ஸூரதுன் நூர் விளக்கவுரை – 5

யாரைத் திருமணம் செய்து கொள்ளக் கூடாது?

الزاني لا ينكح إلا زانية أو مشركة والزانية لا ينكحها إلا زان أو مشرك وحرم ذلك على المؤمنين 3

பொருள்:

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்:
'விபச்சாரகன் விபச்சாரியை அல்லது இணைவைப்பவளையே தவிர (மற்றெவளையும்) மணந்து கொள்ளமாட்டான். (அவ்வாறே) விபச்சாரி அவளை விபச்சாரகனோ அல்லது இணைவைப்பவனோ தவிர (மற்றெவரும்) மணந்து கொள்ளமாட்டான்;. மேலும், இ(த்தகையோரைத் திருமணம் செய்வ)து விசுவாசிகளுக்குத் தடுக்கப்பட்டிருக்கிறது.'
(அந்நூர்: 03)
இக்கருத்தினை வலுப்படுத்தும் முகமாக அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான்.

'ஆகவே (அப்பெண்கள் பத்தினித்தனமான) பரிசுத்தமானவர்களாக விபச்சாரம் செய்யாதவர்களாக மேலும் கள்ள நட்புக் கொள்ளாதவர்களாக இருக்கும் நிலையில்.... '
(அன்னிஸா: 25)
நபியவர்கள் கூறினார்கள்:
'கசையடி மூலம் தண்டனை நிறைவேற்றப்பட்ட விபச்சாரகன் அவனைப் போன்ற ஒருத்தியையே மணம் செய்து கொள்வான். '
(அபூ தாவூத் 2/543)
இமாம்களான கதாதா (ரஹ்), முகாதில் இப்னு ஹய்யான் (ரஹ்) ஆகியோர் கூறினார்கள்:
'அல்லாஹூத்தஆலா விசுவாசிகளுக்கு விபச்சாரிகளைத் திருமணம் செய்வதைத் தடை செய்துள்ளான். '
(அத்துர்ருள் மன்ஸூர் 6/127)

இவ்வசனம் இறக்கப்பட்டமைக்கான காரணம்

ஒருவர் நபியவர்களிடத்தில் சமுகந்தந்து உம்மு மஹ்ஸூல் என்ற பெண்மணியைத் தனக்குத் திருமணம் செய்துவைக்குமாறு வேண்டிக் கொண்டார். அப்பெண்மணி விபச்சாரத்தைத் தனது தொழிலாகக் கொண்டிருப்பதை அறிந்த நபியவர்கள் இவ்வசனத்தை ஓதிக் காண்பித்து அவளை மணப்பதை விட்டும் தடை செய்தார்கள்.
(அஹ்மத் 2/158, நஸாயி 6/415)

குறிப்பு:

திருமணம் தொடர்பான விரிவான தகவல்கள் உள்ளன. இன்ஷா அல்லாஹ் அது பற்றிய பாடம் வரும்போது காண்போம்.

அவதூறு தொடர்பான சட்டங்கள்

والذين يرمون المحصنات ثم لم يأتوا بأربعة شهداء فاجلدوهم ثمانين جلدة ولا تقبلوا لهم شهادة ابدا وأولئك هم الفاسقون إلا الذين تابوا من بعد ذلك وأصلحوا فإن الله غفور رحيم 4 - 5

பொருள்:

மேலும் பத்தினிப் பெண்களை அவதூறு கூறி, (அதன்) பிறகு (அதற்குரிய) நான்கு சாட்சிகளை அவர்கள் கொண்டு வரவில்லையே அத்தகையோர் அப்போது அவர்களை நீங்கள் எண்பது கசையடி அடியுங்கள். மேலும், அவர்களின் சாட்சியத்தை ஒரு போதும் ஏற்றுக் கொள்ளாதீர்கள். இன்னும், அத்தகையோர் பாவிகளாவர். இதற்குப் பின்னர் (தங்கள் குற்றங்களிலிருந்து விலகிப்) பட்சாதாபப்பட்டு(த் தங்கள் நிலைகளை) சீர் திருத்திக் கொண்டவர்கள் தவிர (இத்தகையோரை) நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன் பெரும் கிருபை செய்பவன்.
(அந்நூர்: 04, 05)

அவதூறு தொடர்பான விரிவான தகவல்கள்

அவதூறு என்றால் என்ன?

அவதூறு என்ற வாசகத்திற்கு அறபு மொழியில் 'அல்கத்ப்' என்று சொல்லப்படும். இப்பதமானது 'எறிதல்' என்ற கருத்தைக் கொடுக்கும். அதனடிப்படையில் அவதூறானது வெறுக்கத்தக்க செயல்களைச் செய்ததாக ஒருவர் மீது குற்றம் சாட்டுவதைக் குறிக்கின்றது. மார்க்க அடிப்படையில் அவதூறு என்பது பத்தினித்தனமுள்ள சுதந்திரமான பருவ வயதை அடைந்த ஓர் ஆணையோ அல்லது பெண்ணையோ விபச்சாரத்தில் அல்லது ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டதாகக் கூறுவதைக் குறிக்கும்.

அவதூறுக்கான மார்க்கத் தீர்ப்பு என்ன?

அவதூறு கூறுவது ஹராமாகும். இதனைப் பின்வரும் சான்றுகள் உறுதி செய்கின்றன. அல்லாஹ் கூறுகின்றான்:
'நிச்சயமாக கற்புள்ள அப்பாவிகளான விசுவாசிகளான பெண்களை அவதூறு கூறுகிறார்களே அத்தகையோர் இம்மையிலும் மறுமையிலும் (அல்லாஹ்வினால்) அவர்கள் சபிக்கப்பட்டுள்ளனர். இன்னும் (மறுமையில்) அவர்களுக்கு மகத்தான வேதனையும் உண்டு.'
(அந்நூர்: 23)
நபியவர்கள் கூறினார்கள்:
ஏழு பெரும் பாவங்களைத் தவிர்ந்து கொள்ளுங்கள். (அவற்றுள்) பத்தினித்தனமான விசுவாசமுள்ள பெண்கள் மீது அவதூறு கூறுவது(ம் ஒன்றாகும்).
(புகாரி : 2766, முஸ்லிம் : 89)

அவதூறுக்கான தண்டனை

அவதூறு கூறுபவர் உரிய முறையில் தம் குற்றச்சாட்டை நிரூபிக்கத் தவறும் வேளையில் அவர் மீது மூன்று சட்டங்கள் விதியாகின்றன.

1. எண்பது கசையடிகள் அடிக்க வேண்டும். அவ்வாறு அவதூறு கூறியவர்; அடிமையாக இருந்தால் நாட்பது கசையடிகள் மாத்திரமே அடிக்க வேண்டும். (இதில் ஆண் பெண் என்ற வேறுபாடு கிடையாது)

2. இனிவரும் காலங்களில் அவரின் சாட்சிகள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

3. அவருக்கு பாஸிக் - பாவி - என்று தீர்ப்பு வழங்கப்படும்.

இவ்வாறு அவதூறில் ஈடுபடுபவர் தண்டனையைப் பெற்றுக் கொண்ட பிறகு தவ்பாச் செய்தால் 2ம் 3ம் சட்டங்களில் கூறப்பட்ட அம்சங்களை விட்டும் நீங்கியவராகக் கருதப்படுவார். இக்கருத்தினை ஸயீத் இப்னு முஸய்யப் (ரஹ்) அவர்களும் ஆதரித்துள்ளார்கள்.
(தபரி 19/105)

இமாம் ஷாபி (ரஹ்) , ழஹ்ஹாக் (ரஹ்) ஆகியோர் கூறுகையில்: 'இத்தகையவர்களின் சாட்சிகள் இனிமேலும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டுமென்றால், அவர்கள் கூறிய அவதூறை இட்டுக்கட்டப்பட்டது என்று ஏற்றுக் கொள்ள வேண்டும்' என்கிறார்கள்.
(தபரி 19/103,108)

இன்ஷா அல்லாஹ் தொடரும்

by: ABU HUNAIF MUHAMMAD HISHAM IBNU MUHAMMAD TOUFEEK