவருக்கும் எதிராக துஆச் செய்யுமாறும் நபியவர்கள் பணித்துள்ளார்கள்.

இப்னு உஸைமீன் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறும்போது: "விற்றல், வாங்கல், வாடகைக்குக் கொடுத்தல் போன்ற அம்சங்கள் பள்ளிவாசலில் மேற்கொள்ளப்படுவது ஹராமாக்கப்பட்டுள்ளன. ஏனெனில், இச்செயல்கள் பள்ளிவாசல்கள் எந்நோக்கத்திற்காகக் கட்டப்பட்டுள்ளனவோ அந்நோக்கத்திற்குப் புறம்பாக அமைந்துள்ளன" என்கிறார்கள்.

உண்மையில் பள்ளிவாசல்களில் இடையூறை ஏற்படுத்தக்கூடியன, மார்க்கம் அவைகளில் மேற்கொள்வதற்கு அங்கீகரித்த வணக்கங்களாக இருந்தாலும் அவைகளும் தவிர்க்கப்பட வேண்டும்.

அபூஸஈத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்: "ஒரு முறை நபியவர்கள் பள்ளிவாசலில் இஃதிகாப் இருந்து கொண்டிருக்கும் போது மக்கள் சத்தமிட்டு அல்குர்ஆனை ஓதிக் கொண்டிருப்பதை செவிமடுத்தார்கள். அப்போது அவர்கள் திறையை அகற்றி, அறிந்து கொள்ளுங்கள்! நீங்கள் அனைவரும் தங்களுடைய இரட்சகனுடன் உரையாடிக் கொண்டிருக்கின்றீர்கள். எனவே, உங்களில் சிலர் சிலரை நோவினை செய்ய வேண்டாம். மேலும், அல்குர்ஆன் ஓதும் விடயத்தில் அல்லது தொழுகையுடைய விடயத்தில் உங்களில் சிலர் சிலரைவிட சத்தத்தை உயர்த்த வேண்டாம்." (அபூதாவுத்)

தொழுகையாளிகளை நோவினை செய்வது அல்லாஹ்விடத்தில் பாவத்தால் மிகப் பெரியதாகும். அதேநேரத்தில் உலகில் தண்டனைக்குரிய குற்றமுமாகும்.

ஸாயிப் இப்னு யஸீத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்: "நான் பள்ளிவாசலில் நின்று கொண்டிருந்தேன். அப்போது ஒரு மனிதர் எனக்கு சிறு கல்லால் எறிந்தார். நான் திரும்பிப் பார்த்தேன். அங்கு உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் வீற்றிருந்தார்கள். அப்போது அவர்கள் என்னை நோக்கி: நீங்கள் சென்று அவர்கள் இருவரையும் என்னிடத்தில் அழைத்து வாருங்கள்! என வேண்டிக் கொண்டார்கள். எனவே, நான் அவர்கள் இருவரையும் அழைத்து வந்தேன். அப்போது உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள்: நீங்கள் இருவரும் யாவர்? என வினவினார்கள். அதற்கு அவ்விருவரும்: நாங்கள் தாயிப் வாசிகள் எனக் கூற, நீங்கள் இருவரும் இவ்வூர்வாசிகளாக இருந்திருந்தால் அல்லாஹ்வின் தூதரின் பள்ளிவாசலில் சத்தத்தை உயர்த்தியமைக்காக தண்டனை வழங்கியிருப்பேன்" என உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் பகர்ந்தார்கள்.

எனவே, அல்லாஹ்வின் வீடுகளான பள்ளிவாசல்கள் தொழுகையை நிலைநாட்டல், திக்ரு செய்தல், அல்குர்ஆனை பாராயணம் செய்தல் போன்ற வணக்கவழிபாடுகளைச் செய்வதற்காக நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: "மேலும், நிச்சயமாக மஸ்ஜிதுகள் அல்லாஹ்வி(ன் வணக்கத்தி)ற்கே உரியன. ஆகவே, (அவைகளில்) அல்லாஹ்வுடன் மற்றெவரையும் நீங்கள் (பிரார்த்தித்து) அழைக்க வேண்டாம்." (அல்ஜின்: 18)

மேலும் கூறுகின்றான்: "(அல்லாஹ்வின் இல்லங்களான அவ்)வீடுகளில் (வணக்க வழிபாடுகளின் மூலம்) அவை உயர்த்தப்படவும், அவற்றில் அவனது பெயர் கூறப்பட வேண்டுமெனவும் அல்லாஹ் கட்டளையிடுகிறான். அவற்றில் காலையிலும் மாலையிலும் அவனை (நல்லடியார்கள்) துதி செய்வர்." (அந்நூர்: 36)

எனவே, அன்பார்ந்த வாசகர் நெஞ்சங்களே! நாம் கூறிய போதனைகளை நல்ல முறையில் விளங்கி பள்ளிவாசல்களுக்குரிய கண்ணியத்தை என்றும் பாதுகாக்கக்கூடிய மக்களாக நானும் நீங்களும் திகழ வல்ல அல்லாஹ் எமக்குத் துணை புரிவானாக!

والحمد لله رب العالمين