ரியாளுஸ்ஸாலிஹீன் விளக்கவுரை – 07

بسم الله الرحمن الرحيم

உளத்தூய்மை பற்றிய அல்குர்ஆன் வசனங்களுக்கான விளக்கங்கள்

முதல் வசனம்:

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: “அல்லாஹ்வுக்கு மார்க்கத்தைத் தூய்மையாக்கியவர்களாக, கலப்பற்றவர்களாக அவர்கள் அல்லாஹ்வை வணங்க வேண்டும். மேலும், தொழுகையை நிலைநாட்ட வேண்டும், மேலும், ஸகாத்தைக் கொடுக்க வேண்டும் என்பதைத் தவிர அவர்கள் கட்டளையிடப்படவில்லை”. (அல்பய்யினா: 05)

விளக்கம்

இவ்வசனம் மத ஒற்றுமையின் பால் அழைப்பு விடுப்பவர்களுக்கு மறுப்பளிக்கின்றது. “மார்க்கத்தைத் தூய்மையாக்கியவர்களாக” என்ற வாசகமே இதற்கு மறுப்பாக அமைந்துள்ளது.

மேலும், அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: “எவர் இஸ்லாம் அல்லாத வேறு ஒரு மார்க்கத்தைத் தேடுகின்றாரோ அவரிடமிருந்து அது ஒப்புக்கொள்ளப்படமாட்டாது. அவர் மறுமையில் நஷ்டமடைந்தோரில் ஆகிவிடுவார்”. (ஆலுஇம்ரான்: 85)

மேலும் அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: “நிச்சயமாக அல்லாஹ்விடம் ஏற்றுக்கொள்ளப்பட்ட மார்க்கம் இஸ்லாமேயாகும்”. (ஆலுஇம்ரான்: 19)

மேலும் அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: “உங்களுக்கு நான் இஸ்லாத்தையே மார்க்கமாகப் பொருந்திக் கொண்டுள்ளேன்”. (அல்மாஇதா: 03)

மேற்குறிப்பிடப்பட்ட வசனங்கள் யாவுமே மத ஒற்றுமை ஒரு பிழையான கோட்பாடு என்பதை நிரூபிக்கின்றன.

இமாம் தபரீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் ஆரம்பத்தில் நாம் கூறிய வசனத்திற்குப் பின்வருமாறு விளக்கமளித்துள்ளார்கள்: “வேதம் வழங்கப்பட்டவர்களாகிய யூதர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் மார்க்கத்தை அல்லாஹ்வுக்கே தூய்மையாக்கியவர்களாக அன்றி அவனை வணங்க வேண்டும் என்பதைத் தவிர ஏவவில்லை. 'மார்க்கத்தை அவனுக்கே தூய்மைப்படுத்தியவர்களாக' என்பதன் விளக்கமாகிறது: இணைவைப்புடன் கலந்துவிடாமல் அல்லாஹ் ஒருவனுக்கு மாத்திரமே வழிப்படுவதாகும். யூதர்களைப் பொறுத்தவரையில், 'உஸைர் (அலைஹிஸ்ஸலாம்) அல்லாஹ்வின் மகனாவார்' என்ற வார்த்தையின் மூலம் அல்லாஹ்வுக்கு இணைகற்பித்தார்கள். கிறிஸ்தவர்களைப் பொறுத்தவரையில், 'ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அல்லாஹ்வின் மகனாவார்' என்ற வார்த்தையின் மூலம் அல்லாஹ்வுக்கு இணைகற்பித்தார்கள். மேலும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது தூதுத்துவத்தை மறுத்ததன் காரணமாகவும் அவர்கள் நிராகரிப்பில் சென்றுவிட்டனர்”. (தப்ஸீர் அத்தபரி)

அல்லாஹுத்தஆலா யூதர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் அவனை வணங்குமாறு கட்டளையிட்டிருந்தான் என்பதற்குப் பின்வரும் அல்குர்ஆன் வசனம் சான்றாகும். அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: “நீங்கள் அல்லாஹ்வை வணங்க வேண்டும், அல்லாஹ்வையன்றி வணங்கப்படுபவற்றை வணங்குவதை விட்டும் நீங்கள் தவிர்ந்திருக்க வேண்டும் என்று ஏவிய பிரகாரம் ஒவ்வொரு சமுதாயத்திலிருந்தும் நாம் ஒரு தூதரை நிச்சயமாக அனுப்பியுள்ளோம்”. (அந்நஹ்ல்: 36)

இமாம் ஷவ்கானி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் ஆரம்பத்தில் கூறப்பட்ட வசனத்திற்கு பின்வருமாறு விளக்கமளிக்கின்றார்கள்: “வணக்க வழிபாடுகளில் நிய்யத் அவசியம் காணப்பட வேண்டும் என்பதற்கு மிகத் தெளிவான ஆதாரமாக இவ்வசனம் அமைந்துள்ளது. ஏனெனில், உளத்தூய்மை என்பது உள்ளத்தில் ஏற்படக்கூடிய ஒன்றாகும்”. (பத்ஹுல் கதீர்)

இரண்டாவது வசனம்:

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: “அதனுடைய மாமிசங்களோ இரத்தங்களோ அவனை சென்றடையமாட்டாது. மாறாக, உங்களிடம் ஏற்படக்கூடிய இறையச்சமே அவனை சென்றடையும்”. (அல்ஹஜ்: 37)

விளக்கம்

இப்னு கஸீர் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இவ்வசனத்திற்குப் பின்வருமாறு விளக்கமளிக்கின்றார்கள்: “நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு இந்த ஹதி, உழ்ஹிய்யா அறுப்புப் பிராணிகளை அறுத்துப்பலியிடுமாறு கட்டளையிட்ட நோக்கம் அதனை அறுக்க முற்படும்போது நீங்கள் அவனை நினைவு கூறவேண்டும் என்பதேயாகும். ஏனெனில், அவனே படைப்பாளனும் ரிஸ்க் வழங்குபவனுமாக இருக்கின்றான். அறுக்கப்பட்ட பிராணிகளின் மாமிசங்கள் மற்றும் இரத்தங்களில் எந்தவொன்றும் அவனைச் சென்றடையாது. ஏனெனில், அவன் அனைத்து விடயங்களை விட்டும் தேவையற்றவனாக உள்ளான். ஜாஹிலிய்யாக் கால மக்கள் அவர்களது கடவுள்களுக்காகப் பிராணிகளை அறுத்துப்பலியிட்டால் அக்கடவுள்களின் மீது அறுப்புப் பிராணியின் மாமிசங்களை வைப்பார்கள். மேலும், அவற்றில் அதனுடைய இரத்தத்தைத் தெளிப்பார்கள். எனவேதான், அல்லாஹுத்தஆலாவிடத்தில் அதனுடைய மாமிசங்களோ இரத்தங்களோ சென்றடையமாட்டாது. மாறாக, உங்களிடம் ஏற்படக்கூடிய இறையச்சமே அவனைச் சென்றடையும் என்ற வசனத்தைக் கூறினான்”. (தப்ஸீர் இப்னு கஸீர்)

மூன்றாவது வசனம்:

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: “(நபியே!) 'நீங்கள் உங்கள் உள்ளங்களில் உள்ளவற்றை மறைத்தாலும் அல்லது, அவற்றை வெளிப்படுத்தினாலும் அவற்றை அல்லாஹ் அறிந்து கொள்வான்' என்று (மக்களிடம்) கூறுங்கள்”. (ஆலுஇம்ரான்: 29)

விளக்கம்

இப்னு கஸீர் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்: “அல்லாஹுத்தஆலா இரகசியங்களையும் மறைவானவற்றையும் வெளிப்படையானவற்றையும் அறிகின்றான். மேலும், அடியார்களில் மறைந்துவிடக்கூடிய எதுவும் அவனிடம் மறைந்துவிடாது. மாறாக, அவனுடைய அறிவு அவர்களை அனைத்து நிலைகளிலும் காலங்களிலும் நாட்களிலும் மற்றும் நேரங்களிலும் சூழ்ந்து கொள்கின்றது. அவன் வானங்களில் உள்ளவற்றையும் பூமியில் உள்ளவற்றையும் ஒன்று சேர்ப்பான். அவற்றில் அவனை விட்டும் எறும்பினளவோ அல்லது அதைவிடச் சிறியளவோ பூமியின் அனைத்துப் பாகங்களில் கடல்களில் மற்றும் மலைகளில் மறைந்துவிடாது. இவற்றை அல்லாஹுத்தஆலா (இவ்வசனத்தில்) தனது அடியார்களுக்கு அறிவித்துள்ளான்”. (தப்ஸீர் இப்னு கஸீர்)

மேற்கூறப்பட்ட வசனம் வணக்க வழிபாடுகளில் நிய்யத்தை நாவினால் மொழிய வேண்டும் என்று கூறுவோருக்கு சிறந்த மறுப்பாக அமைந்துள்ளது. அல்லாஹ் இரகசியங்களையும் வெளிப்படையானவற்றையும் அறிந்து கொள்கிறான். எனவே, நிய்யத்தை நாவினால் மொழிவதற்கு அவசியமில்லை. ஒரு மனிதன் நல்ல நிய்யத்தை நாவினால் மொழிந்து பின்பு இடையில் ஷைத்தான் அவனுக்கு அந்த வணக்கத்தை அலங்கரித்துக் காண்பிப்பதன் மூலம் அவன் முகஸ்துதியுடையவனாக மாறும் பட்சத்தில் அவனுடைய நிய்யத்திற்கேற்பவே கூலியும் அமையும். அவன் ஆரம்பத்தில் மொழிந்த நிய்யத் நல்லதாக அமைந்தபோதிலும் சரியே!

வணக்க வழிபாடுகளின்போது நிய்யத்தை வாயால் மொழிவது கூடாது, அது பித்அத்தாகும் என்பதற்குப் பின்வரும் ஹதீஸ்கள் ஆதாரங்களாக அமைந்துள்ளன.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிழையான அமைப்பில் தொழுத ஒவருக்கு சரியான தொழுகை அமைப்பைக் கற்றுக் கொடுக்கும்போது அவரைப் பார்த்து: “நீ தொழுகைக்காக எழுந்தால் தக்பீர் கூறு!” என்று கூறினார்கள். (புஹாரி)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “அல்லாஹு அக்பர்” என்பதன் மூலமே தொழுகையை ஆரம்பிக்குமாறு அம்மனிதருக்குக் கட்டளையிட்டார்கள். அவரைப் பார்த்து “நிய்யத்தை நாவினால் கூறு!” என்று ஒருபோதும் கட்டளையிடவில்லை.

ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறுகின்றார்கள்: “நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகையைத் தக்பீரைக் கொண்டே ஆரம்பிப்பார்கள்”. (முஸ்லிம்)

இச்செய்தியும் கூட தக்பீரின் மூலமே தொழுகை ஆரம்பிக்கப்பட வேண்டும் என்பதை உறுதிப்படுத்துகின்றது. எனவே, ஒவ்வொரு வணக்கத்தின் போதும் நிய்யத் நாவினால் மொழியப்பட வேண்டும் என்பது மேற்கூறப்பட்ட நபிமொழிகளுக்குப் புறம்பாக அமைந்திருக்கின்றது.

எமது மார்க்க அறிஞர்கள் இக்காரியத்தை பித்அத் என்று தீர்ப்பாகக் கூறியுள்ளார்கள். அவர்களில் சிலரின் மார்க்கத் தீர்ப்புக்கள் பின்வருமாறு:

1. இமாம் இப்னு தைமியா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்: “முஸ்லிம்களின் ஏகோபித்த முடிவின்படி நிய்யத்தை பகிரங்கப்படுத்துவது கட்டாயமான ஒன்றுமல்ல, மற்றும் விரும்பத்தக்க ஒன்றுமல்ல. மாறாக, நிய்யத்தை பகிரங்கப்படுத்துபவர் பித்அத்வாதியாவார், மார்க்கத்திற்கு முரணாகச் செயற்பட்டவராவார். இவ்வாறு மார்க்கத்தில் உண்டு என நம்பியவராக இதை ஒருவர் செய்தால் அவர் ஒரு மடையராவார், வழிகெட்ட ஒருவருமாவார். ஒழுக்கமூட்டப்படுவதற்கும் அவர் தகுதியானவராவார். அவ்வாறு இல்லையென்றால் அதற்காக வேண்டி அவர் தண்டிக்கப்படுவதற்குத் தகுதியடைவார்”. (அல்பதாவா அல்குப்ரா: 2/213)

2. அஷ்ஷெய்க் இப்னு பாஸ் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்: “நிய்யத்தை வாயால் மொழிவது பித்அத்தாகும். அதை பகிரங்கமாகக் கூறுவது பாவத்தில் கடுமையானதாகும். உள்ளத்தால் நிய்யத் வைப்பதே சுன்னாவாகும். ஏனென்றால், அல்லாஹ் இரகசியத்தையும் மறைவானவற்றையும் அறியக்கூடியவனாக இருக்கின்றான். அவனே பின்வருமாறு கூறுகின்றான்: “நபியே! நீங்கள் அல்லாஹ்வுக்கே உங்களுடைய மார்க்கத்தைக் கற்றுக் கொடுக்கின்றீர்களா? அல்லாஹ்வோ வானங்களில் உள்ளவற்றையும் பூமியில் உள்ளவற்றையும் அறியக்கூடியவனாக இருக்கின்றான் எனக்கூறுங்கள்”.

நிய்யத்தை வாயால் மொழிவது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைத் தொட்டோ அவர்களுடைய தோழர்களில் ஒருவரைத்தொட்டோ பின்பற்றப்பட்ட இமாம்களைத் தொட்டோ உறுதி செய்யப்படவில்லை. ஆகவே, இது மார்க்கத்தில் இல்லாத ஒன்று என்பதை இதன் மூலம் அறியப்பட்டுவிட்டது. மாறாக, இது உருவாக்கப்பட்ட பித்அத்களில் ஒன்றைச் சார்ந்ததாகும்”. (மஜ்மூஉ பதவா இப்னி பாஸ்: 10ம் பாகம்)

-    இன்ஷா அல்லாஹ் தொடரும்.

-    அஸ்கி இப்னு ஷம்சிலாப்தீன்