நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஓதிப் பார்த்து நோய் நிவாரணம் தேடிய அமைப்புக்கள் – 7

بسم الله الرحمن الرحيم

9.أصْبَحْنا عَلى فِطْرَة الإسْلام، وَعَلى كَلمَة الإخْلاص، وعلى دِيْن نَبِيِّنا مُحَمّد، وعلى مِلّة أبِيْنا إبْراهِيم حَنِيفا مُسْلما، ومَا كانَ مِنَ المُشْرِكين

இந்த துஆ அப்துர் ரஹ்மான் இப்னு அப்ஸா என்பவரைத் தொட்டும் அஹ்மத் (14821) எனும் கிரந்தத்தில் ஸஹீஹ் எனும் தரத்திலும், அஸ்ஸஹீஹா (2989)எனும் தொகுப்பிலும் பதிவாகியுள்ளது. இங்கு فِطْرة الإسلام என்று குறிப்பிடப்பட்டது அல்லாஹ் தன்னுடைய அடியார்களுக்காக வேண்டி காட்டித்தந்த இஸ்லாம் எனும் வழிமுறையாகும். மேலும், الإسلام என்ற வார்த்தை فطرة என்ற வார்த்தையுடன் இணைக்கப்பட்டது தெளிவை நாடியே ஆகும். இன்னும், كَلِمة الإخلاص ஆனது குறித்த சொல்லை உடையவரின் இஹ்லாஸை அறிவிக்கக்கூடிய வார்த்தையாக இருக்கின்றது. மேலும், இஹ்லாஸ் உடையவர்களில் ஒருவராக கூறக்கூடியவர் இதனைக் கொண்டு ஆகிவிடுவார். அதுவே ஏகத்துவத்தின் வார்த்தையாகும். (இமாம் ஸின்தி)

பொருள்: நாங்கள் இஸ்லாத்தின் மீதும் இஹ்லாஸுடைய வார்த்தையின் மீதும் எங்கள் நபி முஹம்மத் அவர்கள் மீதும் முஸ்லிமாக இஸ்லாத்தின் வழி நின்று உறுதியாக இருந்தவரான எங்கள் தந்தை இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மார்க்கத்தின் மீதும் காலைப் பொழுதை அடைந்தோம். மேலும்,அவர் இணைவைப்பாளர்களில் ஒருவராக இருக்கவில்லை.

10.أعُوْذُ بِكَلِمَاتِ اللهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَق

இந்த துஆவை மாலைப் பொழுதை அடையும் போது மூன்று விடுத்தங்கள் கூற வேண்டும்.

பொருள்: அல்லாஹ்வின் பூரணமான வார்த்தைகளைக் கொண்டு அவன் படைத்தவற்றின் தீங்கில் இருந்தும் நான் பாதுகாவல் தேடுகிறேன்.

இந்த துஆ முஸ்லிம் (2709)எனும் கிரந்தத்தில் முஅல்லகாவும் மாலிக் (1778),அஹ்மத் (2/290,374),அபூதாவுத் (3899) மற்றும் இப்னு மாஜா (3528) ஆகியோரின் கிரந்தங்களில் அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் தொடரான அறிவிப்பாளர் வரிசையில் பதிவாகியுள்ளது. மேலும், ஸஹீஹ் இப்னு மாஜா (2836) எனும் தொகுப்பில் ஸஹீஹ் எனும் தரத்திலும் பதிவாகியுள்ளது.

 அவ்வாறு அவர் அதனைக் கூறினால்: "அன்றைய இரவில் தேள் போன்ற விஷஜந்துக்கள் அவரைத் தீண்டாது."

11. இராப்பொழுதை அடைந்தால் சூரதுல் பகராவின் இறுதி இரு வசனங்களை ஓதுவார். அவ்வசனமாவது:

 آمَن الرَّسُول بِما أنْزِل إلَيْه مِن رّبِّه والمُؤمنون كُلّ آمَن بِالله وَمَلائكته وَكُتبه وَرُسله لا نُفَرّق بَيْن أحَد مِن رسُله وَقَالوا سَمِعنَا وَأَطْعنا غُفرانك رَبنا وَإليك المَصِير لا يُكلّفُ الله نَفسا إلا وُسعهَا لهَا مَا كسَبت وعَليها مَا اكتَسَبت رَبّنا لا تُؤاخِذنا إنْ نَسِيْنا أو أخْطأنا رَبّنا ولا تَحْمل عَلينا إصْرا كمَا حَمَلته على الذين مِن قَبلنا رَبّنا وَلا تُحْمّلنا مَا لا طَاقة لنا بِه واعْف عَنا وَاغفِر لنا وارْحمنا أنْتَ موْلانا فَانصُرنا على القَوْم الكافرِين

இச்செய்தி புகாரி (5009), முஸ்லிம் (808) ஆகிய கிரந்தங்களில் அபூமஸ்ஊத் அல்அன்ஸாரி ரழியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் பதிவாகியுள்ளது. மேலும், இச்செய்தியில் இடம்பெற்றுள்ளதாவது: "யார் ஓர் இரவில் சூரதுல் பகராவின் இறுதிப்பகுதியில் இடம்பெறும் இவ்விரு வசனங்களையும் ஓதுகின்றாரோ, அவை அவருக்குப் போதுமானதாகும்." இதனை இப்னு பாஸ் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் விபரிக்கும் போது: "இவை எல்லாத் தீங்கிலிருந்தும் அவருக்குப் (பாதுகாப்பு வழங்கப்) போதுமானதாகும்" என்கிறார்கள்.

12. மேலும் சூரதுல் இஹ்லாஸ், இரு பாதுகாவல் சூராக்கள் ஆகியவற்றை ஓதிக்கொள்வார். இதனை அஹ்மத் (4/148,158) எனும் கிரந்தத்தில் உக்பத் இப்னு ஆமிர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் பதிவாகியிருக்கக் காணலாம். மேலும், இதில் இடம்பெற்றுள்ள வாசகமானது: "எந்தவோர் இரவு உன்னைக் கடந்து சென்றாலும் இவைகளை நீ ஓதாமல் இருந்து விடாதே!" என்று இடம்பெற்றுள்ளது. இதனை தஹ்கீகுல் முஸ்னத் (17334) இல் ஹஸன் எனும் தரத்திலும் அஸ்ஸஹீஹா (891,2861) எனும் தொகுப்பிலும் காணலாம்.

தூங்கச் செல்லும் போது ஆயதுல் குர்ஷியை ஓதிக்கொள்ள வேண்டும். இதனை ஓதுவதற்கான ஆதாரத்தை புகாரி (2311) எனும் கிரந்தத்தில் முஅல்லக்காகவும் இமாம் நஸாயி அவர்களின் 'அமலுல் யவ்மி வல்லைலா' (959) எனும் கிரந்தத்தில் அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் தொடர் அறிவிப்பாக ஸஹீஹ் எனும் தரத்திலும் அஸ்ஸஹீஹா (11/21) எனும் தொகுப்பிலும் காணலாம்.

அவ்வாறு நீங்கள் இதனைச் செய்வீர்களென்றால்: 'அல்லாஹ்வின் புறத்திலிருந்து ஒரு பாதுகாவலர் உங்களோடு இருந்து கொண்டே இருப்பார். நீங்கள் காலைப் பொழுதை அடையும் வரை ஷைத்தான் உங்களை நெருங்கமாட்டான்.'

 மேலும், மலசல கூடத்தினுள் நுழையும் போது:

اللهُمّ إنّي أعُوْذ بِكَ مِن الخُبث والخَبَائث

இச்செய்தி அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் புகாரி (142), முஸ்லிம் (375) ஆகிய கிரந்தங்களில் பதிவாகியுள்ளது.

பொருள்: அல்லாஹ்வே! நிச்சயமாக நான் உன்னைக் கொண்டு ஆண் பெண் ஷைத்தான்களில் இருந்தும் பாதுகாவல் தேடுகின்றேன்.

அவர் மலசலகூடத்தைவிட்டு வெளியேறும் போது:

غُفْرَانَكَ

என்று கூறுவார். இதனை ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்களைத் தொட்டும் அபூதாவுத் (30) எனும் கிரந்தத்திலும், ஸஹீஹ் அபீதாவுத் (23) எனும் தொகுப்பில் ஹஸன் எனும் தரத்திலும் காணலாம்.

பொருள்: உன்னித்தில் பாவமன்னிப்புக் கோருகின்றேன்.

அவருக்குக் கோபம் ஏற்பட்டால்:

أَعُوْذُ بِاللهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيْمِ

என்று கூறுவார். இதனை புகாரி (6115) முஸ்லிம் (2610) ஆகிய கிரந்தங்களில் சுலைமான் இப்னு ஸுரத் என்பவரைத் தொட்டும் பதிவான ஹதீஸில் காணலாம்.

பொருள்: எடுத்தெறியப்பட்ட ஷைத்தானின் தீங்குகளைவிட்டும் அல்லாஹ்விடத்தில் பாதுகாவல் தேடுகின்றேன்.

அவர் தனது வீட்டினுள் பிரவேசிக்கும் போது அல்லாஹ்வை ஞாபகப்படுத்துவார். இதனை ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்களைத் தொட்டும் முஸ்லிம் (2018) எனும் கிரந்தத்தில் பதிவான ஹதீஸில் காணலாம்.

நபியவர்கள் கூறினார்கள்: 'ஒருவர் தனது வீட்டில் நுழைய நாடி, நுழையும் போதும் உணவு பரிமாறும் போதும் அல்லாஹ்வை ஞாபகப்படுத்தினால் ஷைத்தான் தன் தோழர்களை அழைத்து) உங்களுக்கு இராத்தரிக்க இடமும் இராப்போசனமும் கிடையாது என்பான். அவ்வாறு அவன் நுழைய நாடி, நுழையும் போது அல்லாஹ்வை ஞாபகப்படுத்தவில்லை என்றால் ஷைத்தான் (தன் தோழர்களை விழித்து) நீங்கள் இராத்தரிக்கும் இடத்தைப் பெற்றுக் கொண்டுவிட்டீர்கள் என்று கூறுவான். மேலும், அவ்வாறு அவன் தனது உணவின் போதும் பிரவேசத்தின் போதும் அல்லாஹ்வை ஞாபகப்படுத்தவில்லை என்றால் நீங்கள் இராத்தரிக்கும் இடத்தையும் இராப்போசனத்தையும் அடைந்து கொண்டுவிட்டீர்கள் என்று கூறுவான்.'

-      இன்ஷா அல்லாஹ் தொடரும்.