சாப்பிடுவதின் ஒழுங்குமுறைகள்

بسم الله الرحمن الرحيم

அல்லாஹுத்தஆலா எம்மனைவருக்கும் இஸ்லாத்தை மார்க்கமாகத் தெரிவு செய்திருக்கின்றான். இஸ்லாம் மார்க்கத்தைப் பொறுத்தவரையில் மனிதன் அன்றாடம் செய்யக்கூடிய அனைத்து செயல்களையும் எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பதற்கு வழிகாட்டல்களை வழங்கியிருக்கின்றது.

ஒரு முஸ்லிம் சாப்பிடும்போது கடைபிடிக்க வேண்டிய அம்சங்களை நாம் அல்குர்ஆன் மற்றும் அஸ்ஸுன்னா ஆதாரங்களில் தெரிந்து கொள்ளலாம். ஏனைய விடயங்களை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதற்கு வழிகாட்டும் அல்குர்ஆனும் அஸ்ஸுன்னாவும் சாப்பிடும்போது எவ்வாறான ஒழுங்குமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும் என்பதையும் கற்றுத் தந்திருக்கின்றன.

சாப்பிடும்போது கடைபிடிக்க வேண்டிய சில ஒழுங்குமுறைகளை இங்கு நாம் பதிய வைத்திருக்கின்றோம். இவற்றை நாம் நடைமுறைப்படுத்தி அல்லாஹ்வின் கூலியையும் திருப்பொருத்தத்தையும் பெற்றுக்கொள்ள முயற்சி செய்வோம்.

1.   சாப்பிட முன் கைகளைக் கழுவுவது விரும்பத்தக்கது.

தேவைப்பட்டவர் சாப்பிட முன் இரு கைகளையும் கழுவிக்கொள்ளலாம். இதனை வலியுறுத்தும்; எந்த ஹதீஸும் பதிவாகவில்லை. அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: "(நபியே!) உம்முடைய ஆடையை நீ சுத்தப்படுத்துவீராக!" (அல்முத்தஸ்ஸிர்: 4) மேலும், அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: "நிச்சயமாக அல்லாஹ் தவ்பாச் செய்பவர்களை விரும்புகின்றான். இன்னும் சுத்தமானவர்களையும் விரும்புகின்றான்." (அல்பகறா: 222)

இந்த இரு வசனங்களும் சுத்தமாக இருப்பதை வலியுறுத்துகின்றன. சாப்பிட முன் கைகளைக் கழுவுவது குறித்த ஹதீஸ்கள் பதிவு செய்யப்படாவிடினும் இதுபோன்ற வசனங்கள் அவ்வாறு கைகளைக் கழுவிக்கொள்வது விரும்பத்தக்கது என்பதைத் தெளிவுபடுத்துகின்றன.

2.   சாப்பிட முன் "பிஸ்மில்லாஹ்" என்று கூற வேண்டும்.

சாப்பிட முன் "பிஸ்மில்லாஹ்" என்று கூறுவது கட்டாயமாகும். ஏனெனில், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: "சிறுவனே! அல்லாஹ்வின் பெயர் கூறு! உனது வலது கையால் சாப்பிடு! உனக்கு அருகில் உள்ளவற்றிலிருந்து சாப்பிடு!" (புஹாரி, முஸ்லிம்)

3.   சாப்பிட முன் "பிஸ்மில்லாஹ்" கூற மறந்துவிட்டால் அது நினைவுக்கு வரும்போது "பிஸ்மில்லாஹி அவ்வலஹு வஆஹிரகு" என்று கூற வேண்டும்.

சாப்பிடும்போது "பிஸ்மில்லாஹ்" கூற மறந்துவிட்டவர் அது நினைவுக்கு வரும்போது "பிஸ்மில்லாஹி அவ்வலஹு வஆஹிரகு" என்று கூறுவது ஸஹீஹான ஆதாரங்களில் பதிவாகியுள்ளது. இச்செய்தி இப்னு மஸ்ஊத், ஆயிஷா, உமையா இப்னு மஹ்ஷீ ரழியல்லாஹு அன்ஹும் ஆகியோரைத் தொட்டும் பதிவாகியுள்ளது. இவர்களது ஹதீஸ்களை அஷ்ஷெய்ஹ் அல்பானி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் அல்இர்வாஃ என்ற நூலில் பார்க்கலாம்.

4.   வலது கையால் சாப்பிட வேண்டும்.

வலது கையால் சாப்பிடுவது கட்டாயமாகும். ஏனெனில், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: "சிறுவனே! அல்லாஹ்வின் பெயர் கூறு! உனது வலது கையால் சாப்பிடு! உனக்கு அருகில் உள்ளவற்றிலிருந்து சாப்பிடு!" (புஹாரி, முஸ்லிம்)

மேலும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: "நீங்கள் இடது கையால் சாப்பிடாதீர்கள்! ஏனென்றால், நிச்சயமாக ஷைத்தான் இடது கையால் சாப்பிடுகின்றான்." (முஸ்லிம்)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இடது கையால் சாப்பிட்டுக் கொண்டிருந்த ஒரு மனிதரைக் கண்டார்கள். "நீ உனது வலது கையால் சாப்பிடு!" என அவரைப் பார்த்து அவர்கள் கூறினார்கள். அதற்கு அம்மனிதர் "என்னால் முடியாது" எனக் கூறினார். "உனக்கு முடியாமலே போகட்டும்!" என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அம்மனிதரைப் பெருமையைத்தவிர வேறொன்றும் அவ்வாறு செய்வதை விட்டும் தடுக்கவில்லை. அவருக்கு அவரது கையை அவரது வாயை நோக்கி உயர்த்த முடியவில்லை என்று ஸலமா இப்னுல் அக்வஃ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள். (முஸ்லிம்)

இந்த ஆதாரங்கள் அனைத்தும் வலது கையால் சாப்பிடுவது கட்டாயமாகும் என்பதைத் தெரிவிக்கின்றன.

5.   தனக்கு அருகில் உள்ளவற்றிலிருந்து சாப்பிட வேண்டும்.

பலருடன் கூட்டாக சாப்பிடக்கூடியவர் தனக்கு அருகில் உள்ள பகுதியிலிருந்து சாப்பிட வேண்டும். மற்றவர்களின் பக்கத்திலிருந்து எடுத்துச் சாப்பிடுவது மோசமான ஒழுங்குமுறையைச் சாரும்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: "சிறுவனே! அல்லாஹ்வின் பெயர் கூறு! உனது வலது கையால் சாப்பிடு! உனக்கு அருகில் உள்ளவற்றிலிருந்து சாப்பிடு!" (புஹாரி, முஸ்லிம்)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸைனப் ரழியல்லாஹு அன்ஹா அவர்களைத் திருமணம் முடித்து வலீமா விருந்து ஏற்பாடு செய்தார்கள். அப்பொழுது அவர்கள் மனிதர்களைப் பார்த்து, "அல்லாஹ்வின் பெயர் கூறுங்கள்! ஒவ்வொரு மனிதரும் தனக்கு அருகில் உள்ளவற்றிலிருந்து சாப்பிடுங்கள்!" எனக் கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்)

இந்த இரு ஹதீஸ்களும் ஒவ்வொருவரும் தனக்கு அருகில் உள்ளவற்றிலிருந்தே சாப்பிட வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றன.

அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்: "நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை ஒரு தையற்காரன் தான் தயாரித்த உணவுக்காக அழைத்தார். நானும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் சென்றேன். அப்போது அவர்கள் உணவுத் தட்டின் நாலா பாக்கங்களிலும் சுரக்காயைத் தேடுவை நான் கண்டேன். அன்றிலிருந்து நான் சுரக்காயை விரும்பிச் சாப்பிட்டுக்கொண்டே இருக்கின்றேன்." (புஹாரி, முஸ்லிம்)

இந்த ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உணவுத் தட்டின் பல பாக்கங்களிலும் சுரக்காயைத் தேடியதாக இடம்பெற்றுள்ளது. இவ்வாறு பல பாக்கங்களிலிருந்தும் எடுத்துச் சாப்பிடுவதை தன்னோடு சாப்பிடும் ஏனையவர்கள் வெறுப்பதாக தெரியவில்லையென்றால் இவ்வாறு சாப்பிடலாம் என்று இந்த ஹதீஸுக்கு இமாம் புஹாரி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் விளக்கமளித்துள்ளார்கள்.

6.   சாய்ந்த நிலையில் சாப்பிடக்கூடாது.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: "நான் சாய்ந்த நிலையில் சாப்பிடமாட்டேன்." (புஹாரி)

இந்த ஹதீஸை ஆதாரமாக முன்வைத்து அறிஞர்கள் சாய்ந்த நிலையில் சாப்பிடுவதை வெறுக்கத்தக்கதாகக் கருதுகின்றனர். ஹதீஸில் குறிப்பிடப்பட்ட சாய்வை பல அறிஞர்களும் பல அமைப்புக்களாகத் தெளிவுபடுத்தியுள்ளனர். ஒரு பக்கமாக சாய்ந்து இருப்பதையே ஹதீஸில் நாடப்பட்டிருப்பதாக அஷ்ஷெய்ஹ் இப்னு உஸைமீன் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறியுள்ளார்கள். இதுவே மிக நெருக்கமான கருத்தாகும்.

7.   உணவை குறை கூறக்கூடாது.

நாம் சாப்பிடும் உணவு எமக்கு விருப்பமில்லாவிட்டால் அதை குறை கூறக்கூடாது. எனெனில், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உணவை ஒருபோதும் குறை கூறியதில்லை. அவர் விரும்பினால் அதைச் சாப்பிடுவார். அவர் வெறுத்தால் அதை விட்டுவிடுவார் என அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்துள்ளார்கள். (புஹாரி, முஸ்லிம்)

ஹரமான உணவாக இருந்தால் அதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குறை கூறியுள்ளார்கள், அதை இழிவுபடுத்திக் கூறியுள்ளார்கள், அதைத் தடுத்துள்ளார்கள் என்று இப்னு ஹஜர் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் பத்ஹுல் பாரியில் கூறியுள்ளார்கள்.

8.   உணவுத் தட்டின் நடுப்பகுதியிலிருந்து சாப்பிடக்கூடாது.

உணவுத் தட்டின் நடுப்பகுதியிலிருந்து சாப்பிடுவதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடை செய்துள்ளார்கள். நபியவர்கள் கூறுகின்றார்கள்: "நீங்கள் அதன் ஓரப்பகுதியிலிருந்து சாப்பிடுங்கள்! அதன் நடுப்பகுதியிலிருந்து சாப்பிட வேண்டாம். ஏனென்றால், அதன் நடுப்பகுதியில்தான் பரகத் இறங்குகின்றது." (நஸாஈ)

9.   உணவில் ஊதக்கூடாது.

உணவில் ஊதுவதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடுத்துள்ளார்கள். இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் அறிவிக்கின்றார்கள்: "நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உணவிலும் குடிபானத்திலும் ஊதுவதைத் தடை செய்தார்கள்." (அஹ்மத்) இந்த ஹதீஸ் அஷ்ஷெய்ஹ் முக்பில் ரஹிமஹுல்லாஹ் அவர்களின் "அஸ்ஸஹீஹுல் முஸ்னத்" என்ற நூலில் பதிவாகியுள்ளது.

ஊதுவதின் காரணமாக வாயிலிருந்தோ மூக்கிலிருந்தோ ஏதாவது விழுந்துவிடும். இன்னும், அது துர்நாற்றமடைந்து அசுத்தாமாக மாறிவிடும் என்பதுதான் தடைக்குரிய காரணமாகும் என்று இமாம் நவவி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

10.  மூன்று விரல்களால் சாப்பிடுவது விரும்பத்தக்கது.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மூன்று விரல்களால் சாப்பிடக்கூடியவர்களாக இருந்தார்கள். கஃப் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள்: "நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மூன்று விரல்களால் சாப்பிடக்கூடியவர்களாக இருந்தார்கள். அவர் தனது கையை துடைப்பதற்கு முன் அதனை சுவைத்துக் கொள்வார்கள்." (முஸ்லிம்)

மூன்று விரல்களால் சாப்பிடுவதற்கு சிரமம் காணப்படாவிடின் மூன்று விரல்களால் சாப்பிடுவதே சுன்னாவாகும். சோறு போன்ற தானியங்களாக இருந்தால் அதை மூன்று விரல்களால் சாப்பிடுவது சிரமமாகினால் அதைச் சாப்பிடுவதற்கு மூன்றுக்கும் அதிகமான விரல்களை உபயோகிப்பதில் எத்தவறும் கிடையாது. இக்கருத்தை அஷ்ஷெய்ஹ் இப்னு உஸைமீன் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் ஷர்ஹு ரியாளிஸ்ஸாலிஹீன் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்கள்.

11.  சாப்பிட்ட பின்பு விரல்களைச் சுவைக்க வேண்டும். உணவுத் தட்டை வழித்துச் சாப்பிட வேண்டும்.

ஜாபிர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்: "நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விரல்களைச் சுவைக்குமாறும் உணவுத் தட்டை வழித்துச் சாப்பிடுமாறும் ஏவினார்கள். உங்களது உணவுகளில் எதில் பரகத் உண்டு என்பது நிச்சயமாக உங்களுக்குத் தெரியாது" என்று அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

விரல்கைளச் சுவைப்பது உணவின் பரகத்தைப் பாதுகாக்கவும், விரல்களைச் சுத்தப்படுத்தவும் விரும்பத்தக்கதாக அமைந்துவிடுகின்றது. இக்கருத்தை இமாம் நவவி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் ஷர்ஹு ஸஹீஹ் முஸ்லிம் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்கள்.

12.  உணவுக் கவளம் கீழே விழுந்தால் அதை எடுத்து அதில் உள்ள அழுக்குகளை அகற்றிவிட்டுச் சாப்பிட வேண்டும்.

உணவுக் கவளம் கீழே விழுந்தால் அதை எடுத்துச் சாப்பிட வேண்டும். அது விடப்பட்டால் ஷைத்தானுக்கு உணவாக மாறவிடும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: "உங்களில் ஒருவருடைய உணவுக் கவளம் கீழே விழுந்தால் அதில் உள்ள அழுக்கை அவர் அகற்றிவிட்டு அதைச் சாப்பிடட்டும்! அதை அவர் ஷைத்தானுக்கு விட்டுவிட வேண்டாம்." (முஸ்லிம்)

இவ்வாறு கீழே விழுந்ததை எடுத்துச் சாப்பிடுவதில் அல்லாஹ்வுக்குப் பணிவாக நடந்து கொள்ளல், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கட்டளைக்கு அடிபணிதல், ஷைத்தானுடன் சாப்பிடுவதைத் தடுத்துக்கொள்ளல் ஆகிய மூன்று விடயங்கள் காணப்படுவதாக அஷ்ஷெய்ஹ் இப்னு உஸைமீன் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

உணவு ஒரு சுத்தமான பொருளில் விழுந்தாலே இவ்வாறு எடுத்துச் சாப்பிட வேண்டும். அசுத்தமான இடங்களில் விழுந்தால் முடிந்தால் அதைக் கழுவிச் சாப்பிட வேண்டும். சில காரணங்களுக்காகக் கழுவ முடியாவிட்டால் அதை ஓர் உயிரினத்திற்கு உணவாக வழங்க வேண்டும். அதை ஷைத்தானுக்கு விட்டுவிடக்கூடாது. இக்கருத்தை இமாம் நவவி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறியுள்ளார்கள்.

13.  உணவு கடும் சூடாக இருக்கும்போது அதைச் சாப்பிடக்கூடாது.

கடும் சூடான உணவை சாப்பிடுவதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடுத்துள்ளார்கள். "எந்தவோர் உணவும் அதனுடைய ஆவி நீங்கும் வரை சாப்பிடப்படக்கூடாது" என்று நபியவர்கள் கூறினார்கள். (பைஹகீ) அஷ்ஷெய்ஹ் அல்பானி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் அல்இர்வாஃ என்ற நூலில் இச்செய்தியை ஸஹீஹ் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

சூடான உணவு பரகத் காணப்படாத உணவாகும். இன்னும், இந்நிலையில் அதை உண்ணுவது சுன்னாவுக்கு முரணாகும். சூடான உணவை சாப்பிடுவதால் தனக்குத் தீங்கு ஏற்படும் என்று ஒருவர் கருதினால் அவருக்கு சூடான நிலையில் அவ்வுணவைச் சாப்பிடுவது ஹராமாகும். இக்கருத்தை இமாம் முனாவி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்.

சூடாறிய உணவுதான் மிக மகத்தான பரகத்தை உடையது என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். (அஹ்மத்) இந்த ஹதீஸ் அஷ்ஷெய்ஹ் அல்பானி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் "அஸ்ஸில்ஸிலதுஸ் ஸஹீஹா" என்ற நூலில் பதிவாகியுள்ளது.

14.  சாப்பிட்ட பின்பு இரு கைகளையும் கழுவிக்கொள்ள வேண்டும்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சாப்பிட்ட பின்பு தனது இரு கைகளையும் கழுவியுள்ளார்கள். நஸாஈ, அபூதாவூத் ஆகிய கிரந்தங்களில் இச்செய்தி ஹஸன் என்ற தரத்தைக் கொண்ட அறிவிப்பாளர் வரிசையில் பதிவாகியுள்ளது.

சாப்பிட முன் இரு கைகளையும் கழுவ வேண்டும் என்பதற்கு நாம் முன்பு குறிப்பிட்ட இரு அல்குர்ஆன் வசனங்களும் இதற்கு ஆதாரமாகப் பொருந்துகின்றன.

15.  பற்களுக்கு மத்தியில் சிக்கிய எஞ்சிய உணவை அகற்றுவது விரும்பத்தக்கதாகும்.

சாப்பிட்ட பின்பு பற்களுக்கு மத்தியில் சிக்கிய உணவை அகற்ற வேண்டும். ஏனெனில், அது பற்கள் துர்வாடை வீசுவதற்கும் பலவீனமடைவதற்கும் காரணமாக அமைகின்றது. இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் கூறுகின்றார்கள்: "பற்களுக்கு மத்தியில் உள்ள எஞ்சியிருக்கும் உணவு பற்களை பலவீனப்படுத்தும்." (முஃஜம் அத்தபராணி) இச்செய்தியை அஷ்ஷெய்ஹ் அல்பானி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் அல்இர்வாஃ என்ற நூலில் ஸஹீஹ் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

16.  சாப்பிட்ட பின்பு அல்லாஹ்வைப் புகழ வேண்டும்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: "நிச்சயமாக அல்லாஹ் உணவைச் சாப்பிட்டுவிட்டு அதற்காக வேண்டி அவனைப் புகழக்கூடிய அடியானையும் இன்னும் குடிபானத்தை குடித்துவிட்டு அதற்காக வேண்டி அவனைப் புகழக்கூடிய அடியானையும் பொருந்திக்கொள்கின்றான்." (முஸ்லிம்)

சாப்பிட்ட பின்பு ஓதுவதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சில துஆக்களைக் கற்றுத்தந்துள்ளார்கள். அவற்றில் சிலவற்றை இங்கு குறிப்பிட்டுள்ளோம்.

الحَمْدُ للهِ الذِيْ أطْعَم وَسَقَى وَسَوَّغَهُ وَجَعَل له مَخْرَجا

இந்த துஆ அபூதாவூத் என்ற கிரந்தத்தில் பதிவாகியுள்ளது. அஷ்ஷெய்ஹ் அல்பானி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் அஸ்ஸஹீஹா என்ற நூலிலும் அஷ்ஷெய்ஹ் முக்பில் ரஹிமஹுல்லாஹ் அவர்களின் அஸ்ஸஹீஹுல் முஸ்னத் என்ற நூலிலும் இச்செய்தி பதிவாகியிருக்கின்றது.

الحَمْدُ للهِ كَثِيْرًا طَيِّبًا مُبَارَكا فِيْهِ غَيْر مَكْفِي ولا مُوَدَّعٍ ولا مُسْتَغْنًى عنه رَبَّنَا

இந்த துஆ புஹாரியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

الحمد لله الذي كَفَانَا وَأرْوَانَاغَيْرَ مَكْفِيٍّ وَلا مَكْفُوْرٍ

இந்த துஆவும் புஹாரியில் பதிவாகியுள்ளது.

الحمد الله الذي يُطْعِمُ ولا يُطْعَمُ مَنَّ عَلَيْنَا فَهَدَانا وَأطْعَمَنَا وَسَقَانَا وكُلَّ بَلَاٍء حَسَنٍ أبْلَانَا الحمد لله غيرَ مُوَدَّعٍ ولا مُكَافئٍ ولا مَكْفُوْرٍ ولا مُسِتَغْنًى عنه الحمدُ للهِ الذي أطْعَمَ مِن الطَّعَام  وسَقَى مِنَ الشَّرَابِ وَكَسَا مِن العُريِ وَهدى من الضَّلالةِ وبَصَّرَ مِن العمى وفضَّل على كَثيرٍ مِن خَلقِهِ تَفْضِيلا الحمدُ للهِ ربِّ العَالمين

இந்த துஆ நஸாஈ என்ற கிரந்தத்தில் பதிவாகியுள்ளது. அஸ்ஸஹீஹுல் முஸ்னத் என்ற நூலிலும் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

والحمد لله رب العالمين