நோன்பின் சட்டதிட்டங்கள் தொடர்பான விளக்கக் குறிப்புக்கள் – 02

بسم الله الرحمن الرحيم

9. "பிறை தென்படுவது கொண்டு ரமழான் நோன்பு கடமையாகின்றது.” (புகாரி, முஸ்லிம்) இச்செய்தி மூலம் கணக்கீட்டு முறைப்படி ரமழானைத் தீர்மானிப்பது பிழையானது என்பதைப் புரிந்து கொள்ளலாம். மேலும், இப்படியான முறையில் தீர்மானிப்பவர்களுக்குப் பின்வரும் ஹதீஸ் தெளிவான பதிலாக அமைகின்றது.

"நிச்சயமாக நாங்கள் எழுத கணக்கிடத் தெரியாத உம்மி சமுகம். மாதம் என்பது இப்படியிருக்கும், இப்படியிருக்கும், இப்படியிருக்கும் (என்று மூன்று முறை விரல்களின் மூலம் உணர்த்தினார்கள்.) மூன்றாவது விடுத்தத்தில் ஒரு விரலை மாத்திரம் மடித்து (29 நாட்களை உணர்த்தினார்கள்.) மேலும் இப்படியிருக்கும், இப்படியிருக்கும், இப்படியிருக்கும் என்று (எந்த விரலையும் மடிக்காது 30 நாட்களை உணர்த்தினார்கள்.)” (புகாரி, முஸ்லிம்)

10. சந்திரனின் தோற்றத்தை சமீபமாக்கிக் காட்டுவதற்கு உதவியாகத் தொலைநோக்கிகளைப் பயன்படுத்துவதும் குற்றமற்றது. ஏனெனில், இப்படியான கருவிகள் பெரும்பாலும் நம்பிக்கையான கருவிகளாகவே காணப்படும். (இப்னு உஸைமீன்)

11. ஒரு நாட்டைச் சோந்த மக்கள் பிறையைக் கண்டால் ஏனைய முஸ்லிம் நாடுகளில் உள்ள அனைவருக்கும் அப்பிறையைக் கொண்டு நோன்பு பிடிப்பது அவசியாகும். இக்கருத்து பெரும்பான்மையான அறிஞர்களின் கருத்தாகும். மேலும், இக்கருத்தையே அறிஞர்களான இப்னு தைமியா, ஷவ்கானி, சித்தீக் ஹஸன் கான், அல்பானி, இப்னு பாஸ் போன்ற அறிஞர்கள் சரிகண்டுள்ளார்கள். இதற்கு "நீங்கள் பிறையைக் கண்பதை வைத்து நோன்பு பிடியுங்கள்!” என்ற ஹதீஸ் சான்று பகருகின்றது. இமாம் ஷவ்கானி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இச்செய்தி குறித்துக் கூறுகையில்: "இந்த ஹதீஸ் பிறையானது அது தென்பட்ட பிரதேசத்தை மாத்திரம் தனித்துவப்படுத்தாது என்றும், மாற்றமாக அது முஸ்லிம்களில் எவர்களுக்கெல்லாம் பொருந்தக் கூடியதாக இருக்கின்றதோ அவர்கள் அனைவரையும் உள்ளடக்கியதாகவே இருக்கும்” என்கிறார்கள்.

12. சூரியன் நடு உச்சியைத் தாண்டியதன் பின்னர் பகலில் பிறை தென்பட்டால் மறுநாளில் இருந்துதான் நோன்பு நோற்க வேண்டும் என்பது அறிஞர்களின் ஏகோபித்த கருத்தாகும். (இப்னு ஹஸ்;ம்)

13. அவ்வாறு பிறை தென்பட்டது சூரியன் நடுஉச்சியை அடைவதற்கு முன்னதாக இருந்தால், அது எதிர்வரும் இரவுக்குரியதாகும். இக்கருத்தே பெரும்பான்மையான அறிஞர்களின் கருத்தாகும். மேலும், இக்கருத்தை இப்னு பாஸ், இப்னு தைமியா, இப்னு உஸைமீன் ஆகிய அறிஞர்கள் சரிகண்டுள்ளார்கள்.

14. நோன்பு நோற்றல் மற்றும் நோன்பு திறத்தல் ஆகிய விடயங்களில் கருத்திற் கொள்ளத்தக்க விடயம் இருவருடைய சாட்சிகளாகும். இதனைப் பின்வரும் ஹதீஸில் இருந்து புரிந்து கொள்ளலாம். ஹாரிஸ் இப்னு ஹாதிப் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்: "அல்லாஹ்வின் தூதர் அவர்கள் பிறையைப் பார்ப்பது கொண்டு எங்கள் வணக்கத்தைப்புரிய வாக்குறுதி எடுத்தார்கள். அவ்வாறு நாங்கள் அதனைக் காணாத போது, இரு நீதமுடைய சாட்சிகள் எங்களிடத்தில் சாட்சி பகர்ந்தால் அவ்விருவருடைய சாட்சிகளைக் கொண்டு நாங்கள் எங்கள் வணக்கத்தைப் புரிவோம்.” (அபூதாவூத்)

இச்செய்தி அப்துர் ரஹ்மான் இப்னு ஸைத் இப்னில் ஹத்தாப் அவர்களின் ஹதீஸுக்குச் சான்று பகருகின்றது. அச்செய்தியாவது: "நீங்கள் (பிறையைப்) பார்ப்பது கொண்டு நோன்பு நோருங்கள்! மேலும், அதனைப் பார்ப்பது கொண்டு நோன்பை விடுங்கள்! இன்னும், அதனை வைத்தே வணக்கம் புரியுங்கள்! எனவே, (அத்தகைய தினங்களில்) உங்களுக்கு மேகமூட்டமாக இருந்தால், மாதத்தை 30 நாட்களாகப் பூர்த்தி செய்யுங்கள்! மேலும், இரு முஸ்லிம் சாட்சிகள் (பிறை குறித்து சான்று பகர்ந்தால்) நீங்கள் நோன்பு நோருங்கள்! மேலும் நோன்பை விடுங்கள்!” (அஹ்மத்)

15. யார் பிறையைத் தனிமையாகக் காண்கிறாரோ அவர் மக்களுடன் இணைந்து நோன்பு நோற்பார். மற்றும், நோன்பை விடுவார். இக்கருத்தை ஷைஹுல் இஸ்லம், இப்னு பாஸ், அல்பானி ரஹிமஹுமுல்லாஹ் போன்ற அறிஞர்கள் கூறுகின்றார்கள். இக்கருத்தைப் பின்வரும் ஹதீஸை அடிப்படையாக வைத்தே முன்வைக்கிறார்கள்.

"நீங்கள் நோன்பு நோற்கும் தினமே உங்களுடைய நோன்பாகும். மேலும், நீங்கள் நோன்பை விடும் தினமே உங்களுடைய நோன்பு விடுதலாகும்.”

16. நோன்பு நோற்றல், நோன்பை விடுதல் ஆகியவற்றில் பெண்களின் சாட்சி ஏற்றுக் கொள்ளப்படும்.

17. யார் காலைப் பொழுதை ஷஃபானுடைய தினம் என்று நினைத்து அடைகிறாரோ, அவர் அவ்வேளையில் இருந்து உண்ணாது, பருகாது இருக்கட்டும். அது அவருக்குப் போதுமானதாகும். நபியவர்களின் ஆஷூரா நோன்பு தொடர்பான செய்தி இதற்கு ஆதாரமாகத் திகழ்கின்றது. "யார் காலைப் பொழுதை நோன்பாளியாக அடைகிறாரோ அவர் தனது நேன்பைப் பூரணப்படுத்தட்டும். மேலும், யார் நோன்பு நோற்காத நிலையில் காலைப் பொழுதை அடைகிறாரோ அவர் அன்றைய தினத்தில் எஞ்சியிருக்கக் கூடிய நேரங்களை நோன்பைக் கொண்டு பூரணப்படுத்தட்டும்.” (புகாரி, முஸ்லிம்)

- இன்ஷா அல்லாஹ் தொடரும்.

- அபூஹுனைப்