நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஓதிப் பார்த்து நோய்நிவாரணம் தேடிய அமைப்புக்கள் – 02

بسم الله الرحمن الرحيم

பாதுகாவல் அத்தியாயங்களைக் கொண்டு நோய்நிவாரணம் தேடல்

1.   "நபியவர்கள் நோய்வாய்ப்பட்டால் பாதுகாவல் அத்தியாயங்களைத் தனக்குத் தானே ஓதி ஊதி தனது கரங்களால் தடவிக்கொள்வார்கள்" என ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கின்றார்கள். (புகாரி, முஸ்லிம்)

2.   நபியவர்கள் தனது குடும்பத்தில் ஒருவர் நோய்வாய்ப்பட்டால் பாதுகாவல் அத்தியாயங்களை ஓதி அவர் மீது தடிவிவிடுபவர்களாக இருந்தார்கள். "நபியவர்கள் மரணத்தைத் தழுவிய நோயில் இருந்த போது நான் பாதுகாவல் அத்தியாயங்களை அவர்கள் மீது ஓதி ஊதி அவர்களுடைய கரங்களைக் கொண்டே தடவச் செய்வேன். ஏனெனில், என்னுடைய கரத்தை விட அவர்களுடைய கரம் மிகமகத்தான அருள்பொருந்தியதாகக் காணப்பட்டது" என்று ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறுகின்றார்கள். (முஸ்லிம்)

3.   இரு பாதுகாவல் அத்தியாயங்களைக் கொண்டு ஓதிப்பார்த்து நோய்நிவாரணம் தேடுவதின் மீது நபியவர்கள் ஆர்வம் ஊட்டக்கூடியவர்களாக இருந்தார்கள். "நீங்கள் அவற்றைக் கொண்டு பாதுகாவல் தேடுங்கள்! நிச்சயமாக அவற்றைப் போன்ற ஒன்றைக் கொண்டேயன்றி வேறு எதனைக் கொண்டும் எவரும் பாதுகாவல் தேடியதில்லை" என நபியவர்கள் பகர்ந்ததாக உக்பத் இப்னு ஆமிர் அவர்கள் அறிவிக்கின்றார்கள். (அஹ்மத், ஸஹீஹ் அபீதாவுத்)

சூரதுல் பாதிஹாவைக் கொண்டு நோய்நிவாரணம் தேடல்

தேளால் கொட்டப்பட்ட அரேபியக் குக்கிராமங்களில் ஒரு பிரதேசத்து தலைவர் விடயத்தில் அபூஸஈத் அல்குத்ரி ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடத்திலும் அவர்களுடன் இருந்தவர்களிடத்திலும் ஒரு கூட்டம் சமுகம் தந்தது.

"கூட்டத்தினரே! நிச்சயமாக எங்களுடைய தலைவர் தேளால் கொட்டப்பட்டுள்ளார். ஒவ்வொரு வழிமுறையைக் கொண்டும் அவருக்காக முயற்சி செய்தோம். ஆனாலும் பயனளிக்கவில்லை. (அவரைக் குணப்படுத்த) ஏதாவது ஒன்று உங்களில் எவரிடத்திலாவது உள்ளதா?" எனக் கேட்டார்கள். அப்போது அபூஸஈத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள், அல்குர்ஆனின் தோற்றுவாயான சூரதுல் பாதிஹாவை ஓதிப்பார்த்து சிகிச்சை செய்தார்கள். அவர் அதனை ஓதி, தனது எச்சிலை ஒன்று சேர்த்து உமிழ்ந்தார். அதனால் அப்பிரதேசத் தலைவர் நிவாரணம் பெற்றார். (அவிழ்க்கப்பட்ட ஒட்டகம் எவ்வாறு உட்சாகமாக எழும்புமோ) அவ்வாறு உட்சாகமாக (நோயின்) எவ்வித அறிகுறியுமின்றி எழுந்து நடக்கலானார்.

அவர்கள் இதனை அல்லாஹ்வின் தூதரிடத்தில் கூறியபோது நபியவர்கள் சிரித்தார்கள். மேலும் அபூஸஈத் ரழியல்லாஹு அன்ஹு அவர்களை நோக்கி: "நிச்சயமாக அது நோய்நிவாரணி என்று உனக்கு அறிவித்தது எது என்று வினவினார்கள்." (புகாரி, முஸ்லிம்)

குறிப்பு: 01

இப்னுல் கையிம் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் "அல்ஜவாபுல் காபி" என்ற நூலில் கூறுகிறார்கள்: "இந்த நோய் விடயத்தில் இம்மருந்து தாக்கத்தை உண்டாக்கியது. மேலும், அதனை அடையாளம் தெரியாத அளவுக்கு அகற்றியது. அதுவே மிக இலகுவான மருந்தாகவும் மிகச் சுலபமானதாகவும் இது இருக்கின்றது. சூரதுல் பாதிஹாவைக் கொண்டு மருந்து செய்வதை அடியான் நல்லமுறையில் மேற்கொண்டால் நோய்நிரவாரணத்தில் ஆச்சரியமிக்க தக்கத்தை அதனில் கண்டு கொள்வான். ஒரு சில காலம் நான் மக்காவில் தங்கியிருந்தேன். அப்போது எனக்கு நோய்கள் உண்டாகின. எந்த ஒரு வைத்தியரையும் மருந்தையும் அங்கு நான் பெற்றுக்கொள்ளவில்லை. எனவே, சூரதுல் பாதிஹாவைக் கொண்டு எனக்கு நானே சிகிச்சை செய்து கொண்டேன். ஆச்சரியமிக்க தாக்கத்தை அதனில் கண்டு கொண்டேன். யாரெல்லாம் வலியை உணர்வதாக என்னிடத்தில் முறையிடுகிறார்களோ அவர்களுக்கு அதனை வர்ணித்துச் சொல்லக்கூடியவனாக நான் இருந்தேன். அவர்களில் அதிகமானவர்கள் விரைவாக நோய்நிவாரணம் அடைந்தவர்களாக இருந்தார்கள்."

குறிப்பு: 02

"அபூஸஈத் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் ஹதீஸில் தெளிவான அமைப்பில் சூரதுல் பாதிஹாவானது நோய்நிவாரணி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, விஷஜந்துக்களால் தீண்டப்பட்டவர்கள் மற்றும் நோயாளிகள் போன்றோர் மீது அதனை ஓதிப்பார்ப்பது விருப்பத்தக்கதாகும்" என இமாம் நவவி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்.

இமாம் இப்னு ஹஜர் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்: "இந்த ஹதீஸில் இருந்து அல்லாஹ்வுடைய வேதத்தைக் கொண்டு ஓதிப்பார்த்தல் கூடும் என்பதைப் புரிந்து கொள்ளலாம். அத்தோடு எமக்கு அறிவிக்கப்பட்ட துஆக்கள் மற்றும் திக்ருகள் ஆகியவற்றையும் இணைத்துக் கொள்ளலாம். மேலும், எமக்குத் தெரியப்படுத்தப்பட்டவைகளுக்கு முரணாகாத அறிவிக்கப்படாதவற்றையும் ஓதிக்கொள்ளலாம்."

மேலும் இமாம் குர்துபி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்: "சூரதுல் பாதிஹாவானது அல்குர்ஆனின் தோற்றுவாயாக இருப்பதும் அனைத்துவகையான அறிவுகளையும் தன்னகத்தே பொதிந்ததாக இருப்பதும் அல்லாஹ் மீது புகழ்ச்சியை உள்ளடக்கியதாக இருப்பதும் அவனை வணங்குவது கொண்டு உறுதிப்படுத்துவதாக இருப்பதும் அவனுக்காக வேண்டி மனத்தூய்மையைக் கடைபிடித்தல், அவனிடத்தில் நேர்வழியைக் கேட்டல், அவனுடைய அருட்கொடைகளைக் கொண்டு நிறைவேற்ற வேண்டியதை சரியாக நிறைவேற்ற முடியாமல் போதல் ஆகிய நிலை, ஏற்றுக் கொள்ளல் மீளுல் தொடர்பான விடயம் மற்றும் புறக்கணிப்பவர்களின் இறுதி முடிவு பற்றிய தெளிவு தொடர்பான சுட்டிக்காட்டுதல்கள் போன்றனவும் இவையல்லாத ஏனையவைகளைக் கொண்டும் தனித்துவமான அமைப்பில் இவ்வத்தியாயம் காணப்படுவதும் நிச்சயமாக இது ஓதிப்பார்ப்பதற்குரிய இடமாகும் என்பதை வேண்டி நிற்கிறது."

நபியவர்களுக்கு ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஓதிப்பார்த்த விதம்

1.   ஒரு நாள் தினம் நபியவர்கள் நோயின் சிரமத்தை உணர்ந்தார்கள். அப்போது அவர்களிடத்தில் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சமுகம் தந்தார்கள். "முஹம்மதே! நீங்கள் வருத்தத்தை உணருகிறீர்களா?" எனக் கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் "ஆம்" என பதிலளிக்க...

بِاسْمِ الله أَرْقِيْكَ مِنْ كُلِّ شَيْءٍ يُؤْذِيْكَ، مِنْ شَرِّ كُلِّ نَفْسٍ أوْ عَيْنِ حَاسِدٍ، الله يَشْفِيْكَ، بِاسم الله أرْقِيْكَ

என்று கூறி நோய்நிவாரணம் தேடினார்கள் என அபூஸஈத் அல்குத்ரி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

பொருள்: உங்களை நோவினைப்படுத்தும் ஒவ்வொரு வஸ்தில் இருந்தும் மற்றும் ஒவ்வோர் ஆத்மாவின் தீங்கில் இருந்தும் அல்லது பொறாமைக்காரனின் கண் திருஷ்டியில் இருந்தும் அல்லாஹ்வின் பெயரைக் கொண்டு உங்களுக்கு நான் ஓதிப்பார்த்து நோய்நிவாரணம் தேடுகின்றேன். அல்லாஹ் உங்களைக் குணப்படுத்துவானாக! அல்லாஹ்வின் பெயரைக் கொண்டு உங்களுக்கு நான் ஓதிப்பார்த்து நோய்நிவாரணம் தேடுகின்றேன்.

2. ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறினார்கள்: "நபியவர்கள் நோய்வாய்ப்பட்டால் அவர்களுக்காக ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஓதிப்பார்ப்பார்கள். (அவ்வாறு ஓதிப்பாக்கும் சந்தர்ப்பத்தில்)

بِاسْمِ الله، يُبْرِيْكَ، وَمِنْ كُلِّ دَاءٍ يَشْفِيْكَ، وَمِنْ شَرِّ حَاسِدٍ إذا حَسَدَ، وَشَرِّ كُلِّ ذِيْ عَيْنٍ

என்று கூறுவார்கள். (முஸ்லிம்)

பொருள்: அல்லாஹ்வின் பெயரைக் கொண்டு அவன் உங்களை குணப்படுத்துவானாக! மேலும், அனைத்து நோய்களில் இருந்தும் அவன் உங்களைக் குணப்படுத்துவானாக! இன்னும், பொறாமைக்காரன் பொறாமை கொள்ளும் போது உண்டாகும் தீங்கிலிருந்தும் கண்திருஷ்டியுடைய அனைவரினதும் தீங்கில் இருந்தும் பாதுகாப்பானாக!

இன்ஷா அல்லாஹ் தொடரும்.