அல்அகீததுல் வாஸிதிய்யா விளக்கவுரை – 29

بسم الله الرحمن الرحيم

தனது படைப்பினங்களுக்கு மேலால் அல்லாஹ்வின் உயர்வை உறுதி செய்யும் சான்றுகள்

இது விடயத்தை உறுதி செய்யக்கூடிய சான்றுகளில் சிலவற்றை ஷைஹுல் இஸ்லாம் இப்னு தைமியா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இந்நூலில் குறிப்பிட்டுள்ளார்கள். அவர்கள் குறிப்பிட்ட வசனங்களையும் அவற்றுக்கான சுருக்க விளக்கத்தையும் தற்போது நாம் உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம்.

1.   அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: 'ஈஸாவே! நிச்சயமாக நான் உம்மைக் கைப்பற்றிக் கொள்பவனாகவும் உம்மை என்னிடம் உயர்த்திக் கொள்பவனாகவும் இருக்கின்றேன்.' (ஆலு இம்றான்: 55)

இவ்வசனத்தில் இடம்பெறும் إني متوفيك என்ற வார்த்தைப் பிரயோகத்தின் மூலம் தூக்கம் நாடப்படுவதாக பெரும்பான்மையான அறிஞர்கள் கூறுகின்றார்கள். (பார்க்க: தப்ஸீர் இப்னு கஸீர்: 2/42) மேலும், இக்கருத்திற்கு வலு சேர்க்கும் விதத்தில் பின்வரும் திருக்குர்ஆன் வசனங்கள் அமைந்துள்ளன.

'அன்றியும் அவன் எத்தகையவனென்றால் (மனிதர்களே!) இரவில் (நீங்கள் நித்திரை செய்யும் போது) அவன் தான் உங்க(ளின் உயிர்க)ளைக் கைப்பற்றிக் கொள்கிறான்.' (அல்அன்ஆம்: 60)

'உயிர்களை அவை இறக்கும் பொழுதும் தம் நித்திரையில் இறப்பெய்யாதவற்றையும் அல்லாஹ்வே கைப்பற்றுகிறான்.' (அல்ஜுமர்: 42)

மேலும், ஆரம்பமாக இமாமவர்கள் கொண்டுவந்த வசனத்தில் ورافعك إلي என்று ஒரு வாசகம் இடம் பெற்றுள்ளது. அதனுடைய கருத்து அல்லாஹ் அவரை உயிருடன் வானத்தில் தன்பால் உயர்த்தினான் என்பதுவாகும். இதுவே அந்த வசனத்தில் ஆதாரம் பிடிக்கப்படும் இடமுமாகும். இவ்விடயம் அல்லாஹ்வுக்கு உயர்வு உண்டு என்பதை உறுதி செய்கின்றது. ஏனெனில், உயர்த்துதல் என்பது மேல் நோக்கியே இடம்பெறக்கூடியதாக உள்ளது.

2.   அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: 'மாறாக அல்லாஹ் அவரைத் தன் அளவில் உயர்த்திக்கொண்டான்.' (அன்னிஸா: 158)

இவ்வசனம் யூதர்களுக்கு சிறந்த மறுப்பாக உள்ளது. அவர்கள் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களைக் கொலை செய்துவிட்டதாக வாதிடுகின்றார்கள். இதற்கு மறுப்பளிக்கும் முகமாக அல்லாஹுத்தஆலா பின்வருமாறு பிரஸ்தாபிக்கின்றான்.

'அவரை அவர்கள் கொல்லவுமில்லை அவரை அவர்கள் சிலுவையில் அறையவுமில்லை. எனினும் அவர்களுக்கு (ஈஸாவின் தோற்றத்தைப் பெற்ற) ஒருவரை ஒப்பாக்(கிக் காண்பிக்)கப்பட்டது.' (அன்னிஸா: 157)

இங்கு நாம் விளக்கத்திற்காக எடுத்துக் கொண்ட இவ்வசனமும் அல்லாஹ் தன் படைப்புகளுக்கு மேலால் உள்ளான் என்பதைத் தெளிவுபடுத்துகின்றது.

3.   அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: 'தூய வாக்கியங்கள் அவனளவில் மேலேறிச் செல்கின்றன. நல்ல செயலும் அதை (அல்லாஹ்வின் பால்) உயர்த்துகிறது.' (பாதிர்: 10)

இவ்வசனத்தை அடிப்படையாக வைத்து நிச்சயமாக தூய வார்த்தைகள் ஸாலிஹான அமல்கள் இன்றி ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என்பதைப் புரிந்து கொள்ளலாம். இயாஸ் இப்னு முஆவியா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறும் போது: 'ஸாலிஹான அமல் இல்லாவிட்டால் வார்த்தை உயர்த்தப்பட மாட்டாது' என்கிறார்கள். மேலும் ஹஸன், கதாதா ரஹிமஹுமல்லாஹ் ஆகியோர் கூறும் போது: 'ஒரு வார்த்தை அமல் இன்றி பொருந்திக் கொள்ளப்படமாட்டாது' என்கிறார்கள். மேலும், இந்த வசனத்திலும் படைப்புக்களைவிட்டும் அல்லாஹ்வுடைய உயர்வு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏனெனில், மேலேறிச் செல்லல், உயர்தல் ஆகியன மேல் நோக்கியே அன்றி சாத்தியமாகாது என்பதைப் புரிந்த கொள்ளலாம்.

4.   அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: '(அதற்கு) பிர்அவ்ன் ஹாமனே! (சகலருக்கும் தெரியும்படியான) உயர்ந்த (ஒரு) மாளிகையை எனக்காக கட்டும்! (அதன் மூலம் உயரச் செல்லும்) வழிகளை நான் அறியலாம் என்று கூறினான். வானங்களை அடையும் வழிகளை (நான் அறியலாம். அவற்றின் மூலம் சென்று) மூஸாவுடைய வணக்கத்திற்குரியவனை நான் பார்க்க வேண்டும் அவர் பொய் செல்கிறார் என்றே நிச்சயமாக நான் எண்ணுகிறேன்.' (அல்முஃமின்: 36,37)

இவ்வசனத்திலும் அல்லாஹ்வுடைய உயர்வு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏனெனில், மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ் உயர இருக்கின்றான் என்பதை அறிவித்த போதே பிர்அவ்ன் அவரைப் பொய்ப்பிக்கும் முகமாக இம்முயற்சியில் இறங்கினான்.

5.   அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: 'வானத்திலிருப்பவன் உங்களை பூமியில் அழுத்தச் செய்துவிடுவான் என்பதிலிருந்து நீங்கள் அச்சமற்றிருக்கின்றீர்களா? (பூமியாகிய) அது அந்நேரத்தில் நடுங்கும் அல்லது வானத்தில் இருப்பவன் உங்கள் மீது கல்மாரியை அனுப்பி வைப்பான் என்பதிலிருந்து நீங்கள் அச்சமற்றிருக்கின்றீர்களா? அவ்வாறாயின் எச்சரிக்கை (செய்யப்பட்ட வேதனை) எவ்வாறிருக்கும் என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.' (அல்முல்க்: 16,17)

இவ்வசனத்தில் இடம்பெறும் في السماء என்ற வாசகத்திற்கு வானத்தின் மீது என்று பொருள் கொள்ளப்படுகின்றது. இப்படியான பொருள் கொள்ளல் அமைப்பே பின்வரும் திருக்குர்ஆன் வசனத்திலும் காணப்படுகின்றது.

'இன்னும் பேரீச்ச மரங்களின் அடிப்பாகங்களில் உங்களை நிச்சயமாக நான் கழுவேற்றுவேன்.' (தாஹா: 71)

எனவே, விளக்கத்திற்காக நாம் எடுத்துக் கொண்ட இவ்வசனமும் கூட ஏற்கெனவே கூறப்பட்ட வசனங்களைப் போன்று அல்லாஹ்வின் உயர்வுத் தன்மையை உறுதி செய்கின்றன. ஏனெனில், இவ்வசனங்களில் வெளிப்படையாக அல்லாஹ் வானத்தில் உள்ளான் என்று கூறப்பட்டுள்ளது.

அல்லாஹ் உயர்ந்துவிட்டான் (استوى) என்ற வார்த்தைக்கும் அவனுடைய உயர்வு குறித்த (العلو) என்ற வார்த்தைக்கும் இடையிலுள்ள வேறுபாடு

1.   அல்லாஹ்வின் உயர்வு என்பது அவனுடைய தன்னளவிலான பண்புகளில் ஒன்றாகும். மாறாக, அல்லாஹ் உயர்ந்துவிட்டான் என்பது அவனுடைய செயல் சார்ந்த பண்பாக உள்ளது. எனவே, படைப்பினங்களைவிட்டும் அல்லாஹ்வின் உயர்வானது தன்னளவில் அவனிடத்தில் அவசியம் காணப்படும் பண்பாகும். ஆனால், அவன் அர்ஷின் பால் உயர்ந்தான் என்பது அவனுடைய செயல்களில் ஒன்றாகவும் அவன் நாடும் போது அதனை தனது நாட்டம் மற்றும் சக்தி ஆகியவற்றைக் கொண்டு மேற்கொள்பவனாக இருக்கின்றான். அதனால் தான் இது தொடர்பான திருக்குர்ஆன் வசனத்தில் 'பிறகு அவன் உயர்ந்தான்' என்று இடம்பெற்றுள்ளது. ஏனெனில் இத்தகைய உயர்தல் செயற்பாடானது வானங்கள் மற்றும் பூமியின் படைப்புக்குப் பிறகே இடம்பெற்றது.

2.   அல்லாஹ்வின் உயர்வு என்ற பண்பு புத்தி மற்றும் குர்ஆன் சுன்னா ஆதாரங்களைக் கொண்டு உறுதியான பண்பாகும். மேலும், அவன் உயர்ந்தான் என்ற செயல் குர்ஆன் சுன்னா ஆதாரங்களைக் கொண்டு மாத்திரம் உறுதியானதாகும்.

-    இன்ஷா அல்லாஹ் தொடரும்