புத்திக்கல்ல முதலிடம்! குர்ஆன் ஸுன்னாவுக்கே!

بسم الله الرحمن الرحيم

இமாம் பர்பஹாரி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்: "அறிந்து கொள்! அல்லாஹ் உனக்கு ரஹ்மத் செய்வானாக! நிச்சயமாக மார்க்கமாகிறது அல்லாஹ்வின் புறத்திலிருந்து வந்ததாகும். மாறாக, மனிதர்களின் புத்திகள் மற்றும் சிந்தனைகள் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து உண்டாக்கப்பட்டதல்ல. எனவே, அது தொடர்பான அறிவு அல்லாஹ்விடத்திலும் அவனுடைய தூதரிடத்திலும் உள்ளது." (ஷர்ஹுஸ் ஸுன்னா)

ஓர் அறபுக் கவிஞன் பின்வருமாறு கவிதை பாடுகிறான்:

ودع عنك آراء الرجال وقولهم

فقول رسول الله أزكى وأشرح

உன்னை விட்டும் மனிதர்களின் அபிப்பிராயங்களையும் அவர்களின் கருத்துக்களையும் விட்டுவிடு! அல்லாஹ்வின் தூதரின் வார்த்தையே (என்றென்றும் உனக்கு) மிகத் தூய்மையானதும் விரிவானதுமாக இருக்கும்!

நபியவர்களைப் பொருத்தளவில் அவர்கள் தன்னுடைய இரட்சகனைத் தொட்டும் எத்திவைக்கக்கூடிய பணியைச் செய்யக்கூடியவர்களாக இருந்தார்கள். அவர்கள் ஒரு போதும் தனது மனஇச்சையின் அடிப்படையில் பேசக்கூடியவர்களாக இருந்ததில்லை.

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: "அவர் தன் மனஇச்சையின் படி (எதையும்) போசுவதுமில்லை. இது அறிவிக்கப்படும் (வஹியாகிய) அறிவிப்பே தவிர (வேறு) இல்லை." (அந்நஜ்ம்: 3,4)

நபியவர்கள் கூறினார்கள்: "நிச்சயமாக நான் குர்ஆனும் அதைப் போன்ற ஒன்றும் கொடுக்கப்பட்டுள்ளேன்." (அறிவிப்பவர்: மிக்தாம் இப்னு மஃதியகரிப் ரழியல்லாஹு அன்ஹு, ஆதாரம்: அஹ்மத்)

மேலும், இமாம் லாலகாயி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் "ஷர்ஹ் உஸூலி இஃதிகாதி அஹ்லிஸ் ஸுன்னா" என்ற தனது நூலில் ஹஸ்ஸான் இப்னு அதிய்யா என்பவரைத் தொட்டும் ஸஹீஹான அறிவிப்பாளர் வரிசையில் அறிவிக்கையில்: "எப்படி ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நபியவர்களிடத்தில் குர்ஆனைக் கொண்டு வந்து கற்றுக் கொடுத்தார்களோ, அதேபோன்று ஸுன்னாவைக் கொண்டு வந்தும் கற்றுக் கொடுத்தார்கள்" என்கிறார்கள்.

எனவே, குர்ஆன் வஹியாக இருப்பதைப் போன்று ஸுன்னாவும் வஹியாக உள்ளது என்பதை மேற்கோந்த தரவுகளில் இருந்து புரிந்து கொள்ளலாம். ஒருபோதும் நாம் குர்ஆனை வஹியாகவும் ஸுன்னாவை நபியவர்களின் சிந்தனையாகவும் வேறுபடுத்திப் பேச முனையக் கூடாது. அல்லாஹ் எம்மைப் பாதுகாப்பானாக!

இஸ்லாம் மார்க்கம் மனிதர்களின் அபிப்பிராயங்களை மையமாக வைத்து அமையப் பெற்றிருந்தால் அதில் கருத்து வேறுபாடு மிகப் பெரிய அளவில் இடத்தைப் பிடித்திருக்கும். மனிதர்களின் சிந்தனைகளும் அவர்களது இச்சைகளும் ஒருவருக்கொருவர் முரண்பட்ட அமைப்பில் காணப்படுவதே இதற்குக் காரணமாகும்.

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: "இன்னும், (இச்)சத்தியம் அவர்களுடைய மனோஇச்சைகளைப் பின்பற்றுவதென்றால், வானங்களும் பூமியும் அவற்றிலுள்ளவைகளும் சீர் கெட்டுவிடும்." (அல்முஃமினூன்: 71)

எனவே, உண்மையான பாதுகாப்பு உத்தரவாதமானது இந்த உம்மத்தின் ஸலபுஸ்ஸாலிஹீன்களின் விளக்கத்தின் அடிப்படையில் குர்ஆன் ஸுன்னாவைப் பின்பற்றுவதில் தங்கியுள்ளது.

மேலும், மனிதர்களில் தூய்மையானவர்களும் நலவில் அதிகதிக நாட்டம் கொண்டவர்களும் அல்லாஹ்வினதும் அவனுடைய தூதரினதும் நாட்டத்தை மிகவும் அறிந்தவர்களுமான ஸஹாபாக்கள் சமூகமானது தங்களுக்கு மத்தியில் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளின் போது குர்ஆன் ஸுன்னாவின் தீர்வை நாடி நகரக்கூடியதாக இருந்தது என்று எமது வரலாற்றுப் பக்கங்கள் சான்று பகருகின்றன.

பித்அத் வாதிகள் வழிகேட்டில் சென்றதற்கான பிரதான காரணம் அவர்கள் குர்ஆன் ஸுன்னா ஆதாரங்களைவிட தமது புத்தியை முற்படுத்தியமையாகும். இது குறித்து ஷைஹுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் "தர்உ தஆருளில் அக்லி வந்நக்லி" என்ற தனது நூலில் கூறும் போது: "புத்தியைக் கொண்டு இரட்சகனின் சட்டதிட்டங்களை விளங்க முற்படுபவர்களில் சிலர்: நிச்சயமாக நபிமார்கள் நாங்கள் அறிந்து வைத்திருப்பவற்றை அறிந்திருக்கவில்லை என்றும், மற்றும் சிலர்: நபிமார்கள் அறிந்திருந்தார்கள். ஆனாலும், நாங்கள் தெளிவுபடுத்தியதைப் போன்று அவர்கள் படைப்பினங்களுக்குத் தெளிவுபடுத்தத் தவறிவிட்டார்கள். மாறாக, அவர்கள் எவ்விதத் தெளிவுமின்றி முரணானவற்றைக் கொண்டே பேசியுள்ளார்கள் என்கிறார்கள்." (சுருக்கம்)

அன்பின் வாசகர் நெஞ்சங்களே! சற்று சிந்தனை செய்து பாருங்கள்! தங்களிடத்தில் அறிவுஞானம், பேச்சுத் திறமை மற்றும் தெளிவான புத்தி இருப்பதாகக் கூறக்கூடியவர்கள் இந்தளவுக்கு எல்லை மீறி நபிமார்களின் அழைப்புப் பணி குறித்து விமர்சிக்கிறார்களென்றால் இத்தகையவர்களின் வழித்தோன்றலில் வந்தவர்கள் தற்காலத்தில் புத்தியை அடிப்படையாகக் கொண்டு நபியவர்களின் ஸஹீஹான ஹதீஸ்களைப் புறக்கணிப்பதிலும் நபியின் தோழர்களை குறைமதிப்பீடு செய்து அவர்களின் அடிச்சுவடுகளை ஒதுக்குவதிலும் அவர்கள் இந்த உம்மத்திற்கு அமானிதமாக எத்திவைத்த அல்குர்ஆனைக் கூட சந்தேகம் கொள்ள வைப்பதிலும் இவர்கள் காட்டிவரும் ஈடுபாடு சற்றும் வியக்கத் தகுந்த ஒன்றல்ல! ஏனென்றால், "தாய் எட்டு அடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயுமல்லவா!" அல்லாஹுல் முஸ்தஆன்

புத்தியை அடிப்படையாகக் கொண்டு மார்க்க ஆதாரங்களைப் புறக்கணிக்கக்கூடியவர்கள் கூறுகின்ற சில கருத்துக்கள் எம்மை மெய்சிலிக்க வைக்கின்றன. அவற்றின் சில வரிகளை இமாம் இப்னுல் கையிம் ரஹிமஹுல்லாஹ் அவர்களின் "அல்ஸவாஇகுல் முர்ஸலா" என்ற நூலில் இருந்து இனங்காட்டுகின்றேன். இத்தகையவர்கள் கூறுகின்றார்கள்: "நிச்சயமாக புத்தியும் குர்ஆன் ஸுன்னாவும் முரண்படும் போது புத்தியை முற்படுத்துவதே வாஜிப் ஆகும். இத்தகைய சந்தர்ப்பங்களில் அந்த இரண்டுக்கும் மத்தியில் ஒன்று சேர்த்து முடிவு காண்பதோ அல்லது அந்த இரண்டையும் செல்லுபடியற்றதாக ஆக்குவதோ அல்லது புத்தியை விடுத்து குர்ஆன் ஸுன்னா ஆதாரத்தை மாத்திரம் முற்படுத்துவதோ முடியாத காரியமாக உள்ளது. ஏனெனில், புத்தியானது குர்ஆன் ஸுன்னா ஆதாரங்களுக்கு அடிப்படையாகும். இப்படியிருக்க நாம் புத்தியைவிட குர்ஆன் ஸுன்னா ஆதாரங்களுக்கு முன்னுரிமை வழங்கினால் புத்தி செல்லுபடியற்றதாக ஆகிவிடும். மாறாக, புத்தியே குர்ஆன் ஸுன்னாவின் அடிப்படையாகும். எனவே, இத்தகைய சந்தர்ப்பங்களில் குர்ஆன் ஸுன்னா ஆதாரங்களை செல்லுபடியற்றதாக ஆக்குவதே கடமையாகும்."

நன்கு சிந்தனை செய்து பாருங்கள்! இப்படிப்பட்ட கொள்கை கோட்பாடுகளைக் கொண்டவர்களை எம் சமூகத்திற்கு வழிகாட்டிகளாக எடுத்துக் கொண்டால் எம்மை இவர்கள் எந்த இடத்தில் கொண்டு சேர்ப்பார்கள்?!

என்னுடைய புத்தியைக் கொண்டு நான் அறியும் வரை எனக்குத் தெரியப்படுத்தப்பட்ட செய்தியை நான் உண்மைப்படுத்தமாட்டேன் என்று யார் கூறுகிறாரோ அவரின் இறைநிராகரிப்பு வெளிப்படையானதாகும்.

அல்லாஹ் கூறுகின்றான்: "இன்னும், அவர்களிடம் ஏதாவதொரு வசனம் வந்தால், அல்லாஹ்வினுடைய தூதர்களுக்குக் கொடுக்கப்பட்டது போன்றதை நாங்கள் கொடுக்கப்படாதவரை, நாங்கள் (அதனை) விசுவாசங்கொள்ள மாட்டோம் என்று கூறுகின்றனர்." (அல்அன்ஆம்: 124)

மேலும், கூறுகின்றான்: "எனவே, அவர்களுடைய தூதர்கள் அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்த சமயத்தில் (அதனை அவர்கள் பரிகாசம் செய்து நிராகரித்துவிட்டு) கல்வியினால் தங்களிடமுள்ளதைக் கொண்டு பெரு மகிழ்ச்சி அடைந்திருந்தார்கள். இன்னும், அவர்கள் எதைப் பரிகாசம் செய்து கொண்டிருந்தார்களோ அது அவர்களைச் சூழ்ந்து கொண்டது." (அல்முஃமின்: 83)

யார் நபிமார்கள் கொண்டுவந்தவற்றுடன் தன்னுடைய அபிப்பிராயத்தைக் கொண்டு முரண்படுகிறாரோ அவருக்குப் பின்வரும் திருக்குர்ஆன் வசனங்களில் ஒரு பங்கு உண்டு.

அல்லாஹ் கூறுகின்றான்: "எவர்கள் (செயலில்) வரம்பு மீறி (உள்ளத்தில்) சந்தேகிக்கிறார்களோ அவர்களை, அவ்வாறே அல்லாஹ் தவறான வழியில் விட்டுவிடுகிறான். அவர்கள் எத்தகையோரென்றால் (அல்லாஹ்விடமிருந்து) தங்களுக்கு வந்த யாதோர் ஆதாரமின்றி, அல்லாஹ்வுடைய வசனங்களில் தர்க்கம் செய்கின்றனர். அ(வ்வாறு தர்க்கம் செய்வ)து அல்லாஹ்விடத்திலும், விசுவாசங் கொண்டவர்களிடத்திலும் கோபத்தால் பெரிதாகிவிட்டது. இவ்வாறே பெருமை கொண்ட, வம்பு செய்கின்ற ஒவ்வோர் இதயத்தின் மீது(ம்) அல்லாஹ் முத்திரையிட்டுவிடுகிறான்." (அல்முஃமின்: 34,35)

மேலும் கூறுகின்றான்: "நிச்சயமாக அல்லாஹ்வுடைய வசனங்களில், தங்களுக்கு வந்த எவ்வித சான்றுமில்லாமல் தர்க்கம் செய்கின்றார்களே அத்தகையவர்கள் - அவர்களுடைய இதயங்களில் (வெறும்) பெருமையல்லாது (வேறு) இல்லை. அதை அவர்கள் அடையக்கூடியவர்களல்லர்." (அல்முஃமின்: 56)

அன்பார்ந்த வாசகர் நெஞ்சங்களே! நாம் முன்பு குறிப்பிட்ட தரவுகளை வைத்து குர்ஆன் ஸுன்னா ஆதாரங்களை புத்தியை மையப்படுத்தி விளங்குவது அல்லது மாற்று வியாக்கியானம் வழங்குவது அல்லது புறக்கணிப்பது எவ்வளவு அபாயகரமான செயல் என்பதைப் புரிந்து கொண்டிருப்பீர்கள்.

நாம் எப்பொழுது குர்ஆன் ஸுன்னாவில் முரண்பாடு தென்படும் இடங்களைக் கண்டு கொள்கின்றோமோ அப்பொழுது அவசரப்பட்டு எம்மிடத்தில் இருக்கும் அறிவை வைத்து அவற்றிக்குத் தீர்ப்புச் சொல்ல முனையக் கூடாது. மாறாக, அவற்றுக்கான சரியான விளக்கத்தைப் பெற அவை தொடர்பாக விளக்கம் கூறிய உலமாப் பெருந்தகைகளை நாட வேண்டும். அத்தகையவர்கள் உயிருடன் உள்ள நம்பிக்கையான அறிவைச் சுமந்த ஆலிம்களாகவோ அல்லது மரணித்து மண்ணறை வாழ்க்கை வாழும் உலமாக்களின் பெறுமதிமிக்க நூல்களாகவோ இருக்கலாம்.

இப்படிப்பட்டவர்கள் முரண்படும் இடங்கள் தொடர்பாக அவரவருடைய காலத்தில் காணப்பட்ட பிழையான கொள்கை கோட்பாடுகளைக் கொண்டவர்களுடன் சம்பந்தப்படுத்தி விளக்கம் அளித்திருக்கிறார்கள். எனவே, இப்படி அவர்களை அணுகி எம்சந்தேகங்களுக்குத் தெளிவு பெற்றுக் கொள்ளப்படுமாயின் இப்படியான முரண்பட்ட இடங்கள் விடயத்தில் வழி சறுகிச் சென்ற பித்அத் வாதிகளைப் போன்று நாமும் ஆகுவதைவிட்டும் எம்மைத் தற்காத்துக் கொள்ளலாம்.

الحمد لله رب العالمين