ஸஹர் செய்கிறீர்களா?

بسم الله الرحمن الرحيم

இமாம்களான இப்னு குதாமா மற்றும் இப்னு ஹஜர் ரஹிமஹுமல்லாஹ் ஆகியோர் ஸஹர் உணவின் ஆகக் குறைந்த அளவு குறித்துக் கூறுகையில்: "ஸஹர் செய்தலானது, ஒருவர் உணவில் இருந்து அல்லது, குடிபானத்தில் இருந்து எடுக்கும் மிகக் குறைவான அளவைக் கொண்டு நிறைவேறும்” என்கிறார்கள்.

உண்மையில், ஸஹர் உணவின் மிகக் குறைந்த அளவு குறித்து ஒரு செய்தி அபூமஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் அஹ்மத் எனும் கிரந்தத்தில் பதிவாகியுள்ளது. இதோ அதன் வரிகள்!

"நிச்சயமாக ஸஹர் உணவானது பரகத் பொருந்திய உணவாகும். எனவே, நீங்கள் அதனை விட்டுவிட வேண்டாம். உங்களில் ஒருவர் சிறிதளவு நீரையாவது ஸஹர் உணவாக விழுங்குவதை விட்டுவிடாதீர்கள்! நிச்சயமாக, அல்லாஹ்வும் அவனது வானவர்களும் ஸஹர் செய்கின்றவர்கள் மீது ஸலவாத்துச் சொல்கிறார்கள்.”

ஆயினும், மேற்குறித்த ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசையில் பல குறைபாடுகள் காணப்படுகின்றன.

1.   அதன் அறிவிப்பாளர் வரிசையில் ரிபாஆ அபூரிபாஆ என்பவர் இடம்பெற்றுள்ளார். இவரின் நிலை அறியப்படாததாக உள்ளது.

2.   யஹ்யா இப்னு அபீகஸீர் என்பவரின் அன்அனா முறையிலான அறிவிப்பு அதில் இடம் பெற்றுள்ளது.

3.   மேலும், அச்செய்திக்கு அஹ்மதில் மற்றோர் அறிவிப்பாளர் வரிசை காணப்படுகின்றது. ஆயினும், அதன் அறிவிப்பாளர் வரிசையில் அப்துர் ரஹ்மான் இப்னு ஸைத் இப்னி அஸ்லம் என்பவர் இடம்பெறுகின்றார். இவர் ஏகோபித்த கருத்தின் அடிப்படையில் பலவீனமானவராவார்.

குறிப்பு: நாம் தற்;போது ஆராய்ந்து கொண்டிருக்கும் ஹதீஸில் மூன்று பகுதிகள் காணப்படுகின்றன.

1.   ஸஹர் உணவானது பரகத் பொருந்திய உணவாகும்.

இப்பகுதிக்கு அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் ஒரு ஹதீஸ் சான்று பகருகின்றது.

2.   சிறிதளவு நீரையாவது விழுங்கும் வரை...

இப்பகுதிக்கு மற்றொரு சான்றாக அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னில் ஆஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்களின் ஒரு ஹதீஸைக் குறிப்பிடலாம். ஆயினும், அதன் அறிவிப்பாளர் வரிசையில் இம்றானுல் கத்தான் என்பவர் இடம் பொறுகிறார். இவர் பலவீனமானவராவார்.

3.   அல்லாஹ்வும் அவனது வானவர்களும் ஸஹர் செய்பவர்கள் மீது ஸலவாத்துச் சொல்கிறார்கள்.

இப்பகுதிக்கு எவ்வித சான்றும் வேறு ஹதீஸ்களில் பதிவாகவில்லை.

ஷெய்ஹுல் இஸ்லாம் இப்னு தைமியா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறும்போது: "(இது விடயத்தில்) மிக முன்னுதாரணம் மிக்க கருத்தாவது, நிச்சயமாக ஸஹர் செய்பவர் உணவைப் பரிமாறுவதற்குச் சக்தி பெற்றால் அவர் அதனைச் செய்வது சுன்னாவாகும்” என்கிறார்கள்.

பார்க்க: பத்ஹுல் அல்லாம் 2/592,593

-    அபூஹுனைப்