நபிவழியில் ஜனாஸாத் தொழுகை – 01

முன்னுரை

بسم الله الرحمن الرحيم

நிச்சயமாக புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரித்தாகட்டும்! இன்னும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது அல்லாஹ்வின் கருணையும் சாந்தியும் உண்டாவதாக.

இது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களினது ஜனாஸாத் தொழுகை எவ்வாறு இருந்தது என்பதைத் தெளிவுபடுத்தும் ஒரு தொகுப்பாகும். ஏனைய தொழுகைகள் எவ்வாறு நபிவழியில் தொழப்பட வேண்டுமோ அவ்வாறே ஜனாஸாத் தொழுகையும் நபிவழியில் தொழப்பட வேண்டும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: "நான் எவ்வாறு தொழ நீங்கள் கண்டீர்களோ அவ்வாறே நீங்களும் தொழுது கொள்ளுங்கள்.” (புஹாரி)

நபிவழியில் தொழுகைகள் நடாத்தப்பட வேண்டும் என்பதை இந்த ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது. ஆனால், இன்று பல இடங்களில் மனோ இச்சை அடிப்படையிலும் ஊர் வழமையின் அடிப்படையிலும் இபாதத்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இவை முழுமையாக தவிர்க்கப்பட வேண்டும். நபிவழிக்குப் புறம்பான எந்தவோர் இபாதத்தும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்ற அடிப்படை அம்சத்தை நாம் விளங்கி வைத்திருக்க வேண்டும்.

இத்தொகுப்பை நவீன காலத்து அறிஞர்களில் மூவருடைய நூட்களை மையமாக வைத்தே நாம் தொகுத்திருக்கின்றோம்.

1. அஷ்ஷெய்க் அல்பானி ரஹிமஹுல்லாஹ் அவர்களுக்குரிய அஹ்காமுல் ஜனாஇஸ்.

2. அஷ்ஷெய்க் இப்னு ஹிஸாம் ஹபிழஹுல்லாஹ் அவர்களுக்குரிய பத்ஹுல் அல்லாம். (இவர் யமனில் இருக்கும் அஷ்ஷெய்க் யஹ்யா அல்ஹஜூரி ஹபிழஹுல்லாஹ் அவர்களின் மாணவராவார்)

3. அஷ்ஷெய்க் ஸஈத் இப்னு அலி ஹபிழஹுல்லாஹ் அவர்களுக்குரிய ஸலாதுல் முஃமின். (இவர் அஷ்ஷெய்க் இப்னு பாஸ் ரஹிமஹுல்லாஹ் அவர்களின் மாணவராவார்)

மேற்குறிப்பிடப்பட்ட மூன்று நூட்களும் இத்தொகுப்பை பூர்த்தியாக்க எனக்கு போதிய தகவல்களைப் பெற்றுத்தந்தன. இம்மூவருக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக!

அல்லாஹ்வின் கூலி நாடப்பட்டு எழுதப்பட்ட ஒரு தொகுப்பாக இதை அவன் ஆக்குவானாக! இதை வாசிப்பவர், பிறருக்கு எத்திவைப்பவர் ஆகிய அனைவருக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக!

 அல்ஹம்துலில்லாஹ்

1.  ஜனாஸாத் தொழுகைக்கு வுழூ செய்து கொள்ள வேண்டும்.

ஏனைய தொழுகைகளுக்கு வுழூச் செய்வது போன்று ஜனாஸாத் தொழுகைக்கும் வுழூச் செய்து கொள்ள வேண்டும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: "சுத்தமின்றி – வுழூ - எந்தத் தொழுகையும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.” (முஸ்லிம்)

2.  தொழுகை நடாத்தும் இமாம் மரணித்தவர் ஆணாக இருந்தால் அவருடைய தலைக்கு நேராகவும் பெண்ணாக இருந்தால் அவருடைய நடுப்பகுதிக்கு நேராகவும் நிற்க வேண்டும்.

மரணித்தவர் ஆணாக இருந்தால் அவருடைய தலைக்கு நேராகவும் பெண்ணாக இருந்தால் அவருடைய நடுப்பகுதிக்கு நேராகவும் இமாம் நிற்பதே நபிவழியாகும். இதற்குப் பின்வரும் ஹதீஸ் சான்றாக அமைந்திருக்கின்றது. அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஓர் ஆணுக்கு தொழுவித்தபோது அவருடைய தலை இருக்கும் இடத்தில் நின்றார்கள். பின்பு ஒரு பெண்ணுக்கு தொழுவித்தபோது அவளுடைய நடுப்பகுதி இருக்கும் இடத்தில் நின்றார்கள். அல்அலாஃ இப்னு ஸியாத் என்பவர்: "இவ்வாறுதானா நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செய்தார்கள்?” எனக்கேட்டார். அதற்கு அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள்: "ஆம்.” என்று பதிலளித்தார்கள். (அபூதாவூத்)

ஸமுரா இப்னு ஜுன்துப் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள். "நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குப் பின்னால் நான் நிபாஸின் காரணமாக மரணித்த ஒரு பெண்ணுக்கு ஜனாஸாத் தொழுதேன். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அப்பெண்ணின் நடுப்பகுதி இருக்கும் இடத்தில் நின்றார்கள்." (புஹாரி, முஸ்லிம்)

3.  இமாம் தொழுகை வரிசைகளை சீர்செய்ய வேண்டும். பின்னால் தொழக்கூடியவர்களும் வரிசைகளாக நிற்க வேண்டும்.

ஜாபிர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்: "நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நஜ்ஜாஷி மன்னனுக்கு தொழுகை நடாத்தினார்கள். நான் இரண்டாவது அல்லது, மூன்றாவது வரிசையில் இருந்தேன். மற்றோர் அறிவிப்பில்: 'நாம் வரிசைகளாக நின்றோம். அவ்வாறு நாம் வரிசைகளாக இருக்கும்போதே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகை நடாத்தினார்கள்” என்று இடம்பெற்றுள்ளது. (புஹாரி, முஸ்லிம்)

இமாமுக்குப் பின்னால் தொழக்கூடியவர்கள் ஏனைய தொழுகைகளுக்கு நிற்பதுபோல் வரிசை வரிசையாக நிற்க வேண்டும் என்பதை இந்த ஹதீஸ் எமக்குத் தெளிவுபடுத்துகின்றது.

மேலும், தொழுகையின் வரிசைகளை சீர்செய்துகொள்ள வேண்டும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: "நீங்கள் தொழுகையின் வரிசைகளை சமப்படுத்துங்கள்! முரண்பட்டு விடாதீர்கள்! அவ்வாறு முரண்பட்டுவிட்டால் உங்கள் உள்ளங்கள் முரண்பட்டுவிடும்!” (முஸ்லிம்)

மேலும் அவர்கள் கூறினார்கள்: "உங்கள் வரிசைகளை நீங்கள் சமப்படுத்துங்கள்! ஏனென்றால், வரிசைகளைச் சீர்செய்வது தொழுகையின் பூரணத்துவத்தைச் சாரும்.” (புஹாரி, முஸ்லிம்)

ஏனைய தொழுகைகளைப்போன்று ஜனாஸாத் தொழுகையிலும் வரிசைகளை சீர்செய்வது வாஜிப் என்று அறிஞர்கள் கூறியிருக்கின்றார்கள்.

4.  கிப்லாவை முன்னோக்க வேண்டும்.

ஏனைய தொழுகைகளுக்கு கிப்லாவை முன்னோக்குவது அவசியம் போன்று ஜனாஸாத் தொழுகைக்கும் கிப்லாவை முன்னோக்குவது அவசியமாகும். இப்னு ருஷ்த், இப்னு ஹஸ்ம், நவவி ரஹிமஹுமுல்லாஹ் ஆகியோர் கிப்லாவை முன்னோக்குவது அனைத்து அறிஞர்களினதும் ஒன்றுபட்ட கருத்தாகும் என்று கூறியிருக்கின்றார்கள்.

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: "எனவே நீர் மஸ்ஜிதுல் ஹராமின் பக்கமாக உம்முடைய முகத்தைத் திருப்புவீராக! நீங்கள் எங்கிருப்பினும் அதன் பக்கமாக உங்களுடைய முகங்களைத் திருப்பிவீர்களாக!” (அல்பகறா: 144)

5.  அல்லாஹு அக்பர் என்று முதலாவது தக்பீரை கையை உயர்த்திக்கூறி இடது கையின் மீது வலது கையை வைத்து தக்பீரைக் கட்ட வேண்டும்.

ஏனைய தொழுகைகளைப்போல் ஜனாஸாத் தொழுகைக்கும் தக்பீர் கட்டப்பட வேண்டும் என்பது அனைத்து அறிஞர்களினதும் ஏகோபித்த கருத்தாகும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நஜ்ஜாஷி மன்னனுக்குத் தொழுகை நடாத்தினார்கள். அவருக்கு அவர்கள் நான்கு தக்பீர் கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்)

ஜனாஸா தொழக்கூடியவர் முதலாவது தக்பீரில் கையை உயர்த்த வேண்டும் என்பதில் அனைத்து அறிஞர்களும் ஒன்றுபட்டுள்ளனர் என்று அல்இஜ்மாஃ என்ற நூலில் இப்னுல் முன்திர் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறியிருக்கின்றார்கள்.

6.  சூரதுல் பாதிஹா ஓத வேண்டும்.

அஊது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம், பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் என்று கூறி முதலாவது தக்பீருக்குப் பின் சூரதுல் பாதிஹாவை ஓத வேண்டும். அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: "(நபியே!) நீங்கள் குர்ஆனை ஓத ஆரம்பித்தால் விரட்டப்பட்ட ஷைத்தானிடமிருந்து அல்லாஹ்வைக் கொண்டு பாதுகாப்புத் தேடுங்கள்!” (சூரா அந்நஹ்ல்: 98)

"யார் அல்குர்ஆனின் ஆரம்பமான சூரதுல் பாதிஹாவை ஓதவில்லையோ அவருக்குத் தொழுகை இல்லை” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்)

தல்ஹா இப்னு உபைதில்லாஹ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்களுக்குப் பின்னால் நான் ஒரு ஜனாஸாவைத் தொழுதேன். அவர் குர்ஆனின் ஆரம்பமாகிய சூரதுல் பாதிஹாவை ஓதினார்கள்.” (புஹாரி)

இவ்வாதாரங்கள் முதல் தக்பீருக்குப் பின்னால் சூரதுல் பாதிஹா ஓதப்பட வேண்டும் என்பதை தெளிவுபடுத்துகின்றன. ஜனாஸா தொழுகையில் சூரதுல் பாதிஹா ஓதுவது வாஜிப் என்று அஷ்ஷெய்க் இப்னு பாஸ் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

ஏனைய தொழுகைகளில் ஆரம்பத் தக்பீருக்குப் பின்பு சூரதுல் பாதிஹா ஓத முன் துஆஉல் இஸ்திப்தாஹ் - ஆரம்பித்து வைக்கும் துஆ - ஓதப்படுவது போன்று ஜனாஸாத் தொழுகையிலும் அந்த துஆ ஓதப்பட வேண்டுமா? என்பதில் அறிஞர்களுக்கு மத்தியில் கருத்து வேறுபாடு காணப்படுகின்றது. பெரும்பாலான அறிஞர்களின் கருத்தும், சரியான கருத்தும் அவ்வகை துஆக்கள் ஓதப்படக்கூடாது என்பதேயாகும். இதற்கு முன்பு கூறப்பட்ட இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்களின் ஹதீஸ் சான்றாக அமைந்திருக்கின்றது.

7.  அல்லாஹு அக்பர் என்று இரண்டாவது தக்பீரைக் கூற வேண்டும்.

சூரதுல் பாதிஹா ஓதிய பின்பு அல்லாஹு அக்பர் என்று கூறி இரண்டாவது தக்பீரைக் கூற வேண்டும். இரண்டாவது தக்பீரைக் கூறும்போது இரு கைகளையும் உயர்த்த வேண்டுமா? என்பதில் அறிஞர்களுக்கு மத்தியில் கருத்து முரண்பாடு காணப்படுகின்றது. இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் ஒவ்வொரு தக்பீரின் போதும் இரு கைகளையும் உயர்த்தியதாக ஸஹீஹான செய்திகளில் பதிவாகியிருக்கின்றது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கைகளை உயர்த்தியதாக இடம்பெறும் அனைத்துச் செய்திகளும் பலவீனமானவையாகும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைத் தொட்டும் அவர்கள் உயர்த்தியதாக எந்த செய்தியும் உறுதியாகவில்லை என்பதால் சில அறிஞர்கள் உயர்த்தக்கூடாது என்று குறிப்பிட்டுள்ளனர்.

எவர் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உயர்த்தியதாலே கைகளை உயர்த்தியிருக்கின்றார்கள் என்று கருதுகின்றாரோ அவர் உயர்த்திக் கொள்ளலாம். இன்னும், எவர் இச்செயல் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்களது இஜ்திஹாத் என்ற ஆராய்ச்சியின் படி அமைந்திருக்கின்றது எனக் கருதுகின்றாரோ அவர் உயர்த்தாமலிருக்கட்டும். இக்கருத்தை அஷ்ஷெய்க் அல்பானி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தனது அஹ்காமுல் ஜனாஇஸ் என்ற நூலில் பதிவு செய்திருக்கின்றார்கள். இது விடயத்தில் இவரது கருத்தை நாம் நடுநிலைமையான ஒரு கருத்தாகக் காண்கிறோம். அல்லாஹ் மிக அறிந்தவன்.

- இன்ஷா அல்லாஹ் தொடரும்.