அஹ்லுஸ்ஸுன்னாவின் அகீதாவிலிருந்து – 13

بسم الله الرحمن الرحيم

04. அநியாயம் செய்தல்

அநியாயத்தைப் பொறுத்தவரை அல்லாஹ்வுக்கு இயலுமான ஒரு விடயமாக இருந்தும் அவன் அநியாயம் செய்தல் என்ற பண்பை தனக்கு இல்லையென்று கூறியிருக்கிறான். இப்படி மறுப்பது அநியாயத்தின் எதிர்ப்பண்பான அவனின் நீதத்தின் வெளிப்பாடாகும். அல்லாஹ் யாருக்காவது அநியாயம் செய்ய நாடினால் அவ்வநியாயத்தைத் தட்டிக்கேற்க இவ்வுலகில் யாரும் கிடையாது, யாருக்கும் எந்த அதிகாரமும் இல்லை. இதைத் தான் நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்விடத்தில் கூறினார்கள். (ஸுரதுல் மாஇதா 05:117-118)

நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களிடத்தில் அல்லாஹ் கேட்கிறான்: "மர்யமின்  மகனான ஈஸாவே! அல்லாஹ்வையன்றி என்னையும் என் தாயையும் இரு கடவுள்களாக எடுத்துக் கொள்ளும்படி நீ கூறினாயா? என்று அல்லாஹ் கேட்பான். அதற்கு நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நீ தூய்மையானவன் என்று கூறி பின்பு சில பதில்களைக் கூறுகிறார்கள். நீ அவர்களைத் தண்டித்தால் அவர்கள் உனது அடிமைகள் (நீதமாகத் தண்டித்தாலும் அநீதமாகத் தண்டித்தாலும் தட்டிக்கேட்க யாருக்கும் அருகதை இல்லை) நீ அவர்களை மன்னித்தால் நிச்சயமாக நீயே மிகைத்தவனும் ஞானமுடையவனுமாக இருக்கின்றாய்” என்று கூறினார்கள்.

படைப்புகள் மற்றவர் மீது அடந்தேர முடியாது என்ற பலவீனத்துக்காகவோ அல்லது, தன்னைவிட பலத்தில் கூடியவனாக எதிரி இருக்கிறான் என்ற காரணத்திற்காகவோ அநியாயம் செய்வதை விட்டுவிடுகிறான்.

ஆனால், அல்லாஹ் அவன் அநியாயம் செய்ய சக்தியிருந்தும் அநியாயம் செய்வதைத் தனக்குத் தானே ஹராமாக்கியுள்ளான்;. இப்படி தனக்குத் தானே ஹராமாக்குவது அநீதத்தின் எதிர் பண்பான அவனின் நீதத்தின் வெளிப்பாடாகும்.

05. சிறு தூக்கம், பெருந்தூக்கம் பீடிக்க மாட்டாது

அல்லாஹுத்தஆலா தூங்குபவனாக இல்லை. "அவனை சிறு தூக்கமோ உறக்கமோ பீடிக்காது” (அல்பகரா: 255) என்று கூறுகின்றான்.

இப்படி அல்லாஹ் தனக்கு சிறு தூக்கமே பெருந்தூக்கமோ ஏட்படுவதில்லை என்று மறுத்திருப்பது அவனின் வாழ்வு பூரணமானது, அவனின் கண்காணிப்பு, பராமரிப்பு பூரணமானது என்பதை எடுத்துக் காட்டுகிறது. அவனின் கண்காணிப்பிலிலுந்து யாருக்கும் தப்ப முடியாது, மறைந்துவிட முடியாது என்பதையும் எடுத்துக் காட்டுகின்றது.

அல்லாஹ்வின் கண்காணிப்பு சிறு தூக்கத்துடனோ பெருந்தூக்கத்துடனோ இணைந்ததல்ல. மாறாக, அக்கண்காணிப்பு பூரணமானது, பரந்து விரிந்தது. அல்லாஹ்வின் அடியார்களில் ஓர் அடியாரான லுக்மான் அலைஹிஸ்ஸலாம் தனது பிள்ளைக்குக் கூறும்போது: "என் அருமை மகனே! நிச்சயமாக (நன்மையோ தீமையோ) அது கடுகின் வித்தளவு இருந்து, அது ஒரு பாறைக்குள்ளேயோ அல்லது, வானங்களிலோ அல்லது, பூமியிலோ இருந்தாலும் அதையும் அல்லாஹ் கொண்டுவருவான் நிச்சயமாக அல்லாஹ் நுட்பமானவன், நன்கறிபவன்” என்று கூறினார்கள்.

ஆக, அல்லாஹ் தனக்கு தூக்கம் ஏட்படமாட்டாது என்று மறுத்திருப்பது அல்லாஹ்வின் கண்காணிப்பு, வாழ்வு பூரணமானது என்பதற்காகவேயாகும் என்று நாம் நம்புவோம்.

 06. களைப்பு, சோர்வு ஏற்பட மாட்டாது

அல்லாஹ் ஸுரா காப் (50:38) இல் "நிச்சயமாக நாம் வானங்களையும் பூமிகளையும் மற்றும், அவ்விரண்டுக்குமிடையில் உள்ளவற்றையும் ஆறு நாட்களில் படைத்தோம். எமக்கு எந்த சோர்வும் ஏற்படவில்லை” என்று கூறுகிறான்.

இவ்வசனம் அல்லாஹ் களைப்படையமாட்டான் சோர்வடையமாட்டான் என்று கூறுகிறது.

நாம் ஒரு பொருளை விட்டு அல்லது, ஒரு படைப்பை விட்டு குறித்த ஒரு பண்பை அல்லது, குறித்த ஒரு செயலை மறுப்பதாயின் இரண்டு காரணங்களுக்காக மறுப்போம்

01-  அதற்கு இயலாமை என்ற ஒன்று இருக்கிறது என்பதற்காக...

02-  அடிப்படையிலே அப்பொருள் அப்பண்பை ஏற்கக்கூடியதாக இல்லை என்பதற்காக...

உதாரணமாக: "பேனை களைப்படையாது” என்று கூறுவது. பேனை அடிப்படையில் களைப்பு என்ற பண்பை ஏற்காது என்றும், அவ்வார்த்தை பேனைக்கு புகழைச் சேர்ப்பதாக அமையாது என்றும் எமக்குத் தெரியும்.

ஆனால், அல்லாஹ்வைப் பொறுத்தவரை இவ்விரண்டு காரணங்களில் ஒன்றுக்காகத்தான் அவன் தனக்கு சில செயல்களையும் மற்றும் சில பண்புகளையும் மறுக்கிறான் என்று நாம் கூறமாட்டோம்.

மாறாக, அல்லாஹ் கூறுவது போன்று "அல்லாஹ்வுக்கு உயரிய பண்புகள் உள்ளன” (ஸுரதுந் நஹ்ல் 16:60) என்பதற்காகவும், அல்லாஹ்வுக்குப் புகழையும் பூரணத்தையும் சேர்க்கிறோம் என்பதற்காகவும் நாம் இதுபோன்ற குறையுள்ள பண்புகளை அல்லாஹ்வுக்கு மறுப்போம்.

07. படைப்புகளிடத்தில் எவையெல்லாம் குறையுள்ள பண்புகளாக இருக்கிறனவோ அப்படியான அனைத்துப் பண்புகளும் நிராகரிக்கத்தக்கன. உதாரணமாக நோய்வாய்ப்படுதல், பசியேற்படுதல்;;, தாகம் ஏற்படுதல்

அல்லாஹ் ஹதீஸுல் குத்ஸியில் கூறுகின்றான்: "ஆதமின் மகனே! நான் நோய்வாய்ப்பட்டேன், நீ என்னை நோய் விசாரிக்கவில்லை. ஆதமின் மகனே! நான் உன்னிடம் உணவு கேட்டேன், நீ எனக்கு உணவளிக்கவில்லை. ஆதமின் மகனே! நான் உன்னிடம் நீர் புகட்டும்படி வேண்டினேன், நீ எனக்கு நீர் புகட்டவில்லை...” என்று கூறுவான். (முஸ்லிம்: 2569)

இந்த ஹதீஸை வெளிப்படையாகப் பார்க்கும் போது அல்லாஹ் நோய்வாய்ப்படுகிறான், அவனுக்கு பசி, தாகம் ஏற்படுகின்றது என்று விளங்குகிறது. இது பிழையான விளக்கமாகும்.

மாறாக, இந்த ஹதீஸை முழமையாகப் பார்ப்போமேயானால் அல்லாஹ் நோயோ பசியோ தாகமோ அதே போல், படைப்புகளித்தில் எதுவெல்லாம் குறையான பண்புகளாக இருக்கின்றனவோ அப்படியானவைகளும் அல்லாஹ்வுக்கு ஏற்படுவதில்லை என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

அந்த ஹதீஸில் தொடர்ந்து அல்லாஹ் கூறுகிறான்: "என்னுடைய அடியானான இன்ன நபர் நோய்வாய்ப்பட்டான், நீ அவனை நோய்விசாரிக்கச் செல்லவில்லை என்பதை நீ அறியவில்லையா? என்னுடைய அடியானான இன்ன நபர் உன்னிடம் உணவு கேட்டான், நீ அவனுக்கு உணவளிக்கவில்லை என்பதை அறியவில்;லையா? என்னுடைய  இன்ன அடியான் உன்னிடம் நீர் புகட்டும்படி வேண்டினான், நீ அவனுக்கு நீர் புகட்டவில்லை என்பதை அறியமாட்டாயா?” என்று அல்லாஹ் மறுமையில் கேட்பான்"

ஆக, எமக்கு இப்படியான ஹதீஸ்கள் மூலம் படைப்புகளிடத்தில் எதுவெல்லம் குறையுள்ள பண்புகளாக இருக்கின்றனவோ அப்படியான பண்புகள் அல்லாஹ்வுக்கு இல்லை என்பதைப் புரிந்து கொள்ள முடியும். இப்படியான குறையுள்ள பண்புகளை நாம் அல்லாஹ்வுக்கு மறுப்போம்.

அல்லாஹ்வுக்கு பிள்ளையோ மனைவியோ கிடையாது. அல்லாஹுத்தஆலா, அவனுக்கு பிள்ளை இல்லை என்று மறுக்கும் போது: "அல்லாஹ் தனக்கென எந்தப் பிள்ளையையும் எடுத்துக் கொள்ளவில்லை. அவனுடன் வேறு எந்தக் கடவுளும் இல்லை, அவ்வாறாயின் ஒவ்வொறு கடவுளும் தான் படைத்தவற்றுடன் சென்று சிலர் சிலரை மிகைத்திருப்பர். அவர்கள் வர்ணிப்பதை விட்டும் அல்லாஹ் மிகத் தூய்மையானவன்”. (அல்முஃமினூன்: 91) என்று கூறுகின்றான்.

மேலும், (ஸுரா அல்அன்ஆம்: 101) "அவனே வானங்களையும் பூமியையும் எந்தவொரு முன்மாதிரியுமின்றிப் படைத்தான். அவனுக்கு மனைவி இல்லாதிருக்க அவனுக்குப் பிள்ளை எப்படி இருக்க முடியும்” என்று வினவுகின்றான்.

மேலும், ஸூரா மர்யம் 19:90-93 இல், வானங்கள் வெடித்து பூமி பிளந்து மலைகள் இடிந்து சிதறுண்டு விழப் பார்க்கின்றன. (அல்லாஹ்வாகிய) அர்ரஹ்மானுக்கு பிள்ளை இருப்பதாக அவர்கள் வாதாடியதே  இதற்குக் காரணமாகும். "ஒரு பிள்ளையை எடுத்துக்கொள்ள அர்ரஹ்மானுக்கு எந்த அவசியமும் இல்லை” என்று கூறுகின்றான்.

ஆக, அல்லாஹ்வுக்கு மனைவியோ பிள்ளையோ இல்லையென்றும் அது அவனுக்குத் தேவையில்லை என்றும் இது போன்ற குறையான அம்சங்கள் அல்லாஹ்வுக்கு இல்லையென்றும் நாம் ஈமான் கொள்வோம்;.

-    இன்ஷா அல்லாஹ் தொடரும்.

-    தொகுப்பு: அஹ்ஸன் இப்னு அபீபக்ர்