ஷஃபான் மாதத்தின் நடுப்பகுதிக்குப் பிறகு நோன்பு நோற்க முடியாதா?

بسم الله الرحمن الرحيم

ஷஃபான் மாதத்தின் நடுப்பகுதிக்குப் பிறகு நோன்பு நோற்கத் தடை குறித்த ஒரு செய்தி நபியவர்களைத் தொட்டும் பதிவாகியுள்ளதே! அதன் நிலை குறித்து யாது கூறுகின்றீர்கள்? என்று அஷ்ஷெய்க் இப்னு பாஸ் ரஹிமஹுல்லாஹ் அவர்களிடத்தில் வினவப்பட்ட போது: "குறித்த செய்தி சகோதரர் அல்லாமா அல்பானி அவர்கள் கூறுவதைப்போன்று ஸஹீஹான செய்தியாகும். இங்கு ஹதீஸில் இடம்பெற்றுள்ள தடையானது ஷஃபானின் நடுப்பகுதிக்குப் பின் நோன்பு நோற்கத் தெரிவு செய்வதேயாகும். மாறாக, யார் மாதத்தில் அதிக நாட்கள் நோன்பு நோற்கும் வழமையுடையவராக இருக்கின்றாரோ அல்லது, மாதம் முழுவதும் நோன்பு நோற்கக்கூடியவராக இருக்கின்றாரோ, அவர் அந்த அடிப்படையில் ஷஃபான் மாதத்தில் நோன்பு நோற்பது சுன்னாவுக்கு நேர்பாடாக அமைகின்றது” என்கிறார்கள். (மஜ்மூஉ பதாவா அஷ்ஷெய்க் இப்னி பாஸ் 15/385)

மேலும், இவ்விடயம் குறித்து இப்னு உஸைமீன் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தனது ரியாளுஸ் ஸாலிஹீன் விளக்கவுரையில் (3/394) கூறும் போது: "இச்செய்தி ஸஹீஹான செய்தியாக இருந்தாலும் கூட குறித்த செய்தியில் இடம்பெறும் தடை ஹராத்தைக் குறிக்காது. மாறாக, வெறுக்கத்தக்கது என்பதை மட்டுமே குறிக்கும். இப்படியான விளக்கத்தையே சில உலமாக்கள் எடுத்துள்ளார்கள். அவ்வாறின்றி, எவருடைய வழமை தொடர் நோன்பு நோற்பதாக இருக்கின்றதோ, அவருக்கு ஷஃபானில் நோன்பு நோற்க முடியும். அது குறித்த மாதத்தின் நடுப்பகுதிக்குப் பிற்பட்ட நாட்களாக இருந்தாலும் சரியே!” என்கிறார்கள்.

அல்லாஹ் மிக அறிந்தவன்.

-   தமிழில்: அபூ ஹுனைப்