இஸ்லாத்தின் பார்வையில் மோதிரம் – 04

بسم الله الرحمن الرحيم

பெருவிரலில் மோதிரம் அணியலாமா?

இப்னு உஸைமீன் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் பெருவிரலில் மோதிரம் அணிவது கூடும் என்று கூறியிருக்கின்றார்கள். இதுவே சரியான கருத்தாகும். ஏனென்றால், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நடு விரலிலும் சுட்டு விரலிலும் மாத்திரமே மோதிரம் அணிவதைத் தடை செய்தார்கள். பெருவிரலில் தடை செய்ததாக எச்செய்தியும் பதிவாகவில்லை. ஒரு விடயத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தடை இடம்பெறாவிடின் அடிப்படையில் அந்த விடயம் கூடுமான ஒன்றாகும். சுண்டு விரலில் மோதிரத்தை அணிவதே நபிவழியாகும் என்பதை மீண்டும் ஞாபகப்படுத்திக் கொள்கின்றோம்.

மோதிரத்தின் வைககள்

மோதிரம் எவ்வகையான கனிப்பொருட்களால் செய்யப்படுகின்றது என்பதைப் பொறுத்து மோதிரங்கள் பல வகைகளாகப் பிரிகின்றன. ஒவ்வொரு வகைக்கும் மார்க்க சட்டங்கள் காணப்படுகின்றன. அவற்றை இங்கு பிரித்துக் கூறியிருக்கின்றோம்.

தங்க மோதிரம்

தங்க மோதிரம் அணிவதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடுத்துள்ளார்கள். ஆரம்பத்தில் அதை அணிந்த அவர்கள் அதற்கான தடை ஏற்பட்ட பின்பு அதை ஒதுக்கிவிட்டு வெள்ளி மோதிரத்தை எடுத்துக்கொண்டார்கள்.

ஆண்கள் தங்க மோதிரம் அணிவது ஹராமாகும். பெண்கள் தங்க மோதிரம் அணிந்து கொள்ளலாம். இது அனைத்து அறிஞர்களின் ஏகோபித்த கருத்தாகும் என்பதை இப்னு அப்தில் பர் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறியிருக்கின்றார்கள். (நூல்: அல்இஸ்தித்கார்)

இமாம் நவவி ரஹிமஹுல்லாஹ் அவர்களும் இது ஏகோபித்த கருத்து என்று கூறியுள்ளார்கள். (ஷர்ஹு முஸ்லிம்)

இப்னு ஹஸ்ம் ரஹிமஹுல்லாஹ் அவர்கள்: தங்க மோதிரம் ஆண்கள் அணிவது கூடும் என்றும், இன்னும் சில அறிஞர்கள்: ஹராமானதல்ல மாறாக, வெறுக்கத்தக்கதாகும் என்றும் கூறியிருக்கின்றார்கள். இவ்விரண்டு கருத்துக்களும் பிழையான கருத்துக்களாகும் என்று இமாம் நவவி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறியுள்ளார்கள்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்கம் மற்றும் பட்டாடை குறித்துப் பின்வருமாறு கூறினார்கள்: "இந்த இரண்டும் எனது உம்மத்தினரில் ஆண்களுக்கு ஹராமாகும், பெண்களுக்கு ஹலாலாகும்”. (திர்மிதி) இச்செய்தியை அஷ்ஷெய்ஹ் அல்பானி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் 'அல்இர்வாஃ” என்ற நூலில் ஸஹீஹ் என்று கூறியிருக்கின்றார்கள்.

அஷ்ஷெய்ஹ் ஸாலிஹ் அல்பவ்ஸான் ஹபிழஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்: "ஆண்கள் தங்கத்திலான மோதிரம் அணிவது ஹராமாகும். ஏனென்றால், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்கம் மற்றும் பட்டாடை குறித்துப் பின்வருமாறு கூறியுள்ளார்கள்: தங்கமும் பட்டாடையும் எனது உம்மத்தில் பெண்களுக்கு ஹலாலாக்கப்பட்டுள்ளது, ஆண்களுக்கு ஹராமாக்கப்பட்டுள்ளது”. (அஹ்மத்)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்க மோதிரத்தை கையில் அணிந்திருந்த ஒரு மனிதரைக் கண்டார்கள். அவர்கள் அதனைக் கழற்றி எறிந்துவிட்டார்கள். பின்பு அவர்கள்: "உங்களில் ஒருவர் நெருப்புத் தனலின் பக்கம் சென்று அதைத் தனது கையில் வைக்க விரும்புவாரா?” எனக் கூறினார்கள். (முஸ்லிம்) எனவே, ஆண்கள் தங்க மோதிரம் அணிவது ஹராமாகும். (பிக்ஹுல் மல்பஸ் வஸ்ஸீனா வத்தர்பீஹ்)

வெள்ளி மோதிரம்

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது மரணம் வரை வெள்ளி மோதிரத்தையே அணிந்திருந்தார்கள் என்பதை மேற்குறிப்பிடப்பட்ட ஹதீஸ்கள் தெளிவுபடுத்துகின்றன. இன்னும், அவர்கள் தங்க மோதிரத்தையே தடை செய்திருக்கின்றார்கள். எனவே, இது வெள்ளி மோதிரம் அணிந்து கொள்வதில் தவறில்லை என்பதைச் சுட்டிக்காட்டுகின்றது.

சில அறிஞர்கள் பெண்கள் வெள்ளி மோதிரம் அணிவதால் அது ஆண்களுக்கு ஒப்பான செயலாக அமைந்துவிடும் என்பதால் பெண்கள் வெள்ளி மோதிரத்தை தவிர்ந்து கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கின்றார்கள்.

இது ஒரு பிழையான கருத்தாகும். ஏனெனில், மோதிரம் என்பது ஆண்களும் பெண்களும் அணியக்கூடிய பொதுவான ஒரு ஆபரணமாகும். ஆண்களுக்கு தங்க மோதிரத்தை ஹராமாக்கிய நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பெண்களுக்கு வெள்ளி மோதிரத்தை ஹராமாக்கவில்லை.

ஆண்களும் பெண்களும் வெள்ளி மோதிரத்தை அணிந்து கொள்வதில் எத்தவறுமில்லை என்று அஷ்ஷெய்ஹ் இப்னு பாஸ் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறியிருக்கின்றார்கள். (மஜ்மூஉ பதாவா வமகாலாத் முதனவ்விஆ: 20ம் பாகம்)

இரும்பு மோதிரம்

இரும்பு மோதிரம் அணிவது குறித்து அறிஞர்களிடம் மூன்று வகையான கருத்துக்கள் காணப்படுகின்றன.

முதலாவது கருத்து: இரும்பு மோதிரம் அணிவது கூடும். இக்கருத்தை இமாம் நவவி, ஷாபிஈ மத்ஹபைச் சார்ந்த அறிஞர்கள், அஷ்ஷெய்ஹ் இப்னு பாஸ், இப்னு உஸைமீன், சஊதி பத்வாக் குழுவைச் சேர்ந்த அறிஞர்கள் ஆகியோர் கூறுகின்றனர்.

இவர்களுடைய ஆதாரம்:

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு மனிதரைப் பார்த்து: 'இரும்பாலான மோதிரமாக இருந்தாலும் சரி நீ மஹர் கொடுத்து விடு!” என்று கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்)

இரும்பு மோதிரம் ஹராம் என்றிருந்தால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அம்மனிதருக்கு அதை மஹராக எடுத்துக் கொள்ளுமாறு கூறியிருக்கமாட்டார்கள் என்று இந்த ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு இந்த அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

இரண்டாவது கருத்து: இரும்பு மோதிரம் அணிவது ஹராமாகும்.

இக்கருத்தை ஹனபி மத்ஹபைச் சார்ந்த அறிஞர்கள், அஷ்ஷெய்ஹ் அல்பானி, அஷ்ஷெய்ஹ் ரபீ அல்மத்ஹலி ஆகியோர் கூறுகின்றனர்.

இவர்களுடைய ஆதாரம்:

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செம்பிலான மோதிரத்தை அணிந்த ஒரு மனிதரைப் பார்த்து "நான் உன்னிடம் சிலைகளுடைய வாடையை பெற்றுக்கொள்கின்றேன்” என்றார்கள். பின்பு அவர் இரும்பு மோதிரத்தை அணிந்து வந்தார். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்: "நான் உன்னிடம் நரகத்தின் ஓர் ஆடையைக் காண்கிறேன்” என்று கூறினார்கள். பின்பு அவர் அதை எறிந்துவிட்டார். (திர்மிதி)

முதலாவது கருத்தைக் கூறக்கூடியவர்கள் இந்த ஹதீஸை பலவீனமானது என்று கூறியிருக்கின்றார்கள். மேலும் இப்னு ரஜப், இப்னு அப்தில்பர், இப்னு பாஸ் ரஹிமஹுமுல்லாஹ் ஆகியோரும் இந்த ஹதீஸை பலவீனமானது என்று கூறியுள்ளார்கள்.

இதன் அறிவிப்பாளர் வரிசையில் அப்துல்லாஹ் இப்னு முஃமல் என்பவர் இடம்பெறுகிறார். இவர் நம்பகத்தன்மையில் மோசமானவராகக் கருதப்படுகின்றார். இந்த ஹதீஸுக்கு பலமூட்டும் வகையில் வேறு ஹதீஸ்கள் உமர், புரைதா ரழியல்லாஹு அன்ஹுமா ஆகியோரைத் தொட்டும் பதிவாகியுள்ளன. அவைகளிலும் சில பலவீனங்கள் காணப்படுகின்றன. அனைத்து அறிவிப்புக்களையும் ஒன்று சேர்த்து சில அறிஞர்கள் இது சரியனா ஒரு செய்தியாகும் என்று கூறியுள்ளார்கள்.

அஷ்ஷெய்ஹ் அல்பானி, அஷ்ஷெய்ஹ் முக்பில், அஷ்ஷெய்ஹ் யஹ்யா அல்ஹஜூரி ஆகியோரிடத்தில் இந்த ஹதீஸ் ஸஹீஹாகும்.

மூன்றாவது கருத்து: இரும்பு மோதிரம் அணிவது வெறுக்கத்தக்கது.

மூன்றாவது சாரார் இரு வகையான ஆதாரங்களையும் ஒன்று சேர்த்து இந்த முடிவை வழங்கியுள்ளனர். இக்கருத்தை மாலிகி, ஹன்பலி மத்ஹபைச் சார்ந்த அறிஞர்களும், அஷ்ஷெய்ஹ் யஹ்யா அல்ஹஜூரி ஹபிழஹுல்லாஹ் அவர்களும் கூறியிருக்கின்றார்கள்.

சரியான கருத்து: பேணுதல் என்ற அடிப்படையில் இரும்பு மோதிரத்தைத் தவிர்ந்து கொள்வது மிகச் சிறந்தது. இக்கருத்தையே அஷ்ஷெய்ஹ் முக்பில் ரஹிமஹுல்லாஹ் அவர்களும் கூறியிருக்கின்றார்கள். அல்லாஹ் மிக அறிந்தவன்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வெள்ளி மோதிரத்தையே அணிந்திருக்கின்றார்கள். எனவே, இரும்பு மோதிரங்களைத் தவிர்த்து வெள்ளி மோதிரங்களை அணிந்து கொள்வது மிகவும் சிறப்பானது.

-    இன்ஷா அல்லாஹ் தொடரும்

-    அஸ்கி இப்னு ஷம்சிலாப்தீன்