நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஓதிப் பார்த்து நோய் நிவாரணம் தேடிய அமைப்புக்கள் – 01

بسم الله الرحمن الرحيم

தொகுப்பு: அபூஅப்திர் ரஹ்மான் அப்துல்லாஹ் இப்னு அஹ்மத் அல்இர்யாணி

தமிழாக்கம்: அபூஹுனைப் ஹிஷாம் இப்னு தௌபீக்

அணிந்துரை

الحمد لله، وأشهد أن لا إله إلا الله، وأن محمدا عبده، ورسوله صلى الله عليه وسلم، أما بعد:

எங்களது சகோதரரான அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் இப்னு அஹ்மத் அல்இர்யாணி அவர்களின் இத்தொகுப்பை வாசித்தேன். குறித்த தொகுப்பானது ஒன்றிணைக்கப்பட்ட ஆதாரங்களையும் அறிஞர் பெருமக்களின் பத்வாக்களையும் கொண்டதாகக் காணப்படுகின்றது. நபியவர்களின் நோய் நிவாரணம் தேடல் அமைப்பு தொடர்பில் தொகுக்கப்பட்டதாக இது காணப்படுகின்றது. நான் இத்தொகுப்பை மிகச் சுருக்கமான தொகுப்பாகக் காண்கிறேன். மேலும், இது தொடர்பில் பிரயோசனம் அளிக்கக்கூடியதாகவும் இதனைக் கருதுகின்றேன்.

எனவே, அல்லாஹ்விடத்தில் அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் அல்இர்யாணி அவர்களுக்கு பரகத்தை வேண்டிப் பிரார்த்தனை செய்கின்றோம். எங்களை விட்டும் இன்னும் அவரை விட்டும் வெளிப்படையான, மறைமுகமான அனைத்து பித்னாக்களையும் தடுக்குமாறும் விண்ணப்பிக்கின்றோம்.

எழுதியவர்: யஹ்யா இப்னு அலி அல்ஹஜூரி

ஹிஜ்ரி 1435 ஷஃபான் மாதம் 18ஆவது தினம் இவ்வணிந்துரை வரையப்பட்டது.

முன்னுரை

الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأن محمدا عبده ورسوله، أما بعد

சிறப்புக்குரிய சகோதரர்களில் சிலர் என்னிடத்தல் மார்க்க ரீதியில் ஓதிப்பார்த்தல் மற்றும் அதனுடைய ஒழுங்குகள் தொடர்பாக எழுதுமாறு வேண்டிக் கொண்டார்கள். எனவே, அவர்களுடைய வேண்டுதலுக்கு இணங்க இலகுவான இச்சுருக்க நூலை ஓதிப்பார்த்தல் தொடர்பாக நபியவர்களின் வழி என்ற அடிப்படையில் ஒன்றிணைத்துள்ளேன். மேலும், சில பிரயோசனங்களையும் விழிப்பை ஏற்படுத்தும் குறிப்புக்களையும் உபதேசங்களையும் மற்றும், வழிகாட்டல்களையும் இதனுடன் இணைத்துக் கொண்டுள்ளேன். இன்னும், இதற்கு "நபியவர்களின் ஓதிப்பார்த்தல் தொடர்பான வர்ணணை" என்று பெயர் சூட்டியுள்ளேன்.

எனவே, அல்லாஹ்விடத்தில் இதனைக் கொண்டும் இதனுடைய ஆசிரியரைக் கொண்டும் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கு பிரயோசனம் அடையக் கேட்கின்றேன். மேலும், விரும்பக்கூடிய மற்றும் பொருந்திக் கொள்ளக்கூடியதின் பால் அனைவருக்கும் பொருத்தத்தைக் கேட்கின்றேன். யாவருக்கும் பூரண ஆரோக்கியத்தையும் கேட்கின்றேன். எல்லாப் புகழும் அகிலத்தாரின் இரட்சகனுக்கே உரித்தாகும்!

நோய்நிவாரணம் அளிப்பவன் அல்லாஹ்

1.   நபியவர்கள் தன்னுடைய இரட்சகன் மீது பொறுப்புச் சாட்டுதலில் மிக்க மகத்துவம் வாய்ந்தவர்களாகத் திகழ்ந்தார்கள். இன்னும், தன்னுடைய அனைத்துக் காரியங்களையும் அவனிடத்தில் ஒப்படைக்கக்கூடியவர்களாகவும் இருந்தார்கள். தனக்கு ஏதாவது வலி உண்டாகும் போது: "நான் நோய்வாய்ப்பட்டால் அவனே என்னைக் குணப்படுத்துகிறான்" (அஷ்ஷுஅரா: 80) என்று கூறிய தன்னுடைய தந்தையான இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மார்க்கத்தைப் பின்பற்றியவர்களாகவும் அவனிடத்தில் தாழ்மைப்பட்டவர்களாகவும் நோய்நிரவாரணத்தை அவனிடத்தில் தேடியவர்களாகவும் தன்னுடைய இரட்கனிடத்தில் மீளக்கூடியவர்களாகவும் இருந்தார்கள்.

2.   மேலும், நபியவர்கள் தன்னுடைய துஆவின் போதும் நோய்நிவாரணம் தேடலின் போதும்

 اللهُمَّ اشْف، وَأنْتَ الشَّافِئ

என்று கூறக்கூடியவர்களாக இருந்தார்கள்.

பொருள்: இரட்சகனே! நோய்நிவாரணம் அளிப்பாயாக! மேலும், நீயே நோய்நிவாரணம் அளிக்கக்கூடியவனாக இருக்கின்றாய்!

அல்குர்ஆனைக் கொண்டு நோய்நிவாரணம் தேடல்

விசுவாசிகளான தனது அடியார்களுக்கு அல்லாஹுத்தஆலா நோய்நிரவாரணியாக ஆக்கியிருக்கக்கூடிய சங்கைமிக்க அல்குர்ஆனைக் கொண்டு நபியவர்கள் சிகிச்சை செய்யக்கூடியவர்களாக இருந்தார்கள்.

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: "இன்னும், நாம் விசுவாசிகளுக்கு நல்லருளாகவும் அருமந்தாகவும் உள்ளவற்றையே அல்குர்ஆனில் (படிப்படியாக) இறக்கி வைத்தோம்." (அல்இஸ்ரா: 82)

மேலும் கூறுகின்றான்: "மனிதர்களே! உங்கள் இரட்சகனிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக ஒரு நல்லுபதேசம் வந்துள்ளது. (உங்கள்) இதயங்களிலுள்ள நோய்களுக்கு அருமருந்தும் (வந்திருக்கிறது.) மேலும், (அது) விசுவாசிகளுக்கு நேர்வழிகாட்டியாகவும் நல்லருளாகவும் உள்ளது." (யூனுஸ்: 57)

இன்னும் கூறுகின்றான்: "இது ஈமான் கொண்டவர்களுக்கு ஒரு வழிகாட்டியும் அருமருந்துமாகும் என்று கூறுவீராக!" (புஸ்ஸிலத்: 44)

- இன்ஷா அல்லாஹ் தொடரும்.