அஹ்லுஸ்ஸுன்னாவின் அகீதாவிலிருந்து – 11

بسم الله الرحمن الرحيم

அல்லாஹ்வின் பெயர்கள், பெயர்களும் பண்புகளுமாகும் என்றும், அவைகள் வெறும் பெயர்கள் மாத்திரம் கிடையாது என்றும் விசுவாசம் கொள்கிறோம்.

அல்லாஹ்வின் பெயர்கள் அனைத்தும் அவனின் தோற்றத்தைக் கவனிக்கும் போது அல்லாஹ் என்ற ஒருவனுக்கு மாத்திரம் உரிய பெயராகவே இருக்கின்றன. அப்பெயர்களின் கருத்துக்களைக் கவனிக்கும் போது அல்லாஹ்வுக்குரிய பலதரப்பட்ட பண்புகளாகவும் அவைகள் இருக்கின்றன. அவனின் ஒவ்வொரு பெயரும் தனித்தனியான பண்புகளை அறிவிக்கின்றது.

உதாரணமாக: அல்ஹய், அல்அலீம், அல்கதீர், அர்ரஹ்மான், அர்ரஹீம் போன்றவை அல்லாஹ் ஒருவனின் பெயர்களாகும்.

இவைகளின் கருத்துக்களைக் கவனிக்கும் போது அல்அலீம் (அனைத்தையும் அறிந்தவன்) என்ற கருத்து, அல்ஹய்யுன் (என்றும் உயிருள்ளவன்) என்ற கருத்தில் இருந்தும் வேறுபட்டதாக இருக்கின்றது. இவ்வாறே அனைத்துப் பெயர்களும் தோற்றத்தைக் கவனிக்கும் போது அல்லாஹ் ஒருவனின் பெயராகவும், கருத்துக்களைக் கவனிக்கும் போது அல்லாஹ் ஒருவனுக்கு இருக்கின்ற பல பண்புகளாகவும் காணப்படுகின்றன.

அல்லாஹ் தன்னைப் பற்றிப் பெயராகக் கூறும் போது: 'அவன் மன்னிப்பவனும் இரக்கமுள்ளவனும் ஆவான்” என்று கூறுகிறான்.

அல்லாஹ், மேற்கூறிய அவனின் பெயரை பண்பாகக் கூறும் போது: 'உமது இரட்சகன் மன்னிப்பவன், இரக்கம் உடையவன்” என்று கூறுகிறான்.

சிலவேளை, ஒரு மனிதனின் பெயர் ஜமீல் (அழகானவன்) என்று இருக்கும் ஆனால், அவன் அழகற்;றவனாக இருப்பான். இதற்கு மாற்றமாக அல்லாஹ்வின் பெயர்கள், பெயர்களாகவும் பண்புகளாகவும் இருக்கின்றன என்று ஈமான் கொள்கிறோம்.

அல்லாஹ்வின் விடயத்தில் பெயர்கள் நான்கு வகைப்படும்:

முதலாவது: சில பெயர்கள் எந்த முறையில் பார்த்தாலும் பொதுவாகவே பூரணத்துவத்தை அறிவிக்கும். இவ்வகைக்கு ثُـبُـوْتِـيَّـةُ  (ஸுபூதிய்யா) என்று கூறப்படும். இவ்வகைப் பெயர்களை அல்லாஹ்வுக்குப் பெயராகவும் பண்பாகவும் கூறுவோம்.

உதாரணமாக: التواب (மிக்க மன்னிப்பவன்) என்ற பதத்தைப் பெயராகவும் அல்லாஹ் மன்னிக்கின்றான் என்று பண்பாகவும் கூறுவோம்.

இரண்டாவது: பொதுவாகக் குறையை அறிவிக்கும் பெயர்கள். இவ்வகைப் பெயரிலும் பண்பிலும் பூரணம் இருக்காது. இப்படியான பெயர்களை அல்லாஹ்வுக்குப் பெயராகவும் பண்பாகவும் கூறமாட்டோம். இதற்கு سَـلْـبِـيَّـةُ  (ஸல்பிய்யா) என்று அரபியில் கூறப்படும்.

உதாரணமாக: இயலாதவன், ஏழ்மையானவன். இப்படியான குறையுள்ள பெயர்கள் அல்லாஹ்வுக்குப் பெயராகவோ செயல் சார்ந்த பண்பாகவோ கூறமாட்டோம்.

மூன்றாவது: சில பெயர்கள் பூரணத்துவத்தை அறிவிக்கும். ஆனால்,  தங்கள் புத்தியால் மட்டிடும் போது குறையானதாகத் தோன்றும். இப்படியான பெயர்களை அல்லாஹ்வுக்குப் பெயராக நாம் கூறமாட்டோம். ஆனால், செயல் சார்ந்த பண்பாகக் கூறுவோம்.

உதாரணமாக: பேசுதல், நாடுதல். இச்செயல்களை வைத்து அல்லாஹ் அல்முதகல்லிம் (பேசக்கூடியவன்), அல்முரீத் (நாடக்கூடியவன்) என்று கூறமாட்டோம். மாறாக, அல்லாஹ் பேசுகிறான், அவன் நாடுகிறான் என்று செயலாகக் கூறுவோம்.

நான்காவது: சில பெயர்கள் ஒரு நிலையில் பார்க்கும் போது குறையை அறிவிக்கும், வேறு நிலையில் பார்க்கும் போது பூரணத்துவத்தை அறிவிக்கும். இப்படியான பெயர்களைப் பொதுவாக மறுக்கவும் மாட்டோம், அதேபோல் பொதுவான பெயராகக் கூறவும் மாட்டோம்.

உதாரணமாக: சூழ்ச்சி செய்தல், பரிகாசம் செய்தல் இச்செயல்களை வைத்து: சூழ்ச்சி செய்பவன் என்பது அல்லாஹ்வின் பெயர்களில் ஒன்று என்று கூறமாட்டோம். அதேபோல், ஒரேயடியாக அல்லாஹ் சுழ்ச்சி செய்வதில்லை என்று மறுக்கவும் மாட்டோம். இதுவே எமது நம்பிக்கையாகும்.

எந்த நிலையிலும் அடியார்களுக்குக் கூறமுடியாத, வைக்க முடியாத சில பெயர்கள் இருக்கின்றன. உதாரணமாக: அல்லாஹ், அர்ரஹ்மான் இப்படியான பெயர்களை அடியார்களுக்கு எந்த நிலையிலும் நாம் கூறமாட்டோம்.

அதேபோல், அல்லாஹ்வின் பண்புடன் தொடர்புபடும் போது அவசியம் அவனுக்கு இருக்க வேண்டிய பெயர்களும், அடியார்களின் பண்புடன் தொடர்புபடும் போது சில வேளை இருக்க முடியுமான பெயர்களும் இருக்கின்றன.

உதாரணமாக: அல்ஆலிம் (அறிந்தன்), அல்காதிர் (சக்தி பெற்றவன்) இப்படியான பெயர்களை அடியார்களுக்கு வைப்பதில் தடைகிடையாது.

அல்லாஹ்வின் உரிமை விடயத்தில் அவசியமாக அவனுக்கு இருக்க வேண்டிய பெயராகவும், அடியார்களின் விடயத்தில் அவர்களுக்கு இருக்க முடியாத சில பெயர்களும் உள்ளன.

உதாரணமாக: அல்ஜப்பார் (அடக்கி ஆல்பவன்), அல்முதகப்பிர் (பெருமைக்குரியவன்) இப்படியான பெயர்களை அல்லாஹ்வுக்கு மாத்திரம் தான் கூறுவோம் அடியார்களுக்குக் கூறமாட்டோம்.

அல்லாஹ்வுக்கும் அடியார்களுக்கும் பண்பாகக் கூறமுடியுமான சில பெயர்கள் இருக்கின்றன. ஆனால், அல்லாஹ்வுடன் தொடர்புபடும் போது ஓரு கருத்திலும், அடியார்களுடன் தொடர்புபடும்போது இன்னொரு கருத்திலும் அவை இருக்கும்.

உதாரணமாக: அல்ஹாலிக் (படைப்பவன்) இப்பெயர் அல்லாஹ்வுடன் தொடர்புபடும் போது இல்லாமையிலிருந்து படைத்தல் என்ற கருத்திலும், அடியார்களுடன் தொடர்புபடும் போது வரைதல் போன்ற கருத்தில் அமையும்.

-     இன்ஷா அல்லாஹ் தொடரும்.

-     தொகுப்பு: அஹ்ஸன் இப்னு அபீபக்கர்