அல்அகீததுல் வாஸிதிய்யா விளக்கவுரை – 27

بسم الله الرحمن الرحيم

அல்லாஹ்வுக்குக் கூட்டுச் சேர்த்தலைத் தவிர்த்தல்

அல்லாஹ்வுக்குக் கூட்டுச் சேர்த்தலைத் தவிர்க்கக்கூடிய பல திருக்குர்ஆன் வசனங்களை இப்னு தைமியா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். அவற்றின் நிரலில்...

1.   “இன்னும் 'பிள்ளையை (தனக்கு) எடுத்துக் கொள்ளாதவனும் ஆட்சியில் தனக்குத் துணைவன் இல்லாதவனும் இழிவிலிருந்து (காக்க) அவனுக்கு உதவி செய்பவரே இல்லாதவனும் ஆகிய இத்தகைய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தாகுக' எனவும் (நபியே) நீர் கூறுவீராக! ஆகவே, (மாபெரும் மகத்துவத்திற்குரிய) அவனை மிகமிக பெருமைப்படுத்துவீராக!” (பனீ இஸ்ராயீல்: 111)

இவ்வசனத்தில் அல்லாஹ்வுக்கே புகழனைத்தும் உரியதாகவும் யூதர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் சில அரேபிய இணைவைப்பாளர்கள் கூறுவதைப் போன்று அவன் தனக்கொன்று எந்தப் பிள்ளையையும் எடுத்துக் கொள்ளவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், பல கடவுள் கோட்பாட்டைக் கூறக்கூடிய அஸ்ஸனவிய்யாக்கள் போன்ற பிரிவினர்கள் கூறுவதைப் போன்று கூறுவதைத் தவிர்த்து, ஆட்சி அதிகாரத்தில் அவனுக்கு யாதொரு துணையுமில்லை என்றும் மேற்கோந்த வாசனத்தில் கூறப்பட்டுள்ளது.

குறிப்பு: ஸனவிய்யா என்பது நெருப்பு வணங்கிகளின் மதக் கோட்பாடாகும். இப்பிரிவினர் உலகமானது உருவாக்கப்பட்டது என்றும், மிகப் பழமை வாய்ந்த நெருப்பு மற்றும் இருள் ஆகிய இரு அடிப்படைகளைக் கொண்டு பின்னிப் பிணைந்துள்ளது என்றும் கூறுகின்றனர். (அல்மிலல் அந்நிகல்: 2/72)

அதேநேரத்தில் எந்தவொரு பொறுப்புதாரர் அல்லது அமைச்சர் போன்றோரின் பால் தேவையுடையவனாக அல்லாஹ் இருப்பதற்கு அவன் தாழ்ந்தவனும் அல்லன். மேலும், அவன் யாரிடத்திலும் உதவியை எதிர்பார்த்தவனும் அல்லன். எனவே, அநியாயக்காரர்கள் கூறுவதை விட்டும் அவனை நாம் தூய்மைப்படுத்த வேண்டும் என்று அவன் பணிக்கின்றான்.

2.   “வானங்களிலுள்ளவையும் பூமியிலுள்ளவையும் அல்லாஹ்வைத் துதி செய்கின்றன. ஆட்சி அவனுக்கே உரியது. மேலும், புகழனைத்தும் அவனுக்கே உரியது. மேலும், அவன் ஒவ்வொரு பொருளின் மீதும் மிக்க ஆற்றலுடையவன்”. (அத்தகாபுன்: 01)

இவ்வசனத்தில் வானங்கள் மற்றும் பூமியில் உள்ள அனைத்தும் எல்லா வகையான குறைகளை விட்டும் அவனைத் துதி செய்வதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், ஆட்சி அதிகாரம், புகழ் ஆகிய இரண்டும் அவனுக்கு மாத்திரமே உரியன. மாற்றமாக, அடியார்களிடத்தில் காணப்படும் அதிகாரமானது, அது அவனால் கொடுக்கப்பட்ட ஒன்றே! இன்னும், அவனை எந்த ஒன்றும் இயலாமல் செய்துவிடாது ஆகிய தகவல்கள் இவ்வசனத்தில் பதிவாகியுள்ளன.

3.   “தன் அடியார் (முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின்) மீது (அசத்தியத்திலிருந்து சத்தியத்தைப் பிரித்தறிவிக்கும்) புர்கானை அது அகிலத்தாருக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யக்கூடியதாக ஆவதற்காக இறக்கிவைத்தானே அத்தகையோன் மிகப் பாக்கியமுடையவன். (இவ்வேதத்தை அருட் செய்தவன்) எத்தகையோனென்றால் வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அவனுக்கே உரியது. அவன் (தனக்கென) மகனை எடுத்துக் கொள்ளவுமில்லை. (அவனுடைய ) ஆட்சியில் அவனுக்குக் கூட்டுக் காரரும் இல்லை. அவனே ஒவ்வொரு பொருளையும் படைத்தான். பிறகு அதனதன் முறைப்படி அதைச் சரியாக அமைத்தான்”. (அல்புர்கான்: 1,2)

இமாம் இப்னு கஸீர் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறும் போது: “அல்லாஹ் தனக்கு மகன் மற்றும் கூட்டுக்காரரை எடுத்துக் கொள்வதை விட்டும் தன்னைத் தூய்மைப்படுத்தியுள்ளான். பிறகு அவன் அனைத்து வஸ்துக்களையும் படைத்து முறைப்படி அவற்றைச் சரி செய்ததாகக் கூறுகின்றான். அதாவது, அவனல்லாத அனைத்தும் படைக்கப்பட்டவையாகவும் அவனுடைய கண்காணிப்பின் கீழ் உள்ளவையாகவும் கூறுகின்றான். எனவே, அவனே அனைத்து வஸ்துக்களையும் படைத்தவனாகவும் அவற்றின் இரட்சகனாகவும் அவற்றில் ஆட்சி அதிகாரம் செலுத்துபவனாகவும் இருக்கின்றான். மேலும், அனைத்து வஸ்துக்களும் அவனுடைய அடக்கியாளும் வல்லமைக்குக் கீழால் இருக்கின்றன' என்கிறார்கள்”. (தப்ஸீர் இப்னு கஸீர்: 4/582)

4.   “அல்லாஹ் எந்த ஒரு மகனையும் (தனக்குச் சந்ததியாக) எடுத்துக் கொள்ளவில்லை. அவனுடன் (வணக்கத்திற்குரிய வேறு எந்த) நாயனும் இல்லை. (அவர்கள் கற்பனையின் படி) அவ்வாறிருப்பின் ஒவ்வொரு நாயனும் தான் படைத்ததைக் கொண்டு சென்றுவிடுவர். இன்னும், தம்மில் சிலர் சிலரை (மிகைத்து) உயர்ந்தும் விடுவர். இ(ந்நிராகரிப்ப)வர்கள் வர்ணிப்பவற்றைவிட்டும் அல்லாஹ் மிகத் தூயவன். (அவன்) மறைவானதையும் பகிரங்கமானதையும் நன்கறிந்தவன். இவர்கள் இணைவைப்பவைகளை விட்டும் அவன் மிக்க உயர்ந்தவன்”. (அல்முஃமினூன்: 91, 92)

இவ்வசனத்திலும் அல்லாஹ் தனது ஆட்சி அதிகாரம் மற்றும் வணக்க வழிபாடுகள் அனைத்திலும் தன்னுடன் கூட்டுச் சேர மகனோ அல்லது பங்குதாரரோ இல்லை என்று பிரஸ்தாபிக்கின்றான். அப்படி பல கடவுள்கள் இருக்கிறார்கள் என்று ஒரு வாதத்திற்கு எடுத்துக் கொண்டாலும் அவர்களில் ஒவ்வொருவரும் தன்னுடைய படைப்பினங்களோடு சுருக்கிக் கொள்வார்கள். இப்டியான நிலைமை நீடிக்கும் போது உலகத்தின் செயற்பாடுகள் ஒழுங்கீனமாக ஆகிவிடும். மாற்றமாக, நாம் கண்கூடாகப் பார்ப்பதைப் போன்று உலகம் ஒரு சீராண அமைப்பில் இயங்கிக் கொண்டிருக்கின்றது. இந்நிலை பல கடவுள்கள் இல்லை என்பதை எமக்கு உணர்த்துகின்றது.

அதேபோன்று மேற்கூறப்பட்ட வசனத்தில் குறிப்பிடப்பட்டதைப் போன்று அவ்வாறு பல கடவுள்கள் இவ்வுலகை ஆட்சி புரிந்தால், ஒவ்வொரு கடவுளும் மற்றக் கடவுளை அடக்குவதற்கும், முரண்பட்டு நடப்பதற்குமே முயற்சி எடுக்கும். உலகில் காணப்படும் அரசர்களைப் போன்று சிலர் சிலரை விட மேலோங்கிச் செல்லவே எத்தணிப்பர். அப்படியான நிலை காணப்படுமிடத்து பலவீனப்படுத்தப்பட்ட கடவுள், கடவுள் என்ற இஸ்தானத்திற்குத் தகுதியற்றவராகவே காணப்படுவார். எனவே, அல்லாஹ் தனக்கு உதவியாக மகன் அல்லது கூட்டாளி போன்றோரை ஏற்படுத்துவதை விட்டும் தூய்மையானவன்.

5.   “ஆகவே அல்லாஹ்வுக்கு நீங்கள் உதாரணங்களைக் கூறாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் (சகலவற்றையும்) அறிவான். நீங்களோ அறிய மாட்டீர்கள்”. (அந்நஹ்ல்: 74)

உதாரணம் கூறுதல் என்பது ஒரு நிலைக்கு மற்றொரு நிலையை ஒப்பாக்குதலாகும். அக்கால இணைவைப்பாளர்கள், நிச்சயமாக அல்லாஹ்வை எங்களில் ஒருவர் வணங்குவதை விட்டும் அவன் தூய்மையானவன். எனவே, அவசியம் எங்களுக்கும் அவனுக்கும் மத்தியில் ஒர் இடைத்தரகரை ஏற்படுத்தியே ஆக வேண்டும் என்று கூறி, அவர்கள் இதற்காக சிலைகளையும் அவையல்லவற்றையும் இடைத்தரகர்களாக எடுத்துக் கொண்டார்கள். இந்நடவடிக்கையை உலகில் காணப்படும் மன்னர்களுக்கு ஒப்பாகக் கருதி மேற்கொண்டார்கள். ஆனாலும், அவ்வொப்புவமை அல்லாஹ்வுக்குப் பொருந்தாது. அல்லாஹ்வுக்கு உதாரணம் இல்லை என்பதை அவன் நன்கறிவான். ஆனாலும், அவர்களின் இச்செயல் வெறும் பிழையான சிந்தனையின் வெளிப்பாடாகும். இத்தகையவர்கள் சிலை வணக்கதின் இறுதிப் பேறை அறியாதவர்களாக இருக்கின்றார்கள்.

6.   “என்னுடைய இரட்சகன் (ஆகாதென்று) தடுத்திருப்பதெல்லாம் 'மானக்கேடான செயல்களை அவற்றில் வெளிப்படையானதையும் மறைமுகமானதையும் (இதர) பாவத்தையும் உரிமையின்றி வரம்பு மீறுதலையும் அல்லாஹ்வுக்கு நீங்கள் இணைவைப்பதையும் அதற்கு எந்தவித ஆதாரத்தையும் அவன் இறக்கிவைக்காதிருக்க, இன்னும் நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்வின் மீது (பொய்யாகக்) கூறுவதையும் தான்' என்று (நபியே) நீர் கூறுவீராக” (அல்அஃராப்: 33)

இவ்வசனத்தில் அல்லாஹ் தன்னுடைய நபியை நோக்கி சில ஆகாத காரியங்களை இனங்காட்டி அவற்றை மேற்கொள்ளக்கூடாது என்று பணித்துள்ளான். அவற்றின் வரிசையில் நாம் அலசிக் கொண்டிருக்கும் அல்லாஹ்வுக்கு இணை ஒன்றை ஏற்படுத்துவதும் உள்ளடங்குகின்றது. இப்படியான இணையை நியாயப்படுத்தக் கூடிய எவ்வித ஆதாரத்தையும் அவன் ஏற்படுத்தாதிருக்க இத்தகைய செயலில் ஈடுபடுவது மிகப் பாரதூரமான குற்றமாகும்.

எனவே, அன்பார்ந்த வாசகர் நெஞ்சங்களே! மேற்கூறப்பட்ட திருக்குர்ஆன் வசனங்கள் அனைத்தையும் ஒருமித்து நோட்டமிடும் போது அவற்றில் இணைவைப்பு முற்றிலும் தடுக்கப்பட்டிருப்பதை அவதானிக்கலாம். மேலும், அவனுடைய ஒருமைத்துவத்தைப் பூரணத்தைக் கொண்டு உறுதிப்படுத்த வேண்டும் என்பதையும் புரிந்து கொள்ளலாம். மேலும், இவ்வசனங்களில் இணைவைப்பைத் தகர்த்தெரியக்கூடிய ஆதாரங்களும் நிலைநாட்டப்பட்டுள்ளன. மாற்றமாக, இணைவைப்பானது வெறுமனே மடமை, கற்பனை ஆகியவற்றைக் கொண்டு கட்டப்பட்டுள்ளது. எமது இரட்சகன் அல்லாஹ்வுக்கு எந்த உதாரணமும் ஒப்புவமையும் கிடையாது. அல்லாஹ் மிக அறிந்தவன்.

-    இன்ஷா அல்லாஹ் தொடரும்

-    அபூஹுனைப்