நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஓதிப்பார்த்து நோய்நிவாரணம் தேடிய அமைப்புக்கள் – 5

بسم الله الرحمن الرحيم

3. ஓதிப்பார்த்தலைக் கொண்டு சிகிச்சை செய்தல்.

 சூனியத்தை நீக்குவதில் இதற்கு மகத்தானதொரு தாக்கம் உள்ளது. அந்த அடிப்படையில் சூனியம் செய்யப்பட்டவர் மீது அல்லது, ஒரு பாத்திரத்தினுள் ஆயதுல் குர்ஷியையும் சூராக்களான அல்அஃராப், யூனுஸ், தாஹா ஆகியவற்றில் இடம்பெறக்கூடிய சூனியத்தோடு தொடர்புடைய ஆயத்களையும் அதனுடன் சேர்த்து சூராக்களான அல்காபிரூன், அல்இஹ்லாஸ், அல்பலக், அந்நாஸ் ஆகியவற்றை ஓதி, அவருக்கான நோய்நிவாரணம் மற்றும் ஆரோக்கியத்தை வேண்டிப் பிரார்த்தனை செய்ய முடியும். அதிலும் குறிப்பாக, நாம் ஏற்கெனவே குறிப்பிட்ட நபியவர்களைத் தொட்டும் உறுதி செய்யப்பட்ட துஆக்களை ஓதிக் கொள்ளலாம். மேலும், அவற்றை ஓதும்போது முன்மூன்று விடுத்தங்கள் என தொடர்ந்தேர்ச்சியாக ஓத வேண்டும். இன்னும், சூரதுல் இஹ்லாஸ், இரு பாதுகாவல் சூராக்கள் போன்றவற்றையும் மும்மூன்று விடுத்தங்கள் ஓதிக் கொள்ளமுடியும்.

மேலும், இவ்வகை சிகிச்சையில் நின்றும் உள்ளதுதான் மேற்கூறப்பட்ட துஆக்களை ஓதும் போது அவற்றை தண்ணீரில் ஓதுவதும் பின்பு அதனில் இருந்து சூனியம் செய்யப்பட்டவருக்குக் குடிக்கக் கொடுப்பதுமாகும். மற்றும், குடித்து எஞ்சிய நீரைக் கொண்டு ஒருவிடுத்தம் அல்லது அதற்கு அதிகமான விடுத்தங்கள் தேவைக்கேற்றாற் போல் குளித்துக் கொள்ளலாம். நிச்சயமாக அச்சூனியம் அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு நீங்கிவிடும்.

4. பச்சை நிறமான இலந்தை இலைகள் ஏழை எடுத்து, நன்றாக இடித்து, அதனை நீரில் இட்டு முன்பு கூறப்பட்ட ஆயத்துக்கள், சூராக்கள் மற்றும் துஆக்கள் ஆகியவற்றை அதனில் ஓதி சூனியம் செய்யப்பட்டவருக்குக் குடிக்கக் கொடுப்பதோடு குளிக்க வைக்கவும் செய்தால் நன்கு பிரயோசனம் அளிக்கும். அதேபோன்று, தன் மனைவியை விட்டும் தடுக்கப்பட்ட நபருக்குச் செய்யும் சிகிச்சையில் இச்செயன்முறை மேற்கொள்ளப்பட்டால் நன்கு பயனளிக்கும்.

மேலும், சூனியம் செய்யப்பட்டவர்களுக்கும் தன்னுடைய மனைவியைவிட்டும் தடுக்கப்பட்டு அவளோடு உறவு கொள்ளாமல் இருப்பவருக்கும் சிகிச்சை அளிக்கும் சந்தர்ப்பத்தில் பச்சை நிற இலந்தை இலைகள் மற்றும் நீர் ஆகியவற்றில் ஓதப்படுபவையாவன:

1.   சூரதுல் பாதிஹா

2.   ஆயதுல் குர்ஷி

3.   சூரதுல் அஃராபின் 106 ஆவது வசனம் முதல் 122 வரையான வசனங்கள்

4.   சூரா யூனுஸின் 79 ஆவது வசனம் முதல் 82 வரையான வசனங்கள்

5.   சூரா தாஹாவின் 65 ஆவது வசனம் முதல் 69 வரையான வசனங்கள்

6.   சூரதுல் காபிரூன்

7.   சூரதுல் இஹ்லாஸ், சூரதுல் பலக், சூரதுந் நாஸ் (மூன்று விடுத்தங்கள்)

8.   ஏனைய நாம் முன்பு குறிப்பிட்ட துஆக்களை மும்மூன்று விடுத்தங்கள்

நேரடியாக சூனியம் செய்யப்பட்டவரின் மீது மேற்கூறப்பட்டதை ஓதி அவரின் தலையில் அல்லது நெஞ்சின் மீது ஊதுவது ஏற்கெனவே கூறப்பட்ட பிரகாரம் அல்லாஹ்வின் அனுமதியுடன் அவருக்கு நிவாரணம் கிடைக்கக் காரணங்களில் ஒன்றாக ஆகிவிடும்.

அஷ்ஷெய்க் இப்னு பாஸ் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்: "எவ்வித ஆபத்தையும் ஏற்படுத்தாத மூலிகைகள், மாத்திரைகள், ஊசி மருந்துகள் போன்ற வேறு வகையான மருந்துகள் பெறப்படுமாயின் அவை அல்லாஹ் ஹராமாக்கியவற்றைவிட்டும் நீங்கி ஈடேற்றம் பெற்றிருந்தால் அவற்றை உபயோகிப்பது தவறன்று." (நூருன் அலத் தர்ப் பத்வாத் தொகுப்பு)

அப்படியான பிரயோசனம் மிக்க மருந்து வகைகளில் உள்ளடங்குபவையாக:

1.   கருஞ்சீரகம்: நபியவர்கள் கூறினார்கள்: "மரணத்தைத் தவிர எல்லா நோய்களுக்கும் நிவாரணம் கருஞ்சீரகத்தில் உள்ளது." மற்றோர் அறிவிப்பில்: "மரணத்தைத் தவிர எந்த ஒரு நோயாக இருந்தாலும் அதற்கு கருஞ்சீரகத்தில் மருந்து இல்லாமலில்லை." (புகாரி: 5688, முஸ்லிம்: 2210 இச்செய்தி அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் பதிவாகியுள்ளது.)

2.   தேன்: அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: "அதில் மனிதர்களுக்கு (பிணி தீர்க்க வல்ல) சிகிச்சை உண்டு." (அந்நஹ்ல்: 68)

3.   ஹிஜாமா - இரத்தம் குத்தி எடுத்தல்

4.   தீயால் சுடுதல்: நபியவர்கள் கூறினார்கள்: "மூன்றில் நிவாரணம் உள்ளது: தேன் குடித்தல், இரத்தம் குத்தி எடுத்தல், தீயால் சுடுதல்" (புகாரி: 5680ல் இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்களைத் தொட்டும் பதிவாகியுள்ளது."

5. ஸம்ஸம் நீர்: நபியவர்கள் கூறினார்கள்: "ஸம்ஸம் நீர் எதற்காகக் குடிக்கப்படுமோ அதற்காக அது இருக்கும்." (இச்செய்தி "அஹ்மத்" எனும் கிரந்தத்தில் ஜாபிர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் பதிவாகியுள்ளது. மேலும், "அஸ்ஸஹீஹா" (883) எனும் தொகுப்பிலும் "அல்இர்வா" (1123) எனும் நூலிலும் இச்செய்தி பதிவாகியுள்ளது.)

இமாம் இப்னுல் கையிம் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் "ஸாதுல் மஆத்" (4/356) எனும் நூலில் பின்வருமாறு கூறுகின்றார்கள்: "ஆச்சரியமான விடயங்களை ஸம்ஸம் நீரைக் கொண்டு நோய்நிவாரணம் தேடுவதில் இருந்து நானும் நானல்லாதவர்களும் அனுபவ ரீதியாக அடைந்து கொண்டோம். பல நோய்களில் இருந்து நான் நிவாரணம் பெற்றேன். அல்லாஹ்வுடைய அனுமதியைக் கொண்டு நான் நோயில் இருந்து விடுபட்டேன்."

6. ஸைதூன் எண்ணை: நபிவர்கள் கூறினார்கள்: "ஸைதூன் எண்ணையைப் பருகுங்கள்! அதனைப் பூசிக் கொள்ளுங்கள்! நிச்சயமாக அது பரகத் பொருந்திய ஒரு மரத்தில் நின்றும் உள்ளதாகும்." (இச்செய்தி ஸஹாபாக்களில் ஒரு கூட்டத்தைக் கொண்டு அறிவிக்கப்பட்டுள்ளது. "அஸ்ஸஹீஹா" (379) எனும் கிரந்தத்திலும் இதனைக் காணலாம்.)

அஷ்ஷெய்க் இப்னு பாஸ் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தனது "மஜ்மூஉல் பதாவா" (9/409) எனும் தொகுப்பில் பின்வருமாறு கூறியுள்ளார்கள்: "பைத்தியக்காரன், சூனியம் செய்யப்பட்டவர், நோயாளி ஆகியோருக்கான சிகிச்சையின் போது ஸைத்தூன் எண்ணை மற்றும் நீரில் ஓதுவதி எடுப்பதில் குற்றம் கிடையாது. என்றாலும், நோயாளியின் மீது ஊதுவது கொண்டு ஓதிப்பார்ப்பது மிக ஏற்றமானதும் சிறந்ததும் பூர்த்திமிக்கதுமாகும்." மேலும் (1/52) கூறும்போது: "அதேபோன்று தண்ணீரில் ஓதிப்பார்ப்பதும் குற்றமன்று. அதாவது, தண்ணீரில் ஓதி அதனை நோயாளிக்குக் குடிக்கக் கொடுப்பது அல்லது அவர் மீது ஊற்றிவிடுவதாகும்."

7. மதீனாவைச் சேர்ந்த ஏழு ஈச்சம் பழங்களை காலை உணவாக எடுத்தல்: நபியவர்கள் கூறினார்கள்: "யார் அஜ்வா இனத்தைச் சேர்ந்த ஏழு ஈச்சம் பழங்களை ஒவ்வொரு நாளும் காலையில் உணவாக எடுக்கிறாரோ அன்றைய தினத்தில் எவ்வித விஷமோ சூனியமோ அவரைத் தாக்காது." (இச்செய்தி புகாரி: 5445, முஸ்லிம்: 2047 ஆகிய கிரந்தங்களில் ஸஃத் இப்னு அபீவக்காஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் பதிவாகியுள்ளது.)

பிரிதோர் அறிவிப்பில்: "யார் மதீனாவின் எல்லைப் பிரதேசத்திற்குற்பட்ட பகுதியில் இருந்து ஏழு ஈச்சம் பழங்களை காலை உணவாக எடுத்துக் கொள்கிறாரோ மாலைப் பொழுதை அடையும் வரை அவருக்கு எந்தவித விஷமும் தீங்களிக்காது." (முஸ்லிம்) மேலும் நபியவர்கள் கூறினார்கள்: "நிச்சயமாக அதிகாலையில் உட்கொள்ளும் உயர்ரக அஜ்வா ஈச்சம் பழத்தில் நோய் நிவாரணி அல்லது நச்சுத்தன்மையை அகற்றும் சக்தி உள்ளது." (இச்செய்தி ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்களைத் தொட்டும் முஸ்லிம்: 2048 எனும் கிரந்தத்தில் பதிவாகியுள்ளது.)

இச்செய்திகள் தொடர்பாக இமாம் நவவி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்கள்: "இந்த ஹதீஸ்களில் மதீனத்து ஈச்சம்பழத்தினதும் அதனில் விளையும் அஜ்வா இனத்து ஈச்சம்பழத்தினதும் சிறப்பு கூறப்பட்டுள்ளது. மேலும் அவ்வீச்சம் பழங்களில் ஏழை காலை உணவாக எடுத்து கொள்வதின் சிறப்பும் எனைய ஈச்சம் பழங்களை விடுத்து மதீனத்து அஜ்வா ஈச்சம் பழங்களை மாத்திரம் எடுத்துக் கொள்வதின் அவசியம் பற்றியும் கூறப்பட்டுள்ளது. மார்க்கம் பல விடயங்களில் ஏழு என்ற எண்ணை இனங்காட்டி இருப்பதின் எதார்த்தத்தை நாங்கள் அறியமாட்டோம். எனவே, அதனை ஈமான் கொள்வதும் அதனுடைய சிறப்பு, அதனில் உள்ள எதார்த்தம் ஆகியவற்றை நம்பிக்கை கொள்வதும் வாஜிப் ஆகும். இதுவிடயம் தொழுகைகளின் எண்ணிக்கைகளைப் போன்றதும் ஸகாத் விதியாகக்கூடிய அளவுகளைப் போன்றதுமான ஒன்றாகும். எனவே, இதுவே இந்த ஹதீஸ் விடயத்தில் சரியான நிலைப்பாடாகும்."

கவளை, துயரம், பெருந்துயரம் ஆகியவற்றிக்கான பரிகாரம்

1.   பெரும் துயரம் ஏற்படும் போது நபியவர்கள் பின்வருமாறு துஆச் செய்யக்கூடியவர்களாக இருந்தார்கள்:

لا إله إلا الله العَظِيمُ الحَلِيمُ، لا إله إلا الله رَبُّ العَرْشِ العَظِيْمِ، لا إله إلا الله رَبُّ السَمَواتِ وربُّ الأرْضِ، وَرب العَرْشِ الكَرِيْمِ.

பொருள்: சகிப்புத் தன்மையும் மகத்துவமும் மிக்க அல்லாஹ்வைத் தவிர வணங்கப்படுவதற்குத் தகுதியானவன் வேறு யாரும் இல்லை. மகத்துவம் மிக்க அர்ஷின் இரட்சகனான அல்லாஹ்வைத்தவிர வணங்கப்படுவதற்குத் தகுதியானவன் வேறு யாரும் இல்லை. வானங்கள் மற்றும் பூமியின் இரட்சகனும் கண்ணியத்திற்குரிய அர்ஷின் இரட்சகனுமான அல்லாஹ்வைத் தவிர வணங்கப்படுவதற்குத் தகுதியானவன் வேறு யாரும் இல்லை.

இச்செய்தி இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்களைத் தொட்டும் புகாரி (6346), முஸ்லிம் (2730) ஆகிய கிரந்தங்களில் பதிவாகியுள்ளது.

2. அஸ்மா பின்து உமைஸ் ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறினார்கள்: "அல்லாஹ்வின் தூதர் அவர்கள் என்னை நோக்கிப்  பின்வருமாறு கூறினார்கள்: பெரும் துயரத்தின் போது நீ கூறுவதற்கென்று சில வார்த்தைகளை நான் உனக்குக் கற்றுத்தரட்டுமா? என வினவிவிட்டு இந்த துஆவைக் கற்றுத் தந்தார்கள்.

اللهُ اللهُ، رَبِّيْ، لا أُشْرِكُ بِهِ شَيْئًا

இச்செய்தி அபூதாவுத் (1525) எனும் கிரந்தத்தில் அஸ்மா பின்து உமைஸ் ரழியல்லாஹு அன்ஹா அவர்களைத் தொட்டும், இப்னு ஹிப்பான் (764) எனும் கிரந்தத்தில் ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்களைத் தொட்டும் பதிவாகியுள்ளது. அத்தோடு தபராணி (12/12788), அஸ்ஸஹீஹா (2755) ஆகிய கிரந்தங்களிலும், ஸவ்பான் ரழியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டு இமாம் நஸாயி அவர்களுடைய அமலுல் யவ்மி வல்லைலா (657) எனும் நூலிலும், அஸ்ஸஹீஹா (2070) எனும் தொகுப்பிலும் பதிவாகியுள்ளது.

3. நபியவர்கள் கூறினார்கள்: "துன்நூன் என்று அழைக்கப்படும் யூனுஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மீனின் வயிற்றில் இருக்கும் போது செய்ய பிரார்த்தனையான:

لا إلهَ إلا أنْتَ، سُبْحَانَكَ، إنِّيْ كُنْتُ مِنَ الظَّالِمِيْنَ

பொருள்: உன்னைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் (வேறு ஒருவனும்) இல்லை, நீ மிகப் பரிசுத்தமானவன், நிச்சயமாக நான் அநியாயக்காரர்களில் (ஒருவனாக) ஆகிவிட்டேன்.

என்ற வார்த்தையை எந்த ஒரு விடயத்தில் ஒரு முஸ்லிம் கூறுகிறானோ அவனுக்கு அல்லாஹ் ஒருபோதும் பதிலளிக்காமல் இருப்பதில்லை.

இச்செய்தி ஸஃத் இப்னு அபீவக்காஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் அஹ்மத் (1/170), பஸ்ஸார் (3/363), திர்மிதி (3505) ஆகிய கிரந்தங்களில் பதிவாகியுள்ளது. மேலும் அஸ்ஸஹீஹுல் முஸ்னதில் (379) "ஸஹீஹ் லிகைரிஹீ" என்ற தரத்திலும் ஸஹீஹுத் திர்மிதி (2785) இலும் பதிவாகியுள்ளது.

4. நபியவர்கள் கூறினார்கள்: "துக்கம், துயரம் ஆகியன ஓர் அடியானுக்கு உண்டாகும் போது அவன் பின்வரும் வார்த்தைகளைக் கூறுவான் என்றால்...

اللهُمَّ إنِّيْ عَبْدُكَ، وابْنُ عَبْدِكَ، وَابن أمَتِكَ، نَاصِيَتِيْ بِيَدِكَ، مَاضٍ فِيَّ حُكْمُكَ، عَدَلٌ فِيَّ قَضَاؤُكَ، أسْأَلُكَ بِكُلِّ اسْمٍ هُوَ لَكَ: سَمَّيْتَ بِهِ نَفْسَكَ، أوْ أنْزَلْتَهُ فِيْ كِتَابِكَ، أوْ عَلَّمْتَهُ أحَدًا مِنْ خَلْقِكَ، أو اسْتَأْثَرْتَ بِهِ فِيْ عِلْمِ الغَيْبِ عِنْدَكَ، أنْ تَجْعَلَ القُرْآنَ رَبِيْعَ قَلْبِيْ، وَنُوْرَ صَدْرِيْ، وَجَلَاءَ حُزْنِيْ، وَذَهَابَ هَمِّيْ.

அல்லாஹ் அவனுடைய கவலையைப் போக்கி அக்கவலையின் இடத்திற்கு ஒரு சந்தோசத்தை ஏற்படுத்துவான்.

அப்போது தோழர்கள்: அல்லாஹ்வின் தூதரே! இவ்வார்த்தைகளை நாங்கள் கற்றுக் கொள்வது அவசியமல்லாவா? எனக் கேட்க, உண்மைதான் எவர்களெல்லாம் இவற்றைச் செவியேற்கிறார்களோ அவர்கள் மீது இவற்றைக் கற்றுக் கொள்வது அவசியமாகும்” என்றார்கள்.

இச்செய்தி இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் அஹ்மத் (4091) எனும் கிரந்தத்தில் பதிவாகியுள்ளது. மேலும் அஸ்ஸஹீஹா (199) இலும் ஸஹீஹ் எனும் தரத்தில் இதனைக் காணலாம்.

பொருள்: அல்லாஹ்வே! நிச்சயமாக நான் உன்னுடைய அடியானும் உன்னுடைய அடியானின் மகனும் உன்னுடைய அடிமைப்பெண்ணின் மகனும் ஆவேன். என்னுடைய முன்னெற்றி உரோமம் உன்னுடைய கரத்தில் உள்ளது. என்விடயத்தில் உன்னுடைய சட்டம் கடந்து செல்லக்கூடியது. என்விடயத்தில் உன்னுடை தீர்ப்பு நீதமானது. உனக்கிருக்கின்ற அனைத்துப் பெயர்களைக் கொண்டு உன்னிடத்தில் கேட்கின்றேன். அவை உனக்கு நீயே வைத்துக் கொண்ட பெயர்களாகவோ அல்லது உன்னுடைய வேதத்தில் நீ இறக்கி வைத்த பெயர்களாகவோ அல்லது உன்னுடைய படைப்பில் ஒருவருக்குக் கற்றுக் கொடுத்த பெயர்களாகவோ அல்லது உன்னிடத்தில் மறைவான அறிவாக நீ மறைத்து வைத்த பெயர்களாகவோ இருக்கலாம். நீ அல்குர்ஆனை என்னுடைய உள்ளத்திற்கு வசந்தமாகவும் என்னுடை நெஞ்சிக்கு ஒளியாகவும் என்னுடைய கவலையை அகற்றுவதாகவும் என்னுடை துயரத்தைப் போக்குவதாகவும் ஆக்குவாயாக!

5. நபியவர்கள் பின்வரக்கூடிய துஆவையும் துக்கம் துயரங்களின் போது ஓதியுள்ளார்கள்.

اللهُمَّ إنِّيْ أعُوْذُ بِكَ مِنَ الهَمِّ وَالحَزَنِ، وَالعَجْزِ والكَسَلِ، وَالبُخْلِ وَالجُبْنِ، وَضَلَعِ الدَّيْنِ، وَغَلَبَةِ الرِّجَالِ

இச்செய்தி அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் புகாரி (6369), முஸ்லிம் (2706) ஆகிய கிரந்தங்களில் பதிவாகியுள்ளது.

பொருள்: அல்லாஹ்வே! நிச்சயமாக நான் துக்கம் துயரத்திலிருந்தும், இயலாமை சோம்பேறித்தனத்திலிருந்தும், உலோபித்தனம் கோலைத்தனத்திலிருந்தும், கடன் பழுவில் இருந்தும், மனிதர்களின் மிகைப்பிலிருந்தும் உன்னைக் கொண்டு பாதுகாவல் தேடுகிறேன்.

அஷ்ஷெய்க் இப்னு உஸைமீன் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்: "உளநோய்களில் மருந்து மாத்திரைகளைக் கொண்டு சிகிச்சை செய்யப்பட்டு வைத்தியர்கள் பயன் பெறாத அதிக சந்தர்ப்பங்கள் உள்ளன. என்றாலும், ஓதிப்பார்த்தலைக் கொண்டு அவற்றினுடைய சிகிச்சையானது நிவாரணம் தரக்கூடியதாகவும் பிரயோசனம் அளிக்கக்கூடியதாகவும் இருக்கும். புத்தி மழுங்குதலுடன் தொடர்புபட்ட நோய்களுக்கும் அவ்வாறே செய்யப்பட வேண்டும். அதில் மார்க்க ரீதியான மருந்துகள் பயனளிக்கக்கூடியனவாக உள்ளன. சில சமயம் அவ்வாறான நோய்களில் மருந்து மாத்திரைகள் பிரயோசனம் அளிக்காத சந்தர்ப்பங்களும் உள்ளன." (இர்ஷாதாதுன் லித் தபீபில் முஸ்லிம் - பக்கம்: 4)

-    இன்ஷா அல்லாஹ் தொடரும்