அல் அகீததுல் வாஸிதிய்யா விளக்கவுரை தொடர் – பகுதி 15

  1. அல்லாஹ்வுக்கு பூரணத்துவத்தைக் கற்பிக்கும் பண்புகளை உறுதி செய்தல்.
  2. அல்லாஹ் மாத்திரமே வணக்கத்திற்குத் தகுதியானவன்.
  3. அவன் என்றென்றும் உயிருடன் நிலைத்திருப்பவன்.
  4. வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சிப் பொறுப்பு அவனிடமே உள்ளது.
  5. அவனிடத்திலே இறந்த காலம் மற்றும் நிகழ்காலம் தொடர்பான பூரண அறிவுள்ளது.
  6. அனைத்துப் படைப்பினங்களும் அவன் பால் தேவையுடையனவாக இருக்கின்றன.
  7. அவனுக்கொன்று தனியான குர்ஸி இருக்கின்றது. அதன் மூலம் அவன் பூரணமான மகத்துவத்திற்குச் சொந்தக்காரனாக விளங்குகின்றான்.
  8. அவன் உயர்வான இஸ்தானத்தில் இருந்து கொண்டிருக்கின்றான்.

குறிப்பு:

இத்தகைய பண்புகளை உறுதிப்படுத்துவதின் மூலம் அல்லாஹ்வுக்கு பூரண பண்புகளைச் சேர்ப்பிக்க முடியும்.

அல்லாஹ்வுக்கு குறை கற்பிக்கும் பண்புகள் நிராகரித்தல்.

 

  • அல்லாஹ்வுக்கு சிறு தூக்கமோ பெரும் தூக்கமோ ஏற்படாது.
  • அவனது அனுமதியின்றி எவருக்கும் சிபார்சு செய்ய முடியாது.
  • அவனுக்கு இயலாமையும் களைப்பும் இருக்காது.

 

குறிப்பு:

இப்படியான அல்லாஹ்வுக்கு குறை கற்பிக்கும் பண்புகளை நாம் நிராகரிக்காது போனால், அல்லாஹ்வின் தகுதிக்குத் தகாத விதத்தில் அவனை வர்ணித்த குற்றத்திற்குள்ளாவோம். எனவே, இப்பண்புகளில் நிராகரிக்கப்பட்டுள்ள விடயங்களை முழுமையாக நிராகரிப்பது எமது பொறுப்பாகும்.

இமாமவர்கள் ஆயதுல் குர்ஷியைக் குறிப்பிட்டுவிட்டு அதன் ஈற்றில் அவ்வாயத்திற்கு இருக்கக்கூடிய சிறப்பு குறித்துப் பேசியுள்ளார்கள். அதாவது ஆயதுல் குர்ஷியை இரவு நேரத்தில் ஓதக்கூடிய ஒருவருக்கு காலை வரை ஷைத்தானில் இருந்தும் பாதுகாப்பளிக்க ஒரு வானவர் நியமிக்கப்படுவார் என்று கூறியுள்ளார்கள். இச்செய்தியானது நபியவர்களின் பொன்மொழிகளில் உறுதி செய்யப்பட்ட விடயமாகும். (பார்க்க: புகாரி, இப்னு ஹுஸைமா, அஸ்ஸூனனுல் குப்றா லின் நஸாயி) எனவே, அதன் சிறப்பை உணர்ந்து ஆவன செய்ய எல்லாம் வல்ல நாயன் எம் அனைவருக்கும் அருள் புரிவானாக!

وقوله سبحانه : هو الأول والآخر والظاهر والباطن وهو بكل شيء عليم الحديد

விளக்கம்:

2. அல்லாஹ்வின் உயர்விஸ்தானம், அவனின் நெருக்கம், அவனது நிரந்தரத்தன்மை ஆகியவற்றிக்கிடையிலான கூட்டுச் சேர்வு

மேற்குறித்த வசனத்தில் அல்லாஹுத்தஆலாவுக்குரிய பிரதானமான நான்கு பண்புகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அந்நான்கு பண்புகளும் எவ்வித முரண்பாடுகளுமின்றி ஒரே வசனத்தில் ஒன்றிணைக்கப்பட்டுள்ளன என்பதை அவதானிப்பீர்கள். அவ்வசனத்தின் தமிழ்வடிவமானது.. ..

“முதலாமவனும், இறுதியானவனும், மேலானவனும், அந்தரங்கமானவனும் அவனே! அவன் யாவற்றையும் நன்கறிந்தவன்.” (அல்ஹதீத்: 3)

இவ்வசனத்தில் இடம்பெற்றிருக்கக்கூடிய பண்புகள் தொடர்பாக நபியவர்கள் செய்த ஒரு துஆ வியாக்கியானமாக அமைந்துள்ளது.

“இறைவா! நீ ஆரம்பமானவன் உனக்கு முன் எதுவும் கிடையாது, மேலும், நீ இறுதியானவன் உனக்குப் பிறகு எதுவும் கிடையாது, இன்னும் நீ மேலானவன் உனக்கு மேலால் எதுவும் கிடையாது, மற்றும் நீ அந்தரங்கமானவன் உனக்குக் கீழால் எதுவும் கிடையாது.” (முஸ்லிம்)

இத்தகைய பண்புகளானது, அல்லாஹ்விடத்தில் இருக்கக்கூடிய யாவற்றையும் சூழ்ந்த தன்மையைப்பற்றிப் பேசுகின்றன. அந்தவிதத்தில் இந்நான்கு பண்புகளையும் பிரதானமாக இரு பிரிவுக்குள் உள்ளடக்கலாம்.

1. காலத்துடன் தொடர்புடைய பண்புகள்

இப்பிரிவுக்குள் மேற்குறித்த பண்புகளில் முதலாமவன், இறுதியானவன் ஆகியன உள்ளடங்குகின்றன.

2. இடத்துடன் தொடர்புடைய பண்புகள்

இப்பிரிவுக்குள் மீதமாக இருக்கக்கூடிய பண்புகளான மேலானவன், அந்தரங்கமானவன் ஆகியன உள்ளடங்குகின்றன.

இப்பண்புகளின் எதார்த்த தன்மை குறித்து இப்னுல் கையிம் (ரஹ்) அவர்கள் கூறும்போது: “இந்நான்கு பண்புகளும் ஒன்றுக்கொன்று நிகரானது, அவற்றுள் இரு பண்புகள் அல்லாஹுத்தஆலாவின் ஆதி மற்றும் நிலைத்திருக்கக்கூடிய தன்மைகளைப் பிரதிபலிக்கின்றன. ஏனைய இரு பண்புகளும் அவனது உயர் இஸ்தானத்தையும், சமீபமாக இருக்கும் தன்மையையும் பிரதிபளிக்கின்றன. மேலும், அவனது முதன்மைத் தன்மையானது அவனுக்கு முன் எதுவும் முதன்மைவகிக்க முடியாது என்பதையும், அவனது இறுதித் தன்மையானது அவனுக்குப் பிறகு எதுவும் இடம்பெற முடியாது என்பதையும் சுட்டிக்காட்டுகின்றன. எனவே, அவனது முதன்மைத்தன்மையானது மற்றெல்லாவற்றையும் விட முந்தியவன் என்பதையும், அவனது இறுதித்தன்மையானது அனைத்துக்குப் பிறகும் அவன் நிலைத்திருப்பான் என்பதையும் சுட்டிக்காட்டுகின்றன. இன்னும், மேலானவன் என்ற அவனது பண்பு எல்லாவற்றையும் விட அவன் உயர இருக்கின்றான் என்பதையும், அந்தரங்கமானவன் என்ற பண்பு ஆத்மாவைவிட அவன் மிக சமீபமாக இருக்கும் விதத்தில் எல்லா விடயங்கள் பற்றிய அவனது அறிவு சூழ்ந்திருக்கும் என்பதையும் சுட்டிக்காட்டுகின்றன.”

மேலும், மேற்குறித்த வசனத்தில் இடம்பெற்றிருக்கக்கூடிய “அவன் யாவற்றையும் நன்கறிந்தவன்” என்ற வாசகமானது, மேலுலகம், கீழுலகம், வெளிப்படையானவை, மறைமுகமானவை தொடர்பான முக்காலத்துடனும் சம்பந்தப்பட்ட அறிவு அல்லாஹ்விடத்தில் இருக்கின்றது என்பதைப் பிரஸ்தாபிக்கின்றது.

எனவே, காலம், இடம், நுண்ணிய கண்காணிப்பு, வரையறுத்தல், நிர்வகித்தல், மேன்மையாக விளங்குதல், பரிசுத்தமானவன் போன்றவற்றுடன் தொடர்புடைய இப்பண்புகளை நாமும் உறுதிப்படுத்துவோமாக!

وقوله تعلى : وتوكل على الحي الذي لا يموت وقوله: وهو العليم الحكيم وقوله: وهو الحكيم الخبير

விளக்கம்:

அல்லாஹ்வின் நிலைத்திருக்கும் தன்மை, அவனது ஞானம் மற்றும் நல்லறிவு என்பவற்றிக்கான எடுத்துக்காட்டுகள்.

அல்லாஹ் கூறுகின்றான்: “மரணிக்காத, (என்றும்) உயிருடன் இருப்பவன் மீது முழுமையாக நம்பிக்கை வைப்பீராக!’ (அல்புர்கான்: 58)

இவ்வசனத்தில் இருந்து அல்லாஹுத்தஆலா எப்போதும் ஜீவிக்கக்கூடியவனாக இருக்கின்றான் என்றும் அவன் மரணிக்கமாட்டான் என்றும் புரிந்து கொள்ளலாம். இந்நிலை அவனது பண்புகளில் உறுதிப்படுத்தல் மற்றும் மறுத்தல் ஆகியவற்றிக்கிடையிலான கூட்டுச் சேர்வைப் பிரதிபலிக்கின்றது.

அல்லாஹ் கூறுகின்றான்:

‘இன்னும் அவன் நன்கறிந்தவன், ஞானமிக்கவன்.’ (அத்தஹ்ரீம்: 2)

அல்லாஹ் கூறுகின்றான்:

‘அவன் ஞானமிக்கவனும் நன்கறிந்தவனுமாவான்.’ (ஸபஃ: 1)

இவ்வசனங்களில் அல்லாஹ்வுக்கு இருக்கின்ற மூன்று பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவை, அவனது ஞானத்தைப் பிரதிபலிக்கும் அல்ஹகீம் என்ற பெயரும், நல்லறிவைப் பிரதிபலிக்கும் அல்அலீம் மற்றும் அல்ஹபீர் என்ற பெயர்களுமாகும்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்