ஸூரதுன் நூர் விளக்கவுரை – 2

அந்நூர் அத்தியாயம் குறித்த பெயர் கொண்டு அழைக்கப்பட்டமைக்கான காரணம்.

இம்மகத்துவமிக்க அத்தியாயம் 'அல்லாஹ் வானங்கள் மற்றும் பூமியின் பிரகாசமாக இருக்கிறான்.' (அந்நூர்: 35) என்ற வசனத்தை அடிப்படையாகக் கொண்டு 'அந்நூர்' என்ற நாமத்தைப் பெறுகின்றது.

இப்படி குறித்த ஓர் அத்தியாயத்தில் இடம்பெறும் சட்டம் அல்லது சம்பவம் அல்லது செய்தி போன்றவற்றை மையமாக வைத்து அவ்வத்தியாயத்திற்குப் பெயர் சூட்டும் வழமை அல்குர்ஆன் மற்றும் நபிகளாரது வழிமுறையில் கடைபிடிக்கப்பட்டுவந்த ஓர் அம்சமாகும்.

அந்நூர் அத்தியாயத்தின் துவக்கத்தில் உள்ள சிறப்பம்சம்

அல்லாஹுத்தஆலா இவ்வத்தியாயத்தின் சிறப்பை அடியார்களுக்கு உணர்த்தும் விதமாக இதன் துவக்கத்தைப் பின்வருமாறு அமைத்துள்ளான்.

سورة أنزلناها وفرضناها وأنزلنا فيها ءايات بينات لعلكم تذكرون 1

பொருள்: (இது) ஓர் அத்தியாயம் இதனை நாம் இறக்கிவைத்தோம் இதனை (இதிலுள்ள சட்டங்களை உங்கள் மீது) நாமே விதியாக்கினோம் இன்னும் (இதனைக் கொண்டு) நீங்கள் நல்லுபதேசம் பெறுவதற்காக இதில் தெளிவான வசனங்களை நாம் இறக்கி வைத்தோம்.

மேலும், இப்படியான துவக்கமுறையானது ஏனைய அத்தியாயங்களைவிட இவ்வத்தியாயத்திற்கு இருக்கின்ற சிறப்பை எடுத்துக்காட்டுகின்றது.

'இதனை (இதிலுள்ள சட்டங்களை உங்கள் மீது) நாமே விதியாக்கினோம்.' என்ற பகுதிக்கான விளக்கம்.

இமாம்களான முஜாஹித் மற்றும் கதாதா (ரஹிமஹுமல்லாஹ்) அவர்கள் கூறினார்கள்:

'ஹலால் ஹராம், ஏவல் விலக்கல் மற்றும் குற்றவியல் சட்டங்கள் ஆகியவற்றை (இதிலே நாம்) தெளிவுபடுத்தியுள்ளோம்; (என்பதுவே இதன் விளக்கமாகும்)' என்கிறார்கள்.

தப்ஸீருத் தபரி – (19:89) துர்ருல் மன்ஸூர் - (6:124)

இமாம் புகாரி (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் இவ்வத்தியாயத்தை ஓதுபவர் தொடர்பாகக் கூறும்போது:

'யார் இவ்வத்தியாயத்தை ஓதிகிறாரோ, அவரின் மீதும் அவருக்குப் பின்னால் வரக்கூடிய அனைவர்கள் மீதும் இதில் கூறப்பட்டுள்ள சட்டங்கள் விதியாக்கப்பட்டுவிட்டன' என்கிறார்கள்.

(பத்ஹூல் பாரி – (8:301)

'நீங்கள் நல்லுபதேசம் பெறுவதற்காக...' என்ற பகுதிக்கான விளக்கம்.

பொதுவாக, அல்குர்ஆன் விடயத்தில் மனிதர்கள் மூன்று கட்டங்களை அடைந்து கொள்வார்கள்:

1. அல்குர்ஆனைச் செவிமடுத்தலுடன் தொடர்புடைய கட்டம்.
2. அதன் பொருளை விளங்குதல் மற்றும் அதனை ஆராய்ந்து பார்த்தலுடன் தொடர்புடைய கட்டம்.
3. அவ்வாராய்ச்சிக்குத் தக்கவிதத்தில் செயற்படுத்துதலுடன் தொடர்புடைய கட்டம்.

இச்செயற்பாடுகளைப் பிரதிபலிக்கும் முகமாக அல்லாஹுத்தஆலா பின்வருமாறு பிரஸ்தாபிக்கின்றான்:

'எவருக்கு (அவர்களை அழித்தது பற்றி சிந்தித்துணரும்) உள்ளமிருக்கிறதோ அவருக்கு, அல்லது மனமுவந்தவராக செவிசாய்க்கின்றாரோ அவருக்கு நிச்சயமாக இதில் (நல்ல) படிப்பினை இருக்கின்றது.'

(காப்: 37)

இன்ஷா அல்லாஹ் தொடரும்

by: ABU HUNAIF MUHAMMAD HISHAM IBNU MUHAMMAD TOUFEEK