ஸூரதுன் நூர் விளக்கவுரை – 19

بسم الله الرحمن الرحيم

(2) ஆடை அணியும் போது அதன் நிபந்தனைகளைப் பேணிக் கொள்ள வேண்டும்.

இந்த அடிப்படையில் அறிஞர்கள் பிரதானமாக எட்டு நிபந்தனைகளைக் குறிப்பிடுகின்றார்கள்.

1. உடல் முழுவதையும் மறைக்க வேண்டும்.  இதற்குச் சான்றாக நாம் முன்பு விளக்கத்திற்காக எடுத்துக் கொண்ட ஸூரதுந் நூரின் 31ம் வசனத்தையும், ஸூரதுல் அஹ்ஸாபின் 59ம் வசனத்தையும் குறிப்பிடலாம்.

ஆயினும், ஒரு பெண்மணி தன் முகத்தையும் கையையும் மறைக்க வேண்டுமா? என்பதில் அறிஞர்களுக்கிடையில் சர்ச்சைகள் நிலவுகின்றன. எனவே, இது தொடர்பான வாதப்பிரதிவாதங்களை அலசுவோம்.

இந்த விடயத்தில் அறிஞர்களுக்கிடையில் இரு விதமான கருத்துக்கள் உள்ளன.

» சில அறிஞர்கள் பெண்கள் முகத்தையும் கைகளையும் மறைப்பது வாஜிப் என்கிறார்கள்.

» மேலும் சிலர், அவ்வாறு மறைப்பது வாஜிபன்று, விரும்பினால் மறைத்துக் கொள்ளலாம் என்கிறார்கள்.

முகத்தையும் கைகளையும் மறைப்பது வாஜிப் என்று கூறுவோரின் ஆதாரங்கள்

»  அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: 'விசுவாசிகளே! (உங்களுடைய நபி) உங்களை உணவு அருந்த அழைத்தாலன்றியும் அது சமையலாவதை எதிர்பார்த்தும் (முன்னதாகவே) நபியுடைய வீடுகளில் பிரவேசிக்காதீர்கள், ஆனால், நீங்கள் அழைக்கப்பட்டீர்களானால் (அங்கே) பிரவேசியுங்கள், அன்றியும் நீங்கள் உணவருந்தி விட்டால் (உடன்) கலைந்து போய்விடுங்கள், பேச்சுகளில் மனங்கொண்டவர்களாக (அங்கேயே) அமர்ந்து விடாதீர்கள்! நிச்சயமாக இது நபியை நோவினை செய்வதாகும், இதனை உங்களிடம் கூற அவர் வெட்கப்படுவார், ஆனால் உண்மையைக் கூற அல்லாஹ் வெட்கப்படுவதில்லை, நபியுடைய மனைவிகளிடம் ஏதாவது ஒரு பொருளை (அவசியப்பட்டுக்) கேட்டால் திரைக்கு அப்பாலிருந்தே அவர்களைக் கேளுங்கள்.' (அல் அஹ்ஸாப்: 53)

இவ்வசனம் நபியவர்கள் ஸைனப் பின்து ஜஹஷ் ரழியல்லாஹு அன்ஹா அவர்களைத் திருமணம் முடித்த போது இறக்கியருளப்பட்டது. இத்திருமண வைபவத்தின் போது நபியவர்கள் மக்களை அழைத்து விருந்துபசாரம் செய்தார்கள். அவ்விருந்துபசாரத்தின் பின்னர் அங்கு சமூகந்தந்த ஒரு கூட்டத்தினர் தங்கள் இல்லங்களுக்குத் திரும்பாது நபியவர்களிடத்தில் தாமதித்துக் கொண்டிருந்தனர். அப்போது நபியவர்கள், அவர்களுக்கு மத்தியில் ஒரு திறையைத் தொங்கவிட்டார்கள். இதனைக் கண்டிக்கும் முகமாக அல்லாஹ் இவ்வசனத்தை இறக்கியருளினான். (புகாரி: 4791, முஸ்லிம்: 1428)

இவ்வசனம் பெண்கள் அனைவருக்கும் பொருந்தக் கூடியதாக உள்ளது. ஏனெனில், ஹிஜாப் விதியாக்கப்பட்ட காரணங்களில் ஒன்றான உளத்தூய்மையை ஏற்படுத்தல் என்ற அம்சம் எல்லோருக்கும் பொருந்தக் கூடியதாக உள்ளது என்று கூறுகிறார்கள்.

» அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: 'நபியே! உம்முடைய மனைவியருக்கும், உம்முடைய புதல்விகளுக்கும், விசுவாசிகளின் பெண்களுக்கும் அவர்கள் தங்கள் தலை முந்தானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு நீர் கூறுவீராக! அதனால் அவர்கள் (சுவந்திரமானவர்கள் என) அறியப்படுவதற்கு இது மிக நெருக்கமானதாகும் அப்போது அவர்கள் (பிறரால்) நோவினை செய்யப்படமாட்டார்கள் இன்னும், அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாக, மிகக் கிருபையுடையவனாக இருக்கின்றான்.' (அல் அஹ்ஸாப்: 59)

இவ்வசனத்தில் இடம்பெற்றிருக்கும் வாசகமான 'யுத்னீன' என்பதற்கு 'முகம் உள்ளிட்ட உடலின் அனைத்துப் பாகங்களையும் மறைத்து, ஒரு கண்ணை மாத்திரம் திறந்துவிடல்' என்று விளக்கம் கூறுகின்றனர்.

» நபியவர்கள் கூறினார்கள்: 'பெண் அவ்ரத்தாவாள், அவள் (தன் வீட்டைவிட்டு) வெளியேறினால் ஷைத்தான் அவளைப் பிற ஆடவர்களுக்கு அலங்கரித்துக் காட்டுகின்றான்.' (திர்மிதி: 1173, இப்னு ஹூஸைமா: 3 ⁄ 95, தபராணி பில் கபீர்: 10115)

» ஆயிஷா நாயகி மீது அவதூறு கூறப்பட்ட சம்பவத்தில் அன்னையவர்கள் ஸப்வான் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் சத்தத்தைக் கேட்டமாத்திரத்தில் தனது ஜில்பாபைக் கொண்டு முகத்தை மறைத்துக் கொண்டார்கள் என இடம் பெற்றுள்ளது. (புகாரி: 4141, முஸ்லிம்: 2770)

» அஸ்மா பின்து அபூபக்கர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் கூறினார்கள்: 'தவாபின் போது ஆண்கள் எங்களைக் கடந்து செல்கையில் நாங்கள் எங்கள் முகங்களை மறைத்துக் கொள்வோம்.' (ஹாகிம்: 1 ⁄ 454)

  குறிப்பு: மேற்கூறப்பட்ட ஹதீஸ்கள் அனைத்தும் 'ஸஹீஹ்' எனும் தரத்தில் பதிவாகியுள்ளன.

முகத்தையும் கையையும் மறைப்பது வாஜிபன்று என்று கூறுவோரின் ஆதாரங்கள்

» அல்லாஹுத்தஆலா கூறுகிறான்: 'தங்கள் அலங்காரத்தில் (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக்காட்டலாகாது.' (அந்நூர்: (31)

இங்கு 'வெளிப்படையாகத் தெரியக்கூடிய அலங்காரம்' என்பதன் மூலம் முகமும் கையும் நாடப்படுகின்றன என்கிறார்கள்.

இக்கருத்தினை இமாம் 'தபரி' ரஹிமஹுல்லாஹ் அவர்கள் சரி கண்டுள்ளார்கள். (18 ⁄ 83) இது தவிர, இதற்கு வேறு சில வியாக்கியானங்களும் உள்ளன. அந்த அடிப்படையில் எதேர்ச்சையாகத் தென்படும் பெண்களின் அலங்காரங்கள் என்றும் பெண்களின் ஆடைகள் என்றும் பெண்கள் உபயோகிக்கும் சுர்மா மற்றும் அவர்கள் அணியும் மோதிரம், காப்பு என்றும் பல கருத்தக்கள் உள்ளன.

» ஒரு முறை அஸ்மா பின்து அபீபக்கர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் ஒரு மெல்லிய ஆடையை அணிந்திருக்கும் நிலையில் நபியவர்களிடத்தில் பிரவேசித்தார்கள். அதனைக் கண்ணுற்ற நபியவர்கள் அன்னையவர்களை விட்டும் தன் முகத்தைத் திருப்பியவர்களாக, 'அஸ்மாவே! நிச்சயமாக ஒரு பெண்மணி பருவ வயதை அடைந்துவிட்டால் அவளின் இன்னின்ன இடங்களைத் தவிர வேறு இடங்களை வெளிப்படுத்துவது அனுமதிக்கத்தக்கதல்ல' என்று கூறிவிட்டு தனது முகத்தையும் கையையும் சுட்டிக்காட்டினார்கள்.

இந்த ஹதீஸ் இக்கூற்றுக்குத் தெளிவான சான்றாக இருந்தாலும் இதன் அறிவிப்பாளர் வரிசை பலவீனமானது என ஹதீஸ்கலை வல்லுனர்கள் கூறுகின்றனர்.

இச்செய்தி அபூதாவுத் எனும் கிரந்தத்தில் (4104)ம் ஹதீஸாக இடம்பெற்றுள்ளது. இதன் அறிவிப்பாளர் வரிசையில் நான்கு குறைகள் உள்ளன.

  1. அறிவிப்பாளர் வரிசையில் வரக்கூடிய 'ஹாலித் இப்னு துரைக்' என்பவர் ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்களைச் சந்தித்ததே இல்லை. அதனால் இவ்வறிவிப்பாளர் வரிசை 'முன்கதிஉ' என்ற பலவீனமான ஹதீஸ் வகையைச் சேர்ந்ததாகும்.

  2. அறிவிப்பாளர் வரிசையில் 'கதாதா'வுடைய 'அன்அனா' அறிவித்தல் முறை காணப்படுகின்றது. அவர் 'முதல்லிஸ்'ஆகக் கருதப்படுவதால் இக்கூற்றை ஏற்றுக் கொள்ள முடியாதுள்ளது.

  3. மேலும், இவ்வறிவிப்பில் 'ஸயீத் இப்னு பஷீர்' என்பவர் இடம்பெறுகிறார். இவரை பலவீனமானவர் என்று அறிஞர்கள் கூறுகின்றனர்.

  4. இன்னும், இவ்வறிவிப்பில் 'வலீத் இப்னு முஸ்லிம்' என்பவரின் 'அன்அனா' என்ற அறிவித்தல் முறை காணப்படுகின்றது, இவரும் முதல்லிஸாகக் கருதப்படுகிறார்.

மேலும், இவ்விடயம் குறித்து வேறு சில ஹதீஸ்களை முன்வைக்கின்றனர். அந்த ஹதீஸ்களில் நபியவர்களை சில பெண்கள் தங்கள் முகங்களையும் கைகளையும் வெளிப்படுத்திய நிலையில் சந்திக்கவந்ததாகவும், அதனை நபியவர்கள் கண்டிக்காது விட்டதாகவும் குறிப்பிடுகின்றனர். அப்படியான சில ஹதீஸ்களை இப்போது காண்போம்.

»  ஜாபிர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்: 'ஒரு பெருநாள் தினத்தன்று நபியவர்கள் பெண்களுக்கு மத்தியில் உரை நிகழ்த்தினார்கள். அவ்வுரையின் போது அக்கூட்டத்திற்கு மத்தியில் கறுப்பு நிற அடையாளங்களைக் கொண்ட ஒரு பெண்மணி நபியவர்களை நோக்கி வினா தொடுத்தார்...'

இங்கு 'கறுப்பு நிற அடையாளங்களையுடைய பெண்' என்ற ஜாபிர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் கூற்றிலிருந்து அப்பெண் தனது முகத்தை மறைக்காத நிலையிலேயே நபியவர்கள் முன்தோன்றினார் என்பதைப் புரிந்து கொள்ளலாம். அதனால் முகத்தை மறைப்பது வாஜிபன்று எனக் கூறவருகின்றனர். (முஸ்லிம்: 885, நஸாயி: 1 ⁄ 233, அஹ்மத்: 3 ⁄ 318)

» இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்களின் ஓர் அறிவிப்பில் நபியவர்கள் 'பள்ழ் இப்னு அப்பாஸ்' ரழியல்லாஹு அன்ஹுமா அவர்களுடன் வாகனித்துக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது அழகிய தோற்றத்தையுடைய ஒரு பெண்மணி நபியவர்கள் முன் தோன்றி வினா தொடுத்தார். அப்போது பள்ழ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அப்பெண்ணைப் பார்க்க, நபியவர்கள் அவரின் முகத்தை மறுபுறம் திருப்பிவிட்டார்கள். (புகாரி: 6228, முஸ்லிம்: 1218)

அலி ரழில்லாஹு அன்ஹு அவர்களின் மற்றோர் அறிவிப்பில் இச்சம்பவம் நபியவர்கள் மினாவில் கல்லெறிந்த பின்னர் இடம் பெற்றதாக வந்துள்ளது. ( திர்மிதி: 885, அஹ்மத்: 862, பத்ஹுல் பாரி: 4 ⁄ 67)   இக்குறிப்பிலிருந்து இஹ்ராமின் சிறு கலைவுக்குப் பின்னரே இச்சம்பவம் நடைபெற்றுள்ளது என்பது புலனாகின்றது.

இப்னு ஹஸம் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இது தொடர்பாகக் கூறுகையில்: 'முகம் அவ்ரத்தாக இருந்திருந்தால் நபியவர்கள் அப்பெண்மணிக்குத் தனது முகத்தைத் திறந்த நிலையில் மக்கள் மத்தில் தோன்றுவதைத் தடைசெய்திருப்பார்கள். உண்மையில் அப்பெண்மணி தனது முகத்தை மூடியிருந்தால் அங்கு சமூகம் தந்த அழகிய பெண் உம்மு ஷவ்ஹா தான் என்று அறிந்திருக்கமாட்டார்கள்' என்கிறார்கள்.

» ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறினார்கள்: 'விசுவாசங்கொண்ட பெண்கள் நபியவர்களுடன் ஸுபஹுத் தொழுகையில் பங்குபற்றக்கூடியவர்களாக இருந்தார்கள். பின்னர் தமது வீடுகளுக்குத் திரும்பும் போது இருள் கலந்த பொழுதாக இருந்தமையால் அவர்கள் யார் என்பதை அறிய முடியாது இருந்தது.' (புகாரி: 578, முஸ்லிம்: 645)

இச்செய்தியிலிருந்து அவர்கள் தென்படுவதற்குத் தடையாக இருள் மாத்திரமே காரணமாக இருந்தது என்று கூறுகின்றார்கள்.

» ஒரு பெருநாள் தினத்தன்று நபியவர்கள் செய்த உபதேசம் தொடர்பாக இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்களின் அறிவிப்பில் இடம் பெற்றுள்ளதாவது: 'அவ்வுரையில் நபியவர்கள் ஸதகா செய்வதைப் பற்றி வழியுறுத்தினார்கள். அப்போது அப்பெண்கள் தங்களது கைகளில் அணிந்திருந்த மோதிரங்களைக் கழற்றுவதைக் கண்ணுற்றேன்.' மற்றோர் அறிவிப்பில் 'கழற்றிய அம்மோதிரங்களையும், காதணிகளையும் பிலால் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் ஆடையில் போட்டார்கள்' என்று வந்துள்ளது. (புகாரி: 988, அபூதாவுத்: 1142, நஸாயி: 1⁄227)

மேலும், இதே போன்று நபியவர்களின் காலத்திற்குப் பின்வந்த காலங்களில் பெண்கள் முகங்களையும், கரங்களையும் திறந்திருந்தார்கள் என்பதை உறுதி செய்யும் பல தகவல்களை இனங்காட்டி தம் வாதத்தை உறுதி செய்கின்றார்கள். இதனை அல்பானி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் 'ஜில்பாபுல் மாஆ முஸ்லிமா' என்ற நூலின் (96)ம் பக்கத்திலிருந்து விரிவாகக் காணலாம்.

இன்னும், இது தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கும் மூன்றாவது சாராரும் உள்ளனர். அவர்களுக்கும் அறிவுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. அவர்களின் கூற்றாவது: 'பெண்கள் முகம் மூடுவது பித்அத் ஆகும், அது மார்க்கத்தில் எல்லை மீறிச் செல்வதாகும்' என்கிறார்கள். இத்தகைய மூடர்கள் இது விடயத்தில் அளவு கடந்து சென்று பெண்கள் முகம் மூடுவது ஹராம் என்ற கருப்பொருளில் நூற்களை எழுதிப் பரவவிட்டுள்ளனர். அல்லாஹ் போதுமானவன்.

-     இன்ஷா அல்லாஹ் தொடரும்.

-     தொகுப்பு: அபூஹுனைப்