நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஓதிப்பார்த்து நோய்நிவாரணம் தேடிய அமைப்புக்கள் – 03

بسم الله الرحمن الرحيم

நபியவர்கள் ஸஹாபாக்களுக்கு ஓதிப்பார்த்த விதங்கள்

1.   நபியவர்கள் தன்னுடைய உறவினர்களில் சிலர் நோய்வாய்ப்பட்டால் தனது வலக்கரத்தால் தடவிவிடுபவர்களாகவும்

اللهُمَّ رَبَّ النَّاسِ ، اَذْهِبِ البَأْسَ ، اشْفِهِ وَأَنْتَ الشَّافِيْ ، لا شِفَاءَ إلا شِفَاؤُكَ ، شِفَاءً لا يُغَادِرُ سَقَمًا

என்று கூறிப் பாதுகாப்புத் தேடக்கூடியவர்களாகவும் இருந்தார்கள் என ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கின்றார்கள். (புகாரி, முஸ்லிம்)

பொருள்: அல்லாஹ்வே! மனிதர்களின் இரட்சகனே! நோயின் சிரமத்தைப் போக்குவாயாக! இவரைக் குணப்படுத்துவாயாக! நீயே குணப்படுத்துபவனாக உள்ளாய், உன்னுடைய குணப்படுத்துதலைத்தவிர நோயை முழுமையாக அகற்றும் வேறு ஒரு குணப்படுத்துதல் கிடையாது.

2. ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறுகிறார்கள்: "நபியவர்கள் ஓதிப்பார்க்கக்கூடியவர்களாக இருந்தார்கள். (அவ்வாறு ஓதிப்பார்க்கும் போது:)

امْسَحِ البَأسَ رَبَّ النَّاسِ، بِيَدِكَ الشِّفَاءُ، لا كَاشِفَ لهُ إلا أنْتَ

என்று கூறுவார்கள்." (புகாரி)

பொருள்: மனிதர்களின் இரட்சகனே! நோயின் சிரமத்தைப் போக்குவாயாக! உன்னுடைய கரத்தில் நிவாரணம் உள்ளது. உன்னைத் தவிர அதனை அகற்றக்கூடியவன் வேறு யாரும் இல்லை.

3. ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறுகிறார்கள்;: "நபியவர்கள் ஒரு நோயாளியைத் தர்சிக்கச் சென்றால் அல்லது அவர்களிடத்தில் கொண்டு வரப்பட்டால்

أذْهَب البَأسَ رَبَّ النَّاسِ، اشْفِهِ أنْتَ الشَّافِيْ، لا شِفَاءَ إلا شِفَاؤُكَ، شِفَاءً لا يُغَادِرُ سَقَمًا

என்று கூறுவார்கள்.” (புகாரி, முஸ்லிம்)

4. முஹம்மத் இப்னு ஹாதிப் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்: "என்தாயிற்கு ஒரு பானையை எடுத்து வைக்க உதவிசெய்தேன். அப்போது என்னுடைய கை சூட்டின் காரணமாக எரிந்தது. எனவே, நபியவர்களிடம் எனது தாய் என்னைக் கூட்டிக் கொண்டு சென்றாள். நபியவர்கள் கூறியது என்ன என்று எனக்குத் தெரியவில்லை. அப்போது நான் சிறியவனாக இருந்தேன். எனவே, அது குறித்து என் தாயிடத்தில் வினவினேன். அதற்கு அவள்:

اذهب البأس رب الناس، واشف أنت الشافي ،لا شفاء إلا شفاؤك

என்று கூறக்கூடியவர்களாக இருந்தார்கள் என பதிலளித்தாள். (அஹ்மத்)

5. ஒரு நாள் தினம் ஸாபித் அல்புனானி என்பவர் நோயின் காரணத்தால் சிரமத்திற்கு உள்ளானார். எனவே, அவர் அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடத்தில் பிரவேசித்து, அபூஹம்ஸாவே! நான் நோயால் அவதியுறுகிறேன் என்று கூறினார். அதற்கு அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் நபியவர்களின் ஓதிப்பார்த்தலைக் கொண்டு நானும் உனக்கு ஓதிப்பார்க்கட்டுமா? என வினவினார்கள். அப்போது அவர் ஆம் என்று கூற...

اللهم رب الناس، مذهب البأس، اشف أنت الشافي، لا شافي إلا أنت، شفاء لا يغادر سقما

என்று கூறினார்கள். (புகாரி)

குறிப்பு: மேற்கூறப்பட்ட துஆக்கள் அனைத்தும் ஒரே அமைப்பில் இடம்பெற்றுள்ளமையால் ஆரம்ப விடுத்தம் மாத்திரம் அதன் பொருளைக் குறிப்பிட்டிருந்தோம். எனவே, குறித்த துஆவின் பொருளையும் உயிர்க்குறியீடுகளையும் பார்க்க நாடுபவர்கள் நாம் ஆரம்பமாக இந்த துஆவைக் குறிப்பிட்ட பதிவைப் பார்க்கவும்.

6. நபியவர்களிடத்தில் ஒருவர் தனக்குள்ள ஏதாவது ஒரு நோய் குறித்து முறையிட்டால் அல்லது ஒருவரிடத்தில் உள்ள கொப்புளம் அல்லது காயம் குறித்து முறையிட்டால் நபியவர்கள் இவ்வாறு தனது விரலைப் பயன்படுத்திக் கூறுவார்கள் - அதன் போது ஸுபியான் தனது சுட்டுவிரலை பூமியில் வைத்தார் - பிறகு நபியவர்கள் அதனை உயர்த்தி

بِسْمِ الله ، تُرْبَةُ أرْضِنَا ، بِرِيْقَةِ بَعْضِنَا ، يُشْفَى سَقِيْمُنَا ، بِإِذْنِ رَبِّنَا

என்று கூறுவார்கள். (புகாரி, முஸ்லிம்)

பொருள்: அல்லாஹ்வின் பெயரைக் கொண்டு, எங்களுடைய பூமியன் மண், எங்களின் சிலருடைய எச்சிலைக் கொண்டு, எங்களில் உள்ள நோயாளிக்கு எங்களின் இரட்சகனின் அனுமதியுடன் நிவாரணம் அளிக்கப்படும்.

இச்செய்தியின் கருத்தாவது, நபியவர்கள் தன்னுடைய எச்சிலைத் தனது சுட்டுவிரலில் எடுத்து அதனை மண்ணின் மீது வைப்பார்கள். அப்போது அதனுடன் மண்ணின் சில பகுதிகள் ஒட்டிக் கொள்ளும். பிறகு அதனைக் காயமுற்ற இடத்தில் வைத்து தடவிவிடுவார்கள். அவ்வாறு தடவிவிடும் போது இவ்வார்த்தைகளை மொழிவார்கள். (இமாம் நவவி)

மேலும் இமாம் குர்துபி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்: "எல்லா வகையான வலிகளுக்கும் ஓதிப்பார்க்க முடியும் என்பதற்கு இதனில் ஆதாரம் உள்ளது என்பதைப் புரிந்து கொள்ளலாம். மேலும், நிச்சயமாக இது விடயம் அவர்களுக்கு மத்தியில் அறிமுகமானதாகவும் பரவலான அம்சமாகவும் காணப்பட்டதைப் புரிந்து கொள்ளலாம்." (பத்ஹ்)

7. நபியவர்கள் ஒரு நோயாளியைப் பார்க்கச் சென்றால் அவருடைய தலைக்கு அருகாமையில் உட்காருவார்கள். பிறகு பின்வருமாறு ஏழு விடுத்தங்கள் கூறுவார்கள்.

أسْأَلُ اللهَ العَظِيْمَ ، رَبَّ العَرْشِ العَظِيْمِ ، أنْ يَشْفِيَكَ

இச்செய்தி இமாம் புகாரி ரஹிமஹுல்லாஹ் அவர்களுடைய அல்அதபுல் முப்ரத் (பக்கம்: 189) எனும் நூலில் இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்களைத் தொட்டும், அஸ்ஸஹீஹுல் முஸ்னத் (641) எனும் கிரந்தத்தில் ஹஸன் எனும் தரத்திலும், ஸஹீஹ் அல்அதபுல் முப்ரத் (416) எனும் நூலிலும் பதிவாகியுள்ளது.

பொருள்: உனக்கு நோய்நிவாரணம் அளிப்பதை மகத்துவம் மிக்க அர்ஷின் இரட்சகனும் மகத்துவமிக்க அல்லாஹ்வுமான அவனிடத்தில் கேட்கிறேன்.

8. ஸஃத் இப்னு அபீவக்காஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் மக்காவில் வைத்து கடுமையான நோயிற்கு உள்ளானார்கள். அப்போது நபியவர்கள் அவரைப் பார்ப்பதற்காகச் சென்றிருந்தார்கள். அதன் போது நபியவர்கள் தனது கரத்தை அவருடைய நெற்றியில் வைத்து அவருடைய முகத்தையும் வயிற்றையும் தடவிவிட்டார்கள். பிறகு,

اللهُمَّ اشْفِ سَعْدًا

என்று கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

பொருள்: அல்லாஹ்வே! ஸஃதைக் குணப்படுத்துவாயாக!

9. நபியவர்களின் வழிமுறையில் நின்றும் உள்ளது தான் அவர்கள் ஒரு நோயாளியை நோய்விசாரிக்கச் சென்றால் அவரைப் பார்த்து,

لا بَأسَ ، طَهُوْرٌ إنْ شَاءَ اللهُ

என்று கூறுவார்கள்.

இச்செய்தி புகாரி எனும் கிரந்தத்தில் இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்களைத் தொட்டும் பதிவாகியுள்ளது.

இந்த ஹதீஸின் விளக்கமாவது: நிச்சயமாக நோயாளியைப் பொருத்தளவில் அவருடைய பாவங்களுக்கு அவரின் நோய் பரிகாரமாக அமைந்துவிடுகின்றது. எனவே, அவருக்கு ஆரோக்கியம் கிடைத்தால் இரு விதமான நலவுகள் கைகூடிவிடுகின்றன. அவ்வாறில்லாவிடின் பாவங்களுக்குப் பரிகாரமாகும் நலவு மாத்திரம் கிடைக்கக்கூடியதாக இருக்கும். (பத்ஹ்)

பொருள்: உன் மீது சிரமமும் தீங்கும் அன்று, அல்லாஹ் நாடினால் அது உன்னைப் பாவங்களில் இருந்து சுத்தப்படுத்தக்கூடியதாக இருக்கும்.

10. உஸ்மான் இப்னு அபில்ஆஸ் அஸ்ஸகபி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அல்லாஹ்வின் தூதரிடத்தில் தான் இஸ்லாத்தை ஏற்ற நாள் முதல் தனது உடலில் ஏதோ ஒரு வலியை உணர்வதாக முறையிட்டார்கள். அதற்கு நபியவர்கள் அவரை நோக்கி: "உன்னுடைய கையை உன் உடம்பில் நீர் வலியை உணரக்கூடிய இடத்தில் வைப்பீராக! பின்பு باسْمِ اللهِ என்று மூன்று விடுத்தங்களும்

أعُوْذُ بِاللهِ وَقُدْرَتِهِ مِنْ شَرِّ مَا أجِدُ وَأُحَاذِرُ

என்று 7 விடுத்தங்களும் கூறுமாறு பணித்தார்கள்." (முஸ்லிம்)

பொருள்: அல்லாஹ் மற்றும் அவனது ஆற்றல் ஆகியவற்றைக் கொண்டு நான் அடையக்கூடிய இன்னும் ஆபத்தாக எதிர்கொள்ளக்கூடியவற்றின் தீங்கில் இருந்தும் பாதுகாவல் தேடுகின்றேன்.

குறிப்பு: மேற்கூறப்பட்ட துஆக்களில் சிலவற்றை காயங்கள் மற்றும் வலிகளுக்கான நிவாரணங்களாகக் குறிப்பிடாலம்.

ஓதிப்பார்த்தல் கொண்டு கண்ணூறுக்கு சிகிச்சை செய்தல்

1.   ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறினார்கள்: "கண்ணூறுக்காக ஓதிப்பார்க்குமாறு எனக்கு ஏவக்கூடியவர்களாக அல்லாஹ்வின் தூதர் அவர்கள் இருந்தார்கள்." (புகாரி, முஸ்லிம்)

2.   நபிவர்கள் அஸ்மா பின்து உமைஸ் ரழியல்லாஹு அன்ஹா அவர்களுக்குக் கூறினார்கள்: "என்னுடைய சகோதரர் - ஜஃபர் - இன் பிள்ளைகளின் உடம்புகள் மெலிந்திருப்பதைக் காண்கிறேன்! அவர்களை வறுமை பீடித்துவிட்டதா?" என வினவினார்கள். அதற்கு அஸ்மா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள்: "இல்லை. ஆனாலும், கண்ணூறு அவர்களை விரைந்து பீடித்துவிட்டது" என்றார்கள். அதற்கு நபியவர்கள்: "நீர் அவர்களுக்காக ஓதிப்பார்ப்பீராக!" எனப் பணித்தார்கள். (முஸ்லிம்)

3. நபியவர்கள் உம்;மு ஸலமா ரழியல்லாஹு அன்ஹா அவர்களின் வீட்டில் முகத்தின் நிறம் மாற்றமடைந்த ஒரு பெண்ணைக் கண்டார்கள். அப்போது நபியவர்கள்: "அவளுக்காக ஓதிப்பாருங்கள்! நிச்சயமாக அவளை கண்ணூறு பீடித்துள்ளது" என்றார்கள். (புகாரி, முஸ்லிம்)

4. நபியவர்கள் கூறினார்கள்: "இணைவைப்பு கலக்காத பட்சத்தில் ஓதிப்பார்ப்பதில் குற்றம் கிடையாது." (முஸ்லிம்)

அல்ஹாபிழ் இப்னு ஹஜர் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் "பத்ஹுல் பாரி" எனும் நூலில் கூறும்போது: "மூன்று நிபந்தனைகள் ஒன்றிணையும் சந்தர்ப்பத்தில் ஓதிப்பார்ப்பது கூடும் என்ற விடயத்தில் உலமாக்கள் ஒருமித்த கருத்தைக் கொண்டிருக்கிறார்கள். அவை:

1.   ஓதிப்பார்த்தலானது அல்லாஹ்வுடைய வார்த்தைகளைக் கொண்டு அல்லது அவனுடைய திருநாமங்கள் மற்றும் பண்புகளைக் கொண்டதாக இருக்க வேண்டும்.

2.   ஓதிப்பார்த்தலானது அரபு மொழியில் அல்லது மற்றவர்களால் கருத்தைப் புரிந்து கொள்ள முடியுமான ஒரு மொழியைத் தழுவியதாக இருக்க வேண்டும்.

3.   நிச்சயமாக ஓதிப்பார்த்தலுக்குத் தன்னளவில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த முடியாது என்றும் அல்லாஹ்வைக் கொண்டு மத்திரமே அது தாக்கத்திற்குள்ளாகின்றது என்றும் நம்ப வேண்டும்" என்கிறார்கள்.

5. மேலும், இது விடயத்தில் மற்றொரு செய்தியாக நாம் முன்பு குறிப்பிட்ட ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் நபியவர்களுக்கு ஓதிப்பார்த்த கண்ணூறு துஆவைக் குறிப்பிடலாம்.

6. நபியவர்கள் ஹஸன், ஹுஸைன் ஆகிய இருவருக்குமாக பாதுகாப்புத் தேடக்கூடியவர்களாக இருந்தார்கள். அதன்போது அவர்களை நோக்கி: "நிச்சயமாக உங்கள் இருவரினதும் தந்தையான இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இதனைக் கொண்டு இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகிய இருவருக்கும் பாதுகாப்புத் தேடினார்கள்" என்று கூறிவிட்டு பின்வரும் பாதுகாவல் துஆவைக் குறிப்பிட்டார்கள்.

أَعُوْذُ بِكَلِمَاتِ اللهِ التَّامَّةِ مِنْ كُلِّ شَيْطَانٍ ، وَهَامَّةٍ وَمِنْ كُلِّ عَيْنٍ لَامَّةٍ

(இச்செய்தியை இமாம் புகாரி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்களைத் தொட்டும் அறிவிக்கின்றார்கள்.)

பொருள்: எல்லா ஷைத்தான்கள், விஷஜந்துக்கள் மற்றும் தீங்கை ஏற்படுத்தக்கூடிய அனைத்து வகையான கண்கள் ஆகியவற்றில் இருந்தும் அல்லாஹ்வின் பூரண வார்த்தைகளைக் கொண்டு பாதுகாவல் தேடுகிறேன்.

-    இன்ஷா அல்லாஹ் தொடரும்